அமெரிக்க நிறுவனங்களுக்கு 33 பில்லியன் வரிச்சலுகை! - ஒபாமா அறிவிப்பு!

புதன், 3 பிப்ரவரி, 2010

பால்டிமோர்: சிறிய வர்த்தக நிறுவனங்கள் அதிக பணியாளர்களை, குறிப்பாக அமெரிக்கர்களை, பணியிலமர்த்தும் வகையில் புதிய நிதிச் சலுகைகளை அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா. இதன் மதிப்பு மட்டும் 33 பில்லியன் டாலர்கள்.

இதன் மூலம் அமெரிக்காவில் 10 சதவிகித அளவுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமா பதவிக்கு வந்து 1 ஆண்டு பூர்த்தியடைந்து விட்டது. இந்த ஒரு ஆண்டு காலத்தில் 60 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். மாறாக புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் முயற்சி போதிய வெற்றியை அடையவில்லை.

இந்த நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பிபிஓ பணிகளைத் தரும் அமெரிக்க கம்பெனிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த வரிச் சலுகைகளை ரத்து செய்துவிட்டார் ஒபாமா. இதனால் அமெரிக்கர்களுக்கு இனி வரும் நாட்களில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.





இன்னொரு பக்கம் கூடுதல் வரிச் சலுகையாக 33 பில்லியன் டாலர் திட்டத்தை அறிவித்துள்ளார் ஒபாமா. இதன்படி புதிதாக நியமிக்கப்படும் ஒவ்வொரு பணியாளருக்கும் 5000 டாலர் புதிய சலுகை தருவதோடு, ஒவ்வொரு காலாண்டு முடிவிலும் சிறு நிறுவனங்கள் தங்களுக்கான வரிச் சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.

'இந்த சலுகை மூலம் அமெரிக்காவை மீண்டும் அதன் பழைய நிலைக்கு கொண்டுவருவதை துரிதப்படுத்துகிறோம்' என்கிறார் ஒபாமா.

நாஸ்டாக் - முதல் நாள் வர்த்தகத்தை பெல் அடித்து தொடங்கி வைத்த ஷாருக், கஜோல்
நியூயார்க்: நியூயார்ஸ் பங்குச் சந்தையின் (நாஸ்டாக்) பிப்ரவரி மாத முதல் நாள் வர்த்தகத்தை மணி அடித்து தொடங்கி வைத்தனர் பாலிவுட் நடிகர்களான ஷாருக் கானும், கஜோலும்.

இது ஒரு அரிய பெருமையாகும். காரணம், ஒவ்வொரு மாதத்தின் முதல் நாள் வர்த்தகத்தையும் மணி அடித்துத் தொடங்கி வைக்கும் கெளரவம் வழக்கமாக தொழில் நிறுவனங்களின் அதிபர்களுக்குத்தான் நாஸ்டாக் நிர்வாகம் வழங்கி வருகிறது.

ஆனால் முதல் முறையாக திரையுலகக் கலைஞர்களுக்கு அதிலும், இந்தியத் திரையுலககக் கலைஞர்களுக்கு இந்தக் கெளரவம் அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மை நேம் இஸ் கான் படத்தை பிரபலப்படுத்துவதற்காக கஜோலுடன் நியூயார்க் வந்திருந்த ஷாருக் கானுக்கும், கஜோலுக்கும் இந்த கெளரவம் அளிக்கப்பட்டது.

மை நேம் இஸ் கான் படத்தை அமெரிக்காவில் விநியோகிக்கும் உரிமையைப் பெற்றுள்ள பாக்ஸ் சர்ச்லைட் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த வாய்ப்பினை அவர்களுக்கு அளித்தது.

இதை ஏற்ற ஷாருக் கானும், கஜோலும் நாஸ்டாக் சென்று மணி அடித்து முதல் நாள் வர்த்தகத்தைத் தொடங்கி வைத்தனர்.




இதுகுறித்து ட்வீட்டர் மூலம் ஷாருக் அனுப்பியுள்ள செய்தியில், மிகவும் பிசியான நாளாக இது இருந்தது. நாஸ்டாக் சென்றிருந்தேன். மிகவும் பெருமையாக இருந்தது. எங்கள் முகத்தை டைம் ஸ்கொயரின் அகன்ற திரையில் பார்த்தபோது மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியிருந்தார் ஷாருக்.

'நேரடி வரி'- பாஜக கடும் எதிர்ப்பு
டெல்லி:​ மத்திய அரசின் உத்தேச நேரடி வரி விதிப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாஜக தலைவர்கள் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை நேரடியாகச் சந்தித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

இந்த வரி விதிப்பு முறைக்கு பாஜக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதையும் அவர்கள் விளக்கினர்.

பாஜக தலைவர்களின் கருத்துகளைக் கேட்ட நிதியமைச்சர் பிரணாப்,​​ தற்போது உத்தேச வரி விதிப்பு முறையானது பரிந்துரை அளவிலேயே உள்ளது.​ இதை அமல்படுத்துவதற்கு முன்பு பாஜகவினர் தரும் கருத்துகளை,​​ ஆலோசனைகளை ஏற்று பின்னர் அமல்படுத்துவதாகவும் உறுதி கூறினார்.​

2011-12-ம் நிதி ஆண்டுக்கு முன்னதாக உத்தேச வரி விதிப்பு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாது, என்று பிரணாப் முகர்ஜி உறுதி அளித்ததாகவும் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் சுஷ்மா ஸ்வராஜ் கூறினார்.

நாட்டில் ஒழுங்காக வரி செலுத்தும் 90 சதவீதத்தினர் சிறிய அளவில் வரி செலுத்துவர்,​​ சிறு வணிகர்கள்தான்.​ அவர்களைப் பாதிக்கும் வகையில் இதில் புதிய வழிகாட்டுதல்கள் உள்ளன, என்று அருண் ஜேட்லி குறிப்பிட்டார்.

நாட்டின் பொருளாதாரமே பொதுமக்களின் சேமிப்பை ​அடிப்படையாகக் கொண்டது.​ ஆனால் உத்தேச வரி விதிப்பு முறையோ சேமிக்கும் பழக்கத்தையே சிதைப்பதாக உள்ளது.​ வரி விலக்கு பெறும் முறையிலிருந்து வரி விதிப்புக்குள்ளாகும் முறை அமல்படுத்தப்பட உள்ளது தெளிவாகப் புரிகிறது.​ மூத்த குடிமக்களை இது நிச்சயமாகப் பாதிக்கும்.​ கல்வி நிறுவனங்கள்,​​ அறக்கட்டளைகளுக்கு வரி விதிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. எனவேதான் இந்த வரி முறையை பாஜக எதிர்ப்பதாக பாஜக தெரிவித்துள்ளது.

பிரணாபைச் சந்தித்த இந்தக் குழுவில், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்,​​ மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி,​​ துணைத் தலைவர் எஸ்.எஸ்.​ அலுவாலியா,​​ பாஜக நேரடி வரி விதிப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கிரித் சோமையா,​​ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆனந்த் குமார் ஹெக்டே,​​ நிஷாகாந்த் துபே,​​ கோபால் அகர்வால் ஆகியோர் அடங்கியிருந்தனர்.




இந்த உத்தேச வரிமுறையை வடிவமைத்தவர் முன்பு நிதியமைச்சர் பொறுப்பிலிருந்த ப சிதம்பரம். அதையே இப்போது பிரணாப் முகர்ஜி அறிமுகப்படுத்தியுள்ளார்.



லண்டனில் 48 ஆயிரம் பேர் பதவியிழப்பு

லண்டன்: லண்டனில் 48 ஆயிரம் பேர் பதவி இழந்து இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
உலக நாடுகள் பொருளாதார சரிவை சந்தித்த போது, பிரிட்டன் மட்டும் அதிலிருந்து தப்பி விடவில்லை. பிரிட்டனிலும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. ஆனால், தற்போது பெரும்பாலான நாடுகள் அந்த பொருளாதார சரிவில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பி விட்டன.

ஆனால், பிரிட்டனில் மட்டும் இது தொடர்வதாக கூறப் படுகிறது. இதுகுறித்து, ஐஎம்ஏஎஸ் கார்ப்பரேட் அட்வைஸர்ஸ் கூறும்போது, பிரிட்டனில் இன்னும் பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் தெரியவில்லை என்றே கூறியுள்ளன.

சமீபத்தில் எடுக்கப் பட்ட ஆய்வில் லண்டடனில் 17 ஆயிரம் மூத்த நிதித்துறை அலுவலர்கள் உட்பட 48 ஆயிரம் பேர் பதவி இழந்திருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. வேலையிழப்பிற்கு இன்சால்வென்ஸி, விஆர்எஸ் போன்ற பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறப் பட்டுள்ளது.

நிதித் துறையில் மட்டுமே இந்த இரு ஆண்டுகளில் 48000 அதிகாரிகள் வேலை இழந்துள்ளார்களாம்.


இந்த எண்ணிக்கை தனிப்பட்ட நபர்களைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்களின் அடிப்படையில் தரப்பட்டுள்ளதாகவும், பெரும் நிறுவனங்களில் பதவி இழந்து பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

நோபல் அமைதி விருதுக்கான பரிந்துரை பட்டியலில் 'இன்டர்நெட்'
லண்டன் : 2010ம் ஆண்டு நோபல் அமைதி விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இன்டர்நெட் இடம் பிடித்துள்ளது. சர்வதேச அளவில் மக்கள் தொடர்பில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதால் இன்டர‌்நெட் சேவை இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இத்தாலியில் இருந்து வெளியாகும் பிரபல பத்திரிகை வையர்ட் இன்டர்நெட்டை இந்த விருதுக்கு பரிந்துரைத்துள்ளது. மக்களை இணைத்து பேச்சுவார்த்தை, விவாதம், ஒருமித்த கருத்து ஆகியனவற்றுக்கு வித்திடுவதோடு , ஜனநாயகத்தையும் மேம்படுத்த ஒரு நல்ல தளமாக இன்டர்நெட் திகழ்வதாக அந்த பத்திரிகை ‌தெரிவித்துள்ளது.




ரூ. 1,100 கோடிக்கு புதிய ஆடர் பெற்றது எல் அன்ட் டி
மும்பை: லார்சன் அன்ட் டியூப்ரோ(எல் அன்ட் டி) நிறுவனம் 1,100 ‌கோடி ரூபாய்க்கு புதிய ஆ‌டர் பெற்றுள்ளது. பில்டிங் அன்ட் ஆப்ரேட்டிங் கம்பெனியான லார்சன் அன்ட் டியூப்ரோ, மும்பை பங்குச்சந்தையிடம் புதிய ஆடர் குறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது.
இதில், 1,100 கோடி ரூபாய் மதிப்பில் புதிய ஆடர்களை பெற்று இருப்பதாகவும், இந்த புதிய ஆடர்கள் ரெசிடன்சியல் டவர்ஸ், வேர் ஹவுஸ், மால் அமைப்பதற்காகவும், தொழிற்சாலை கட்டிடம் அமைப்பதற்கான புதிய திட்டங்களுக்காவும் பெறப் பட்டது என்று லார்சன் அன்ட் டியூப்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மகேந்திரா மேக்சிமோ விலை ரூ. 2.79 லட்சம்
மும்பை: மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனத்தில் புதிய வரவான மேக்சிமோ மினிடிரக்கின் விலை ரூ. 2.79 லட்சம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜனவரி மாதம் டில்லியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் தான் இந்த மினிடிரக்கின் முதல் வாகனம் அறிமுகப் படுத்தப் பட்டது.

இந்த மேக்சிமோ மினிடிரக் இரண்டு சிலிண்டர்கள் கொண்டது. இத்துடன், டி.ஓ.ஹெச்.சி., டெக்னாலஜியுடன் கூடிய சி.ஆர்.டி.,இ., இன் ‌தொழில்நுட்பமும் உள்ளது.

ஒரு சிலிண்டருக்கு 4 வால்வ்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டு இந்த மினிடிரக் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இந்த மேக்சிமோ டிரக் புதிய டெக்னாலஜி, ஸ்டைலுடன் கூடிய பாதுகாப்பான வாகனம் என்று மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜனவரியில் டாடா மோட்டார்ஸ் வாகன விற்பனை உயர்வு
புதுடில்லி: ஜனவரியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை அதிகரித்துள்ளது. இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனம் டாடா மோட்டார்ஸ். இந்நிறுவனத்தின் கனரக வாகனங்கள் விற்பனை ஜனவரியில் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 2009ம் ஆண்டு ஜனவரியில் கனரக வாகன விற்பனை 77.29 சதவீதம் அதிகரித்துள்ளது. மொத்தம் 65,478 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது அதற்கு முந்தைய வருடம் இதே காலகட்டத்தில் 36,931ஆக இருந்தது. உள்நாட்டில் கார், கனரக வாகனங்கள் விற்பனை 62,202ஆக உள்ளது. இது சென்ற வருடம் ஜனவரியுடன் ஒப்பிடுகையில் 74.21% அதிகமாகும்.


இதே போல் ஏற்றுமதியும் 166.9% உயர்ந்துள்ளது. இந்த ஜனவரியில் 3,276 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன. டாடா நிறுவனத்தின் குறைந்த விலை காரான நானோ ரக கார் 4,001 விற்பனையாகி உள்ளது குறிப்பிடத் தக்கது




தங்கம் உற்பத்தியில் சீனா தொடர்ந்து முதலிடம்
பீஜிங்: தங்கம் உற்பத்தியில் தொடர்ந்து சீனா முதலிடத்தில் இருந்து வருகிறது. கடந்த 2009ம் ஆண்டு, சீனாவில் தங்கம் உற்பத்தி அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 11.34 சதவீதம் உயர்ந்து 313.98 டன்னாக அதிகரித்துள்ளது.
இதேபோல, சென்ற ஆண்டில், சீனாவில் உற்பத்தியான தங்கத்தின் மதிப்பு 18.56 சதவீதம் உயர்ந்து 2,014 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பில் இது ரூ.92,644 கோடி ஆகும்.

2007ம் ஆண்டிற்கு முன்னர் தங்கம் உற்பத்தியில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்தில் இருந்தது. 2007ம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவையும் விஞ்சி, சீனா அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்து முதலிடத்தை பிடித்தது.

அதன் பிறகு 2008 மற்றும் 2009-ஆம் ஆண்டுகளிலும் தங்கம் உற்பத்தியில் சீனாதான் முன்னிலையில் உள்ளது.

இதனால், தங்கம் உற்பத்தியில், உலக அளவில் சீனா தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்து வருகிறது.

ஏசர் நிறுவனத்தின் புதிய ரக லிக்விட் ஸ்மார்ட் போன் அறிமுகம்
புதுடில்லி: ஏசர் ஸ்மார்ட் ஹேண்ட்ஹெல்ட் பிசினஸ் குரூப்( எஸ்.ஹெச்.பி.ஜி.,) சார்பில் புதிய ரக லிக்விட் ஸ்மார்ட் போன் டில்லியின் அறிமுகப் படுத்தப் பட்டது. இதனை அந்நிறுவனத்தின் தலைவர் ரிச்சர்ட் டான் அறிமுகம் செய்து வைத்தார்.
அன்ந்ரோடை 1.6 ஹை டெபனிஷன் ஸ்மார்ட் போனான இதன் விலை ரூ. 24,900 ஆகும்.

இதில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய மல்டிமீடியா, வெப் பிரவுசிங், சேஷியல் மீடியா, வீடியோ ஸ்டீமிங் உள்ளிட்டவை அடங்கி உள்ளன.

இதில் ஹை ஸ்பீடு இன்டர்நெட், பிராசசிங் மற்றும் சுப்பீரியர் ஹான்ட்லிங் 3டி கிராபிக்ஸ் உள்ளிட்டவையும் உள்ளன.

ஹுண்டாய் விற்பனை அதிகரிப்பு
புதுடில்லி: இந்தியாவின், இரண்டாவது கார் தயாரிப்பு நிறுவனமான, ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின், கடந்த மாதத்திற்கான உள்நாட்டு விற்பனை 40.8 சதவீதமும், ஏற்றுமதி 42.6 சதவீதமும் வளர்ச்சியடைந்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், கடந்த மாதம், மொத்தம் 52 ஆயிரத்து 635 கார்கள் விற்பனை செய்தது. கடந்த மாதம், அந்நிறுவனம், உள்நாட்டில், 29 ஆயிரத்து 601 கார்கள் விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு, ஜனவரியில், 21 ஆயிரத்து 16 கார்கள் மட்டுமே விற்பனையாகின. அதே போன்று கடந்தாண்டு ஜனவரியில், 16 ஆயிரத்து 155 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால், கடந்த மாதம் 23 ஆயிரத்து 34 கார்கள் விற்பனை செய்யப்பட்டன.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப் பட்டுள்ளது. ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரியான அரவிந்த் சக்சேனா கூறுகையில், 'நாங்கள் இந்தாண்டை வளர்ச்சியுடன் துவக்கி உள்ளோம். அரசின் ஊக்கச் சலுகைகளால், இந்த வளர்ச்சி வீதம் தொடரும் என்ற நம்பிக்கை உள்ளது' என்றார்.

உணவுப் பொருள் தயாரிப்பு: 30 பில்லியன் முதலீடு செய்கிறது பெப்சிகோ
புதுடில்லி: உணவுப் பொருள் தயாரிப்புக்கென 30 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்ய பெப்ஸிகோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் சிஇஓ இந்திரா நூயி கூறும்போது, மக்களின் உடல் நலத்தைப் காக்கும் உணவுப் பொருள்களான ஓட்ஸ், இயற்கை பழச்சாறு, மக்காச் சோள தயாரிப்புகளில் இந்த முதலீட்டை செய்யப் போவதாக கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறும்போது, நிறுவனத்துக்கு கிடைக்கும் 43 பில்லியன் வருவாயில், 30 பில்லியன் அளவு கூல்டிரிங்க், சிப்ஸ் ஐட்டங்களைத் தயாரிப்பதில் செலவிடுவதாக கூறியுள்ளார். இந்தப் பொருள்கள் சுவையாக இருப்பது மட்டுமல்ல, உடலுக்கு ஆரேக்கியத்தை அளிப்பதும் முக்கியம். எனவே, ஆரம்பத்தில் 10 பில்லியன் டாலரை ஹெல்தி உணவுகள் தயாரிக்கும் பிரிவுக்கென ஒதுக்க உள்ளோம். படிப்படியாக இதனை 30 பில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று கூறினார்.


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்: உலக வங்கி
புதுடில்லி: இந்தியாவில்‌ பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலகவங்கி வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2010 - 2011ம் ஆண்டில் 7.5 சதவீதமாக இருக்கும். இது அதற்கு அடுத்த ஆண்டில் 8 சதவீதமாக உயரும் என்றும் தெரிவித்துள்ளது.
மேலும், பொருளாதார சரிவில் வளர்ந்த நாடுகள் சிக்கி தவித்த நிலையில் கூட, இந்தியா பொருளாதார சிக்கலை திறம்பட சமாளித்துள்ளது. பெரும் சரிவில் வீழாமல் தப்பியுள்ளது. வரும் நிதியாண்டுகளில் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி பிரமிக்கத்தக்க வகையில் இருக்கும். இதனால்,‌ இந்திய பொருளாதாரமும் வளர்ச்சி அடையும் என்றும் உலக வங்கி தெரிவித்துள்ளது.





ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட செய்தியில், வருகிற நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது. நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் 6.1 சதவீதமாக அது இருந்தது. கடந்த 2007-08ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

எஸ்.பி.ஐ., சார்பில் வாராக் கடன் தொடர்பான சிறப்பு மக்கள் நீதிமன்றம்
சென்னை: வாராக் கடன் தொடர்பான வழக்குகளை விசாரிக்க பாரத ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ.,) சார்பில் சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. சென்னையில் நாளை(பிப்ரவரி 3ம் தேதி) நடைபெற உள்ள இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், இதுவரை கொணரப்படாத வழக்குகள் தீர்வுக்காக எடுத்து கொள்ளப் பட உள்ளன. இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தை காலை 9.30 மணிக்கு தலைமை நீதிபதி கோகலே தொடங்கி வைக்கிறார். 6 நீதிபதிகள் இந்த வழக்குகளை விசாரிக்க உள்ளன.
தனிநபர் மற்றும் சிறுதொழில் உள்ளிட்ட 1,693 கடன் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப் பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

ஜனவரியில் வாகன விற்பனை அதிகரிப்பு
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் ஜனவரி மாதத்தில் முன்னணி நிறுவனங்களின் வாகனங்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் மாருதி சுசுகி நிறுவனத்தில் கார்கள் விற்பனை முதலிடத்தில் உள்ளது. ஜனவரி மாதத்தில், இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை கடந்த ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 33.3 சதவீதம் உயர்ந்து 95,649 உள்ளது.


இதே ‌போல, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில், கார்கள் ஏற்றுமதியில் முதலிடத்திலும், தயாரிப்பில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.இந்த காலகட்டத்தில் உள்நாட்டில் இந்நிறுவனத்தின் கார்கள் விற்பனை 40.8 சதவீதம் அதிகரித்து 29,601-ஆக உள்ளது.


இரு சக்கர வாகனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி, ஜனவரி மாதத்தில் 1,25,578 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டில் இந்நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் விற்பனை 37.3 சதவீதம் உயர்ந்து 79,729 என்ற எண்ணிக்கையிலிருந்து 1,09,504-ஆக அதிகரித்துள்ளது.


மகிந்திரா - மகிந்திரா நிறுவனத்தின் 67.4 சதவீதம் அதிகரித்து 17,320 என்ற எண்ணிக்கையிலிருந்து 28,988-ஆக உயர்ந்துள்ளது.

கேம்பஸ் இன்டர்வீயூ வேலைவாய்ப்பு-11% சரிவு
கொல்கத்தா: கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பொறியியல் மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு கடந்த 2009ம் ஆண்டில் கணிசமான அளவுக்கு குறைந்திருப்பதை ஆய்வுகள் உறுதி்ப்படுத்துகின்றன.




பிரபலமான 111 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் வளாக தேர்வு (campus interview) மூலம் நேரடி பணிவாய்ப்பு கிடைத்த பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கை கடந்த 2009ம் ஆண்டில் 11 சதவீதம் குறைந்துள்ளது.

ஐடிசி-டேட்டா குவெஸ்ட் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த சரிவு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

முந்தைய ஆண்டை ஒப்பிடும் போது 2009ம் ஆண்டில் பொறியியல் பட்டதாரிகளுக்கான பணி வாய்ப்பு மந்தமாகவே இருந்தது. இதற்கு சர்வதேச பொருளாதார தேக்க நிலை தான்.

இந்தியாவின் 111 தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் 'பிளேஸ்மென்ட்' பெற்ற பி.இ மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைந்துள்ள அதே சமயத்தில் 16 கல்வி நிறுவனங்களில் 100 சதவீத மாணவர்கள் பணி வாய்ப்பு பெற்றதும் நடந்துள்ளது.

தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு வளாக தேர்வுக்காக வரும் நிறுவனங்களின் எண்ணிக்கையும், பணி வாய்ப்பு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையும் 2009ம் ஆண்டில் குறைவாகவே இருந்துள்ளது.

பல்வேறு தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் வளாக தேர்வு நடத்திய 54 நிறுவனங்களி்ல் பாதிக்கும் மேற்பட்டவை தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ துறையைச் சேர்ந்தவை.

ஐஐடி பட்டதாரிகளின் சம்பளம் 5% குறைந்தது:

ஐஐடி பட்டதாரிகளுக்கான சம்பளம் 2009ம் ஆண்டில் 5 சதவீதம் குறைந்ததாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஐஐடிக்களில் படிக்கும் பல திறமையான மாணவர்கள், பட்டம் முடித்த பின் வேலையை தேடாமல் உயர் கல்வியிலேயே அதிக ஆர்வம் செலுத்துகின்றனர்.

இதன் காரணமாக ஐஐடி பட்டதாரிகளுக்கான வருடாந்திர சம்பளம் 5 சதவீதம் குறைந்து ரூ.5.88 லட்சமாகிவிட்டது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்படுகிறது.

2009ம் ஆண்டில் நாடுமுழுவதும் உள்ள பொறியியல் பட்டதாரிகளின் வருமானம் சராசரியாக ரூ.3.5 லட்சம் என கணிக்கப்பட்டுள்ளது.