முன்னணி 10 நிறுவனங்கள்

திங்கள், 8 பிப்ரவரி, 2010

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
சென்ற வாரம், நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. இதனையடுத்து, சென்ற வாரம் நடைபெற்ற 6 வர்த்தக தினங்களில், முன்னணி 10 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.67,000 கோடி குறைந்து போயுள்ளது.
பிப்ரவரி 6&ந் தேதி வரையிலான 6 வர்த்தக தினங்களில், என்.எம்.டீ.சி. நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, மிகவும் அதிகமாக, அதாவது ரூ.17,761.86 கோடி சரிவடைந்து ரூ.1,79,442.32 கோடியாக குறைந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.17,282.43 கோடி சரிவடைந்து ரூ.3,24,948.84 கோடியாக குறைந்தது.
பொதுத் துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி. மற்றும் என்.டி.பி.சி. ஆகிய இரு நிறுவனப் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ.8,719.42 கோடி குறைந்துள்ளது. இவற்றுள், சந்தை மதிப்பு அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.2,34,099 கோடியாகவும், என்.டி.பி.சி. நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1,69,073 கோடியாகவும் குறைந்துள்ளது.
இந்த நிலையில், பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி. நிறுவனம், இரண்டாவது முறையாக, பங்கு ஒன்று ரூ.201 என்ற விலையில் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. இதன் பங்குகள் வேண்டி 1.2 மடங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்தன. இப்பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.8,286 கோடி திரட்டப்படுகிறது.
எம்.எம்.டி.சி.
பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் ஐந்தாவது இடத்தில் உள்ள எம்.எம்.டி.சி. நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, சென்ற வாரத்தில், ரூ.886.50 கோடி சரிவடைந்து ரூ.1,68,600 கோடியாக குறைந்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த டி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1,164.53 கோடி குறைந்து ரூ.1,42,777.74 கோடியாகவும், இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.5,537.53 கோடி குறைந்து ரூ.1,36,511.12 கோடியாகவும் சரிவடைந்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும், பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் முறையே 6&வது மற்றும் 7&வது இடங்களில் உள்ளன.
பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி, இவ்வகையில் எட்டாவது இடத்தில் உள்ளது. இதன் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.9,151.79 கோடி சரிவடைந்து ரூ.1,21,506.51 கோடியாக குறைந்துள்ளது.
பார்தி ஏர்டெல்
இதுநாள் வரை ஒன்பதாவது இடத்தில் இருந்த பீ.எச்.இ.எல். நிறுவனம் 10&வது இடத்திற்கு சென்றுள்ளது. ஒன்பதாவது இடத்திற்கு பார்தி ஏர்டெல் நிறுவனம் வந்துள்ளது. இவற்றுள் பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.2,392.08 கோடி குறைந்து ரூ.1,13,984.74 கோடியாகவும், பீ.எச்.இ.எல். நிறுவனப் பங்கின் சந்தை மதிப்பு ரூ.4,554.98 கோடி குறைந்து ரூ.1,13,245.56 கோடியாகவும் குறைந்து போயுள்ளது.

அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.9,634 கோடிக்கு பங்குகள் விற்பனை



இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களின் பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டை தொடர்ந்து விலக்கி வருகின்றன. சென்ற மூன்று வாரங்களில், அதாவது 14 வர்த்தக தினங்களில், இந்நிறுவனங்கள், பங்குகளில்மேற்கொண்ட முதலீட்டிலிருந்து ரூ.9,634 கோடியை விலக்கிக் கொண்டுள்ளன என பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕ தெரிவித்துள்ளது.
அன்னிய நிதி நிறுவனங்கள், ஜனவரி 24&ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் ரூ.1,648 கோடியையும், அம்மாதம் 29&ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் ரூ.7,043 கோடியையும் விலக்கி கொண்டன. சென்ற வாரத்தில், ரூ.943 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன.
சென்ற சில வாரங்களாக இந்திய ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, அன்னிய நிதி நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் முதலீடு செய்வதால் அதிக ஆதாயம் கிடைக்கிறது. இதனால்தான், இந்தியாவில், நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டை விலக்கி வருகின்றன என்று எஸ்.எம்.சி. குளோபல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜேஷ் ஜெயின் தெரிவித்தார்.


துபாய் ரியல் எஸ்டேட் துறை முதலீடு செய்வதில் இந்தியர்கள் முன்னிலை

சென்ற 2009&ஆம் ஆண்டில், துபாய் ரியல் எஸ்டேட் துறையின் விற்பனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு, இந்திய முதலீட்டாளர்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். அவ்வாண்டில், துபாயின் ரியல் எஸ்டேட் துறையில், இந்திய முதலீட்டாளர்கள் மேற்கொண்ட முதலீட்டின் அளவு 24 சதவீதமாக உள்ளது. இதனையடுத்து, இதர நாட்டினரை விஞ்சி இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
இந்தியர்களுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் 21 சதவீத பங்களிப்பைக் கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளனர். பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.

எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பீ.ஐ. ஆதரவுடன் என்.டி.பி.சி. பங்கு வெளியீடு வெற்றி
சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவு
அருண் குமார்

புதுடெல்லி
என்.டி.பி.சி. நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீடு, எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பீ.ஐ) ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது. என்.டி.பி.சி. நிறுவனம், மொத்தம் 41.20 கோடி பங்குகளை வெளியிட்டது. இதில், எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை மட்டும் 21.80 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பங்கள்
பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி. நிறுவனம் அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறனில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு 20 சதவீதமாகும். இந்நிறுவனம் அண்மையில் இரண்டாவது பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. ரூ.8,300 கோடியை திரட்டும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இவ்வெளியீட்டில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அன்னிய நிதி நிறுவனங்களும் இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி. ஆகியவற்றின் அதிகபட்ச பங்களிப்புடன், என்.டி.பி.சி. நிறுவனத்தின் பங்குகள் வேண்டி 1.2 மடங்கிற்கே விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதே சமயம் அண்மைக் காலத்தில் மூலதனச் சந்தையில் இறங்கிய இதர நிறுவனங்களின் சிறிய அளவிலான புதிய பங்கு வெளியீடுகளில், திரட்டப்பட்ட தொகை அடிப்படையில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு போதிய அளவிற்கு இருந்தது.
சில்லரை முதலீட்டாளர்கள்
என்.டி.பி.சி. நிறுவனத்தின் பங்குகள் வேண்டி, ஒரு லட்சத்திற்கும் சற்று அதிகமான சில்லரை முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். அண்மையில் பங்குகளை வெளியிட்டு ரூ.1,500 கோடி திரட்டிய டீ.பீ. கார்ப் நிறுவனத்தின் பங்குகள் வேண்டி 73,000 பேர் விண்ணப்பித்தனர். ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜியின் பங்கு வெளியீட்டில், பங்குகள் வேண்டி 87,000 சில்லரை முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிறுவனம் மூலதனச் சந்தையில் ரூ.2,700 கோடியை திரட்டிக் கொண்டுள்ளது. பிரைம் டேட்டாபேஸ் நிறுவனம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த ஆர்.இ.சி. மற்றும் என்.எம்.டீ.சி. ஆகிய நிறுவனங்களும் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளன. ஆர்.இ.சி. நிறுவனத்தின் பங்கு வெளியீடு இம்மாதம் 19&ந் தேதியும், என்.எம்.டீ.சி.யின் பங்கு வெளியீடு மார்ச் மாதம் 10&ந் தேதியும் தொடங்குகிறது.

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில்
அமெரிக்காவில், வேலை இழந்தோர் 20,000 பேர்


சென்ற ஜனவரி மாதத்தில், அமெரிக்காவில் 20,000 பேர் வேலை இழந்துள்ளனர். இச்செய்தி வெள்ளிக்கிழமை அன்று உலக நாடுகளின் பங்கு வர்த்தகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், அமெரிக்க வர்த்தக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 28 சென்ட் குறைந்து 72.86 டாலராக சரிவடைந்தது.
அமெரிக்காவில், சென்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முறையே 85,000 பேர் மற்றும் 1,50,000 பேர் வேலை இழந்துள்ளனர்.
பொருளாதாரத்தில் மந்தநிலை உருவான பிறகு, கடந்த 2007&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து, இதுவரையிலான காலத்தில், அமெரிக்காவில் 84 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்ற ஜனவரி மாதத்தில், வேலை இன்மை விகிதம், கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு 9.7 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும், அமெரிக்காவில் வேலை இழப்பு எவ்வாறு உள்ளது என்பது குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் & டிசம்பர் காலாண்டில்
வோடாபோன் எஸ்ஸார் வருவாய் 13.7% உயர்வு


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
வோடாபோன் எஸ்ஸார், நாட்டின் செல்போன் சேவைத் துறையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இந்நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.5,623 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது, இதற்கும் முந்தைய செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டை விட 13.7 சதவீதம் அதிகமாகும். இருப்பினும், அதற்கு முந்தைய காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 18 சதவீதம் உயர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் போட்டி
இந்திய செல்போன் சேவை துறையில், கடும் போட்டி நிலவி வருகிறது. டாட்டா டோகோமோ நிறுவனம், ஒரு நொடிக்கு ஒரு காசு என்ற அடிப்படையில் பேசுவதற்கான கட்டணத்தை நிர்ணயித்தது. எனவே, இத்துறையில் ஈடுபட்டு வரும் இதர நிறுவனங்களும் கட்டணத்தை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. இதனால், இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் வருவாயில் பெருத்த சரிவு ஏற்படும் என பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வோடாபோன் எஸ்ஸார் நிறுவனத்தின் வருவாய், சென்ற மூன்றாவது காலாண்டில் 13.7 சதவீத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.
கூட்டு நிறுவனம்
வோடாபோன் எஸ்ஸார் நிறுவனத்தில், உலக அளவில், தொலை தொடர்பு சேவைத் துறையில் மிகப் பெரிய நிறுவனமான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வோடாபோனும், இந்தியாவைச் சேர்ந்த எஸ்ஸார் நிறுவனமும் பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளன. கடந்த 2007&ஆம் ஆண்டில் வோடாபோன் நிறுவனம், ஹட்சிசன் நிறுவனம் கொண்டிருந்த பங்குகளை வாங்கி எஸ்ஸார் நிறுவனத்துடன் புதிய கூட்டு மேற்கொண்டது.
தற்பொழுது, இந்தியாவில் செல்போன் சேவை துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இருப்பினும், கடும் போட்டியால், இத்துறை நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறைந்து போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பெட்ரோல், டீசல் விலை உயரும் நிலையில் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதாயம்
பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எஸ்ஸார் ஆயில் முடிவு


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
மத்திய அரசு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றை, மக்கள் நலன் கருதி அடக்க விலைக்கு குறைவாக விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய கிரித் பரேக் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு, அண்மையில் மேற்கண்ட எரிபொருள்களின் விலை நிர்ணயத்தில் அரசு கட்டுப்பாடு இல்லாத வகையில் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. இது குறித்து சர்ச்சை நிலவி வருகிறது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை உயர்ந்தால், இத்துறையில் ஈடுபட்டு வரும் தனியார் துறை நிறுவனங்களுக்கு இது பலன் அளிக்கும் என சந்தை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
எஸ்ஸார் ஆயில்
தனியார் துறையைச் சேர்ந்த எஸ்ஸார் ஆயில் நிறுவனம், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோல், டீசல் விற்பனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனத்திற்கு தற்பொழுது நாடு முழுவதுமாக 1,450 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. இதனை அடுத்த சில மாதங்களில் 2,000 என்ற எண்ணிக்கையில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக எஸ்ஸார் குழுமத்தின் தலைவர் சசி ரூயா தெரிவித்தார்.
மூன்று நிறுவனங்கள்
தனியார் துறையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில், ஷெல் இந்தியா ஆகிய மூன்று நிறுவனங்களே நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் நிலையங்களை கொண்டுள்ளன. சர்வதேச சந்தையில், கடந்த 2008&ஆம் ஆண்டில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 147 டாலருக்கும் மேல் அதிகரித்ததையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் அனைத்து சில்லரை விற்பனை நிலையங்களையும் மூடியது. எஸ்ஸார் ஆயில் மற்றும் ஷெல் இந்தியா ஆகிய நிறுவனங்களும் அவற்றின் குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்களை மூடி வைத்திருந்தன. பின்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியதும் இந்த மூன்று நிறுவனங்களும் அவற்றின் பெட்ரோல் நிலையங்களை மீண்டும் தொடங்கின.
எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திற்கு, குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் வதினார் என்ற இடத்தில் மிகப் பெரிய சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளது. இவ்வாலை, நாள் ஒன்றுக்கு 2.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாகும். இங்கு உற்பத்தியாகும் பெட்ரோல் மற்றும் டீசலை அவற்றின் சில்லரை விற்பனை நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த பெட்ரோல் நிலையங்களில் (1,450) 1,293 நிலையங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ளன. மீதமுள்ள பெட்ரோல் நிலையங்கள், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன.
உற்பத்தி திறன் அதிகரிப்பு
எஸ்ஸார் ஆயில் நிறுவனம், அதன் வதினார் சுத்திகரிப்பு ஆலையின் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளது. இங்கு அதிக அளவில் உற்பத்தியாகும் டீசலை அதன் பெட்ரோல் நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், இந்நிறுவனம், நடப்பு ஆண்டில், அதன் பெட்ரோல் நிலையங்கள் வாயிலாக, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி), வாகனங்களுக்கான திரவ எரிவாயு போன்றவற்றை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

மகிந்திரா & மகிந்திரா
நவீன பைக்குகளை தயாரிக்கும் வகையில் அன்னிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை

லிஜி பிலிப்
மும்பை
டிராக்டர்கள் மற்றும் பன்முக பயன்பாட்டு வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், கடந்த 2008&ஆம் ஆண்டில், பூனாவைச் சேர்ந்த கைனடிக் மோட்டார்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதன் வாயிலாக இரு சக்கர வாகனங்கள் துறையில் கால் பதித்தது. இந்நிறுவனம் இந்திய சந்தைக்கேற்ற வகையில் அதிநவீன மோட்டார் பைக்குகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனம்
வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் கூட்டுடன் இத்திட்டத்தை செயல்படுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, இத்தாலி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. இவற்றுள் டிரையம்ஃப் மற்றும் மோட்டோ குஸ்ஸி ஆகியவை குறிப்பிடத்தக்க நிறுவனங்களாகும். மகிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இது குறித்த விவரங்களை கூற மறுத்து விட்டனர்.
மகிந்திரா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் பிரிவு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து கியர் இல்லாத ஸ்கூட்டர்கள் விற்பனையை தொடங்கியது. அம்மாத்திலிருந்து மாதம் ஒன்றுக்கு சராசரியாக 7,000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்த இந்நிறுவனம், நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 10,000 வாகனங்களை விற்பனை செய்தது. வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ஸ்கூட்டர்கள் விற்பனையை மாதம் ஒன்றுக்கு 15,000 என்ற அளவில் உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
பங்கு மூலதனம்
நிறுவனத்தின் இரு சக்கர வானங்கள் பிரிவில், மகிந்திரா நிறுவனம் 80 சதவீத பங்கு மூலதனத்தையும், கைனடிக் குழுமம் 20 சதவீத பங்கு மூலதனத்தையும் கொண்டுள்ளன. மகிந்திரா நிறுவனம், இதன் பெரும்பான்மை பங்குகளை கடந்த 2008&ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.110 கோடிக்கு வாங்கியது.
மோட்டார் வாகனத்திலிருந்து, தகவல் தொழில்நுட்பம் வரை பல்வேறு வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மகிந்திரா, இரு சக்கர வாகனங்கள் துறையைப் பொறுத்தவரை புதிய நிறுவனமாகும். எனவே இந்நிறுவனம், இத்துறையில் ஜாம்பவான்களாகத் திகழும் ஹோண்டா, சுசுகி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக