MarketNews

சனி, 10 ஜூலை, 2010

உலகம‌ே டுவிட்டர், பேஸ்புக் , ஆர்குட் எனும் சோஷியல் நெட்வொர்க் தளங்களில் மூழ்கியிருக்கையில் தாங்களும் இணைந்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ‌தெரிவித்துள்ளதாவது : அரசுத்துறை அமைச்சகம், புதுயுக தொழில்நுட்பத்தை தகவமைத்துக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், தங்களை பின்தொடர்ந்து நிறைய பேர் வருவர் எனறு எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதேபோல் மத்திய உள்துறை அமைச்சகமும், பேஸ்புக் அக்கவுண்டை துவக்க உள்ளதாகவும், ஊழியர்கள் எந்த விஷயத்தையும் அதில் தெரிவிக்கக் கூடாது என்றும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக உயர் அதிகாரி ஒருவர் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர், அவர் அமைச்சராக இருந்த காலத்தில் ஆப்ரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட போது, அங்கு வெளியுறவுக் கொள்கைகள், வெளியுறவுக் கொள்கைகளின் முக்கியத்துவம், கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்தல் முதலிய விஷயங்கள் டுவிட்டர் மூலம் பரிமாறப்படுவது கண்டு, இந்த முறையை இந்தியாவிலும் பின்பற்ற வேண்டும் என்று அரசிற்கு வேண்டுகோள் விடுத்தார். அவரும் சிறந்த சோஷியல் நெட்வொர்க் வாடிக்கையாளராக இருந்தார். ஆனால் அவர் டுவிட்டரில் கூறிய சில கருத்துக்கள் காரணமாக அவர் பதவி விலக நேரிட்டது குறிப்பிடத்தக்கது

இந்தியாவின் முன்னணி தனியார்துறை ரெக்குரூட்மெண்ட் பிராசஸ் அவுட்சோர்சிங் நிறுவனம், ஊழியர்களின் எண்ணிக்கையை இரண்டு மடங்காக உயர்த்த தி்ட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 400 புதிய ஊழியர்களை பணியமர்த்த தி்ட்டமிட்டுள்ளது. தேசிய அளவில் அனைத்து நகரங்களிலும் கிளைகளை துவக்க திட்டமிட்டுள்ளதாகவும், தற்போதைய அளவில் 10 அலுவலகங்களை வைத்துள்ள தங்களது எலிக்சர் நிறுவனம், இந்த ஆண்டின் இறுதியில் 22 அலுவலகங்களை துவக்க திட்டமிட்டுள்ளதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வேலை பார்க்கச் செல்லும் தொழில்துறை நிபுணர்களுக்கு தரப்படும் எச்-1 பி விசாக்கள் கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 23 ஆயிரம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற தொழில் செய்பவர்களுக்கான எச்1-பி விசாக்கள் கடந்த ஆண்டு மூன்று லட்சத்து 39 ஆயிரத்து 243 பேருக்கு வழங்கப்பட்டது. இந்த விசாக்களை பெற்றவர் களில் இந்தியர்கள் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து இரண்டு பேர். மூன்றில் ஒரு பகுதி இந்தியர்களே இந்த விசாக்களை பெற்றுள்ளனர். கடந்த 2007-2009ம் ஆண்டுகளில் பொருளாதார மந்த நிலை காணப் பட்டதால் இக்கால கட் டத்தில் 34 ஆயிரம் எச்-1பி விசாக்களின் எண்ணிக்கை குறைந்தது. இந்த கால கட்டத்திலும் இந்த விசாக்களை பெறுவதில் இந்தியர்களே முன்னிலை வகித்தனர். கடந்த 2007ல் இந்தியர்கள், ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 613 பேரும், கடந்த 2008ல் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 725 பேரும் இந்த விசாக்களை பெற்றனர். தற்காலிகமாக தொழிற் சாலை சார்பில், அமெரிக்கா சென்று(எல்1 விசா) வேலை பார்த்தவர்களில் இந்தியர்கள் தான் முதலிடம் வகிக்கின்றனர். கடந்த ஆண்டு இந்தியர்கள் 16 சதவீதம் பேர் எல்1 விசாவில் அமெரிக்கா சென்றுள்ளனர். இதற்கு அடுத்த படியாக பிரிட்டன் மற்றும் ஜப்பானை சேர்ந்தவர்கள் இந்த விசாக்களை பயன்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு 80 ஆயிரத்து 251 இந்தியர்கள், மாணவர்கள் விசாவில் (எப்1) அமெரிக்கா சென்றுள்ளனர். இந்த எப்1 விசா பெற்றதில் சீனா முதலிடம் வகிக்கிறது. அதாவது, 14 சதவீத சீன மாணவர்கள் இந்த விசா பெற்றுள்ளனர். தென்கொரியா 13 சதவீதம் இந்த எப்1 விசாவை பயன்படுத்தியுள்ளது. இந்தியா சார்பில் 9 சதவீதம் பேர் எப்1 விசாவை பெற்றுள்ளனர். இவ்வாறு அமெரிக்க உள்துறை அமைச்சக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

சில்லரை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பதால் விவசாயிகள் பலனடைவதோடு விலைவாசியை கட்டுக்குள் வைக்கவும் உதவும் என்று அரசு தெரிவித்துள்ளது. அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு நிதி தேவைப்படுகிறது. இதற்கு சில்லரை வணிகத்தில் அன்னிய நிறுவனங்களை ஈடுபடுத்துவதன் மூலம் அதிக நிதி கிடைக்கும். உள்நாட்டு தொழில் நிறுவனங்களைக் காப்பதற்கு போதுமான வழிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம் என வெளிநாட்டு முதலீட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய முடிவினால் அதிக வேலை வாய்ப்புக் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது. 2006-ம் ஆண்டில் சில்லரை வர்த்தகத்தில் ஈடுபட பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட போதிலும் பன்முக பிராண்டுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒருமுக பிராண்ட் விற்பனைக்கு அனுமதித்ததன் மூலம் ரூ. 900 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் வேளாண் துறையில் காய்கறிகள், பழங்கள் சார்ந்த பொருள்கள் அழுகுவதால் ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இதற்கு குளிர்பதன கிடங்கு வசதி இல்லாதது முக்கிய காரணமாகும். அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் இதுபோன்ற கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும். அன்னிய நிறுவனங்களை அனுமதித்தால் உள்ளூர் மளிகைக் கடை வியாபாரம் நலிந்து விடும் என்ற அச்சம் காரணமாக இதற்கு எதிர்ப்பு உள்ளது. தற்போது பொருள்களின் விற்பனை விலையில் மூன்றில் ஒரு பங்குதான் விவசாயிக்குக் கிடைக்கிறது. அன்னிய நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டால், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இது தொடர்பான விரிவான அறிக்கையை அரசுக்கு இம்மாத இறுதியில் அளிக்கப் போவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் சிறந்த 15 ஹோட்டல்களில் ஓபராய் குரூப் நடத்தும் 4 ஹோட்டல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக ரன்தாம்பூரில் உள்ள தி ஓபராய் வன்யவிலாஸ் ஹோட்டல் தான் இந்த ஆண்டிற்கான சிறந்த ஹோட்டல்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த தகவலை டராவல் பிளஸ் லீசர் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ரன்தாம்பூரில் உள்ள தி ஓபராய் வன்யவிலாஸ் ஹோட்டல், ஆக்ராவில் உள்ள அமர்விலாஸ் ஹோட்டல், ஜெய்பூரில் உள்ள ராஜ்விலாஸ் ஹோட்டல் மற்றும் உதய்பூரில் உள்ள உதய்விலாஸ் ஹோட்டல் 2010-ம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 15 ஹோட்டல்கள் பட்டியலில் 1, 5, 13, 15 ஆகிய இடங்களை பிடித்துள்ளது. இந்த 4 ஹோட்டல்கள் தான் ஆசியாவின் தலைசிறந்த ஹோட்டல்கள் பட்டியலில் முதல் 4 இடங்களை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது

இந்த மாதத்தில் ஸ்டீலின் விலை டன்னிற்கு ஆயிரம் ரூபாய் குறைய வாய்ப்பு உள்ளதாக ஸ்டீல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்டீல் கம்பெனி உரிமையாளர்களின் சங்க செயலாளர் அதுல் சதுர்வேதி கூறுகையில், இந்த மாதத்தில் கட்டிடத்துறை மற்றும் இன்ப்ராஸ்ட்ரெக்ஷர் துறையில் தொய்வு நிலை நீடிப்பதால், ஸ்டீல் நிறுவனங்கள் போட்டி உலகில் சவால்களைச் சமாளிப்பதற்காக டன்னிற்கு ஆயிரம் ரூபாய் வரை குறைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவி்த்தார். ஸ்டீல் தயாரிக்க பயன்படும் மூல்பபொருட்களின் விலை தொடர் அதிகரிப்பு, கட்டுமானத்துறையில் தொய்வு நிலை போன்றவை காரணமாக, தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் வி்ற்பனையை திறம்படசெய்யாவிடில், இத்துறையை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு ஸ்டீலின் விலையைக் குறைக்க நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த சிலகாலமாக‌வே, ஸ்டீல் நிறுவனங்கள் விலையை தொடர்ந்து குறைத்து வருவதாகவும், டன் ஒன்றுக்கு 33 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட ஸ்டீல் தற்போது 27 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார். எனினும், டாடா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளில் சிலவற்றின் விலையை இந்த மாதம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரெடிட் கார்டு வழங்குதல் மற்றும் உபயோகித்தலில் புதிய விதிமுறைகளை, இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி்க்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : கிரெடிட் கார்டு பயன்பாடு குறித்த புதிய வழிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளதாகவும், இந்த வழிமுறைகளை மீறும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது : சமீபகாலமாக, கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்களிடமிருந்து அதிகளவில் புகார்கள் வருவதாகவும், அந்த புகார்கள் பெரும்பாலும், அதிகளவில் பணம் வசூலிப்பதாகவும், அதற்கு உரிய விளக்கம் வழங்கப்படுவதில்லை என்று உள்ளதாகவும் அது தெரிவி்த்துள்ளது. கிரெடிட் கார்டுகள் இலவசமாக வழங்கப்படுகின்றது என்பதை தெரிவித்து, பின் ஆண்டுக்கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், புதிய லோன்கள் குறித்த அழைப்புகள் அடிக்கடி போன் மூலம் வருவதாகவும், பில் தவறாக அனுப்பப்படுவதாகவும், உரிய நிறுவனத்திடம் சென்று விசாரித்தால், அதற்குரிய விளக்கம் அளிக்கப்படுவதில்லை என்றும் அதில் ‌தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைகளை நிவர்த்தி செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி 2007ம் ஆண்டே, கிரெடிட் கார்டுகளுக்கான வழிமுறைகளை வகுத்து வெளியிட்டதாகவும் , ஆனால் அதனை சில வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளது. தற்போது, புதிய வழிமுறைகள் வகுக்கப்பட்டு வெளி்யிடப்பட்டள்ளதாகவும், இந்த வழிமுறைகளை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி வகுத்துள்ள புதிய வழிமுறைகளாவன : உபயோகிப்பாளர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கப்படுவதற்கு முன்னரே, வட்டி விகிதங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், தங்கள் நிறுவனம் வசூலிக்கப்படும் முறைகள் குறித்து தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், வட்டி , பணம் வசூலிக்கப்படும் முறைகள் ஒளிவுமறைவில்லாததாக இருக்க வேண்டும் என்றும், இதுகுறித்த விபரங்களை வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் தங்கள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும், வட்டி விகித மாற்றத்தை, அவ்வப்போது தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம், கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் ஏதாவது புகாரைத் தெரிவித்தால், அதிகபட்சம் 60 நாட்களுக்குள் அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும், உபய‌ோகிப்பாளர்களுக்கு உரிய விளக்கத்தை உரிய நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது 1.9 கோடி கிரெடிட் கார்டு உபயோகிப்பாளர்கள் உள்ளதாகவும், ஐசிஐசிஐ வங்கி, ‌ஹெச்டிஎப்சி வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி, வெளிநாட்டு வங்கிகளான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, ‌ஹெச்எஸ்பிசி வங்கி, சிட்டிபாங்க் உள்ளிட்ட வங்கிகள் தற்போது கிரெடிட் கார்டுகளை வழங்கி வருவதில் முன்னணி வகிப்பது குறிப்பிடத்தக்கது

துவங்கிய சில மாதங்களிலேயே அசுர வளர்ச்சி பெற்றுள்ள பேஸ்புக்கின் வரவையடு்த்து, மற்ற சோஷியல் நெட்வொர்க்களான கூகுள் உள்ளிட்ட மற்ற தளங்கள் கதிகலங்கியுள்ள நிலையில், மும்பையைச் சேர்ந்த ஏகேஜி டெக்னாலஜிஸ் என்ற நிறவனம், புதிய ஆன்லைன் சோஷியல் டிவி‌யை அறிமுகம் செய்துள்ளது. ன்யோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சோஷியல் டிவி அறிமுக விழா நிகழ்ச்சி மும்பையில் நடைபெற்றது. இதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஏகேஜி டெக்னாலஜிஸ் நிறுவன தலைவர் கவுரவ் மெண்டிராட்டா கூறுகையில், இது இந்தியாவின் முதல் ஆன்லைன் சோஷியல் டிவி என்றும், விரைவில் இது இந்திய பார்வையாளர்களை ஆக்கிரமி்க்கும் என்பதில் ஐயமில்லை என்று அவர் தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போ்னற நாடுகளிலும் தங்களது சேவையை துவக்க உள்ளதாக தெரிவித்த அவர், இது உபயோகிப்பாளர்களுக்கு கணக்கிலடங்கா சேவை அளிக்க உள்ளதாக தெரிவி்ததார். பாலிவுட் படங்கள், இசை வீடிய‌ோக்கள், டிவி நிகழ்ச்சிகள் , ஆவணப்படங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் உபயோகிப்பாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் வழங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் குழுமம், அடுத்த 3மற்றும் 4 ஆண்டுகளில், ரூ.1,800 கோடி திட்டச் செலவில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதனையடுத்து, இக்காலத்தில் புதிதாக 23,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இருப்பதாக இக்குழுமத்தின் செயல் இயக்குனர் சங்கீதா ரெட்டி தெரிவித்தார்.
அண்மையில், புதுடெல்லியில் இந்திய தொழிலக கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கீதா ரெட்டி கூறியதாவது, தற்பொழுது நிறுவனத்தின் மருத்துவமனைகள் அனைத்திலுமாக 9,000 படுக்கை வசதிகள் உள்ளன. இதனை 12,000 ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மருத்துவமனைகளில், தற்பொழுது 62,000 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை 85,000 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்

'அமெரிக்க பொருளாதாரம் சரியான வழியில் சென்று கொண்டிருக்கிறது' என்று, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அவரது அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் உலகப் பொருளாதார நெருக்கடியில் இந்தியா பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தின் கன்சாஸ் நகரத்தில் நடந்த பொருளாதார மீட்சி பற்றிய கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அதிபர் ஒபாமா கூறியதாவது: அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறது. ஆனாலும் நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டில் 6 சதவீதமாக சுருங்கிய அமெரிக்கப் பொருளாதாரம், இப்போது வளர்ச்சி அடைந்து வருகிறது. இவ்வளர்ச்சியால் நாம் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளோம். இந்த நடவடிக்கைகள் அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியால் ஏற்பட்ட விளைவுகளை குறுகிய காலத்துக்குள் சரிசெய்து விடும் என்று நான் கூறவில்லை. இன்று ம், ஒரு வேலைக்கு ஐந்து வேலையில்லா நபர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும், ஆற்றல் துறையில் மட்டும் அடுத்த சில ஆண்டுகளில் ஏழு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கிறோம். இது நம் பொருளாதாரத்தை குறுகிய காலத்துக்குள் வளர்க்கும் நடவடிக்கை அல்ல; ஆனால் எதிர்காலத்துக்கான அடித்தளம். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார். இதற்கிடையில் ஒபாமா அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், 'உலகளாவிய அளவில் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகிறது. குறிப்பாக ஆசியாவில் பொருளாதாரம் உறுதியான வகையில் வளர்ந்து வருகிறது. உலக பொருளாதார பாதிப்பில் இந்தியா பாதிக்கப்படவில்லை. காரணம், வெளியில் இருந்து வரும் பண அளவுத்தேவை அங்கே குறைவு. நிதித்துறைமற்றும் நிதி ஊக்குவிப்பு சலுகைகள் மூலம் அங்கே பாதிப்பு ஏற்படவில்லை' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பொதுத் துறையைச் சேர்ந்த பவர் கிரிட் கார்ப்பரேஷன், மின் பகிர்மான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதற்காக அடுத்த 3 ஆண்டுகளில் ரூ.2,035 கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. பவர் கிரிட் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, இம்மாதம் 2ம் தேதியன்று கூடியது. நாட்டின் கிழக்குப் பிராந்தியத்தில் மின் பகிர்மான கட்டமைப்புகளை விரிவுபடுத்துவதற்காக மட்டும் ரூ.1,273 கோடி முதலீடு மேற்கொள்ள இயக்குனர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டின் வட பகுதியில் மின் பகிர்மான நடவடிக்கைகளை மேம்படுத்த ரூ.753 கோடி முதலீடு மேற்கொள்ளவும், மேலும் மத்தியபிரதேசம் ராஜ்கார் துணை மின்நிலையத்தில் இயந்திர சாதனம் ஒன்றை நிறுவுவதற்காக ரூ.9.37 கோடி செலவிடவும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் மும்பை பங்குச் சந்தைக்கு தெரிவிக்கப்பட்டுள்ளன. பவர் கிரிட் நிறுவனம், பதினோராவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-12), மேலும் 37,000 மெகா வாட் மின்சாரத்தை பகிர்மானம் செய்யும் அளவிற்கு விரிவாக்கத் திட்டத்தில் ஈடுபட உள்ளது. இதற்காக ரூ.55,000 கோடி செலவிட உத்தேசித்துள்ளது. இந்நிறுவனத்தின் தற்போதைய மின் பகிர்மான திறன் 19,800 மெகா வாட்டாக உள்ளது. இதனை, நடப்பு நிதி ஆண்டில் 23,400 மெகா வாட்டாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது.

எலெக்ட்ரானிக்ஸ், நெட்வொர்க்கிங் மற்றும் கமயூனிகேஷன் டெக்னாலஜி துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்துக் கொண்டு, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம், அடுத்த 2 ஆண்டுகளில் 3 ஆயிரம் பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில், தங்கள் நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாகவும், கலிபோர்னியாவிற்கு அடுத்து தங்களுக்கு பெங்களூருவில் மட்டுமே அலுவலகம் இருப்பதாகவும், பெங்களூரு அலுவலகத்தில், தற்போது 7 ஆயிரம் பேர் பணியாற்றுவதாகவும், இன்னும் 2 ஆண்டுகளில் ஊழியர்களின் எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்‌த்த திட்டமிட்டுள்ளதாகவும், அதேபோல், பெங்களூருவில் 1 மில்லியன் சதுர அடி பரப்பளவில் புதிய அலுவலகம் கட்டப்பட உள்ளதாகவும் அவர் தெரிவி்த்தார்

உலக வங்கி, இந்தியாவுகு நடப்பாண்டு ஜூன் மாதம் வரை வழங்கியுள்ள மொத்த கடன் தொகை 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கிக்கான இந்திய தலைவர் ராபர்ட்டோ ஜாஹா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆண்டில் இந்தியாவுக்கு அளிக்கப்படும் மொத்த கடனில், 2.6 பில்லியன் டாலர் வட்டி இல்லா கடனாகவும், 6.7 பில்லியன் டாலர், குறைந்த வட்டியுடன் கூடிய நீண்ட கால கடனாகவும் இருக்கும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் தொகை, இந்தியாவின் வளர்ச்சி தாளாண்மைக்கு உதவும்விதமாக மேற்கொள்ளப்படும் ஐந்து புதிய திட்டங்களுக்கு, குறிப்பாக உள்கட்டமைப்புக்கான தடைகளை களைய உதவும்விதமாக பயன்படுத்தப்படும் என்றும் அதில் உலக வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

சுங்கம் உள்ளிட்ட பல்வேறு வகைகள் மூலம் வசூலிக்கப்படும் மறைமுக வரி, இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில், 43 சதவீதமாக அதிகரித்துள்ளது.சுங்கம், கலால் மற்றும் சேவை வரிகள் மூலம் மறைமுக வரி வசூலிக்கப்படுகிறது. 2010-11ம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் மொத்தம் 56 ஆயிரத்து 930 கோடி ரூபாய் மறைமுக வரி வசூலாகியுள்ளது. மொத்தத்தில் இது 43 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 39 ஆயிரத்து 693 கோடி ரூபாய் வசூலானது.இதில், சுங்க வரி மூலம் 28 ஆயிரத்து 135 கோடி ரூபாயும், கலால் வரி மூலம் 19 ஆயிரத்து 536 கோடி ரூபாயும், சேவை வரி மூலம் ஒன்பதாயிரத்து 258 கோடி ரூபாயும் அரசுக்கு வந்துள்ளது.இந்த நிதியாண்டுக்கான மறைமுக வரி இலக்காக ஏழு லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று லட்சத்து 16 ஆயிரம் கோடி ரூபாய் நேர்முக வரி மூலமும், நான்கு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மறைமுக வரி மூலமும் வர வேண்டும் என்று இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது .அதேபோல், இந்தக் காலாண்டுக்கான ரயில்வேயின் வருமான வளர்ச்சி 7 சதவீதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் ரயில்வே 22 ஆயிரத்து 61 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டில் 20 ஆயிரத்து 610 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது என்பது குறிப்பிடத்தக்கது

நாட்டின் தொழில்துறை உற்பத்தி சிறப்பாக இருப்பதால் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனங்கள் செலுத்திய நேரடி வரி வசூல் 15.49 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன்மூலம் ரூ.68,675 கோடி வரி வசூலாகியுள்ளது. நடப்பு நிதியாண்டில் நேரடி வரி மற்றும் மறைமுக வரி மூலம் மொத்தம் ரூ.7.46 லட்சம் கோடி வருவாய் ஈட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், நேரடி வரிகள் வாயிலாக திரட்டப்பட உள்ள தொகை மட்டும் ரூ.4.30 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இது, சென்ற நிதியாண்டை விட 13 சதவீதம் அதிகம். ஆண்டின் முதல் காலாண்டில் நேரடி வரி வசூல் 15.49 சதவீதம் அதிகரித்துள்ளதால், நேரடி வரி வசூல் இலக்கை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கையில் மத்திய அரசு உள்ளது. மேலும் இந்த நிதியாண்டில் 3ஜி அலைவரிசை ஒதுக்கீடு வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.67,720 கோடி வருவாய் கிடைத்தது. மேலும், வயர்லெஸ் பிராண்ட்பாண்ட் அலைவரிசை ஒதுக்கீடு வாயிலாக ரூ.38,540 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதன்மூலம் எதிர்பார்க்கப்பட்டதைவிட ரூ.65,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதனால் நாட்டின் நிதிப் பற்றாக்குறையும் ஓரளவு குறையும். அதே நேரத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் மீதான கட்டுப்பாட்டை நீக்கியது, சமையல் கேஸ், மண்ணெண்ணெய் விலையை உயர்த்தியது ஆகியவற்றின் மூலம் வருவாய் பற்றாக்குறையும் பெருமளவில் குறையவுள்ளது. இதனால் பட்ஜெட்டில் விழுந்த பற்றாக்குறையை சமாளிக்க வெளியில் கடன் வாங்குவதையும் மத்திய அரசு பெருமளவில் குறைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

எல்.ஐ.சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ஆயுள் காப்பீடு கழகம், காப்பீடு செய்து கொண்டுள்ளவர்களிடம் இருந்து, பிரிமியத் தொகையை வசூலிக்க ஒன் ஸ்டாப் ஷாப் ரீடெய்ல் நிறுவனத்தை நியமித்துள்ளது. இந்தியாவின் பெரிய காப்பீடு நிறுவனமும், பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சியில் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் காப்பீடு செய்து கொண்டுள்ளனர். இனி இவர்கள் பிரிமியத்தை ஒன் ஸ்டாப் ஷாப் கிளைகளில் செலுத்தலாம். இது குறித்து ஒன் ஸ்டாப் ஷாப் நிறுவனத்தின் செயல் இயக்குநர் அந்தோனி ஜோஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், எங்கள் கிளைகளில் பாலிசிக்கு உரிய தவணைத் தொகை செலுத்தலாம். இதற்கு உடனடியாக ரசீதையும் பெறலாம். இந்த ரசீதுகளை வருமான வரி படிவம் தாக்கல் செய்யும் போது சமர்ப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். இந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகி டி. சிகால் கூறுகையில், காப்பீடு செய்து கொண்டுள்ளவர்கள், பிரிமியம் கட்டணத்தை வசிப்பிடத்திற்கு அருகில் அமைந்துள்ள எங்கள் கிளைகளில் எந்த நேரத்திலும், வாரத்தின் 7 நாட்களிலும் ரொக்கமாக செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். தற்போது இந்தியா முழுவதும் பரந்த அளவில் ஒன் ஸ்டாப் ஷாப் நிறுவனத்தின் கிளைகள் 50 ஆயிரத்திற்கும் மேல் உள்ளன. இவை கணினி வசதியுடன் இயங்குகின்றன. தற்போது ரயில், பேருந்து, விமான டிக்கட், செல் போன் போன்றவைகளின் கட்டணம் செலுத்தும் வசதி ஆகியவை உள்ளன. இந்நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி குறித்து அந்தோனி ஜோஸ் கூறுகையில், எங்கள் நிறுவனத்தின் வருவாய் தற்போது ரூ.2 ஆயிரம் கோடியாக உள்ளது. இதை 2011 ஆம் ஆண்டுகளில் ரூ.4 ஆயிரம் கோடியாகவும், 2012 ஆண்டில் ரூ.6,000 கோடியாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளோம். இதே போல் தற்போதுள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற கிளைகளை, 2 இலட்சமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். இந்தியா முழுவதும் பெரிய நகரங்கள், சிறிய நகரங்கள் முதல் கிராமப்புறங்களிலும் விரிவுபடுத்த உள்ளோம். எங்கள் முக்கிய நோக்கம் ஒவ்வொரு கிராமத்திலும் எங்கள் சேவை கிடைப்பதுடன் விவசாயிகள் உட்பட எல்லோருக்கும் சேவை கிடைக்க வேண்டுமென்பதே என்று தெரிவித்தார்.

தங்களது நிறுவனத்தின் இரண்டாவது பிளாக்ஷிப் ஸ்டோரை சீனாவின் ஷாங்காய் நகரில் திறக்க தி்ட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஆப்பிள் நிறுவன ரீடெயில் வர்த்தக பிரிவின் துணை தலைவர் ரான் ஜான்சன் கூறுகையில், சீனாவில் இரண்டாவது ஸ்டோரை திறக்க உள்ளது மகிழ்ச்சியளிப்பதாகவும், அதுவும் வர்த்தக நகரமான ஷாங்காய் நகரின் ஓரியண்டல் பேர்ல் டவரில் திறக்க உள்ளது சந்தோஷமாக இருப்பதாக அவர் தெரிவி்த்தார். சீனாவில், கடந்த 2008ம் ஆண்டில் பீஜிங் நகரில் முதல் ஸ்டோர் திறக்கப்பட்டு வெற்றிகரமாக விற்பனை நடைபெற்று வருவதாகவும், ஆப்பிள் நிறுவன தயாரிப்புகளின் விற்பனை சீனாவில், ரீசெல்லர்கள் மூலமே நடைபெற்று வருவதாகவும், தற்போது திறக்கப்பட உள்ள ஸ்டோர், தங்களது நிறுவனத்தின் நேரடி விற்பனையகம் என்பது குறிப்பிடத்தக்கது என்று அவர் தெரிவி்த்தார்

கன்ஸ்யூமர் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான கோத்ரெஜ் கன்ஸ்யூமர் புராடெக்ட்ஸ் லிமிடெட், அர்ஜென்டினாவின் ‌ஹேர் கேர் நிறுவனமான அர்ஜென்காசை வாங்க தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக கோத்ரெஜ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : அர்ஜென்காஸ் நிறுவனத்தை, ஏற்கனவே 2 முறை பன்னாட்டு வாகனங்கள் வாங்க முயன்றதாகவும், ஆனால் அது தோல்வியில் முடிந்தததாக தெரிவித்துள்ளது. கோ‌த்ரெஜ் நிறுவனம், பல நிறுவனங்கள் வாங்கும் மற்றும் கைகோர்க்கும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருவதாகவும், நைஜீரியாவின் டுரா சோப் நிறுவனத்தையும், இந்தோனேஷியாவின் வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தை வாங்க தீர்மானித்துள்ளதாகவும், சாரா லீ நிறுவனத்ததுடன் கைகோர்க்க உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜஸ்தான் மாநிலத்தில் கெய்ர்ன்ஸ் இந்தியா நிறுவனத்தின் எண்ணைக் கிணற்றில் இருந்து கிடைக்கும் கச்சா எண்ணெயை இந்திய எண்ணெய் கழகம் வாங்கத் துவங்கியுள்ளது. இராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் கெய்ர்ன்ஸ் இந்தியா நிறுவனம் ஆழ் துளை கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. நாள் ஒன்றிற்கு ஒரு இலட்சம் பீப்பாய் அளவிற்கு கச்சா எடுக்கப்படுகிறது. இதில் பெரும் பகுதி, குஜராத் மாநிலம் ஜாம் நகரிலுள்ள ரிலையன்சின் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கும், வாடினாரில் உள்ள எஸ்ஸார் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு குழாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இப்போது கெய்ர்ன்ஸின் உற்பத்தி ஒரு இலட்சத்தை தொட்டுள்ளதால், நாளுக்கு 13,000 பீப்பாய்கள் வீதம் இந்திய எண்ணெய் கழகமும் வாங்கத் துவங்கியுள்ளது. தங்களுடைய குழாயில் சில தொழில் நுட்பச் சிக்கல் இருப்பதால் தற்போது குறைவான அளவிற்கே வாங்கி வருவதாக ஐஓசி அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிஏஎஸ்எப் தகவல் தொழில்நுட்ப சேவைக்காக, ஆப்ஷோர் டெவலப்மெண்ட் சென்டரை (ஓடீசி)‌சென்னையில் அமைத்துள்ளது மகிந்திரா சத்யம் நிறுவனம். சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தின் புதிய பரிணாமமாக அவதரித்துள்ள மகிந்திரா சத்யம் நிறுவனம் மீண்டும் காலடி எடுத்து வைக்கிறது. ஓடிசி திறப்பு விழாவில் பங்கேற்ற பிஏஎஸ்எப் ஐடி நிர்வாக இயக்குனர் ரால்ப் சான்பெர்கர் கூறுகையில், இந்த முடிவு வரவேற்கத்தக்கது எனும், இந்த ஓடிசி அலுவலகம், வியாபார மற்றும் வர்த்தக வேலைவாய்ப்புகளுக்கு சிறந்த பிளாட்பாரமாக அமையும் என்றும், இத்துறையில் நன்கு அனுபவம் பெற்ற மகிந்திரா சத்யம் நிறுவன ஒத்துழைப்போடு துவங்கியுள்ள இந்த ஓடிசி அலுவலகம் தற்போது 1500 அசோசியேட்டுகளளுடன் செயல்பட உள்ளதாகவும், 2011ம் ஆண்டு வாக்கில் இதன் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயரும் என்று அவர் ‌தெரிவித்தார்.

பங்குச் சந்தையின் மூலம் வெளியிட்ட பத்திரங்களின் மூலம் ரூ.500 கோடி திரட்டியுள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது. கடன் வழங்கலை உயர்த்துவதற்காக கடந்த மாதம் 28ஆம் தேதி பங்குச் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட பத்திரங்கள்மூலம் ரூ.500 கோடி திரட்டியுள்ள இந்தியன் வங்கி, அடுத்த ஆண்டின் இறுதிக்குள் மேலும் ரூ.500 கோடி திரட்டவுள்ளது. இதனை மும்பை பங்குச் சந்தைக்குத் தெரிவித்துள்ளது

‌‌எங்கும் யூடியூப், எதிலும் யூடியூப் என்ற காலம் தோன்றியள்ள இந்நிலையில், இனி போனிலும் யூடியூப் வீடியோக்களை காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்காக யூடியூப் நிறுவனம், புதிதாக மொபைல் வெப்சைட்டை துவக்கியுள்ளதாகவும், இந்த வெப்சைட்டை ஏற்றுக்கொள்ளும் வகையில் முதற்கட்டமாக ஆப்பிள் ஐபோன் 4 வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் யூடியூப் வீடியோக்களை இனி ஆப்பிள் ஐபோன்4 ல் எளிதாக காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், இந்த வெப்சைட்டுக்கான சர்ப்ட்வேர்கள் , ஆப்பிள் ஐபோன் 4 உள்ளி‌ட்ட உயர்தர போன்களில் மட்டுமே பயன்படுத்தப்படுமாறு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் எல்லா ஸ்மார்ட் போன்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் சாப்ட்வேர்கள் உருவாக்கப்பட உள்ளதாக யூடியூப் நிர்வாகம் தெரிவித்துள்ளது

கண் சிகிச்சை மருந்துகள் , குளுகோமா தடுப்பு மருந்துகளை அறிமுகப்படுத்த தங்கள் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக, பயோகான் லிமிடெட் வெளியிட்டுள்ள வருடாந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : தங்கள் நிறுவனம் பிராண்டட் பார்முலேஷன்ஸ் அடிப்படையில் பல்வேற வித மருந்துகளை உற்பத்தி செய்து வர்‌த்தகப்படுத்தி வருவதாகவும், இந்த ஆண்டு முதல் காம்பிரி‌‌ஹென்சிவ் கேர் மற்றும் இம்முனோதெரபி பிரிவில் 4 புதிய அங்கங்களை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், தற்போதைய அளவில் தங்கள் நிறுவனம் 36 பிராண்டுகளில் மருந்துகளை வர்த்தகப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்ப‌ட்டுள்ளது. மேலும் கண் சிகிச்சைக்கான மருந்துகள், குளுகோமா, புரோஸ்டோகிளாண்டின்ஸ், இன்ஜெக்டபிள் ஏபிஐஸ், போன்றவை தயாரிப்பிலும் ஈடுபடப் போவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

சாப்ட் டிரிங் குளிர்பான தயாரிப்பில் முதன்மை நிறுவனமாக விளங்கும் ரஸ்னா நிறுவனம், ஆப்ரிக்காவில் புதிய உற்பத்தி யூனிட்டை துவக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களைச் சந்தி்த்த ரஸ்னா நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குனருமான பிரூஜ் காம்பட்டா கூறுகையில், தங்கள் நிறுவனம் புதிய பொருட்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், ஏற்கனவே, தங்கள் நிறுவனத்திற்கு வங்கதேசம், எகிப்து உள்ளிட்டவைகளில் யூனிட் உள்ளதாகவும், இதனைத்தொடர்நது ஆப்ரிக்காவிலும் உற்பத்தி யூனிட் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


ஹோம் லோன் மற்றும் கார் லோன்களுக்கான சிறப்பு வட்டி வீதத்திற்கான கால அளவை நீட்டித்தது ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத். இந்திய பொதுத்துறை வங்கிகளுள் முதன்மையானதான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஒரு அங்கமான ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், வீடு மற்றும் கார்களை வாங்க கடனுதவிகளை வழங்கி வருகிறது. இதன்படி ஹோம் லோனில், 50 லட்சத்திற்கு உட்பட்ட கடனுதவி என்றால், முதல் ஆண்டு 8.5 சதவீதமாகவும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் 9.25 சதவீதமாகவும், நான்காம் ஆண்டு துவக்கம் முதல் 9.75 சதவீதமாகவும் வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது. 50 லட்சத்திற்கு மேற்பட்ட கடனுதவி என்றால் முதல் ஆண்டு 8.5 சதவீதமாகவும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் 9.25 சதவீதமாகவும், நான்காம் ஆண்டு துவக்கம் முதல் 10.75 சதவீதம் வட்டி வசூலிக்கப்பட்டு வருகிறது.கார்‌ லோன்கள் தரப்பில் 5 லட்சத்திற்கு உட்பட்ட கடனுதவி என்றால் முதல் ஆண்டு 8.5 சதவீதமாகவும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் 10.5 சதவீதமாகவும், நான்காம் ஆண்டு துவக்கம் முதல் 11.5 சதவீதமாகவும், 5 லட்சத்திற்கு மேற்பட்ட கடனுதவி என்றால் முதல் ஆண்டு 8.5 சதவீதமாகவும், இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டுகளில் 10.5 சதவீதமாகவும், நான்காம் ஆண்டு துவக்கம் முதல் 11.25 சதவீதமாகவும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், இந்த மாதம் முதல் தேதி முதல், அடிப்படை வட்டி வீதத்தை 7.75 சதவீதமாக அறிவித்துள்ள போதிலும், ஹோம் லோன் மற்றும் கார் லோனுக்கான சிறப்பு வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்றும், இதற்கான கால அளவு நீட்டிக்கப்படுவதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கோவையில், 300 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான, 'டைடல் பார்க்', ஆகஸ்ட் 2ம் தேதி திறக்கப்படவுள்ளது. தற்போதுள்ள தி.மு.க., அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றதும் வெளியிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளில், கோவை தகவல் தொழில் நுட்பப் பூங்காவும் ஒன்று. இதற்காக, கோவை அவினாசி ரோட்டில் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இருந்த 62 ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டது.தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக்கழகம் (டிட்கோ), 'எல்காட்' இணைந்து 300 கோடி ரூபாய் மதிப்பில், அனைத்து வசதிகளும் கொண்ட, 'டைடல் பார்க்' அமைக்க திட்டம் தீட்டப்பட்டது. இந்த பூங்கா அமைக்கப்படும் பகுதி, சிறப்புப் பொருளாதார மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டது. 'எல்காட்' மற்றும் 'டிட்கோ' இணைந்து அமைக்கும், 'டைடல் பார்க்' தவிர, டி.சி.எஸ்., விப்ரோ நிறுவனங்களுக்கு தலா 9.5 ஏக்கர் நிலமும், எச்.சி.எல்., நிறுவனத்துக்கு நான்கு ஏக்கரும் ஒதுக்கப்பட்டன. இது தவிர, 12.9 ஏக்கரில், குடியிருப்பு பகுதியும் அமைக்க திட்டமிடப்பட்டது.தகவல் தொழில்நுட்பத்துறை உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், அதாவது 2007 பிப்., 24ல் இந்த, 'டைடல் பார்க்' கட்டுமானத்துக்கு, கோவையில் நடந்த பிரமாண்டமான விழாவில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டினார். இதனால், கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தின் விலை பல மடங்கு எகிறியது.எல்காட் நிர்வாக இயக்குனராக இருந்த உமாசங்கர், ஆய்வுக்காக கோவை அடிக்கடி வர, அடிக்கடி நில மதிப்பு உயர்ந்தது. ஆனால், பணிகள் மட்டும் ஆமை வேகத்தில் நடந்தன. தி.மு.க., ஆட்சி முடிவதற்குள்ளாவது இது திறக்கப்படுமா என்ற கேள்வி, கோவை மக்களிடம் கிளம்பியது; ஒரு வழியாக இப்போது பணிகள் முடிந்துள்ளன. இங்கு முதலில் 15 தள கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது. விமான நிலையம் அருகில் இருப்பதால் அதன் விதிமுறைகளுக்கு ஏற்ப, மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, கட்டடத்தின் உயரம் குறைக்கப்பட்டு, பரப்பு அதிகரிக்கப்பட்டது. தற்போது தரைக்கு அடியில் 3, தரைக்கு மேல் 5 என 8 தளங்கள் கட்டப்பட்டுள்ளன.ஒரு தளத்துக்கு இரண்டு லட்சம் சதுர அடி வீதம், மொத்தம் 17 லட்சம் சதுர அடியில் பிரமாண்டமான கட்டடமாக, 'டைடல் பார்க்' உருவாகியுள்ளது. பூமிக்கு அடியிலுள்ள மூன்று தளங்களும், 'பார்க்கிங்' பகுதி. அங்கு, ஆயிரத்து 114 கார்களையும், 2,000 இரு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம்.

கிராமப்புற மக்கள், சிறு தொழில் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக, சோலார் உபகரணங்கள் தயாரிப்பில் இறங்க உள்ளதாக பிபிஎல் நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதுதொடர்பாக, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது : இதற்காக லேட்டஸ்ட் தொழில் நுடபம், மற்றும் டிசைன்களை தங்கள் நிறுவனம் வைத்துள்ளதாகவும், சோலார் பல்புகள் , சோலார் சக்தி சேமிப்பு கருவிகள், எல்இடி லைட்ஸ்களை அடிபப்டையாகக் கொண்ட சிஎப்எல் பல்புகள், நிக்கல் மெட்டல் ஹைட்ரைடுடன் க;டிய காரீய (லெட்) ஆசிட் பேட்டரிகள், லி்த்தியம் அயான் பேட்டரிகள் உள்ளிட்டவைகளை தயாரி்க்கவும் தீர்மானித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது தொழில்நுடபம் மற்றும் டிசைன், ஜெர்மனியிலன் சிறந்த தொழில்நுட்பத்திற்கான விருது பெற்றுள்ளதாகவும் அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது

மகாராஷ்டிராவில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு குடிநீர் பாட்டிலுக்கும், தலா ஒரு ரூபாய் வரி விதிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த வரி வருவாய் மூலம் கிடைக்கும் நிதியை, நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு பயன்படுத்தவும் திட்டமிடப் பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் லக்ஷ்மண்ராவ் தோப்லே கூறியதாவது: மகாராஷ்டிரா மாநில நகர்ப்புறங்களில் வசிக்கும் ஏழை மக்களின் சுகாதாரம் படுமோசமாக உள்ளது. இங்கு குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் போதிய சுகாதார வசதியின்றி உள்ளனர். இவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பது சிரமமாக உள்ளது. இதனால், நகர்ப்புற ஏழை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதி ஆதாரத்தை திரட்ட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக, மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில்கள் ஒவ்வொன்றுக்கும், தலா ஒரு ரூபாய் வரி விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதிலிருந்து கிடைக்கும் வருவாய், ஏழைமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு பயன்படுத்தப்படும். இருந்தாலும், இதற்கான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை. அமைச்சரவை கூட்டத்தில் விரைவில் இதுகுறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு தோப்லே கூறினார்.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய துணை இயக்குனர் சந்திர பூஷண் கூறியதாவது: மாநில அரசின் இந்த திட்டம் நல்ல திட்டம் தான். ஆனால், குடிநீர் பாட்டில்களுக்கு கூடுதல் வரி விதிப்பது தொடர்பாக உறுதியான சட்டம் கொண்டு வரவேண்டும். இல்லையெனில் இதை நடைமுறைப்படுத்த முடியாது. குளிர்பானங்கள், பழச்சாறு போன்றவைக்கும் வரி விதிக்க வேண்டும் என, சிலர் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும். குடிநீர் பாட்டில் தயாரிக்கும் நிறுவனங்கள், இந்த பிரச்னையை கோர்ட்டுக்கு கொண்டு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு சந்திர பூஷண் கூறி

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தமிழ்நாடு மற்றும் கேரள தலைவர் சோமசேகர் கணபதி மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டிலேயே முதன்முறையாக, மறைமுக கட்டணம் இல்லாத 'சிம்ப்ளி' திட்டத்தை ரிலையன்ஸ் மட்டுமே அறிமுகம் செய்தது. நாட்டில் 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்று இரண்டாவது இடத்தில் ரிலையன்ஸ் இருக்கிறது. தற்போது ஒரு நொடி பேச ஒரு காசு, ஒரு நிமிடத்திற்கு 50 காசு, ஒரு காலுக்கு ஒரு ரூபாய் என்ற திட்டத்தை நேற்று முதல் மதுரையில் இருந்து தமிழகம் முழுமைக்கும் அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டங்களின் கீழ், நாடு முழுவதும் எங்கு பேசினாலும் ஒரே கட்டணம் தான். 19 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், ஒரு காசுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம். 39 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு நாளைக்கு 500 எஸ்.எம்.எஸ்., இலவசம். இன்டர்நெட் இணைப்புக்கு 29 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வாரத்திற்கு 500 எம்.பி., 'டவுன்லோட்' செய்யலாம். 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், ஒரு மாதத்தில் 2.5 ஜி.பி., 'டவுன்லோட்' செய்யலாம். 30 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், 25 ரூபாய்க்கு 'டாக்டைம்', ஆயுள் கால வேலிடிட்டி பெறலாம். இவையும் புதிய திட்டங்களில் கிடைக்கும் சலுகைகள் என்றார். தமிழ்நாடு வட்ட மேலாளர் சுபாஷ் ராவ், மதுரை வட்ட மேலாளர் ராஜா அந்தோணி உடன் இருந்தனர்.