கலகலத்துப் போனதற்கு காரணம் யார்?

வியாழன், 28 ஜனவரி, 2010

சந்தை கலகலத்துப் போயிருக்கிறது. யாரால் சந்தை சமீபகாலமாக உயர்ந்து கொண்டு வந்ததோ அவர்களாலேயே சந்தை கலகலத்துப் போயிருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டுக் கம்பெனிகள், டிசம்பர் வரை இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்து வந்தன. ஆதலால், சந்தை மேலே சென்று கொண்டிருந்தது. அவர்கள், ஜனவரி மாதத்தில் வாங்குவதை குறைத்து, விற்பதை அதிகமாக்கி விட்டனர். அது சந்தையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. திங்களன்று சந்தை மிகவும் ஏற்ற இறக்கமாகவே இருந்தது. மகேந்திரா அண்டு மகேந்திரா கம்பெனி நல்ல முடிவுகளை தந்தும், சந்தையில் அதன் பங்குகள் மிகவும் கீழே தள்ளப் பட்டன. ஆதலால், சந்தையும் 79 புள்ளிகள் கீழே சென்று முடிந்தது. நேற்று சந்தை தொடர்ந்து ஆறாவது நாளாக சறுக்கியது. இந்தியா மட்டுமல்ல, ஆசிய சந்தைகளும் கீழே விழுந்து கொண்டிருக்கின்றன.

வட்டி விகிதங்கள் ஏற்றத் தாழ்வினால் பாதிக்கப்படும் பங்குகளான வங்கி, கட்டுமானத்துறை ஆகியவை நேற்று அதிகம் பாதிக்கப்பட்டன. ரிசர்வ் வங்கி தனது மானிடரி பாலிசி அறிவிப்பை நாளை அறிவிக்கவுள்ளது. அதில் வட்டி விகிதங்கள் கூட்டப்படலாம் என்றும் அல்லது சி.ஆர்.ஆர்., சதவீதம் கூட்டப்படலாம் என்றும் கருதப்படுவதால், சந்தையில் அது சார்ந்த பங்குகள், கீழே விழுந்தன. ஆதலால் பாதிப்பு அதிகமாக இருந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 490 புள்ளிகளை இழந்து, 16,289 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 154 புள்ளிகளை இழந்து, 4,853 புள்ளிகளுடனும் முடிந்தது. 18,000 புள்ளிகளை தாண்டும் என்று எதிர்பார்த்த சந்தை, தற்போது 16,000த்தின் விளிம்பில் வந்து நிற்கிறது; இது தான் பங்குச் சந்தை. புதிய வெளியீடுகள்: சந்தை மேலே சென்று கொண்டிருந்ததை வைத்து, பல புதிய வெளியீடுகள் வருவதாக அறிவித்து, வந்தும் கொண்டிருக்கின்றன. ஆனால், சந்தை திடீரென சறுக்கி விட்டது. என்.டி.பி.சி., ரூரல் எலக்டிரிபிகேஷன் போன்ற அரசு கம்பெனிகளும், வேறு சில தனியார் கம்பெனிகளும் தங்களது வெளியீடுகளை அறிவித்துள்ளன. ஆனால் விழும் சந்தையில் அவை எப்படி பரிணமிக்கப் போகின்றன என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


பணவீக்கம்: டிசம்பர் மாத பணவீக்கம், 7.31 சதவீதமாக இருந்தது. இது, 2008ம் ஆண்டு நவம்பரில், 4.78 சதவீதமாகவும், 2008 டிசம்பரில், 6.15 சதவீதமாகவும் இருந்தது. முக்கியமானப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். காய்கறி விலைகளும் பயமுறுத்துகின்றன. சமீபத்தில் ஒரு முருங்கைகாய் 26 ரூபாய் வரை சென்றது மிகவும் ஆச்சரியமான விஷயம். விலைகளை கட்டுப்படுத்தாத வரை, அது சந்தைகளை பாதிக்கும். காலாண்டு முடிவுகள்: இதுவரை வந்துள்ள, வந்து கொண்டிருக்கும் காலாண்டு முடிவுகள் மோசம் என்று சொல்லும் ரகமில்லை. ஆனால், பிரமாதம் என்று சொல்லும் அளவிற்கு குறிப்பிட்ட கம்பெனிகளே முடிவுகளை அறிவித்துள்ளன. ஒவ்வொரு காலாண்டும், கம்பெனிகளிடமிருந்து சிறப் பான முடிவுகள் வரும் என எதிர் பார்ப்பது தவறு. இது போன்ற எதிர்பார்ப்புகளால் சந்தை கீழே விழுந்து கொண்டிருக்கிறது. பல கம்பெனிகள் நல்ல காலாண்டு முடிவுகளை தந்தும் சந்தையில் நிற்கமுடியாமல் தவிக்கின்றன.


வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: ரிசர்வ் வங்கியின் மானிடரி பாலிசி, எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்க முடியாத காலாண்டு முடிவுகள், ஆசிய, உலக அளவு பங்குச் சந்தைகளில் சரிவு என்று பல, சந்தைகளை அசைத்துப் பார்த்துள்ளன. சந்தை நிறைய புள்ளிகளை இழந்துள்ளது. ஏறி வர இன்னும் சிறிது காலம் பிடிக்கும். சிறிது முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். சந்தையில் இது காத்திருக்க வேண்டிய காலம்.


- சேதுராமன் சாத்தப்பன் -


ஒயர்லெஸ் மூலம் இன்டர்நெட்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு
புதுடில்லி: ஒயர்லெஸ் மூலமாக, கிராமப்புறங்களுக்கும் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. முதற்கட்டமாக, 1,000 ரிசீவிங் மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. 'பிராட் பேண்ட்' இணையதள தொடர்பு ஏற்படுத்தித் தரும் நிறுவனங்களின் கருத்தரங்கு, நேற்று, டில்லியில் நடைபெற்றது. இதில், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜா கலந்து கொள்வதாக இருந்தது.

தவிர்க்க முடியாத காரணங்களால், அவர் பங்கேற்காமல் போனாலும், வாசிக்கப் பட்ட உரையில் கூறியிருப்பதாவது: கிராமப்புறங்களுக்கும் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்த, அரசு தீவிரமாக உள்ளது. அந்த வகையில், ஒயர்லெஸ் மூலம் கிராமப் புறங்களுக்கும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தித் தர, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக முதற்கட்டமாக, 1,000 ரிசீவிங் மையங்களும், இரண்டாம் கட்டமாக 7,000 ரிசீவிங் மையங்களும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையங்களில் இருந்தும், ஐந்து முதல் பத்து கி.மீ., வரை, தொடர்பு பெற முடியும்.


இதன்மூலம், ஒயர்லெஸ் இன்டர்நெட் வெகுவாக பிரபலமாகும் சூழ்நிலை, எதிர்காலத்தில் உருவாகும். தற்போது, 'பிராட் பேண்ட்' மூலம், எட்டு லட்சம் பேர், இன்டர்நெட் வசதியையும், ஒரு கோடியே 20 லட்சம் பேர், 'இன்டர்நெட் கபே' மூலம் இணையதள வசதிகளை பெறுகின்றனர். 'பிராட் பேண்ட்' மூலம், இரண்டு கோடி பேர், இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர் என்பதை, இன்னும் இரண்டு ஆண்டுகளில், 25 கோடி பேராக உயர்த்த வேண்டும். அதற்கான பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. 'பிராட் பேண்ட்' வசதியை பயன்படுத்துவோரின் எண் ணிக்கை உயராததற்கு, விலை தான் காரணம். கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும்; அதற்கு இன்டர்நெட் வசதி ஏற்படுத்தித் தரும் நீங்கள் தான், முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு ராஜா கூறியிருந்தார்.


தொலைத்தொடர்பு துறை செயலர் பி.ஜி.தாமஸ் பேசும் போது, 'இன்டர்நெட் போன்ற தொழில்நுட்பங்களை, கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக பொதுமக்களுக்கு ஏற்ற வகையில், கட்டணங்கள் அமைக்க வேண்டும். அதை, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி தரும் நிறுவனங்கள்தான், செய்ய வேண்டும். 'மொபைல் போன்கள் பிரபலமான அளவுக்கு, இன்டர்நெட் பிரபலம் ஆகாததற்கு இதுதான் காரணம்' என கூறினார்.

தொலைபேசி எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடில்லி: இந்தியாவில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த டிசம்பரில், 56.22 கோடியாக அதிகரித்திருப்பதாக, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) வெளியிட்டுள்ள தகவல்: டிசம்பரில், தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 3.5 சதவீதம் அதிகரித்து, 56.22 கோடியாக உயர்ந்தது. அதற்கு முந்தைய மாதம், தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 54.32 கோடியாக இருந்தது. 'ஒயர்லஸ்' வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த நவம்பரை விட, டிசம்பரில், 3.78 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், கடந்தாண்டு நவம்பரில், 3.71 கோடியாக இருந்த, 'ஒயர்லைன்' வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, டிசம்பரில், 3.70 கோடியாக குறைந்தது. பிராட்பேண்ட் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த நவம்பரில் இருந்ததை விட, டிசம்பரில், 3.16 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது

யூனியன் பாங்க் நிகரலாபம் சரிந்தது
மும்பை: யூனியன் பாங்க் ஆப் இந்தியா(யூ.பி.ஐ.,) டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வங்கியின் நிகர லாபம் 20.5 சதவீதம் சரிவினை கண்டுள்ளது. 2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டு கணக்கெடுப்பின் படி, வங்கியின் நிகரலாபம் 534.13 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இருப்பினும், மொத்த வருமானம் 3,653.79 கோடி ரூபாயில் இருந்து 3,758.32 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வங்கி வட்டி தொகையாக ரூ. 3,293.55 கோடி பெற்றுள்ளது. இது அதற்கு முந்தைய வருடம் ரூ. 3,258.40 கோடியாக இருந்தது.

2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த ஒன்பது மாத கணக்கெடுப்பின் படி, வங்கியின் நிகரலாபம் 1,261.49 கோடி ரூபாயில் இருந்து 1,481.42 கோடி ரூபாயாக சரிந்துள்ளது

ஐ.டி.எப்.சி., நிகர லாபம் 46% உயர்வு
மும்பை: இன்பராஸ்டக்சர் டெவலப்மென்ட் ‌பைனான்ஸ் கம்பெனியின்(ஐ.டி.எப்.சி.,) நிகர லாபம் 46 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஐ.டி.எப்.சி., நிறுவனம், 2009ம் ஆண்டு ‌டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது. இதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம், 46 சதவீதம் உயர்ந்து 269.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மொத்த வருமானம், 997.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு 865.20 கோடி ரூபாயாக இருந்தது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நிறுவத்தின் நிகர லாபம் 39.53 சதவீதம் உயர்ந்து 240 கோடி ரூபாயாக உள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக, மும்பை பங்குச்சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் 0.87 சதவீதம் உயர்வினை கண்டன.


சர்வதேச அளவில் வேலையில்லாதவர் எண்ணிக்கை உயர்வு
ஜெனீவா : உலகம் முழுவதிலும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 200 மில்லியனாக அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வில் 2009ம் ஆண்டில் 212 மில்லியன் மக்கள் வேலையில்லாதவர்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது 2007ம் ஆண்டை விட 19 சதவீதம் அல்லது 34 மில்லியன் அதிகமானதாகும்.


உலகில் வேலை உள்ளவர்களின் ஆண்டு புள்ளி விபரப்படி வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 2008ம் ஆண்டு இறுதியில் 0.9 சதவீதம் அதிகரித்ததாகவும், 2009ம் ஆண்டின் முடிவில் 6.6 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபர பட்டியலின் படி 1991ம் ஆண்டு வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை மிக அதிகபட்சமாக 13.4 சதவீதமாக இருந்தது. இளைஞர்களின் கடுமையான உழைப்பால் படிப்படியாக குறைந்து 2007ம் ஆண்டு 1.6 சதவீதமாக இருந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குனர் குவான் சோமாவியா கூறியதாவது : முடிவற்ற நிலையில் சென்று கொண்டிருக்கும் வங்கிகள் திவாலாகும் நிலையை தடுத்து நிறுத்தி, வேலை வாய்ப்‌பை உருவாக்கித் தருவதே, வேலையில்லாதோர் எண்ணிக்கையை குறைப்பதற்கான சரியான தீர்வாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



சரிவடைந்து வரும் சர்வதேச பொருளாதார நிலை இவ்வாண்டு முன்னேற்றகரமாக இருக்கும். ஐ.எம்.எஃப் நிறுவனம் ‌நேற்று உலக பொருளாதாரம் பற்றிய அறிக்கையில், 2010ம் ஆண்டு உலக பொருளாதாரம் 3.9 சதவீதம் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2010ம் ஆண்டு உலகில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.5 பில்லியன் மக்கள் வேலை இழக்கும் நிலையில் உள்ளதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயில் நிறுவனத்தின் 3ம் காலாண்டு நிகர லாபம் உயர்வு

புதுடில்லி: செயில் நிறுவனத்தி்ன் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,
2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த மாதத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் 1,675.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது அதற்கு முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 843.34 கோடி ரூபாயாக இருந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், நிகர விற்பனை 9,945.78 ‌கோடி ரூபாயில் இருந்து 10,447.63 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த ஒன்பது மாத கணக்கெடுப்பின் படி, ஸ்டீல் உற்பத்தியாளர்கள் நிகரலாபம் ரூ. 4,669.47 கோடியாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு ரூ. 4,688.13 கோடியாக இருந்தது.

டாவோஸில் இன்று உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம்
டாவோஸ்: உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம், சுவிட்சர்லாந்து டாவோஸில் இன்று தொடங்குகிறது. கடந்த ஆண்டு, வளர்ந்த நாடுகள் உட்பட பல நாடுகள் உலக பொருளாதார நெருக்கடியில் சிக்கி அவதிப்ப பட்டன. இந்நிலையில், உலக பொருளாதார நெருக்கடியை தீர்த்து, மீண்டும் இயல்பு நிலைக்கு எப்படி கொண்டுவருவது என்பது குறித்து ஆலேசிக்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், 30 நாடுகளின் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும், 1,400 தொழில், வர்த்தக அதிபர்களும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 100 பேர் பங்கேற்கின்றனர்.


அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு, ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும், அதை தொடர்ந்து ஏற்பட்ட சிக்கலுக்கு பிறகு, இந்த கூட்டம் நடை பெறுகிறது.


அத்துடன் தற்போது தீர்ந்துள்ள நெருக்கடியை தவறாக கையாண்டால், அடுத்த வருடத்தில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில்-வர்த்தக சமுதாயத்தினர் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


வசூலில் டைட்டானிக்கை முந்தியது அவதார்
லண்டன்: உலக அளவில் டிக்கெட் விற்பனையில் அவதார் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், வசூலில் டைட்டானிக்கையும் முந்தியது அவதார் திரைப்படம்.
1997ம் ஆண்டு வெளியாகி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட காதல் படம் டைட்டானிக். இது 1998ம் ஆண்டு வரை உலகம் முழுவதில் இருந்து 8,470 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.

ஆனால், தற்போது சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் அவதார் திரைப்படமோ, கடந்த வாரம் வரை மட்டுமே ரூ. 8,400 கோடியை வசூலாக குவித்துள்ளது.

கடந்த 7 நாட்களில் ரூ.103 கோடி குவித்து டைட்டானிக் சாதனையை முறியடித்து இத்திரைப்படம் முதலிடம் பிடித்தது.

இதுவரை உலக அளவில் அதிக வசூலைக் குவித்த ஹாலிவுட் படமாக டைட்டானிக் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனை அவதார் முறியடித்துள்ளது.


உலகின் முன்னணி 50 வர்த்தக தலைவர்கள் பட்டியலில் 9 இந்தியர்கள்

மும்பை : உலகின் முன்னணி ஐம்பது வர்த்தக தலைவர்கள் பட்டியலில் 9 இந்தியர்களி்ன் பெயர்கள் இடம்பிடித்துள்ளன.
இங்கிலாந்தை சேர்ந்த பைனான்சியல் டைம்ஸ் என்ற பொருளாதார பத்திரிகை, உலகின் டாப் ஐம்பது தொழிலதிபர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது தம்பி அனில் அம்பானி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர, ஹீரோ குழுமத்தின் பிரிஞ்மோகன் முஞ்சால், ப்யூச்சர் குழும தலைவர் கிஷோர் பியானி , ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சர், மகிந்திரா குழுமத்தின் கேசவ் மகிந்திரா, பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல், வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

இதில், சந்தா கோச்சர் உட்பட 3 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்

பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்


சர்வதேச செயல்பாடுகளை விரிவுபடுத்தும் உள்நாட்டு விமானச் சேவை நிறுவனங்கள்


நிர்பய் குமார்
புதுடெல்லி
விமானச் சேவைகளுக்கான தேவைப்பாடு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே உள்நாட்டு நிறுவனங்கள் அவற்றின் சர்வதேச செயல்பாடுகளை விரிவுபடுத்த ஆயத்தமாகி வருகின்றன.
உலக பொருளாதாரம்
உலக பொருளாதாரத்தின் மந்தநிலையாலும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் ஏற்றத் தாழ்வுகளாலும் சென்ற இரண்டு ஆண்டுகளாக இந்திய விமானச் சேவைத் துறை சோம்பிக் கிடந்தது. தற்போது உள்நாட்டிலும், உலக அளவிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குமான பயணிகள் போக்குவரத்து, சென்ற சில மாதங்களில் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏர் இந்தியா, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் பல்வேறு சர்வதேச வழித்தடங்களில் சேவையை தொடங்க முடிவு செய்துள்ளன.
ஜெட் ஏர்வேஸ்
தனியார் துறையில் மிகப் பெரிய நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், ஜோகன்ஸ்பர்க் மற்றும் நைரோபி ஆகிய இடங்களுக்கு விமான சேவையை தொடங்க உத்தேசித்துள்ளது. Òஜோகன்ஸ்பர்க் நகரத்துக்கு எதிர் வரும் கோடை காலத்தில் சேவை தொடங்கப்பட உள்ளது. நைரோபிக்கு, இவ்வாண்டு அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படலாம்Ó என ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜோகன்ஸ்பர்க் மற்றும் நைரோபி ஆகிய இரண்டு நகரங்களுமே தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவையாகும். இந்த இரண்டு இடங்களுக்கும் விமானச் சேவையை தொடங்கும் வகையில் இந்நிறுவனம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து சென்ற ஆண்டிலேயே ஒப்புதல் பெற்றிருந்தது. எனினும் பயணிகள் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு மற்றும் பொருளாதார மந்தநிலை போன்ற பல்வேறு காரணங்களால் அதன் திட்டத்தை ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோகன்ஸ்பர்க் நகரத்துக்கு சேவை தொடங்கும் முடிவில் இருந்த ஏர் இந்தியா அதன் எண்ணத்தை தற்போது கைவிட்டுள்ளது. இதுவும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ்
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், புதுடெல்லியிலிருந்து ஹாங்காங், துபாய் மற்றும் லண்டனுக்கு மீண்டும் அதன் விமானங்களை இயக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 89 விமானங்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் 68 விமானங்கள்தான் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
Òபெங்களூர்&லண்டன் வழித்தடத்தில் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளதால் நிறுவனத்தின் இரண்டு ஏ330 விமானங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்த விமானங்களை புதுடெல்லி&லண்டன் வழித்தடத்தில் இயக்க முடியும். குறைந்த தூரமுள்ள துபாய் மற்றும் பாங்காக் போன்ற சர்வதேச வழித்தடங்களில் நிறுவனத்தின் ஏ321 மற்றும் ஏ320 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்Ó என கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏர் இந்தியா
பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா, அதிக எண்ணிக்கையில் விமானங்களைக் கொண்டுள்ளது. விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்நிறுவனமே நாட்டின் மிகப் பெரிய விமானச் சேவை நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் உள்நாட்டில் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் மேலும் பல விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அளவில், பல புதிய வழித்தடங்களில் சேவை தொடங்கவும் முடிவு செய்துள்ளது. தற்போது இந்நிறுவனம் டெல் அவிவ், கெய்ரோ, மிலன் மற்றும் சிட்னி ஆகிய உலகப் புகழ் பெற்ற நகரங்களுக்கு விமானச் சேவைகளை தொடங்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
ஸ்பைஸ் ஜெட்
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனங்களுள் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிறுவனம் சர்வதேச அளவில் விமானச் சேவைகளை தொடங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் 19 விமானங்களைக் கொண்டுள்ளது. இவையனைத்தும் போயிங் 737 ரக விமானங்களாகும். நடப்பு ஆண்டில், மேலும் நான்கு புதிய விமானங்களை இணைத்துக் கொள்ள உள்ள இந்நிறுவனம், பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் இவ்வாண்டில் புதிதாக 150 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
ஏர் ஏஷியா
மலேசியாவைச் சேர்ந்த நிறுவனமான ஏர் ஏஷியா இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே ஆறு வழித்தடங்களில் சேவையை தொடங்க உள்ளது. நடப்பு ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில், இந்நிறுவனம் மலேசியாவில் இருந்து புதுடெல்லி, மும்பை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு தினமும் அதன் விமானங்களை இயக்க உள்ளது. கோலாலம்பூர்&மும்பை வழித்தடத்தில் மட்டும் வாரத்தில் நான்கு முறை சேவை அளிக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் பேங்க் 100% இடைக்கால டிவிடெண்டு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் பேங்க் (பி.என்.பீ) சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.1,011.31 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,005.82 கோடியாக இருந்தது.
இதே காலாண்டுகளில் இவ்வங்கியின் வட்டி வருவாய் ரூ.5,294.70 கோடியிலிருந்து ரூ.5,505.54 கோடியாக அதிகரித்துள்து. வங்கியின் வட்டிச் செலவினம் ரூ.3,327.35 கோடியிலிருந்து ரூ.3,176.44 கோடியாக குறைந்துள்ளது.
டிவிடெண்டு
இவ்வங்கி நடப்பு நிதி ஆண்டிற்கு (2009&10) அதன் பங்குதாரர்களுக்கு ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு ரூ.10&ஐ இடைக்கால டிவிடெண்டாக (100%) வழங்க முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கின் விலை தற்பொழுது ரூ.870 என்ற அளவில் விலைபோய் கொண்டுள்ளளது.

புதன்கிழமையன்று


3 தனியார் நிறுவனங்களின் பங்கு வெளியீடு தொடக்கம்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
மூன்று தனியார் நிறுவனங்களின் பங்கு வெளியீடு புதன்கிழமையன்று (நேற்று) தொடங்கியது. இந்த மூன்று வெளியீடுகளுமே இம்மாதம் 29&ந் தேதியன்று நிறைவடைகின்றன.
வாஸ்கான் இன்ஜினியர்ஸ், சின்காம் ஹெல்த்கேர் மற்றும் தங்க மயில் ஜுவல்லரி ஆகிய நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் களம் இறங்கியுள்ளன. அடிப்படைக் கட்டமைப்பு துறையைச் சேர்ந்த வாஸ்கான் இன்ஜினியர்ஸ் நிறுவனம் சுமார் ரூ.200 கோடி திரட்ட உத்தேசித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த மருந்து நிறுவனமான சின்காம் ஹெல்த்கேர் சுமார் ரூ.57 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆபரண நிறுவனமான தங்க மயில் ஜுவல்லரி சுமார் ரூ.29 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.
அக்வா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் பங்கு வெளியீடு இன்றுடன் நிறைவடைகிறது.

யுஎஸ் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி... மீண்டும் பொருளாதார நெருக்கடி
நியூயார்க்: அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார மந்தம் தோன்றும் என நிபுணர்கள் கணித்தது சரியாகிவிடும் போலிருக்கிறது.

மீண்டும் ரியல் எஸ்டேட் துறையில் விற்பனை மந்தமாகிவிட்டது. குறிப்பாக இந்த டிசம்பர் மாதம் விற்பனையில் அதிர்ச்சி தரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மீட்சி வரும் என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள் நினைப்பில் மண் விழுந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் விற்பனையான வீடுகள் எண்ணிக்கையைவிட டிசம்பர் மாதம் 16.7 சதவிகிதம் அளவு குறைந்துவிட்டதாம்.

இது மிகப்பெரிய சரிவாக அமெரிக்க நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. வரிச் சலுகை தரப்பட்டுள்ள இந்த சூழலில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது கவலை தருவதாக உள்ளது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம், இந்த சலுகைகள் நீக்கப்பட்டுவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சிறிய குடும்பத்துக்கான வீடுகள் விற்பனை 16.8 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே போல மத்திய மேற்கு பகுதியில் வீடுகள் விற்பனை 25.8 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அளவுக்கு நிலைமை மோசமில்லை என்கிறார்கள்.

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் விற்பனை சற்று மேம்பட்டதாக இருந்தாலும், இந்த ஆண்டும் வீழ்ச்சி முற்றிலும் நீங்கவில்லை. வடமேற்குப் பகுதியில் 19.5 சதவிகித வீடு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதே நேரம், 2009-ம் ஆண்டு 5,156,000 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது 2008-ம் ஆண்டை விட 4.9 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் அமெரிக்காவின் ஆட்டோமொபைல் துறை ஓரளவு நல்ல முன்னேற்றம் தெரிவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வீடுகள் விற்பனை சரிந்தாலும், ஆட்டோமொபைல் வளர்ச்சி சற்று ஆறுதல் தருவதாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.