செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சென்செக்ஸ் கணக்கிடும் நிறுவனங்களில் அன்னிய பங்கு மூலதனம் அதிகரிப்பு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் செயல்திறன் மீது நம்பிக்கை வைத்துள்ளன. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் Ôசென்செக்ஸ்Õ கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 19 நிறுவனங்களில், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் & டிசம்பர்), அன்னிய நிதி நிறுவனங்கள் கொண்டுள்ள பங்கு மூலதன அளவு அதிகரித்துள்ளது.

ஹீண்டால்கோ இதற்கு சான்றாக, தாமிரம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹீண்டால்கோ நிறுவனத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு மேற்கொண்டுள்ளதை கூறலாம். நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள் கொண்டிருந்த பங்கு மூலதன அளவு 16.39 சதவீதமாக இருந்தது. இது, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் 8 சதவீதம் அதிகரித்து 24.39 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ண்டால்கோ நிறுவனம், தாமிரம் உற்பத்தியில், இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் துறை நடவடிக்கைகளில் ஏற்பட்டு வரும் விறுவிறுப்பால், உலோகத் துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் வாகனங்கள்
நாட்டில் கார்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் விற்பனையில் எழுச்சி ஏற்பட்டு வருகிறது. இதனை உறுதிபடுத்துகின்ற வகையில், சென்ற ஜனவரி மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 11 லட்சம் எண்ணிக்கையை தாண்டி, இந்திய மோட்டார் வாகனத் துறை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகி உள்ளது. நாட்டில், மோட்டார் வாகனங்கள் தயாரிப்பில் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 11.25 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டிருந்தன. இது, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 15.67 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வங்கிகள்
இந்தியாவில், வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதனால்தான் கடந்த 2008&ஆம் ஆண்டில், உலக அளவில், வங்கித் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்ட போதும், இந்திய வங்கிகள் நல்ல அளவில் லாபம் ஈட்டி திறம்பட செயல்பட்டன. இந்தியாவில் பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி மிகப் பெரிய வங்கியாக திகழ்கிறது. இவ்வங்கியில், அன்னிய நிதி நிறுவனங்கள் கொண்டிருந்த பங்கு மூலதனமும் இதே காலத்தில் 1.5 சதவீதம் உயர்ந்து 11.37 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில், தொழில் துறையில் ஏற்பட்டு வரும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியால், சென்ற 2009&ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், முக்கிய நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதன அளவை உயர்த்தி உள்ளன என்று சி.என்.ஐ. ரிசர்ச் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிஷோர் பி.ஆஸ்த்வால் தெரிவித்தார்.
பங்கு வர்த்தகம்
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட உருக்குலைவால், கடந்த 2008&ஆம் ஆண்டில், நாட்டின் பங்கு வர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டது. அவ்வாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டிலிருந்து ரூ.52,900 கோடி நிகர மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்தன.
இதன் பிறகு, சென்ற 2009&ஆம் ஆண்டில், நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் நன்றாக இருந்தது. அவ்வாண்டில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு Ôசென்செக்ஸ்Õ ஒரே ஆண்டில் 80 சதவீதம் அதிகரித்து இருந்தது. இவ்வாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில் ரூ.80,500 கோடி நிகர மதிப்பிற்கு முதலீடு மேற்கொண்டிருந்தன.
பராக் ஒபாமா
இந்நிலையில், நடப்பு 2010&ஆம் ஆண்டில், இதுவரையிலுமாக, நாட்டின் பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. Ôசென்செக்ஸ்Õ, இவ்வாண்டில், சென்ற 18 வர்த்தக தினங்களில் 7.51 சதவீதம் சரிவடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்க வங்கிகளின் முதலீட்டு நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என்று இவ்வாண்டு தொடக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். இதனால், அமெரிக்காவிலுள்ள வங்கிகளால் ஈட்டப்படும் லாபம் குறையலாம் என்ற நிலை உருவானது. கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில், கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனாவும், அந்நாட்டில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற வெளிப்புற காரணிகளால், நாட்டின் பங்கு வர்த்தகம் தற்போது மந்தமாக உள்ளது.
முதலீடு
இந்நிலையிலும், கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 3,000 நிறுவனப் பங்குகளில், நடப்பு ஆண்டில், இதுவரையிலான காலத்தில் 1,370 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. அதாவது, 100 நிறுவனங்களில், 46 நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. எனவே, வரும் மாதங்களில், இந்திய நிறுவனப் பங்குகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை, அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீட்டில் விறுவிறுப்பு இருக்காது என்று பங்கு வர்த்தக நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.


ஏற்றுமதி சலுகைகள் மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு மறு ஆய்வு செய்யப்படும்


அமிதி சென்
புதுடெல்லி
கடந்த 2008&ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதனால், நம் நாட்டின் ஏற்றுமதி மிகவும் சரிவடைந்து போனது.
வளர்ச்சி பாதை
இதனை கருத்தில் கொண்டு, மத்திய வர்த்தக அமைச்சகமும், நிதி அமைச்சகமும், ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கின. தற்போது, உலகின் பல நாடுகளின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி உள்ளதால், நாட்டின் ஏற்றுமதி கடந்த மூன்று மாதங்களாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மத்திய அரசின் இந்த ஏற்றுமதி சலுகை திட்டங்கள் நடப்பு 2010&ஆம் ஆண்டு மார்ச் 31&ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், மத்திய அரசு, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கி வரும் சலுகைகளை நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது. இருப்பினும், தற்போதைய நிலையில், இச்சலுகைகள் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என்றும், வரும் மத்திய பட்ஜெட் அறிவிப்பிற்கு பிறகே இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்றுமதி
நாட்டின் ஏற்றுமதி சரிவடைந்ததை கருத்தில் கொண்டு, ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மத்திய அரசு குறைந்த வட்டியில் ஏற்றுமதி கடன்களையும், பல்வேறு வரிச் சலுகைகளையும் வழங்கியது. இதனால், ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவிற்கு பலன் கிடைத்து வருகிறது. இருப்பினும், வரிச் சலுகைகளால், அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்பதையும் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
அரசின் ஏற்றுமதி சலுகைகளால், பழங்கள், காய்கறிகள், கடல் உணவு பொருள்கள், துணி வகைகள், புகையிலை போன்ற பொருள்களின் ஏற்றுமதி மிகவும் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், நவரத்தினங்கள், ஆபரணங்கள், மருந்து பொருள்கள், பிளாஸ்டிக் மற்றும் பெட்ரோலிய பொருள்களின் ஏற்றுமதியிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், பொறியியல், சணல், மிதியடிகள், கைவினை பொருள்கள், தோல் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி மிகவும் பின்தங்கியே உள்ளது. இவற்றையெல்லாம் ஆய்வு செய்து, எந்தெந்த துறைகளுக்கு சலுகைகள் நீட்டிக்கப்பட வேண்டும், எந்தெந்த துறைகளுக்கான சலுகைகளை விலக்கிக் கொள்வது என்பது குறித்து பட்ஜெட்டிற்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரூ.2,000 கோடி
நடப்பு 2009&10&ஆம் ஆண்டில், ஏற்றுமதி சலுகைகள் வழங்கப்பட்ட வகையில், அரசுக்கு வருவாயில் ரூ.2,000 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கிய நிலையில், சென்ற மாதம், மத்திய வர்த்தக அமைச்சகம் கூடுதலாக 2,000 பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.400 கோடி மதிப்பிற்கு சலுகைகளை வழங்கியது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆப்பிரிக்காவில் கால் பதிக்க மீண்டும் முயற்சி


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி / மும்பை
சுனில் மிட்டல் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் பார்தி ஏர்டெல், செல்போன் சேவையில், வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. ஆப்பிரிக்காவில் செல்போன் சேவைத் துறை அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே, இந்நிறுவனம், ஆப்பிரிக்காவில் கால் பதிக்க மீண்டும் முயற்சி செய்து வருகிறது.
பேச்சுவார்த்தை
இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், குவைத் நாட்டைச் சேர்ந்த, தொலை தொடர்புச் சேவையில் ஈடுபட்டு வரும் Ôசயின்Õ நிறுவனத்தின் ஆப்பிரிக்க செல்போன் சேவை பிரிவின் பெரும் பகுதியை 1,070 கோடி டாலர் (ரூ.49,700 கோடி) மதிப்பிற்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதற்கு Ôசயின்Õ நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பார்தி ஏர்டெல் நிறுவனம், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எம்.டி.என். நிறுவனத்தை கையகப்படுத்த இரண்டு முறை முயற்சி செய்தது. ஆனால், இம்முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், Ôசயின்Õ நிறுவனத்தின் ஆப்பிரிக்காவில் உள்ள செல்போன் சேவைப் பிரிவை வாங்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பார்தி ஏர்டெல் நிறுவனம் ஐந்து நாடுகளில் செயல்பாடுகளை கொண்டுள்ளது. Ôசயின்Õ நிறுவனம் 15 நாடுகளில் செயல்பாடுகளை கொண்டுள்ளது. ஆக, Ôசயின்Õ நிறுவனத்தை கையகப்படுத்தும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தால் 20&க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் காலூன்ற முடியும். சயின் நிறுவனத்திற்கு, ஆப்பிரிக்காவில் 4.01 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். எனவே, செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் 16.50 கோடியாக உயர்ந்துவிடும்.
பங்கின் விலை
அதேசமயம், ஆப்பிரிக்க செல்போன் சேவை பிரிவை கையகப்படுத்துவதால், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிதி நிலையில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திங்கள்கிழமை அன்று, இந்நிறுவனப் பங்கின் விலை 9.22 சதவீதம், அதாவது ரூ.29 குறைந்து ரூ.285.40&ஆக இருந்தது.


மும்பை & தேசிய பங்கு சந்தைகள் பட்டியலில் சின்காம் ஹெல்த்கேர், வாஸ்கான் இன்ஜினீயர்ஸ்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
அண்மையில் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களம் இறங்கிய சின்காம் ஹெல்த்கேர் மற்றும் வாஸ்கான் இன்ஜினீயர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்குகள் திங்கள்கிழமை அன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன.
மூலதனச் சந்தை
இவற்றுள், சின்காம் ஹெல்த்கேர் நிறுவனம், மருந்துகள் தயாரிப்பு மற்றும் சந்தைபடுத்துதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், பங்கு ஒன்றை ரூ.75 என்ற விலையில் வெளியிட்டது.
சின்காம் ஹெல்த்கேர் நிறுவனம், உத்ராஞ்சல் மாநிலம் டேராடூனில் உள்ள அதன் மருந்து தொழிற்சாலையை நவீனப்படுத்தி வருகிறது. மேலும், இந்தூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய மருந்து தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றையும் அமைத்து வருகிறது. இதற்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்வதற்காகவே இந்நிறுவனம் மூலதனச் சந்தையில் களம் இறங்கியது.
மும்பை பங்குச் சந்தையில் இதன் பங்குகள் தொடக்கத்தில், வெளியீட்டு விலையை விட அதிகமாக ரூ.88&க்கு விலை போனது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக ரூ.107.25 வரை சென்று விட்டு, வர்த்தகம் முடியும்போது ரூ.87.85&ல் நிலை பெற்றது.
தேசிய பங்குச் சந்தையில், இதன் பங்கு ஒன்று தொடக்கத்தில் ரூ.89.90&க்கு விலை போனது. பின்பு, வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக ரூ.107.20&க்கு சென்று விட்டு, வர்த்தகம் முடியும்போது ரூ.87.75&ல் நிலை கொண்டது.
பூனாவைச் சேர்ந்த வாஸ்கான் இன்ஜினீயர்ஸ் நிறுவனம், பொறியியல், கட்டுமான சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், பங்கு ஒன்று ரூ.165 என்ற விலையில் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.
மும்பை பங்குச் சந்தை
இதன் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில், திங்கள்கிழமை அன்று பட்டியலிடப்பட்டபோது ரூ.170&க்கு கைமாறியது. பின்பு, வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.173.45 வரை சென்று விட்டு, வர்த்தகம் முடியும்போது, வெளியீட்டு விலையை விட குறைவாக ரூ.147.20&க்கு விலை போனது.
தேசிய பங்குச் சந்தையில், தொடக்கத்தில் ரூ.156&க்கும், அதிகபட்சமாக ரூ.171.95&க்கும் கைமாறிய இதன் பங்குகள், வர்த்தகம் முடியும்போது ரூ.148.05&ல் நிலைபெற்றது

உணவு பொருள்கள் விலை உயர்வால் பணவீக்க விகிதம் 8.56%&ஆக உயர்வு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் அனைத்து பொருள்களுக்கான பணவீக்க விகிதம், சென்ற ஜனவரி மாதத்தில், கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு 8.56 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற டிசம்பர் மாதத்துடன் (7.31 சதவீதம்) ஒப்பிடும்போது இது 1.25 சதவீதம் அதிகமாகும்.
சர்க்கரை
சென்ற கரீஃப் பருவத்தில், தென் மேற்கு பருவமழை கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமாக இருந்தது. இதனால், சர்க்கரை, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலை மிகவும் உயர்ந்து இருந்தது.
பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட கடன் கொள்கை ஆய்வு அறிக்கையில், நடப்பு நிதி ஆண்டில், நாட்டின் அனைத்து பொருள்களுக்கான பணவீக்க விகிதம் 8.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்து இருந்தது. சென்ற ஜனவரி மாதத்தில் பணவீக்க விகிதம் இதையும் விஞ்சி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், சர்க்கரை விலை, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 58.96 சதவீதம் உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளின் விலை இதே காலத்தில் முறையே 53.3 சதவீதம், 45.64 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்ற ஒரு மாதத்தில், துவரம் பருப்பு, கோதுமை ஆகியவற்றின் விலை முறையே 6 சதவீதம், 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
ரூ.36,000 கோடி
உணவு பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட கடன் கொள்கை ஆய்வு அறிக்கையில், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை 5 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக உயர்த்தியது. இதனால், வங்கிகள் கூடுதலாக ரூ.36,000 கோடியை பாரத ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டிய நிலை உருவாகும். இதனால், இந்த அளவிற்கு நாட்டில் பணப்புழக்கம் குறைந்துவிடும்.
தற்போது பணவீக்க விகிதம் மிகவும் உயர்ந்துள்ளதால், வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்), மற்றும் வங்கிகள் அவற்றின் உபரி நிதியை பாரத ரிசர்வ் வங்கியில் இருப்பு வைப்பதற்காக வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனிற்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) உயர்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெட்ரோல்
பணவீக்க விகிதம் அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை மத்திய அரசு தற்போது உயர்த்தாது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


விலை கணிசமாக சரிவடைந்துள்ள நிலையில் முதலீட்டுக்கு ஏற்றவையாக திகழும் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகள்
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
தற்போது பங்குச் வர்த்தகத்தில் கடும் ஏற்றத் தாழ்வுகள் நிலவி வருகின்றன. இதனையடுத்து, ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகளின் விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவடைந்துள்ளது. எனவே, இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, சில்லரை முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளின் மீது கவனம் செலுத்தலாம் என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்செக்ஸ்
சென்ற 2009&ஆம் ஆண்டில், மார்ச் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்ற நிலை காணப்பட்டது. வீடுகளுக்கான தேவைப்பாடு அதிகரித்தால் இத்துறை நிறுவனங்களின் செயல்திறன் அதிகரித்தது. இக்காலத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் Ôசென்செக்ஸ்Õ 88.41 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இந்நிலையில், இந்த வளர்ச்சியையும் விஞ்சி ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகளின் விலை ஒட்டுமொத்தத்தில் 227 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதே காலத்தில் சொத்துக்களின் விலை 10 சதவீதத்திற்கும் மேலான அளவில் உயர்ந்துள்ளது. இதனால் குடியிருப்புகளின் விற்பனை குறைந்தது. குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு முன்பிருந்த நிலவரத்துடன் ஒப்பிடும்போது, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வீடுகள் விற்பனை 10&15 சதவீதம் குறைந்து போனது.
இந்நிலையில், பாரத ரிசர்வ் வங்கி கடன் கொள்கை ஆய்வு அறிக்கையில், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தியது. இதுபோன்ற காரணங்களால், ரியல் எஸ்டேட் துறை நிறுவனப் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டினர்.
சென்ற 2009&ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து, நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில் Ôசென்செக்ஸ்Õ 6 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், ரியல் எஸ்டேட் துறை நிறுவனப் பங்குகளின் விலை ஒட்டுமொத்தத்தில் 25 சதவீதம் குறைந்துள்ளது. ஆக, ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்துள்ளது. இந்நிறுவனப் பங்குகளில், அவற்றின் செயல்திறன் அடிப்படையில் முதலீடு செய்யலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்கு வர்த்தகம்
கடந்த 2007&ஆம் ஆண்டில் உள்நாட்டில் பங்கு வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருந்தது. பின்னர் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்கநிலையால், 2008&ஆம் ஆண்டில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. மூலதனச் சந்தையில் இறங்கிய சில நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் தோல்வியை தழுவின. ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த ஈமார் எம்.ஜி.எஃப். நிறுவனத்தின் பங்கு வெளியீடு முதலீட்டாளர்களின் ஆதரவு இல்லாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.
2008&ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, சென்ற 2009&ஆம் ஆண்டில் பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. அவ்வாண்டில் பங்கு வெளியீட்டில் இறங்கிய பல நிறுவனங்கள் அவற்றுக்கு தேவையான நிதியை வெற்றிகரமாக திரட்டிக் கொண்டன. நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளதால், பல நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டங்களில் இறங்கி வருகின்றன. அடிப்படைக் கட்டமைப்பு பணிகளில் மீண்டும் உத்வேகம் ஏற்பட்டுள்ளது. எனவே ரியல் எஸ்டேட் துறையிலும் பல நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் இறங்க ஆயத்தமாகி உள்ளன.
இந்த வகையில் ஈமார் எம்.ஜி.எஃப்., லோதா டெவலப்பர்ஸ், சகாரா பிரைம், ஓபராய் ரியால்டி உள்ளிட்ட 10 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வேண்டி பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕக்கு விண்ணப்பித்துள்ளன. பங்கு வெளியீடு மூலம் இந்த 10 நிறுவனங்களும் ஒட்டுமொத்த அளவில் ரூ.19,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ்
இதே துறையைச் சேர்ந்த கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் மற்றும் டீ.பீ. ரியால்டி ஆகிய நிறுவனங்கள் அண்மையில் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டன. இவற்றின் பங்கு வெளியீடுகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்தது. எனினும் அதன் பிறகு பங்குச் சந்தை நிலவரங்கள் இந்த நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதாக இல்லை. பங்கு வர்த்தகத்தில் கடும் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.
இந்நிலையில் பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுத் திட்டத்தை ஒத்திவைக்கும் நிலைக்கே வந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக, ஏற்கனவே பங்குகளை வெளியிட்டு தோல்வி அடைந்த ஈமார் எம்.ஜி.எஃப். நிறுவனம், தற்போது காலவரையறையின்றி அதன் பங்கு வெளியீட்டுத் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. இந்நிறுவனம் மூலதனச் சந்தையில் ரூ.3,900 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
பங்கு விலை சரிவு
சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து, நடப்பு பிப்ரவரி மாதம் இதுவரையிலுமாக, நாட்டின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டீ.எல்.எஃப். நிறுவனப் பங்கின் விலை 30 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாபுல்ஸ் நிறுவனப் பங்கின் விலை 35 சதவீதமும், யூனிடெக் நிறுவனப் பங்கின் விலை 29 சதவீதமும் சரிவடைந்துள்ளது. ஃபீனிக்ஸ் மில்ஸ் (14%), பர்ஸ்வ்நாத் டெவலப்பர்ஸ் (19%), அக்ருதி சிட்டி (13%), சன்டெக் ரியால்டி (10%), எச்.டீ.ஐ.எல். (6.46%) ஆகிய நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் தேவைப்பாடு அதிகரிக்கும் நிலையிலும், பங்கு வர்த்தகம் ஏற்றம் பெறும் நிலையிலும் இந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, சில்லரை முதலீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையில் இந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

லாபம் உயர்ந்துள்ள நிலையிலும் பங்குகளின் விலை குறைந்த நிறுவனங்கள்

விஜய் கவுரவ்
மும்பை
அப்பல்லோ டயர்ஸ், பூஷண் ஸ்டீல், டாட்டா ஸ்பான்ஜ் அயர்ன், பினானி சிமெண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் அதிக நிகர லாபம் ஈட்டியுள்ளன. இந்நிலையிலும், இந்நிறுவனங்களின் செயல்திறனுடன் ஒப்பிடும்போது, அவற்றின் பங்குகளின் விலை குறைவாக உள்ளது.
அப்பல்லோ டயர்ஸ்
டயர்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில், சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 9 மடங்கு அதிகரித்து ரூ.5.50 கோடியிலிருந்து ரூ.102 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாயும் ரூ.903 கோடியிலிருந்து ரூ.1,323 கோடியாக உயர்ந்துள்ளது.
தற்போது, இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.55.90 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டிற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஒரு பங்குச் சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது இது 8.2 மடங்குகள் என்ற அளவில்தான் உள்ளது.
பூஷண் ஸ்டீல்
மேலும், பூஷண் ஸ்டீல் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் 10 மடங்கு அதிகரித்து ரூ.227 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் 42 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.1,429 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது, இந்நிறுவனப் பங்கு ஒன்று ரூ.1,591 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டிற்கு இந்நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியம் ரூ.168 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது, பங்கின் விலை 9.5 மடங்குகள் என்ற அளவில் உள்ளது
பினானி சிமெண்ட்
சிமெண்டு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் பினானி சிமெண்ட் நிறுவனத்தின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்து ரூ.403 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 5.7 மடங்குகள் உயர்ந்து ரூ.57 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.73 என்ற அளவில் உள்ளது. இதன் ஒரு பங்குச் சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது, பங்கின் விலை 5.2 மடங்குகள் என்ற அளவில் உள்ளது.


ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 25% அதிகரிப்பு இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஏப்ரல்&டிசம்பர்) இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்குகளில் ரூ.48,184 கோடி முதலீடு செய்துள்ளன. இது, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டில் (ரூ.91,000 கோடி) 53 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, நாட்டின் பங்கு வர்த்தகத்தின் முன்னேற்றத்திற்கு அன்னிய நிதி நிறுவனங்களை முற்றிலும் சார்ந்திருக்கும் நிலை படிப்படியாக அகன்று விடும் என்று பங்கு வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிமிய வருவாய்
இதே காலத்தில், காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் மற்றும் புதுப்பிக்கும் பிரிமிய வருவாய் ஆகிய இரண்டும் சேர்ந்த மொத்த பிரிமிய வருவாய் 25 சதவீதம் அதிகரித்து ரூ.1,31,382 கோடியிலிருந்து ரூ.1,64,355 கோடியாக உயர்ந்துள்ளது.
வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள உதவும் காப்பீட்டு நிறுவனங்கள், பிரிமிய வருவாயில் குறிப்பிட்ட தொகையை நிறுவனப் பங்குகள் மற்றும் கடன்பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து ஆதாயம் ஈட்டுகின்றன.
நிறுவனப் பங்குகள்
காப்பீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டின் மதிப்பு ரூ.4,15,094 கோடியாக உள்ளது. சென்ற 2008&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இது, ரூ.2,35,508 கோடியாக இருந்தது. ஆக, 12 மாத காலத்தில் இதன் மதிப்பு 76 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்குகளில் அதிக அளவில் முதலீடு மேற்கொண்டுள்ளதும் மற்றும் அவை மேற்கொண்ட முதலீட்டின் மதிப்பு அதிகரித்துள்ளதும் காரணங்களாகும்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த பிரிமிய வருவாயில் (ரூ.1,64,353 கோடி), புதுப்பிக்கப்பட்ட பிரிமிய வருவாய் ரூ.96,917 கோடியாகும். சென்ற நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இதில் 22 சதவீத (ரூ.79,168 கோடி) வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வருவாயில், பங்கு சார்ந்த காப்பீட்டு பிரிமிய வருவாய் 41 சதவீதம் உயர்ந்து ரூ.26,638 கோடியிலிருந்து ரூ.37,543 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், புதுப்பிக்கப்பட்ட சாதாரண பிரிமிய வருவாய் ரூ.52,530 கோடியிலிருந்து 13.3 சதவீதம் அதிகரித்து ரூ.59,374 கோடியாக உயர்ந்துள்ளது.
பங்கு சார்ந்த திட்டங்கள்
இதே காலத்தில், புதிய பிரிமிய வருவாய் 29 சதவீதம் அதிகரித்து ரூ.52,215 கோடியிலிருந்து ரூ.67,438 கோடியாக உயர்ந்துள்ளது. புதிய பிரிமிய வருவாயில், பங்கு சார்ந்த காப்பீட்டு திட்ட பிரிமிய வருவாயின் பங்களிப்பு, கடந்த 2008&ஆம் ஆண்டு டிசம்பர் 31&ந் தேதி அன்று 61 சதவீதமாக இருந்தது. இது, சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31&ந் தேதி அன்று 53 சதவீதமாக குறைந்துள்ளது. இது, பங்கு வர்த்தகத்தில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தால், பங்கு சார்ந்த காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய பொதுமக்கள் தயக்கம் காட்டியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
அதேசமயம், காப்பீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீட்டில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
செயல்பாட்டு செலவினம்
இத்துறை நிறுவனங்கள் அவற்றின் செயல்பாட்டு செலவினத்தை குறைத்து வருகின்றன. சென்ற நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 12.24 சதவீதமாக இருந்த செயல்பாட்டு செலவின விகிதம், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 10.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதனையடுத்து, நடப்பு ஜனவரி & மார்ச் காலாண்டிலும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அமெரிக்க பங்குச் சந்தைகளில் இந்திய நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.29,000 கோடி உயர்வு

அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள இந்திய நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்), சென்ற வாரத்தில் 626 கோடி டாலர் (ரூ.28,976 கோடி) அதிகரித்துள்ளது.
இந்நிறுவனங்களுள், சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 177 கோடி டாலர் (ரூ.8,142 கோடி) உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள விப்ரோ நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு 142 கோடி டாலர் (ரூ.6,532 கோடி) உயர்ந்துள்ளது.
மேலும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டீ.எஃப்.சி. வங்கி பங்குகளின் மதிப்பு முறையே 105 கோடி டாலர், 65.80 கோடி டாலர் உயர்ந்துள்ளது.
மேலும், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாட்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பில் முறையே 59.60 கோடி டாலர் மற்றும் 40 கோடி டாலர் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.


ஷெல் இந்தியா நிறுவனம் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது


ராஜீவ் ஜெயஸ்வால் & சுபாஷ் நாராயண்
புதுடெல்லி
தனியார் துறையைச் சேர்ந்த ஷெல் இந்தியா நிறுவனம், நாட்டின் பல முக்கிய நகரங்களில் பெட்ரோல் நிலையங்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம், அடுத்த ஓராண்டு காலத்தில் அதன் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தி 74&ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
ஷெல் இந்தியா நிறுவனம், கடந்த 2004&ஆம் ஆண்டு, இந்தியாவில் 2,000 பெட்ரோல் விற்பனை நிலையங்களை அமைக்க அனுமதி பெற்றுள்ளது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், இந்நிறுவனம் 50 பெட்ரோல் நிலையங்களையே நிறுவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஆயில்
மக்கள் நலன் கருதி, மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்கள் மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றை அடக்க விலைக்கும் குறைவாக விற்பனை செய்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 2008&ஆம் ஆண்டு, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 147 டாலருக்கும் மேல் அதிகரித்ததையடுத்து, தனியார் துறை நிறுவனங்களால், அரசு துறை நிறுவனங்கள் விற்பனை செய்யும் விலைக்கு, பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்ய முடியாமல் போனது. இதனால், இத்துறையில் ஈடுபட்டு வரும் பல தனியார் துறை நிறுவனங்கள், அவற்றின் பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.
டீசல்
தற்போது, ஷெல் இந்தியா நிறுவனத்தின் பெட்ரோல் நிலையங்களில் (இடத்தை பொறுத்து), டீசல் மற்றும் பெட்ரோல் விலை, அரசு துறை நிறுவனங்களின் விலையை விட லிட்டருக்கு ரூ.2&5 அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எஸ்ஸார் ஆயில் ஆகிய நிறுவனங்களும் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களை கொண்டுள்ளன.



நடப்பு 2010&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரிப்பு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
நடப்பு 2010&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியாவில், விமானத்தில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 23 சதவீதம் (33.76 லட்சம்) அதிகரித்து 41.41 லட்சமாக உயர்ந்துள்ளது. விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது.
பொருளாதாரம்
சென்ற 2008&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், உலக அளவில், பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு உச்சநிலையை அடைந்தது. இதனால், விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கையில் கடும் சரிவு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், சென்ற நான்கு மாதங்களாக, விமான பயணிகள் எண்ணிக்கை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.
சென்ற டிசம்பர் மாதத்தில், விமானத்தில் பயணம் மேற்கொண்டவர்கள் எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் 33 சதவீதம் அதிகரித்து 44.87 லட்சமாக உயர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா பயணிகள்
இது குறித்து முன்னணி விமான போக்குவரத்துச் சேவை நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, Òநாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சிப் பாதையில் நடைபோடுகிறது. இதனால், தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும், விமானங்களில் பயணம் செய்வதை அதிகரித்துள்ளனர். இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், விமான போக்குவரத்துச் சேவை நிறுவனங்களும் அதிக பயணிகளை ஈர்க்கும் வகையில் பயண கட்டணத்தை குறைத்துள்ளன. நிறுவனங்கள் விமானங்களை உரிய நேரத்தில் இயக்கி வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் விமான பயணிகள் போக்குவரத்தில் எழுச்சி ஏற்படத் தொடங்கி உள்ளதுÓ என்று தெரிவித்தார்.
சென்ற ஜனவரி மாதத்தில், அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதில், நரேஷ் கோயல் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், அம்மாதத்தில் 12.80 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. மொத்த விமான பயணிகளின் எண்ணிக்கையில் இது 25.2 சதவீதமாகும்.
கிங்பிஷர்
விஜய் மல்லையா தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் விமானங்களில் 9 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து, மொத்த விமான பயணிகளின் எண்ணிக்கையில், இந்நிறுவனம் 22.20 சதவீத பங்களிப்பை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், 7.30 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் பங்களிப்பு 18 சதவீதமாகும்.
இண்டிகோ
குறைந்த கட்டண விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் இண்டிகோ (6.20 லட்சம்), ஸ்பைஸ் ஜெட் (5 லட்சம்), கோ&ஏர் (2.20 லட்சம்), பாரமவுண்ட் (72,000) ஆகிய நிறுவனங்களும் அதிக பயணிகளை ஈர்த்துள்ளன. இவற்றின் பங்களிப்பு முறையே 15.3 சதவீதம், 12.2 சதவீதம், 5.4 சதவீதம், 1.8 சதவீதமாக உள்ளது.
சென்ற ஜனவரி மாதத்தில் 100&க்கு 71 விமானங்கள் உரிய நேரங்களில் பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளன. உரிய நேரத்தில் விமானங்களை இயக்கியதில் பாரமவுண்ட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கிங்ஃபிஷர் இரண்டாவது இடத்திலும், இண்டிகோ, கோ&ஏர், ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. ஏர் இந்தியா நிறுவனம் ஏழாவது இடத்தில் உள்ளது.
சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், விமானத்தில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலாண்டு, இந்திய விமானச் சேவை நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பு ஜனவரி & மார்ச் காலாண்டிலும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
கச்சா எண்ணெய்
சென்ற 2008&09&ஆம் நிதி ஆண்டு, இந்திய விமானச் சேவை நிறுவனங்களுக்கு ஒரு சவாலாக இருந்தது. இந்த நிதி ஆண்டில், விமான பயணிகள் எண்ணிக்கையில் இரட்டை இலக்க அளவிற்கு சரிவு ஏற்பட்டது. அந்த நிதி ஆண்டில், ஜூலை மாதத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 147 டாலராக உயர்ந்து இருந்தது. இதுபோன்ற காரணங்களால், சென்ற நிதி ஆண்டில் இந்திய விமான போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு சுமார் ரூ.8,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது ஆறு மாத காலத்திலிருந்து விமான போக்குவரத்துச் சேவையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே, வரும் நிதி ஆண்டில் இந்திய விமான போக்குவரத்துச் சேவை நிறுவனங்கள் லாப பாதைக்கு திரும்பும் என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்ற ஜனவரி மாதத்தில் 60 சதவீதத்தினர், குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனங்களின் விமானங்கள் வாயிலாக பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஜெட் ஏர்வேஸ், கிங்பிஃஷர் போன்ற நிறுவனங்கள் குறைந்த கட்டண விமானச் சேவைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.


இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகள் விற்பனையில் பொது துறை நிறுவனங்கள் தீவிரம்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகளை விற்பனை செய்வதில் பொதுத் துறை நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன.
விலை அதிகரிப்பு
உள்நாட்டில் பருப்பு வகைகளின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், பொதுத் துறையைச் சேர்ந்த எஸ்.டி.சி., பி.இ.சி., நாஃபெட் மற்றும் எம்.எம்.டி.சி. ஆகிய நிறுவனங்கள், துவரம் பருப்பு, உளுந்து, கொண்டைகடலை, பட்டாணி உள்ளிட்ட பருப்பு வகைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன.
உள்நாட்டில், போதிய அளவிற்கு உற்பத்தி இல்லாததால், இவற்றின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நம் நாட்டில் ஆண்டுக்கு 1.70&1.80 கோடி டன் அளவிற்கு பருப்புகளுக்கு தேவைப்பாடு உள்ளது. அதேசமயம், உள்நாட்டில், இவற்றின் உற்பத்தி 1.40&1.50 கோடி டன் என்ற அளவிலேயே உள்ளது. உற்பத்தியை விட தேவைப்பாடு அதிகரித்துள்ளதால், விலை மிகவும் அதிகரித்துள்ளது.
இந்த வகையில், பொதுத் துறையைச் சேர்ந்த எம்.எம்.டி.சி. நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்து வைத்துள்ள 6,000 டன் பருப்பு வகைகளை நடப்பு பிப்ரவரி மாத இறுதிக்குள் விற்பனை செய்யும் வகையில் ஏலப்புள்ளிகளை கோரி உள்ளது.
ஆஸ்திரேலியா
எம்.எம்.டி.சி.யை போன்று, இதர பொதுத்துறை நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வைத்துள்ள பருப்பு வகைகளை இம்மாத இறுதிக்குள் விற்பனை செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மேற்கண்ட பொதுத் துறை நிறுவனங்கள், ஆஸ்திரேலியா, மியான்மர், கனடா, தான்சானியா, மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்து வைத்துள்ளன.

பெட்ரோல்-ரூ.3 , டீசல்-ரூ.2, சிலிண்டர்-ரூ.50 விலை உயர்கிறது

வியாழன், 11 பிப்ரவரி, 2010

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3ம், டசல் ரூ.2ம், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.50ம் உயர்த்தப்படும் என தெரிகிறது. இந்த வாரத்திலேயே மத்திய அமைச்சரவை கூடி இதுபற்றி இறுதி முடிவெடுக்க உள்ளது.

பெட்ரோல் டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நிர்ணயம் குறித்து கிரித் பாரிக் கமிட்டி அளித்த அறிக்கையை மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

அடுத்த சில நாட்களில் அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்க வேண்டிய இக்கமிட்டியின் பிரிந்துரைகள் குறித்து பெட்ரோலிய அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கிரித் பாரிக் கமிட்டி அறிக்கையை பெட்ரோலிய அமைச்சகம், மத்திய அமைச்சரவையின் முன் வைக்கும்.

இந்த வாரத்திலேயே தாமதமின்றி அறிக்கையை அமைச்சரவையின் முன் சமர்ப்பித்து விடுவோம் என பெட்ரோலியத் துறை செயலாளர் சுந்தரேசன் தெரிவித்துள்ளார்.

விலை உயர்வு பற்றிய இக்கமிட்டியின் பரிந்துரைகளை மத்திய அரசு அப்படியே ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து அரசு வட்டாரங்களிலேயே பல்வேறு தகவல்கள் நிலவுகின்றன.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நேரத்தில் ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கக்கூடிய வகையில் சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணை விலையை உயர்த்த காங்கிரஸ் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

கிரித் பாரிக் பரிந்துரைப்படி சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.100ம், மண்எண்ணை லிட்டருக்கு 6ம் உயர்த்தினால், சாதாரண மக்களை பாதிக்கும் நடவடிக்கையாக அது அமையும் என கருதப்படுகிறது.

ஆனால், பெட்ரோல் டீசல் விலை உயர்வு மட்டும் தவிர்க்கமுடியாதாக இருக்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.3ம், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2ம் உயர்த்த பெட்ரோலிய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சமையல் எரிவாயு விலையை சிலிண்டருக்கு ரூ.100க்கு பதில் 50 ரூபாய் உயர்த்தலாம் என பெட்ரோலிய அமைச்சகம் தரப்பில் வழங்கப்பட்ட ஆலோசனையை பிரதமர் மன்மோகனும் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின்றன.

எனினும் இதுகுறித்த இறுதி முடிவு அமைச்சரவைக் கூட்டத்தில் தான் மேற்கொள்ளப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள், பெட்ரோல் டீசல் மற்றும் மண்எண்ணை விற்பனையில் தற்போது நாளொன்றுக்கு ரூ.180 கோடி நஷ்டத்தை சந்தித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டில் முழுவதும் இந்த பொதுத்துறை நிறுவனங்கள் மொத்தமாக சுமார் ரூ.46 ஆயிரத்து 30 கோடி இழப்பை எதிர்கொண்டுள்ளது.

இந்த சுமையை வாடிக்கையாளர்களின் தலையில் கட்டாத வகையில் புதிய நிவாரண திட்டங்கள் எதையேனும் வகுக்க முடியுமா எனவும் மத்திய அரசு சிந்தித்து வருகிறது.


நடப்பு 2010&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில்


தனியார் பங்கு முதலீடு மற்றும் இணைத்தல் ஒப்பந்தங்களின் மதிப்பு 2 மடங்கு உயர்வு
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
உலக அளவில் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருந்த பின்னடைவால், இந்தியாவில் தனியார் பங்கு முதலீடு குறைந்து வந்தது. இந்நிலையில், நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்த முதலீடு சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.
நிறுவன பங்குகள்
சென்ற 2009&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில் 19.10 கோடி டாலர் (சுமார் ரூ.880 கோடி) முதலீடு செய்து இருந்தன. இது, இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் 2 மடங்கு அதிகரித்து 38.60 கோடி டாலராக (சுமார் ரூ.1,776 கோடி) உயர்ந்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் போன்ற அமைப்புகளிடமிருந்தும் மற்றும் அதிக நிகர சொத்து மதிப்புள்ள தனிநபர்களிடமிருந்தும், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் நிதி திரட்டி, அந்த நிதியை நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்றன. தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், ஒரு துறைக்கு உள்ள வளமான வர்த்தக வாய்ப்பு, நிறுவனங்களின் செயல்திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சீர்தூக்கி பார்த்து அதன் அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்கின்றன. முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு நிர்வாகம் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றன.
அடிப்படை கட்டமைப்பு வசதி
எனவே, இந்நிறுவனங்கள் எந்தத் துறையில் அதிகமாக முதலீடு செய்கிறதோ, அந்த துறை வளர்ச்சிப் பாதையில் செல்லும் என்று கருதலாம். சென்ற ஜனவரி மாதத்தில், இந்நிறுவனங்கள் வாயிலாக அதிக முதலீடுகளை பெற்றுள்ளதில் அடிப்படை கட்டமைப்பு வசதித் துறை முதலிடத்தில் உள்ளது. இத்துறையில், இந்நிறுவனங்கள் 6.10 கோடி டாலர் (சுமார் ரூ.281 கோடி) மதிப்பிற்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.
சாலை போக்குவரத்து
பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராகத் திகழும் சாலை போக்குவரத்து, துறைமுகங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், இத்துறையில் ரூ.22.50 லட்சம் கோடி மதிப்பிற்கு முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என்று மத்திய திட்டக்குழு தெரிவித்துள்ளது.
இதனால்தான், தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள், அடிப்படை கட்டமைப்பு வசதி துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன.
அடிப்படை கட்டமைப்பு வசதி துறைக்கு அடுத்தபடியாக, ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்கள் அதிக அளவில் தனியார் பங்கு முதலீட்டை ஈர்த்துள்ளன. இத்துறை நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடு 5.90 கோடி டாலராக (சுமார் ரூ.272 கோடி) உள்ளது.
இந்தியாவில் தொலை தொடர்பு துறை அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. செல்போன் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மாதந்தோறும் வியக்கத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது. இந்த வகையில், உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இத்துறை நிறுவனங்களில், சென்ற ஜனவரி மாதத்தில் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் 5.80 கோடி டாலர் (சுமார் ரூ.267 கோடி) மதிப்பிற்கு முதலீடுகளை மேற்கொண்டுள்ளன. தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட மொத்த முதலீட்டில், இந்த மூன்று துறைகளும் ஈர்த்த தொகை 45 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைத்தல் நடவடிக்கைகள்
சென்ற ஜனவரி மாதத்தில், இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகளின் மதிப்பும், 2009&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட இவ்வகை ஒப்பந்தங்களின் மதிப்பு 126 சதவீதம் உயர்ந்து 280 கோடி டாலராக (ரூ.12,880 கோடி) அதிகரித்துள்ளது. ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும் சுமார் இரண்டு மடங்கு அதிகரித்து 32&லிருந்து 53&ஆக வளர்ச்சி அடைந்துள்ளது.
எளிதில் சாதனை
ஒரு நிறுவனம், மற்றொரு நிறுவனத்தை கையகப்படுத்துவதால், சர்வதேச அளவில் வலுவாக காலூன்ற முடியும். புதிதாக ஒரு துறையில் களமிறங்குவதற்குப் பதிலாக, ஏற்கனவே அத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனத்தை இணைத்துக் கொள்வதால், அத்துறையில் எளிதில் சாதனை படைக்க முடியும்.
கையகப்படுத்துதல் நடவடிக்கைகளில், இந்திய நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை கையகப்படுத்துவது மற்றும் உள்நாட்டு நிறுவனங்களுக்கிடையில் மேற்கொள்ளப்படும் இணைத்தல் நடவடிக்கைகளும் அடங்கும்.
நான்கு மடங்கு உயர்வு
நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், உள்நாட்டு நிறுவனங்களுக்கிடையில் மேற்கொள்ளப்பட்ட இணைத்தல் நடவடிக்கைகளின் மதிப்பு, சென்ற ஆண்டின் ஜனவரி மாதத்தைக் காட்டிலும் நான்கு மடங்கிற்கு மேல் அதிகரித்து 58.90 கோடி டாலரிலிருந்து (ரூ.2,709 கோடி) 230.30 கோடி டாலராக (ரூ.10,594 கோடி) உயர்ந்துள்ளது.
சென்ற ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்தத்தில், தொலை தொடர்பு, சரக்கு போக்குவரத்து, வங்கி, நிதி மற்றும் காப்பீடு ஆகிய சேவைத் துறைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கிடையில் இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதல் நடவடிக்கைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எல் & டி இன்போடெக்


பங்கு வெளியீட்டில் களம் இறங்க திட்டம்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
தகவல் தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் சேவை அளிப்பு துறையில் ஈடுபட்டு வரும் எல் & டி இன்ஃபோடெக் நிறுவனம், பங்கு வெளியீட்டில் இறங்க திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் கடந்த 2008&ஆம் ஆண்டில் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள முடிவு செய்திருந்தது. ஆனால், சந்தை நிலவரம் சாதகமாக இல்லாததால் அத்திட்டத்தை ஒத்திப்போட்டது.
தற்பொழுது, உலக அளவில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதால், இந்நிறுவனம் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களம் இறங்க திட்டமிட்டுள்ளதாக இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுதிப் பானர்ஜி தெரிவித்தார்.
நிறுவனம், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலுமாக அதிக அளவில் ஆர்டர்களை பெற்று வருகிறது. மேலும், பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் திட்டப்பணிகளை அமல்படுத்தும் வகையில் ஏலப்புள்ளிகளில் கலந்து கொள்கிறது. நிறுவனம், ரூ.5&25 கோடி மதிப்பிற்கான திட்டங்களிலும் பங்கேற்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எல் & டி இன்ஃபோடெக் நிறுவனம், ரயில்வே, மின்சாரம், கல்வி என பல்வேறு துறைகளுக்கான சாஃப்ட்வேர் தீர்வுகளை வழங்கி வருகிறது.

மத்திய அரசு ரூ.1 லட்சம் கோடி உபரி நிதி ரிசர்வ் வங்கியில் இருப்பு

மத்திய அரசு, அதன் செலவினம் போக எஞ்சியுள்ள தொகையை பாரத ரிசர்வ் வங்கியிடம் ரொக்கமாக இருப்பு வைக்கிறது. இந்த வகையில், சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில், இவ்வங்கியில் மத்திய அரசு வைத்துள்ள இருப்பு நிதி ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி உள்ளது.
சென்ற ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரையிலான காலத்தில் முறையே ரூ.69,391 கோடி மற்றும் ரூ.58,460 கோடியாக இருந்த இந்த உபரி நிதி, டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் ரூ.1,03,438 கோடியாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில், மத்திய அரசின் நிதி பற்றாக்குறை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரூ.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதனை குறைக்கும் வகையில், மத்திய அரசு செலவினங்களை கட்டுக்குள் வைத்து வருகிறது. இதனால்தான் பாரத ரிசர்வ் வங்கியில் மத்திய அரசு வைத்துள்ள இருப்பு நிதி மிகவும் உயர்ந்துள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வரும் 2012&ஆம் ஆண்டிற்குள்


இந்தியா, உருக்கு உற்பத்தியில் இரண்டாவது இடம் பிடிக்கும்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. இதனையடுத்து, வரும் 2012&ஆம் ஆண்டிற்குள், உருக்கு பொருள்கள் உற்பத்தியில், உலக அளவில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று மத்திய உருக்குத் துறை அமைச்சர் வீரபத்ரசிங் தெரிவித்தார்.
5.70 கோடி டன்
இந்தியாவில், தற்போது ஆண்டுக்கு 5.70 கோடி டன் உருக்கு பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த வகையில், உலக அளவில் தற்போது இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முறையே முதல், இரண்டாவது, மூன்றாவது இடங்களில் உள்ளன. இந்நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நம் நாட்டில் உருக்கு உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரிக்க உள்ளது.
இது குறித்து வீரபத்ரசிங் கூறும்போது, Òவரும் 2012&ஆம் ஆண்டிற்குள் நாட்டின் உருக்கு உற்பத்தியை 12.40 கோடி டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்தியா உருக்கு உற்பத்தியில் தலைசிறந்து விளங்குவதுடன், சர்வதேச அளவில் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளையும் விஞ்சி இரண்டாவது இடத்தை பிடிக்கும். இந்தியாவில் உருக்கு பயன்பாடும் வியக்கத்தக்க வகையில் அதிகரித்து வருகிறதுÓ என்று தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவில் புதிதாக உருக்குத் தொழிற்சாலைகளை உருவாக்குவதற்காக, நிறுவனங்கள் 8,000 கோடி டாலர் (ரூ.3,68,000 கோடி) மதிப்பிற்கு முதலீடுகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்து வருகின்றன. இவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், உருக்கு உற்பத்தியில் பெரும் எழுச்சி ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Ôசெயில்Õ நிறுவனம்
இந்தியாவில் உருக்கு உற்பத்தியில் பொதுத் துறையைச் சேர்ந்த Ôசெயில்Õ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், அதன் உருக்கு பொருள்கள் உற்பத்தியை 100 சதவீதம் அதிகரித்து 3 கோடி டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
இதுபோன்று மேலும் பல நிறுவனங்களும் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகி உள்ளன. உருக்கு பொருள்கள் உற்பத்தி அதிகரிப்பதால், நாட்டின் தொழில் துறை மேம்பட்டு, பொருளாதார வளர்ச்சியிலும் முன்னேற்றம் ஏற்படும்.


அரசு அதிகாரிகள் சூட்கேஸ் வாங்க, ரூ 5000 அலவன்ஸ்!!
சென்னை: அரசு உயர் அதிகாரிகள் சூட்கேஸ் வாங்கிக் கொள்வதற்கான தொகை ரூ.440 லிருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.​

தலைமைச் செயலகத்தில் சார்புச் செயலாளர் முதல் கூடுதல் செயலாளர் நிலைக்கு மேல் உள்ளவர்களுக்கு வரை இந்தச் சலுகை பொருந்தும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள்,​​ அதிகாரிகளுக்கு பல்வேறு படிகள்,​​ சலுகைகளை அரசு வழங்கி வருகிறது.​ அவற்றில்,​​ எழுதுபொருள்,​​ சூட்கேஸ் போன்ற பொருள்கள் வாங்குவதற்கான படிகளும் அடங்கும்.

அரசு அதிகாரி ஒருவருக்கு சூட்கேஸ் பெற்றுக் கொள்வற்கான தொகை ரூ.440 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.​ இந்தத் தொகை இப்போது அதிகாரிகளின் தகுதி நிலைக்கு ஏற்ப ரூ.2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது.

சூட்கோஸ் அலவன்ஸ் பெறும் அதிகாரிகள் யார் யார்?

சார்பு,​​ ​ துணைச் செயலாளர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரமும்,​​ இணை,​​ கூடுதல் செயலாளர் நிலையில் உள்ளவர்களுக்கு ரூ.3,500-ம் வழங்கப்படும் என்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.

கூடுதல் செயலாளர் நிலையில் மேல் உள்ளவர்களுக்கு இத் தொகை ரூ.5 ஆயிரம் ஆக உயர்த்தப்படுவதாக உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

சூட்கேஸ் வாங்கிக் கொள்ள ஒரு அதிகாரிக்கு ரூ.440 என்கிற உச்ச வரம்பு 20 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது.​ இந்தத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பல்வேறு துறைகளைச் சேர்ந்த செயலாளர்களும் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஒரு அதிகாரி சூட்கேஸ் வாங்கியதற்கான தகவல் அவரது பணி பதிவேட்டில் குறிப்பிட வேண்டும்.​ சூட்கேஸை ரிட்டயர் ஆன பிறகும் வைத்துக் கொள்ளலாம்.​ அதில்,​​ ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதற்கான செலவை சம்பந்தப்பட்ட அதிகாரியே ஏற்றுக் கொள்ள வேண்டும்.​

ஒரு துறையில் இருந்து மற்றொரு துறைக்கு அதிகாரி ஒருவர் மாற்றப்படும்போது,​​ சூட்கேஸ் பெற்றுக் கொண்டதற்கான தகவலை அவர் மாற்றப்படும் துறையிடம் சம்பந்தப்பட்ட துறை தெரிவிக்க வேண்டுமாம்.

4ஜி மொபைல் சேவைக்கான பணிகளை துவக்கியது 'டிராய்'
டெல்லி: 3ஜி மொபைல் சேவைக்கான அலைக்கற்றை ஏலம் நீண்ட நாட்களாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்ட தொழில்நுட்பமான 4ஜி தொலைத்தொடர்பு சேவை குறித்த பரிசீலனையை டிராய் அமைப்பு துவக்கியுள்ளது.

3ஜி சேவையை மிஞ்சும் வகையில் வைஃபை மற்றும் வைமேக்ஸ் கலவையுடன், மிகத்துல்லியமான வீடியோ, அதிவிரைவான டிஜிட்டல் பரிமாற்றம் உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் நாடுகள் ஈடுபட்டுள்ளன.

மோட்டோரோலா மற்றும் எரிக்ஸன் போன்ற நிறுவனங்கள் தங்கள் உபகரணங்களில் 4ஜி சேவைகளை சோதித்தும் பார்த்துவிட்டன. இந்நிலையில், 3ஜி சேவையில் இந்தியா பின்தங்கிய நிலைமை 4ஜி சேவைக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என 'டிராய்' கருதுகிறது.

இதனால், இப்போதே 4ஜி சேவைக்கான அலைவரிசை மற்றும் இதர விவகாரங்கள் குறித்து இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான 'டிராய்' ஆராயத் தொடங்கியுள்ளது.

'டிராய்' தலைவர் ஜே.எஸ்.சர்மா இதுபற்றி தெரிவிக்கையில், '2ஜி, 3ஜிக்கு அடுத்தபடியாக, ஜிகா பைட் வேகத்தில் மொபைலில் இணைய சேவை வழங்குவது உள்ளிட்ட உயர் நோக்கங்களுடன் இதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.

4ஜி டெலிகாம் சேவைகள் தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதற்கான பரிந்துரைகள் விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.

இதனால் 3ஜி பணிகளை ஓரங்கட்டிவிட்டதாக நினைக்கக்கூடாது. 3ஜி ஏலம் அடுத்த சில மாதங்களில் கண்டிப்பாக நடைபெறும்.

3ஜி விவகாரத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் 4ஜிக்கு ஏற்படக் கூடாது என எதிர்பார்க்கிறோம்' என்றார்.

பொதுத் துறை நிறுவனங்கள்


பங்குகள் விற்பனை மூலம் அரசு ரூ.30,000 கோடி திரட்டுகிறது
சுரபி
புதுடெல்லி
மத்திய அரசின் நிதி பற்றாக்குறை மிகவும் அதிகரித்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், பொதுத் துறை நிறுவனங்களில், மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீதத்தை பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்த வழிமுறையில், வரும் 2010&11&ஆம் நிதி ஆண்டில் மத்திய அரசு ரூ.30,000 கோடி திரட்டும் என மத்திய அரசின் பங்குகள் விற்பனைத் துறை தெரிவித்துள்ளது.
உற்பத்தி வரி
மத்திய அரசு, பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்திடும் வகையில், கடந்த 2008&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களில் உற்பத்தி வரியை மொத்தம் 6 சதவீதம் குறைத்தது. மேலும், சேவை வரியை 2 சதவீதம் குறைத்தது. சமூக நலத்திட்டங்களுக்காக அதிக செலவினங்களை மேற்கொண்டது. இதுபோன்ற காரணங்களால், நடப்பு 2009&10&ஆம் நிதி ஆண்டில், நிதி பற்றாக்குறை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரூ.4 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 சதவீதமாகும். இதனை வரும் 2010&11&ஆம் நிதி ஆண்டில் 5.5 சதவீதமாக குறைக்க முடியும் என்று நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
Ôசெயில்Õ & எம்.எம்.டி.சி.
அவரது நம்பிக்கைக்கு வலுச் சேர்க்கும் வகையில், Ôசெயில்Õ இந்துஸ்தான் காப்பர், மாங்கனீஸ் வோர் இந்தியா, எம்.எம்.டி.சி. உள்ளிட்ட சுமார் 15 பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்வதன் வாயிலாக மத்திய அரசு ரூ.30,000 கோடியை திரட்ட உள்ளது.
பொதுத் துறையை சேர்ந்த Ôசெயில்Õ மற்றும் எம்.எம்.டி.சி. நிறுவனங்களில் மத்திய அரசு முறையே 85.82 சதவீதம் மற்றும் 99.30 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இவற்றில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக கணிசமான தொகை திரட்டப்படும் என்று மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்துஸ்தான் காப்பர் மற்றும் மாங்கனீஸ் வோர் இந்தியா ஆகிய நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்வதன் வாயிலாக முறையே ரூ.2,000 கோடி மற்றும் ரூ.3,000 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பங்கு வெளியீடுகளுக்கு விண்ணப்பம்


கவனத்துடன் செயல்படும் சில்லரை முதலீட்டாளர்கள்



விஜய் கவுரவ்
மும்பை
நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளின்போது, பங்குகள் வேண்டி விண்ணப்பிப்பதில் பரஸ்பர நிதி மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் போன்ற நிதி நிறுவனங்களைக் காட்டிலும் தற்போது சில்லரை முதலீட்டாளர்கள் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருவதாக அண்மைக் கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
என்.டி.பி.சி. நிறுவனம்
சில தினங்களுக்கு முன்பாக பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி. நிறுவனம் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. இப்பங்கு வெளியீட்டில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. ஒரு லட்சத்திற்கு சற்று அதிகமானோரே இந்நிறுவனத்தின் பங்குகள் வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.
எனினும் எல்.ஐ.சி. நிறுவனம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் ஆதரவுடன் இந்த வெளியீடு வெற்றி பெற்றது. வெளியிடப்பட்ட மொத்த பங்குகளில் இந்த இரண்டு நிறுவனங்கள் மட்டும் சுமார் 50 சதவீத பங்குகள் வேண்டி விண்ணப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. நிறுவனத்தின் பங்குகள் வேண்டி 1.2 மடங்கிற்குதான் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ்
இதே போன்று அண்மையில் பங்கு வெளியீட்டை மேற்கொண்ட கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனத்தின் பங்குகள் வேண்டி 18,300 சில்லரை முதலீட்டாளர்கள்தான் விண்ணப்பித்தனர். 10 லட்சம் பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இது, இந்நிறுவனம் சில்லரை முதலீட்டாளர்களுக்காக ஒதுக்கீடு செய்த மொத்த பங்குகளில் 36 சதவீதம் மட்டுமே.
ஜனவரி மாதம் 5&ந் தேதியன்று கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் நிறுவனப் பங்குகள் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன. அன்றைய தினம், இப்பங்கு அதன் வெளியீட்டு விலையான ரூ.490&க்கு மேல் 4 சதவீதம் உயர்ந்தது. எனினும் பங்கின் விலை தற்போது 4 சதவீதம் குறைந்துள்ளது.
ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி
அண்மைக் காலத்தில் மூலதனச் சந்தையில் களமிறங்கிய ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜி மற்றும் எம்.பீ.எல். இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகளிலும் சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
சென்ற 2009&ஆம் ஆண்டில் 22 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொண்டன. இவற்றுள் 13 நிறுவனங்களின் பங்குகள், நடப்பு ஆண்டில், முதலீட்டாளர்களுக்கு 4 முதல் 27 சதவீதம் வரை ஆதாயம் அளித்து வருகின்றன. இதர நிறுவனங்களின் பங்குகளின் விலை 3 முதல் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது.
கடந்த 2007&ஆம் ஆண்டு, பங்கு வர்த்தகத்திற்கு பொற்காலமாக இருந்தது. அவ்வாண்டில் சுமார் 100 புதிய பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டபோது பங்குகளின் விலை 82 சதவீதம் முதல் 175 சதவீதம் வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு சில நிறுவனங்களின் பங்குகளின் விலை, வெளியீட்டு விலையைக் காட்டிலும் சற்று சரிவடைந்தது.
ரூ.1 லட்சம் கோடி
நடப்பு ஆண்டில், ஸ்டெர்லைட் எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராடெல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் பங்குகள் விற்பனை வாயிலாக 3,000 கோடி டாலர் (சுமார் ரூ.1 லட்சம் கோடி) திரட்ட திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், வெளியீட்டு விலையை நிர்ணயம் செய்வதில் நிறுவனங்கள் கவனத்துடன் செயல்படவில்லையென்றால் பங்குகள் பட்டியலிடப்படும்போது விலை குறைந்து போக வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும் அண்மைக் கால வெளியீடுகளில் வாங்கியுள்ள பங்குகள் ஆதாயம் அளிக்காத நிலையில், சில்லரை முதலீட்டாளர்கள் மட்டுமின்றி நிறுவன முதலீட்டாளர்களும் புதிய பங்கு வெளியீடுகளில் பங்கேற்க தயக்கம் காட்டுவார்கள் என அவர்கள் குறிப்பிட்டனர்.


நடப்பு நிதி ஆண்டின் முதல் பத்து மாதங்களில்


இந்திய காப்பீட்டு துறை நிறுவனங்கள் பங்குகளில் ரூ.34,000 கோடி முதலீடு

அபூர்வ் குப்தா
மும்பை
நடப்பு 2009&10&ஆம் நிதி ஆண்டில், முதல் பத்து மாதங்களில் இந்திய காப்பீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்குகளில் ரூ.34,000 கோடி முதலீடு செய்துள்ளன.
அன்னிய நிதி நிறுவனங்கள்
அன்னிய நிதி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. சென்ற மூன்று ஆண்டுகளாக இந்நிறுவனங்களின் முதலீடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்ற ஜனவரி மாதத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்தது. இதனால், சிறந்த முறையில் செயல்படும் நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்து இருந்தது. இந்த வாய்ப்பை பயன்படுத்திடும் வகையில், தொலை நோக்கு அடிப்படையில், இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் ரூ.13,500 கோடிக்கு பங்குகளில் முதலீடு செய்துள்ளன. கடந்த சில ஆண்டுகளில், சென்ற ஜனவரி மாதத்தில்தான் இந்நிறுவனங்கள் அதிக அளவில் பங்குகளை வாங்கி குவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், இம்மாதத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.1,100 கோடி நிகர மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அன்னிய நிதி நிறுவனங்கள், சென்ற ஜனவரி மாதத்தின் முதல் இரு வார காலத்தில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்குகளில் ரூ.6,000 கோடி முதலீடு செய்துள்ளன. அதேசமயம், அம்மாதத்தின் கடைசி இரண்டு வாரங்களில் ரூ.8,000 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன. அன்னிய நிதி நிறுவனங்கள், குறுகிய கால அடிப்படையில் செயல்படுகின்றன. அதேசமயம், காப்பீட்டு நிறுவனங்கள் நீண்ட கால அடிப்படையில் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றன.
இது குறித்து பிர்லா சன் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி விக்ரம் கோட்டக் கூறும்போது, Òசென்ற மூன்று ஆண்டுகளாக அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீட்டில் அதிக ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. கடந்த 2007&08&ஆம் நிதி ஆண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள் 1,270 கோடி டாலர் (சுமார் ரூ.58,420 கோடி) நிகர மதிப்பிற்கு பங்குகளில் முதலீடு செய்தன. அதேசமயம், சென்ற 2008&09&ஆம் நிதி ஆண்டில் இந்நிறுவனங்கள் 1,070 கோடி டாலர் (சுமார் ரூ.49,200 கோடி) நிகர மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்தனÓ என்று தெரிவிதார்.
அவர் மேலும் கூறும்போது, Òநடப்பு நிதி ஆண்டில், ஜனவரி மாதம் வரையிலான 10 மாத காலத்தில் 1,950 கோடி டாலர் (ரூ.89,700 கோடி) நிகர மதிப்பிற்கு இந்திய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளன. அதேசமயம், இந்திய காப்பீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்குகளில் தொடர்ந்து முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. நாட்டின் பங்கு வர்த்தகத்திற்கு இந்நிறுவனங்களின் செயல்பாடுகள் வலுச் சேர்ப்பதாக அமைந்துள்ளதுÓ என்றார்.
வருமான வரி சலுகை
ஒவ்வொரு நிதி ஆண்டின் நான்காவது காலாண்டிலும், முதலீட்டாளர்கள் வருமான வரிச் சலுகை பெற, அதிக அளவில் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்வார்கள். இதனையடுத்து, நடப்பு நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில், காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் சிறப்பான அளவில் அதிகரிக்கும். இந்நிறுவனங்களுக்கு, இக்காலாண்டில் சுமார் ரு.18,400 கோடி (400 கோடி டாலர்) வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனங்களிடம் தற்போது சுமார் ரூ.13,800 கோடி (300 கோடி டாலர்) கையிருப்பு உள்ளது. இதனையடுத்து, நடப்பு நிதி ஆண்டின் நான்காவது காலாண்டில், இந்திய காப்பீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்குகளில் மேலும் சுமார் ரூ.18,500 கோடி முதலீடு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, நடப்பு நிதி ஆண்டிலும் இந்நிறுவனங்களின் பங்கு முதலீடு, சென்ற நிதி ஆண்டைப் போன்று ரூ.53,000 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த முதலீடு
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் 2,580 கோடி டாலர் (சுமார் ரூ.1,18,680 கோடி) மதிப்பிற்கு பங்குகளில் முதலீடு செய்துள்ளன. இது குறித்து கோட்டக் மேலும் கூறுகையில், Òஅடுத்த 2&3 ஆண்டுகளில், நிறுவன பங்குகளில் இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஓர் ஆண்டிற்கான சராசரி முதலீடு, கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மொத்த முதலீட்டிற்கு சமமாக இருக்கும்Ó என்றார்.
சென்ற இரண்டு ஆண்டுகளாக நிறுவனப் பங்குகளில் மேற்கொள்ளப்படும் மொத்த முதலீட்டில் காப்பீட்டு நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 2007&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பீ.எஸ்.இ. 200 நிறுவனங்களின், பங்குகளின் மொத்த சந்தை மதிப்பில் (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்) காப்பீட்டு நிறுவனங்கள் கொண்டிருந்த பங்குகளின் மதிப்பு 4.2 சதவீதமாக இருந்தது. இது, சென்ற 2009&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 6.8 சதவீதமாக உயர்ந்தது.
எல்.ஐ.சி. நிறுவனம்
காப்பீட்டு நிறுவனங்களில், ஆயுள் காப்பீட்டுச் சேவையில் ஈடுபட்டு வரும் எல்.ஐ.சி. நிறுவனம் அதிக அளவில் பங்குகளில் முதலீடு செய்து வருகிறது. பங்கு வர்த்தகத்தில் சரிவு ஏற்படும்போது, இந்நிறுவனம் அதிக அளவில் பங்குகளில் முதலீடு மேற்கொள்கிறது. பொதுத் துறை நிறுவனங்கள், பங்குகளை வெளியிடும்போதும், இந்நிறுவனம் அதிக எண்ணிக்கையில் அவற்றின் பங்குகளை வாங்குகிறது. பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி. நிறுவனம், சென்ற வாரம் இரண்டாவது முறையாக பங்குகளை வெளியிட்டபோது, எல்.ஐ.சி. நிறுவனம், அதிக பங்குகள் வேண்டி விண்ணப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய உருக்கு துறை அமைச்சகம்


இரும்பு தாது மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய பரிந்துரை

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
உருக்கு தயாரிப்பில் இரும்புத்தாது முக்கிய மூலப் பொருளாகும். உள்நாட்டு உருக்கு நிறுவனங்களுக்கு இரும்புத்தாது தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், இரும்புத்தாது இறக்குமதி மீதான 2 சதவீத தீர்வையை ரத்து செய்ய வேண்டும் என மத்திய உருக்கு அமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது.
பரிந்துரை
இந்நிலையில், அனைத்து வகையான இரும்புத்தாது ஏற்றுமதி மீதான ஏற்றுமதி தீர்வையை 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்றும் உருக்குத் துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.
இது குறித்து உருக்குத் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, Òஉலக அளவில் உருக்கு பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், இரும்புத்தாது அதிக அளவில் தேவைப்படுகிறது. குறிப்பாக, சீனா, இந்தியாவிலிருந்து அதிக அளவில் இரும்புத்தாதுவை இறக்குமதி செய்கிறது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், இந்தியாவின் இரும்புத்தாது ஏற்றுமதி, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 20.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, உள்நாட்டு உருக்கு நிறுவனங்கள் நலன் கருதி, இரும்புத்தாது ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது அவசியமாகும்Ó என்று தெரிவித்தார்.
வாகன துறை
மோட்டார் வாகனத் துறையில் ஏற்பட்ட எழுச்சியால், சென்ற ஜனவரி மாதத்தில், நாட்டிலுள்ள முன்னணி நிறுவனங்களின் உருக்கு பொருள்கள் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், உள்நாட்டு உருக்கு நிறுவனங்களுக்கு அதிக அளவில் இரும்புத்தாது தேவைப்படுகிறது.
இது குறித்து இஸ்பத் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர் (நிதி) அனில் சுரேகா கூறுகையில், Òபொருளாதாரம் முன்னேற்றப் பாதைக்கு திரும்பி உள்ளதால், இந்தியாவில் உருக்கு பொருள்கள் உற்பத்தி பன்மடங்கு அதிகரிக்க உள்ளது. இந்நிலையில், இரும்புத்தாது ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில் அதன் மீதான ஏற்றுமதி தீர்வையை 20 சதவீதம் உயர்த்த வேண்டும் என்ற உருக்குத் துறை அமைச்சகத்தின் ஆலோசனை வரவேற்கத்தக்கதுÓ என்று தெரிவித்தார்.
அதேசமயம், தீர்வையை அதிகரிப்பதால், இரும்புத்தாது ஏற்றுமதியில் ஈடுபட்டு வரும் சேசகோவா, எம்.எஸ்.பி.எல்., ரூங்டா மைன்ஸ், எஸ்ஸெல் மைனிங் உள்ளிட்ட இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பொதுத் துறையைச் சேர்ந்த என்.எம்.டீ.சி., கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அதிக அளவில் இரும்புத்தாதுவை ஏற்றுமதி செய்து வருகிறது. ஏற்றுமதி தீர்வை உயர்த்தப்பட்டால், இந்நிறுவனத்திற்கும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

மும்பை ரியல் எஸ்டேட் மீண்டும் விர்ர்ர்... செயற்கை ஏற்றம் தான்

மும்பை: மும்பையில் சரிவில் இருந்த ரியல் எஸ்டேட் தொழில், தற்போது மீண்டும் ஏற்றத்தை சந்திக்க துவங்கியுள்ளது. இதனால், அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் காலி நிலங்களின் விலை, மீண்டும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே,மகாராஷ்டிரா மாநிலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் 'டல்'லடித்தது. குறிப்பாக, பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட பாதிப்பு, ரியல் எஸ்டேட் தொழிலில் கடுமையாக எதிரொலித்தது. மும்பை நகரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்கள் தான், இதில் அதிகம் பாதிக்கப்பட்டனர். கடந்தாண்டில் மட்டும் குடியிருப்புகளின் விலை 35 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது.

மும்பை நகரின் முக்கிய பகுதியான வார்டன் சாலையில், மூன்று படுக்கை அறைகள், ஒரு ஹால், ஒரு சமையல் அறை ஆகியவற்றை கொண்ட ஒரு குடியிருப்பின் விலை, கடந்தாண்டின் துவக்கத்தில் ஒரு சதுர அடிக்கு 50 ஆயிரம் ரூபாயாக இருந்தது. பொருளாதார மந்த நிலையால், ரியஸ் எஸ்டேட் தொழில் கிடு, கிடு வீழ்ச்சியை சந்தித்ததை அடுத்து, அத் தொழிலில் ஈடுபட்டிருந்த பலர், அதில் இருந்து வெளியேறி, வேறு தொழில்களில் கவனம் செலுத்த துவங்கினர். ஆனால், கடந்தாண்டு மே மாதம் நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து,ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் ஏற்றமடைய துவங்கியது. தற்போது அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் காலி நிலங்களின் விலை மெதுவாக அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், இன்னும் சில மாதங்களில் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் உச்சத்தை அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டின் துவக்கத்தில் வார்டன் சாலையில் ஒரு சதுர அடி 50 ஆயிரம் ரூபாயாக இருந்த, குடியிருப்பின் விலை, தற்போது சதுர அடிக்கு 93 ஆயிரம் ரூபாயாக ஒரேயடியாக அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் மேலும் அதிகரிக்கும் என, தெரிகிறது.


காரணம் என்ன?: இதுகுறித்து, ரியல் எஸ்டேட் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக, மும்பையில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கான கிராக்கி மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போதுள்ள நிலையில் மும்பையில், குடியேறுவதற்கு தயரான வகையில் எந்த அடுக்கு மாடி குடியிருப்புகளும் காலியாக இல்லை. மேலும், புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான அனுமதி வழங்குவதில், அரசு தரப்பில் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால், குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே, ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இருந்தாலும், இது ஒரு செயற்கையான ஏற்றமாகவே கருதப்படுகிறது. இவ்வாறு ரியல் எஸ்டேட் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும்

சந்தை ஏற்றமும், இறக்கமும் கொண்டதாகவே இருக்கிறது. திங்கள், செவ்வாயின் லாபங்களை, புதன் சரிக்கட்டி விட்டது. திங்களன்று மும்பை பங்குச் சந்தை மிகக் குறைவான லாபமான, 20 புள்ளிகளில் முடிந் தது. நேற்று முன்தினம் சந்தை சிறிது நிமிர்ந் தது. அதாவது, உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளில் சிறிது தளர்வு தான் காரணம். ஐரோப்பாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் சரிசெய்யக் கூடியவை தான், அவை பல நாடுகளுக்கும் பரவும் அபாயம் இல்லை என்ற செய்திகள் சந்தையை மகிழ் வித்தன. ஆதலால், மும்பை பங்குச் சந்தை 107 புள்ளிகள் கூடி முடிந்தது. நேற்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் விற்றதால், சந்தை கீழே விழுந்தது. சமீபத்தில் அவர்கள் விற்பது தொடர்கதையாகிவிட்டது. பட்ஜெட்டுக்கு பிறகு வாங்குவார் கள். ஆதலால், நேற்று இறுதியாக மும்பை பங் குச் சந்தை 120 புள்ளிகள் குறைந்து, 15,922 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 35 புள்ளிகள் குறைந்து 4,757 புள்ளிகளுடனும் முடிந்தது.

அரசின் சலுகைகள்: கடந்த இரண்டு ஆண்டுகளாக பல நாடுகளும் பலவிதமான சலுகைகளை அறிவித்து வந்தன. அதாவது, நாட்டின் நலனைக் கருதி அரசின் பணம் பல லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டது, பலவிதமான சலுகைகள் வழங்கப்பட்டன. தற்போது பல நாடுகளின் நிலைமை திருப்திகரமாக உள்ளது. ஆதலால் அந்த சலுகைகளை திருப்பப் பெற வேண்டும், இல்லாவிடில் அது இன்னொரு நீர்க்குமிழிக்கு காரணமாகி விடும் என்று மார்கன் ஸடான்லியின் தலைவர் ரோச் கூறியுள்ளார். ஆனால், இந்தியாவில் சலுகைகள் எல்லாம் படிப்படியாக தான் குறைக்கப்படும், ஒரேயடியாக குறைக்கப்படாது என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்தியா, சீனாவை விட சிறப்பாக பரிணமிக்கும் என்றும் கூறியுள்ளார்.


சந்தைக்கு கேட்கிறதா? கூடப்போகும் பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல், டீசல் விலை கூடவுள்ளதாக அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், இதற்கெல்லாம் பயப்படாமல் கார்கள் விற்பனை கூடிக்கொண்டே செல்கிறது. ஜனவரி விற்பனையும் கூடியுள்ளது. கார்கள் என்ன தண்ணியிலா ஓடுகிறது? பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிச்சயம் பணவீக்கத்தை அதிகரிக்கும். சந்தைக்கும் அபாயம் தான்.


புதிய வெளியீடுகள்: அரசு கம்பெனியான கோல் இந்தியா, தனது புதிய வெளியீடை கொண்டு வரவுள்ளது என்ற செய்தி வந்ததை அடுத்து, பல அரசு கம்பெனிகளின் பங்குகள் சரசரவென கூடின. குறிப்பக இன்ஜினியர்ஸ் இந்தியா, இந்துஸ்தான் காப்பர், டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் போன்றவை. சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய வெளியீடான டெமினோஸ் பிட்சாவின் இந்திய துணை நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது 58 சதவீதம் பிரிமியத்தில் சென்று முடிந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது, பிட்சாவிலும் பணம் பண்ணலாம்.


வரும் நாட்கள் எப்படி இருக்கும்? திங்கள், செவ்வாய் என சிறிது நிமிர்ந்த சந்தை நேற்று பெரிதாக சரிந்து, இன்னும் சரிவு இருக்கிறது என்று கோடிட்டு காட்டி விட்டு சென்றுள்ளது. பட்ஜெட்டுக்காக காத்திருக்கிறது பங்குச் சந்தை.


சேதுராமன் சாத்தப்பன்
ஆம்பிவேலி சிட்டி – மும்பை விமான போக்குவரத்து துவக்கம்
ஆம்பி வேலி சிட்டி: ஆம்பி வேலி சிட்டி மற்றும் மும்பை இடையே வாரத்திற்கு ஆறு விமான போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு பெருநகரங்களான மும்பை மற்றும் புனே இடையே அமைந்துள்ளது ஆம்பி வேலி சிட்டி. இந்த ஆம்பி வேலி சிட்டி மற்றும் மும்பை இடையே, வாரத்திற்கு ஆறு விமான போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த போக்குவரத்து சேவை, கடந்த 5ம் தேதி துவங்கியது. இந்நிகழ்ச்சியில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், சகாரா இந்தியா பரிவார் நிறுவனத்தைச் சேர்ந்த சுப்ரதா ராய் மற்றும் ஆம்பி வேலி சிட்டி தலைவர் சீமன்டோ ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் மூலம், ஆம்பி வேலி சிட்டியில் இருந்து 22 நிமிடங்களில், மும்பையை அடைந்து விடலாம். இந்த விமான போக்குவரத்து சேவை மும்பை மற்றும் ஆம்பி வேலி சிட்டி ஆகிய இடங்களில் பணியாற்றுபவர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் பிரணாப் நம்பிக்கை
புதுடில்லி: 'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து, மத்திய புள்ளியியல் துறை தெரிவித்த அளவான, 7.2 சதவீதத்தை விட அதிகரிக்கலாம்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி குறித்த கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: பொருளாதார வளர்ச்சி பற்றிய மூன்றாவது காலாண்டு தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என, மத்திய புள்ளியியல் துறை முன் தெரிவித்திருந்ததை விட அதிகரிக்கலாம் என்பது என் கருத்து. எனினும், தற்போதைய நிலையில், 7.2 சதவீதம் வளர்ச்சி என்பது மோசமானது அல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிபுணர்கள் கணக்கிட்டுள்ளதை விட அதிகமாகவே இருக்கும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, குறிப்பிட்ட காலத்தில், இந்தியா கொள்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதையே, நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி காட்டுகிறது. இவ்வாறு பிரணாப் கூறினார்.


நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி கடந்த ஐந்தாண்டுகளில் இருந்ததை விட, 2.1 சதவீதம் குறைந்து, கடந்த நிதியாண்டில், 6.7 சதவீதமாக இருந்தது. 2008ம் ஆண்டு, செப்டம்பரில், லேமன் பிரதர்ஸ் நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து, உலகப் பொருளாதார மந்த நிலை தீவிரமானது. இதை சமாளிக்க, அரசு பல்வேறு விதமான ஊக்கச் சலுகைகளை வழங்கியது. இதையடுத்து, பொருளாதார நிலை சீரடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கிளென் அப்ளையன்சஸ் சிம்னி அறிமுகம்
புதுடில்லி: கிளென் அப்ளையன்சஸ் நிறுவனம், புதிய வகை சிம்னி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: கிளென் அப்ளையன்சஸ் நிறுவனம், வெப்பம் மற்றும் எரிவாயு சென்சார்களுடன் தானே இயங்கும் வகையில், புதிதாக, 'ஜி.எல்., 6052 டச்' என்ற பெயரில் சிம்னி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சிம்னி, ஆரோக்கியமான, சுத்தமான மற்றும் பாதுகாப்பான சமையலறைக்கு ஏற்றது. இதில், 'டச் கன்ட்ரோல்' மற்றும் சக்திவாய்ந்த இத்தாலியன் மோட்டார் ஆகியவை உள்ளன. மேலும், இந்த சிம்னி அனைத்து வகையான சமையல் முறைக்கும் ஏற்ற வகையில் உறிஞ்சும் திறன் கொண்டது. இவற்றில் உள்ள சென்சார் கட்டுப்பாட்டால், சமையல் துவங்கியதும், சிம்னி தானே செயல்படத் துவங்கி விடும்.

அதே போன்று, சமையலறையில் வெப்பம் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அதற் கேற்ப, தன் செயல்படும் வேகத்தை மாற்றியமைத்துக் கொள்ளும். இதில் உள்ள எல்.பி.ஜி., சென்சார் கருவியால், எரிவாயு கசிவு ஏற்பட்டால், சிம்னி தானாகவே செயல்படத் துவங்கி, எரிவாயுவை உறிஞ்சி சமையலறையில் இருந்து வெளியேற்றி விடும். இதனால், எரிவாயு கசிவால் ஏற்படும் தீ விபத்து தவிர்க்கப்படும். இந்த சிம்னியில், தீப்பற்றாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 60 செ.மீ., அளவுள்ள சிம்னி, 13 ஆயிரத்து 990 ரூபாய் விலையிலும், 90 செ.மீ., அளவுள்ள சிம்னி 15 ஆயிரத்து 990 ரூபாய் விலையிலும் கிடைக்கின்றன. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

குடியிருப்பு பற்றாக்குறை - ரூ. 3.6 லட்சம் கோடி தேவை: அரசு
புதுடில்லி: குடியிருப்பு பற்றாக்குறையை சரிசெய்ய 3 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் ‌தேவைப் படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 25 மில்லியன் குடியிருப்பு யுனிட்கள் தேவைப் படுவதாகவும், இதற்காக ரூ. 3.6 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டியுள்ளது என்று மத்திய நகரப்புற முன்னேற்றத் துறை அமைச்சர் சியாகேட் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும், வருமானம் குறைந்த நகர் வாழ் மக்களுக்கு வீடுகள் அமைத்து தருவது அவசியம். இது அரசின் முக்கிய வேலை. இதற்காக அதிகளவு முதலீடு தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

4,20,000 கார்களை திரும்ப பெற்றது ஹோண்டா நிறுவனம்
நியூயார்க்: அமெரிக்க மற்றும் கனடாவில், சுமார் 4,20,000 கார்களை திரும்ப பெறுவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் 2001 மற்றும் 2002ம் ஆண்டில் வெளியிடப் பட்ட மாடல்கள் ஆகும். விபத்தினை தடுக்க உதவும் ஏர்பேக் வசதி தொடர்பாக புகார்கள் எழுவதாகவும், இதனை சரிசெய்வதற்காக கார்கள் திரும்ப பெறப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், ஹோண்டா நிறுவனத்தின் கார் ஒன்றில் ஏர்பேக் வேலை செய்யாமல் போனதால் ஒருவர் பலியானதாகவும், 11 பேர் காயம் அடைந்ததாகவும் புகார் எழுத்தது.

இதனை தொடர்ந்து 2001 மற்றும் 2002ம் ஆண்டில் வெளியிடப் பட்ட புதிய மாடல்களான சிவிக், ஓடிசி, சி.ஆர்-வி, மற்றும் 2002ல் அகுரா டி.எல் உள்ளிட்ட வாகனங்கள் திரும்ப பெறப் பட்டுள்ளன.

திரும்ப பெறப் பட்ட வாகனங்களில் ஏர்பேக் சரிசெய்யப் பட்டு அல்லது மாற்றப் பட்டு, மீண்டும் வாடிக்கையாளர்களிடம் அளிக்கப் படும் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.


ரயில்வே துறையின் வருவாய் உயர்வு
புதுடில்லி: நடப்பு 2009-10ம் நிதியாண்டில், ஜனவரி 31-ந் தேதி வரையிலான காலத்தில், இந்திய ரயில்வே துறையின் வருவாய் ரூ.70,501.65 கோடியாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாடின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 8.56 சதவீதம் அதிகமாகும். அதாவது, ரூ.64,943.32 கோடி அதிகமாகும்.

இதே காலத்தில், ரயில்வே துறையின் மொத்த வருவாயில், பயணிகள் போக்குவரத்தின் வாயிலான வருவாய் ரூ.18,057.41 கோடியிலிருந்து ரூ.19,393.26 கோடியாக உயர்ந்துள்ளது. சரக்கு போக்குவரத்து வாயிலான வருவாய் 8.47 சதவீதம் அதிகரித்து, அதாவது ரூ.44,035.66 கோடியிலிருந்து ரூ.47,763.29 கோடியாக உயர்ந்துள்ளது.

கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ள பட்ட 10 மாத காலத்தில், இந்திய ரயில்களில் பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை 4.59 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.


வரும் 2010-11ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட் இம்மாதம் 24ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


நொய்டாவில் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஏ.சி., தயாரிப்பு பிரிவு
நொய்டா: நொய்டா தொழிற்பேட்டையில் குளிர்பதன ஏ.சி., தயாரிப்புக்கு என புதிய பிரிவினை சாம்சங் நிறுவனம் தொடங்கி உள்ளது. மின்சாதன பொருள்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனம் சாம்சங். இந்நிறுவனம் தற்போது, ஏ.சி., விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நொய்டாவில் புதிய ஏ.சி., தயாரிப்பு பிரிவினை தொடங்கியுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் ‌தலைவர் ஜூட்ஷி தொடங்கி வைத்தார்.
நிறுவனத்தை தொடங்கி வைத்த ஜூட்லி, இதுகுறித்து கூறும்போது, தற்போது தொடங்கப்பட்டுள்ள ஆலை ஆண்டுக்கு 6 லட்சம் ஏ.சி.​ யூனிட்டுகளைத் தயாரிக்கும் திறன் கொண்டது. ஏற்கெனவே சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் 6 லட்சம் ஏ.சி.​ இயந்திரங்கள் தயாரிக்கப்படுகிறது.​ தற்போது புதிய ஆலை தொடங்கப்பட்டுள்ளதால்,​​ இந்நிறுவன உற்பத்தி ஆண்டுக்கு 12 லட்சமாக உயரும் என்று கூறியுள்ளார்.

மேலும், வாடிக்கையாளர்கள் புகார் செய்த ஒரு மணி நேரத்தில் பழுது நீக்குவோர் சென்றடையும் வகை செய்யப் பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு மேல் பழுது நீக்க காலதாமதமானால்,​​ மாற்று ஏ.சி.​ பொருத்தித் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ​

இந்த ஆண்டு 10 லட்சம் ஏ.சி.க்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இதுகுறித்து மேலும் கூறும்போது, மின் அழுத்த வேறுபாட்டின்போது, சீரான செயல்பாட்டினை அளிப்பதற்காக, புதிய வகை ஏ.சி.,களில் யு.டி.ஆர் கம்ப்ரஸர்கள் பயன்படுத்தப் படுவதாகவும், இந்த எஸ் வரிசை கம்ப்ரஸர்களுக்கு ஸ்டெபிலைஸர்கள் தேவையில்லை என்றும் கூறினார்.

இதுதவிர, மைக்ரோஸ்கோபிக் வைரஸ்கள் மற்றும் துர்நாற்றங்களை வெளியேற்றுதல், டியோடரைஸிங் பில்டர்கள் என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த வகை ஏ.சி.,களில் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்திய வங்கித்துறை சிறந்து விளங்குகிறது: பிக்கி பாராட்டு
புதுடில்லி: இந்திய வங்கித் துறை சிறந்து விளங்குவதாக பிக்கி எனப்படும் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் சம்மேளனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
பொருளாதார சரிவில் வளர்ந்த நாடுகள் கூட, மாட்டி கொண்டு முழித்த நிலையில், இந்திய பொருளாதாரம் நிதிநெருக்கடியில் சிக்காமல் நழுவியது.

நிதிநெருக்கடியில் சிக்காமல் இருந்ததற்கு இந்திய வங்கிகளின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதே காரணம் என்று பிக்கி தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து கூறும் ‌‌போது, பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் சீனா, பிரேசில், இங்கிலாந்து ஆகிய நாடுகளை காட்டிலும், இந்திய வங்கித் துறையின் நெறிமுறைகள் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதே, இந்தியா நிதிநெருக்கடியில் சிக்காமல் இருப்பதற்கு காரணம்.

இதனால் மற்ற நாடுகளை விட இந்திய வங்கித் துறை சிறப்பாக செயல்படுகிறது என்று இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் சம்மேளனம் கூறியுள்ளது.

ரூ. 582 கோடியில் எல் அன்ட் டி நிறுவனத்திற்கு புதிய ஆடர்
மும்பை: லார்சன் அன்ட் டியூப்ரோ(எல் அன்ட் டி) நிறுவனத்திற்கு புதிதாக ரூ. 582 கோடி மதிப்பில் நான்கு புதிய ஆடர்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து மும்பை பங்குச்சந்தையிடம் அந்நிறுவனம் தெரிவித்துள்ள செய்தியில், ரூ. 267 கோடி( 58 மில்லியன் டாலர்) மதிப்பில் எப்.இ.டபுல்யூ.ஏ., நிறுவனத்திடம் இருந்து புதிய ஆடர் பெற்று இருப்பதாகவும், இது 13-15 மாதங்களுக்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதே போல, ரூ. 155 கோடி மதிப்பில் தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து புதிய ஆடர் பெற்று இருப்பதாகவும், இது 10 மாதங்களுக்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உ.பி., பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்ரேஷனிடம் இருந்து ரூ. 90 கோடி மதிப்பில் புதிய ஆடர் பெற்று இருப்பதாகவும், இது மார்ச் 15, 2011ல் தொடங்கி ஜூ‌லை 31, 2011க்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

என்.எல்.சி., தமிழக பவர் லிமிடெடிடம் இருந்து 70 கோடி மதிப்பில் புதிய ஆடர் பெறப் பட்டுள்ளது. இது 34 மாதங்களுக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு காரணமாக மும்பை பங்குச்சந்தையில், எல் அன்ட் டி நிறுவன பங்குகள் 1.06 சதவீதம் உயர்வினை கண்டன.


லிவர்பூல் பங்குகளை வாங்க முயற்சி: முகேஷ் அம்பானி மறுப்பு
லண்டன்: ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி, லிவர்பூல் பங்குகளை வாங்க முயற்சி செய்வதாக வந்துள்ள தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற, அதிக வெற்றி பெற்ற கிளப், லிவர்பூல் கால்பந்து கிளப்பாகும். இந்த கிளப்பின் 51 சதவீத பங்குகளை முகேஷ் அம்பானி வாங்க முயற்சி மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், லிவர்பூல் கால்பந்து கிளப் பங்குகளை வாங்க தான் முயற்சித்ததாக எழுந்துள்ள செய்தியை முகேஷ் அம்பானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் சார்பில் ரிலையன்ஸ் நிறுவன செய்தி தொட்பாளர் இத்தகவலை நிருபர்களுக்கு தெரிவித்தார்.

உலக அளவில் 4,36,000 கார்களை திரும்ப பெற்றது டொயோட்டா
டோக்கியோ: ‌ஜப்பான் கார் நிறுவனமான டொயோட்டா நிறுவனம், உலக அளவில் 4,36,000 கார்களை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், முதல் கிரீன் கார் என்ற அடைமொழியுடன் வெளியிடப் பட்ட பிரியஸ் உயர் ரக கார்களும் அடங்கும். இந்த வகை மாடலில் பிரேக்கிங் பிரச்னை இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இந்த கார்களை திரும்ப பெறுவதாக ‌டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட பிரியஸ் மாடல், பிரியஸ் பி.ஹெச்.வி., சாய் மற்றும் லெக்ஷியஸ் ஹெச்.எஸ்.250ஹெச் உள்ளிட்ட மாடல் கார்கள் திரும்ப பெறப் பட்டன.

ஜப்பானில் மட்டும் இந்த வகை கார்களை 2,23,068 வரை திரும்ப பெறப் பட்டுள்ளன. ஹைபிரிட் கார்கள் 2,13,000 வரை திரும்ப பெறப் பட்டுள்ளன.

சமீபத்தில்தான் அக்ஸலரேட்டர் பிரச்சினை காரணமாக அமெரிக்காவில் விற்கப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் 8 மாடல் கார்கள் திரும்பப் பெறப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

இதுகுறித்து ஏற்கனவே, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், குறைபாடுள்ள காரை விற்றதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், இதற்காக தங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளது. ‌பிரியஸ் கார் திரும்ப பெறப் பட்டு அதன் குறைகள் சரி செய்யப் பட்டு மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப் படும் என்றும் டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது

4ஜி மொபைல் சேவை : ஆலேசானையை தொடங்கியது டிராய்
புதுடில்லி : தொலைபேசி சேவை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்தியாவில் 4 ஜி மொபைல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆ‌லோசனையை தொடங்கியது.

3ஜி சேவையை மிஞ்சும் வகையில் வைஃபை மற்றும் வைமேக்ஸ் கலவையுடன், மிகத்துல்லியமான வீடியோ, அதிவிரைவான டிஜிட்டல் பரிமாற்றம் உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் நாடுகள் ஈடுபட்டுள்ளன.


மோட்டோரோலா மற்றும் எரிக்ஸன் போன்ற நிறுவனங்கள் தங்கள் உபகரணங்களில் 4ஜி சேவைகளை சோதித்தும் பார்த்துவிட்டன. இந்நிலையில், 3ஜி சேவையில் இந்தியா பின்தங்கிய நிலைமை 4ஜி சேவைக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என 'டிராய்' கருதுகிறது.


இதனால், இப்போதே 4ஜி சேவைக்கான அலைவரிசை மற்றும் இதர விவகாரங்கள் குறித்து இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான 'டிராய்' ஆராயத் தொடங்கியுள்ளது.

புதிய 2 ரூபாய் நாணயம்: ஆர்.பி.ஐ., வெளியிட்டது
சென்னை: கண் பார்வையற்றவர்களுக்கான 'பிரெய்லி' முறை எழுத்துக்களை அறிமுகப்படுத்திய லூயி பிரெய்லியின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய 2 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்.பி.ஐ.,) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் எம்.எம்.​ மாஜி கூறும்போது,

இந்த நாணயம் ​​ 5.62 கிராம் எடை கொண்ட துருப்பிடிக்காத எவர்சில்வரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.​ இதில் 83 சதவீதம் இரும்பும்,​​ 17 சதவீதம் குரோமியமும் கலந்துள்ளன.இந்த நாணயம் 27 மில்லி மீட்டர் விட்டம் கொண்டது.


நாணயத்தின் பின்புறத்தில் லூயி பிரெய்லியின் படம் நடுவில் பொறிக்கப்பட்டிருக்கும்.​ மேற்புறத்தில் அவரது பெயர் ஹிந்தியிலும்,​​ ஆங்கிலத்திலும் இருக்கும், படத்தின் கீழ்புறம் அவரது பெயர் 'பிரெய்லி' முறையில் எழுதப்பட்டிருக்கும். இதேபோல, முன்புறத்தில் நாணயத்தின் முகம் இரு படுக்கைக் கோடுகளால் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.​ நடுப்பகுயின் இடதுபுறம் அசோகா தூணின் சிங்க முகம் பொறிக்கப்பட்டிருக்கும்.​ நடுப்பகுதியின் வலப்புறத்தில் நாணயத்தின் மதிப்பு இலக்கம் '2' என்பது சர்வதேச எண் அளவில் பொறிக்கப்பட்டிருக்கும். மேற்புறத்தில் இந்தியா என்று ஹிந்தியிலும்,​​ ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் என்று கூறினார்.
தங்க கோவிலுக்கு காணிக்கை செலுத்தும் வசதி: ஹெச்.டி.எப்.சி., அறிமுகப் படுத்தியது
புதுடில்லி: தங்க கோவிலுக்கு காணிக்கை செலுத்தும் புதிய வசதியை ஹெச்.டி.எப்.சி., வங்கி அறிமுகப் படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் அமைந்துள்ளது புகழ் பெற்ற தங்க கோவில். இந்த கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையை செலுத்தும் வசதியை ஹெச்.டி.எப்.சி., வங்கி செய்துள்ளது.

இது குறித்து வங்கியின் தலைமா செயல் அதிகாரி ஏ.ராஜன் கூறும் போது, பக்தர்கள் தங்க கோவிலுக்கு பல காரணங்களால் நேரடியாக வரமுடியாமல் உள்ளது. இவ்வாறு கோவிலுக்கு வர முடியாதவர்களுக்கு வசதியாக, நேரடியாக காணிக்கை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கியின் இணைய தளத்தின் வாயிலாக நேரடியாக தங்க கோயிலுக்கு காணிக்கை செலுத்தலாம்.


தற்போது வங்கியின் மூலம் பல மதத்தை சேர்ந்த 37 புனித தலத்திற்கு காணிக்கை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதை மேலும் அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் என்று கூறினார்.

முன்னணி 10 நிறுவனங்கள்

திங்கள், 8 பிப்ரவரி, 2010

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
சென்ற வாரம், நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் மோசமாக இருந்தது. இதனையடுத்து, சென்ற வாரம் நடைபெற்ற 6 வர்த்தக தினங்களில், முன்னணி 10 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.67,000 கோடி குறைந்து போயுள்ளது.
பிப்ரவரி 6&ந் தேதி வரையிலான 6 வர்த்தக தினங்களில், என்.எம்.டீ.சி. நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, மிகவும் அதிகமாக, அதாவது ரூ.17,761.86 கோடி சரிவடைந்து ரூ.1,79,442.32 கோடியாக குறைந்தது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.17,282.43 கோடி சரிவடைந்து ரூ.3,24,948.84 கோடியாக குறைந்தது.
பொதுத் துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி. மற்றும் என்.டி.பி.சி. ஆகிய இரு நிறுவனப் பங்குகளின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு ரூ.8,719.42 கோடி குறைந்துள்ளது. இவற்றுள், சந்தை மதிப்பு அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.2,34,099 கோடியாகவும், என்.டி.பி.சி. நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1,69,073 கோடியாகவும் குறைந்துள்ளது.
இந்த நிலையில், பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி. நிறுவனம், இரண்டாவது முறையாக, பங்கு ஒன்று ரூ.201 என்ற விலையில் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது. இதன் பங்குகள் வேண்டி 1.2 மடங்குகளுக்கு விண்ணப்பங்கள் வந்தன. இப்பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.8,286 கோடி திரட்டப்படுகிறது.
எம்.எம்.டி.சி.
பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் ஐந்தாவது இடத்தில் உள்ள எம்.எம்.டி.சி. நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, சென்ற வாரத்தில், ரூ.886.50 கோடி சரிவடைந்து ரூ.1,68,600 கோடியாக குறைந்துள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த டி.சி.எஸ். நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.1,164.53 கோடி குறைந்து ரூ.1,42,777.74 கோடியாகவும், இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.5,537.53 கோடி குறைந்து ரூ.1,36,511.12 கோடியாகவும் சரிவடைந்துள்ளது. இவ்விரு நிறுவனங்களும், பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் முறையே 6&வது மற்றும் 7&வது இடங்களில் உள்ளன.
பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி, இவ்வகையில் எட்டாவது இடத்தில் உள்ளது. இதன் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.9,151.79 கோடி சரிவடைந்து ரூ.1,21,506.51 கோடியாக குறைந்துள்ளது.
பார்தி ஏர்டெல்
இதுநாள் வரை ஒன்பதாவது இடத்தில் இருந்த பீ.எச்.இ.எல். நிறுவனம் 10&வது இடத்திற்கு சென்றுள்ளது. ஒன்பதாவது இடத்திற்கு பார்தி ஏர்டெல் நிறுவனம் வந்துள்ளது. இவற்றுள் பார்தி ஏர்டெல் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.2,392.08 கோடி குறைந்து ரூ.1,13,984.74 கோடியாகவும், பீ.எச்.இ.எல். நிறுவனப் பங்கின் சந்தை மதிப்பு ரூ.4,554.98 கோடி குறைந்து ரூ.1,13,245.56 கோடியாகவும் குறைந்து போயுள்ளது.

அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.9,634 கோடிக்கு பங்குகள் விற்பனை



இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களின் பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டை தொடர்ந்து விலக்கி வருகின்றன. சென்ற மூன்று வாரங்களில், அதாவது 14 வர்த்தக தினங்களில், இந்நிறுவனங்கள், பங்குகளில்மேற்கொண்ட முதலீட்டிலிருந்து ரூ.9,634 கோடியை விலக்கிக் கொண்டுள்ளன என பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕ தெரிவித்துள்ளது.
அன்னிய நிதி நிறுவனங்கள், ஜனவரி 24&ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் ரூ.1,648 கோடியையும், அம்மாதம் 29&ந் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் ரூ.7,043 கோடியையும் விலக்கி கொண்டன. சென்ற வாரத்தில், ரூ.943 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன.
சென்ற சில வாரங்களாக இந்திய ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு அதிகரித்து வருகிறது. இதனையடுத்து, அன்னிய நிதி நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் முதலீடு செய்வதால் அதிக ஆதாயம் கிடைக்கிறது. இதனால்தான், இந்தியாவில், நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டை விலக்கி வருகின்றன என்று எஸ்.எம்.சி. குளோபல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜேஷ் ஜெயின் தெரிவித்தார்.


துபாய் ரியல் எஸ்டேட் துறை முதலீடு செய்வதில் இந்தியர்கள் முன்னிலை

சென்ற 2009&ஆம் ஆண்டில், துபாய் ரியல் எஸ்டேட் துறையின் விற்பனையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்திற்கு, இந்திய முதலீட்டாளர்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர். அவ்வாண்டில், துபாயின் ரியல் எஸ்டேட் துறையில், இந்திய முதலீட்டாளர்கள் மேற்கொண்ட முதலீட்டின் அளவு 24 சதவீதமாக உள்ளது. இதனையடுத்து, இதர நாட்டினரை விஞ்சி இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
இந்தியர்களுக்கு அடுத்தபடியாக இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் 21 சதவீத பங்களிப்பைக் கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளனர். பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தில் உள்ளனர்.

எல்.ஐ.சி. மற்றும் எஸ்.பீ.ஐ. ஆதரவுடன் என்.டி.பி.சி. பங்கு வெளியீடு வெற்றி
சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைவு
அருண் குமார்

புதுடெல்லி
என்.டி.பி.சி. நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீடு, எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்.பீ.ஐ) ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது. என்.டி.பி.சி. நிறுவனம், மொத்தம் 41.20 கோடி பங்குகளை வெளியிட்டது. இதில், எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை மட்டும் 21.80 கோடி பங்குகள் வேண்டி விண்ணப்பித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பங்கள்
பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி. நிறுவனம் அனல் மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறனில் இந்நிறுவனத்தின் பங்களிப்பு 20 சதவீதமாகும். இந்நிறுவனம் அண்மையில் இரண்டாவது பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. ரூ.8,300 கோடியை திரட்டும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்ட இவ்வெளியீட்டில் சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அன்னிய நிதி நிறுவனங்களும் இதில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் எல்.ஐ.சி. ஆகியவற்றின் அதிகபட்ச பங்களிப்புடன், என்.டி.பி.சி. நிறுவனத்தின் பங்குகள் வேண்டி 1.2 மடங்கிற்கே விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதே சமயம் அண்மைக் காலத்தில் மூலதனச் சந்தையில் இறங்கிய இதர நிறுவனங்களின் சிறிய அளவிலான புதிய பங்கு வெளியீடுகளில், திரட்டப்பட்ட தொகை அடிப்படையில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு போதிய அளவிற்கு இருந்தது.
சில்லரை முதலீட்டாளர்கள்
என்.டி.பி.சி. நிறுவனத்தின் பங்குகள் வேண்டி, ஒரு லட்சத்திற்கும் சற்று அதிகமான சில்லரை முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர். அண்மையில் பங்குகளை வெளியிட்டு ரூ.1,500 கோடி திரட்டிய டீ.பீ. கார்ப் நிறுவனத்தின் பங்குகள் வேண்டி 73,000 பேர் விண்ணப்பித்தனர். ஜே.எஸ்.டபிள்யூ. எனர்ஜியின் பங்கு வெளியீட்டில், பங்குகள் வேண்டி 87,000 சில்லரை முதலீட்டாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்நிறுவனம் மூலதனச் சந்தையில் ரூ.2,700 கோடியை திரட்டிக் கொண்டுள்ளது. பிரைம் டேட்டாபேஸ் நிறுவனம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.
பொதுத் துறையைச் சேர்ந்த ஆர்.இ.சி. மற்றும் என்.எம்.டீ.சி. ஆகிய நிறுவனங்களும் இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொள்ள உள்ளன. ஆர்.இ.சி. நிறுவனத்தின் பங்கு வெளியீடு இம்மாதம் 19&ந் தேதியும், என்.எம்.டீ.சி.யின் பங்கு வெளியீடு மார்ச் மாதம் 10&ந் தேதியும் தொடங்குகிறது.

நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில்
அமெரிக்காவில், வேலை இழந்தோர் 20,000 பேர்


சென்ற ஜனவரி மாதத்தில், அமெரிக்காவில் 20,000 பேர் வேலை இழந்துள்ளனர். இச்செய்தி வெள்ளிக்கிழமை அன்று உலக நாடுகளின் பங்கு வர்த்தகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும், அமெரிக்க வர்த்தக சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 28 சென்ட் குறைந்து 72.86 டாலராக சரிவடைந்தது.
அமெரிக்காவில், சென்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் முறையே 85,000 பேர் மற்றும் 1,50,000 பேர் வேலை இழந்துள்ளனர்.
பொருளாதாரத்தில் மந்தநிலை உருவான பிறகு, கடந்த 2007&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து, இதுவரையிலான காலத்தில், அமெரிக்காவில் 84 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்ற ஜனவரி மாதத்தில், வேலை இன்மை விகிதம், கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு 9.7 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும், அமெரிக்காவில் வேலை இழப்பு எவ்வாறு உள்ளது என்பது குறித்து தெளிவான முடிவுக்கு வர முடியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் & டிசம்பர் காலாண்டில்
வோடாபோன் எஸ்ஸார் வருவாய் 13.7% உயர்வு


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
வோடாபோன் எஸ்ஸார், நாட்டின் செல்போன் சேவைத் துறையில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக திகழ்கிறது. இந்நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.5,623 கோடியை வருவாயாக ஈட்டியுள்ளது. இது, இதற்கும் முந்தைய செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டை விட 13.7 சதவீதம் அதிகமாகும். இருப்பினும், அதற்கு முந்தைய காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 18 சதவீதம் உயர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கடும் போட்டி
இந்திய செல்போன் சேவை துறையில், கடும் போட்டி நிலவி வருகிறது. டாட்டா டோகோமோ நிறுவனம், ஒரு நொடிக்கு ஒரு காசு என்ற அடிப்படையில் பேசுவதற்கான கட்டணத்தை நிர்ணயித்தது. எனவே, இத்துறையில் ஈடுபட்டு வரும் இதர நிறுவனங்களும் கட்டணத்தை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. இதனால், இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் வருவாயில் பெருத்த சரிவு ஏற்படும் என பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வோடாபோன் எஸ்ஸார் நிறுவனத்தின் வருவாய், சென்ற மூன்றாவது காலாண்டில் 13.7 சதவீத அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது.
கூட்டு நிறுவனம்
வோடாபோன் எஸ்ஸார் நிறுவனத்தில், உலக அளவில், தொலை தொடர்பு சேவைத் துறையில் மிகப் பெரிய நிறுவனமான இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த வோடாபோனும், இந்தியாவைச் சேர்ந்த எஸ்ஸார் நிறுவனமும் பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளன. கடந்த 2007&ஆம் ஆண்டில் வோடாபோன் நிறுவனம், ஹட்சிசன் நிறுவனம் கொண்டிருந்த பங்குகளை வாங்கி எஸ்ஸார் நிறுவனத்துடன் புதிய கூட்டு மேற்கொண்டது.
தற்பொழுது, இந்தியாவில் செல்போன் சேவை துறை அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. இருப்பினும், கடும் போட்டியால், இத்துறை நிறுவனங்களின் வருவாய் வளர்ச்சி குறைந்து போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


பெட்ரோல், டீசல் விலை உயரும் நிலையில் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஆதாயம்
பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க எஸ்ஸார் ஆயில் முடிவு


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
மத்திய அரசு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் போன்றவற்றை, மக்கள் நலன் கருதி அடக்க விலைக்கு குறைவாக விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது குறித்து ஆய்வு செய்ய கிரித் பரேக் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு, அண்மையில் மேற்கண்ட எரிபொருள்களின் விலை நிர்ணயத்தில் அரசு கட்டுப்பாடு இல்லாத வகையில் பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. இது குறித்து சர்ச்சை நிலவி வருகிறது.
இந்த நிலையில், பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை உயர்ந்தால், இத்துறையில் ஈடுபட்டு வரும் தனியார் துறை நிறுவனங்களுக்கு இது பலன் அளிக்கும் என சந்தை வட்டாரத்தினர் தெரிவித்துள்ளனர்.
எஸ்ஸார் ஆயில்
தனியார் துறையைச் சேர்ந்த எஸ்ஸார் ஆயில் நிறுவனம், எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோல், டீசல் விற்பனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிறுவனத்திற்கு தற்பொழுது நாடு முழுவதுமாக 1,450 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. இதனை அடுத்த சில மாதங்களில் 2,000 என்ற எண்ணிக்கையில் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக எஸ்ஸார் குழுமத்தின் தலைவர் சசி ரூயா தெரிவித்தார்.
மூன்று நிறுவனங்கள்
தனியார் துறையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எஸ்ஸார் ஆயில், ஷெல் இந்தியா ஆகிய மூன்று நிறுவனங்களே நாட்டின் முக்கிய நகரங்களில் பெட்ரோல் நிலையங்களை கொண்டுள்ளன. சர்வதேச சந்தையில், கடந்த 2008&ஆம் ஆண்டில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 147 டாலருக்கும் மேல் அதிகரித்ததையடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், அதன் அனைத்து சில்லரை விற்பனை நிலையங்களையும் மூடியது. எஸ்ஸார் ஆயில் மற்றும் ஷெல் இந்தியா ஆகிய நிறுவனங்களும் அவற்றின் குறிப்பிட்ட சில பெட்ரோல் நிலையங்களை மூடி வைத்திருந்தன. பின்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கியதும் இந்த மூன்று நிறுவனங்களும் அவற்றின் பெட்ரோல் நிலையங்களை மீண்டும் தொடங்கின.
எஸ்ஸார் ஆயில் நிறுவனத்திற்கு, குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் வதினார் என்ற இடத்தில் மிகப் பெரிய சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளது. இவ்வாலை, நாள் ஒன்றுக்கு 2.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்டதாகும். இங்கு உற்பத்தியாகும் பெட்ரோல் மற்றும் டீசலை அவற்றின் சில்லரை விற்பனை நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் மொத்த பெட்ரோல் நிலையங்களில் (1,450) 1,293 நிலையங்கள் குஜராத் மாநிலத்தில் உள்ளன. மீதமுள்ள பெட்ரோல் நிலையங்கள், ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, ஒரிசா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ளன.
உற்பத்தி திறன் அதிகரிப்பு
எஸ்ஸார் ஆயில் நிறுவனம், அதன் வதினார் சுத்திகரிப்பு ஆலையின் உற்பத்தி திறனை அதிகரித்துள்ளது. இங்கு அதிக அளவில் உற்பத்தியாகும் டீசலை அதன் பெட்ரோல் நிலையங்கள் வாயிலாக விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும், இந்நிறுவனம், நடப்பு ஆண்டில், அதன் பெட்ரோல் நிலையங்கள் வாயிலாக, அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சி.என்.ஜி), வாகனங்களுக்கான திரவ எரிவாயு போன்றவற்றை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

மகிந்திரா & மகிந்திரா
நவீன பைக்குகளை தயாரிக்கும் வகையில் அன்னிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை

லிஜி பிலிப்
மும்பை
டிராக்டர்கள் மற்றும் பன்முக பயன்பாட்டு வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் மகிந்திரா அண்டு மகிந்திரா நிறுவனம், கடந்த 2008&ஆம் ஆண்டில், பூனாவைச் சேர்ந்த கைனடிக் மோட்டார்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதன் வாயிலாக இரு சக்கர வாகனங்கள் துறையில் கால் பதித்தது. இந்நிறுவனம் இந்திய சந்தைக்கேற்ற வகையில் அதிநவீன மோட்டார் பைக்குகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டு நிறுவனம்
வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் கூட்டுடன் இத்திட்டத்தை செயல்படுத்த இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து, இத்தாலி மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறது. இவற்றுள் டிரையம்ஃப் மற்றும் மோட்டோ குஸ்ஸி ஆகியவை குறிப்பிடத்தக்க நிறுவனங்களாகும். மகிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் இது குறித்த விவரங்களை கூற மறுத்து விட்டனர்.
மகிந்திரா நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் பிரிவு, சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்திலிருந்து கியர் இல்லாத ஸ்கூட்டர்கள் விற்பனையை தொடங்கியது. அம்மாத்திலிருந்து மாதம் ஒன்றுக்கு சராசரியாக 7,000 ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வந்த இந்நிறுவனம், நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் 10,000 வாகனங்களை விற்பனை செய்தது. வரும் ஏப்ரல் மாதத்திற்குள் ஸ்கூட்டர்கள் விற்பனையை மாதம் ஒன்றுக்கு 15,000 என்ற அளவில் உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
பங்கு மூலதனம்
நிறுவனத்தின் இரு சக்கர வானங்கள் பிரிவில், மகிந்திரா நிறுவனம் 80 சதவீத பங்கு மூலதனத்தையும், கைனடிக் குழுமம் 20 சதவீத பங்கு மூலதனத்தையும் கொண்டுள்ளன. மகிந்திரா நிறுவனம், இதன் பெரும்பான்மை பங்குகளை கடந்த 2008&ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரூ.110 கோடிக்கு வாங்கியது.
மோட்டார் வாகனத்திலிருந்து, தகவல் தொழில்நுட்பம் வரை பல்வேறு வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மகிந்திரா, இரு சக்கர வாகனங்கள் துறையைப் பொறுத்தவரை புதிய நிறுவனமாகும். எனவே இந்நிறுவனம், இத்துறையில் ஜாம்பவான்களாகத் திகழும் ஹோண்டா, சுசுகி போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.

சத்யம் மோசடி விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது -சல்மான் குர்ஷித்

சென்னை: பல ஆயிரம் கோடி சத்யம் நிறுவன மோசடி வழக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. அடுத்து நீதிமன்றங்களில் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படும் என நம்புகிறோம் என்று மத்திய கம்பெனி விவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

சென்னை வந்திருந்த சல்மான் குர்ஷித்திடம் சத்யம் மோசடி வழக்கின் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சத்யம் மோசடி வழக்கின் விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. அடுத்து கோர்ட்கள்தான் விசாரணையைத் தொடங்க வேண்டும். வழக்குக்குத் தேவையான மிகச் சிறந்த வக்கீல்களை அரசு கொடுத்துள்ளது.

கோர்ட்டுகளில் விசாரணை விரைவாக நடைபெறும் என நம்புகிறோம். பிற நாடுகளில் உள்ளதைப் போன்ற சிறந்த சட்ட நிர்வாகத்தை நாம் கொண்டுள்ளோம் என்றார் குர்ஷித்.


தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கைக் குறி வைக்கும் மாருதி ரிட்ஸ்
டெல்லி: மாருதி நிறுவனம் தனது ரிட்ஸ் கார்களை மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் களம் இறக்கத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாருதி சுசுகி இந்தியா நிறுவன மார்க்கெட்டிங் பொது மேலாளர் சஷாங்க் ஸ்ரீவத்சவா கூறுகையில்,

கடந்த மாதம் இந்தோனேசியாவுக்கான ரிட்ஸ் ஏற்றுமதி தொடங்கியது. அடுத்த கட்டமாக தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்றுமதியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

கடந்த ஆண்டு மே மாதம் ரிட்ஸ் அறிமுகமானது. இதுவரை 51,000 கார்கள் விற்பனையாகியுள்ளன.

கடந்த மாதம் இந்தோனேசியாவுக்கு 500 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ரிட்ஸ் கார்களுக்கு ஏற்ற மார்க்கெட் நிலவரம், தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவுவதாக கருதுகிறோம். எனவே இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார்.

சத்யம் மோசடி : பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் ஆடிட்டருக்கு ஜாமீன்
டெல்லி: சத்யம் மெகா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதன் ஆடிட்டர் பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனத்தின் ஆடிட்டர் ஸ்ரீனிவாஸ் தல்லூரிக்கு உச்சநீதி மன்றனம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சத்யம் நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜூ ரூ 7,800 கோடி வரை மோசடி செய்தார். இதனை அவரே ஒப்புக் கொண்டதால் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சஞ்சாலகுடா சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் 10 முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடைசியாக மகிந்திரா சத்யம் துணைத் தலைவரும், ஆடிட் பிரிவு பொறுப்பாளருமான பிரபாகர் குப்தாவும் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து இவர்கள் ஜாமீனுக்கு முயன்று வருகிறார்கள். ஆனால் பல்வேறு நீதி மன்றங்களிலும் ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் அதன் தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ்ஹவுஸ் ஆடிட்டர்கள் ஸ்ரீனிவாஸ் தல்லூரி மற்றும் கோபாலகிருஷ்ணன்.

இவர்களில் ஸ்ரீனிவாஸ் தல்லூரி மட்டும் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். தேவைப்படும்போது எந்த தடங்கலுமின்றி நீதிமன்றத்துக்கு வருவதாக அவர் சிபிஐக்கு உறுதி அளித்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

8,500 புதிய கார்கள் வாபஸ்: ஹோண்டா திட்டம்
டோக்கியோ: ஹோண்டா நிறுவனத்தின், சேடன் 'சிட்டி' மாடல் காரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 8,532 கார்களை திரும்ப பெற உள்ளதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம், ஹோண்டா. இதன் துணை நிறுவனமான, ஹோண்டா சியல் கார்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் அமைந்துள்ளது.

இந்நிறுவனம் கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2007ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட, இரண்டாம் தலைமுறை 'சிட்டி' மாடல் கார்களில், பவர் விண்டோ சுவிட்ச்களை மாற்றுவதற்காக, 8,532 கார்களை திரும்ப பெற உள்ளோம். இவ்வாறு மாற்றுக் கருவி பொருத்துவது இலவசமாக செய்து தரப்படும். இதற்காக, கருவி மாற்ற வேண்டிய கார்களின் உரிமையாளர்களுடன், கம்பெனி தொடர்பு கொண்டு பேசும்.


இந்தியாவில் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்ட, மூன்றாம் தலைமுறை 'சிட்டி' கார்களில், எவ்வித பாதிப்பும் இல்லை. 'சிட்டி' மற்றும் 'ஜாஸ்' மாடல் கார்களில், பவர் விண்டோ சுவிட்ச்களில் கோளாறு ஏற்பட்டதாக, தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, இவ்விரு மாடல்களில், உலகளவில் மொத்தம் 6.46 லட்சம் கார்களை திரும்பப் பெற உள்ளதாக, ஹோண்டா நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது. ஹோண்டா நிறுவனம் கார்களை திரும்ப பெற உள்ளதாக அறிவித்தது, முதல் தலைமுறை 'ஜாஸ்' கார்களுக்கு மட்டுமே பொருந்தும். கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் விற்பனை செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை கார்களுக்கு பொருந்தாது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. மழைக் காலத்தில், காரின் ஓட்டுனர் கதவு திறந்து வைத்திருந்தால், அதன் வழியாக தண்ணீர் படும்போது, பவர் சுவிட்சில் இருந்து புகை வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்தே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த கம்ப்யூட்டர்
பெங்களூரு: இந்தியாவின் முதன் மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ இன்போடெக், சுற்றுச்சூழலுக்கு உகந்த கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து, விப்ரோ நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி அனுராக் பெஹார் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு உகந்த, இன்டல் கோர் 2 டுயோ புராசசரை அடிப்படையாக கொண்ட, கம்ப் யூட்டர்களை எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இவைகள், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களான பாலிவினைல் குளோரைடு மற்றும் புரோமினேட்டட் பிளேம் ரிட்டார்டன்ட் (பி.எப்.ஆர்.,) போன்ற கார்சினோஜெனிக் பொருட்கள் இன்றி தயாரிக்கப்படுகின்றன.

எலக்ட்ரானிக் பொருட் களில் உள்ள நச்சுப் பொருட் களை நீக்கிவிட்டு, அவற் றை மறுசுழற்சி செய்வது மிகவும் பாதுகாப்பானது. எனவே, விப்ரோ நிறுவனம், பாலிவினைல் குளோரைடு மற்றும் பி.எப்.ஆர்., இன்றி தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் மறுசுழற்சி கொள்கைகள் ஆகியவற்றை பரிசீலித்து வருகிறது. நச்சுத்தன்மையற்ற, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான கம்ப்யூட் டர் களை உருவாக்க, விப்ரோ நிறுவனம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி உள்ளது. இவ்வாறு அனுராக் பெஹார் கூறினார்

வரும் பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி குறைப்பு இல்லை : மத்திய அரசு
புதுடில்லி : 2010-11ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி குறைப்பு செய்யப்பட மாட்டாது என மத்திய நிதித்துறை அலுவல்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கல்வி கட்டணம், கூடுதல் கட்டணம் உள்ளிட்ட கார்ப்பரேட் வரித் தொகையை தற்போதுள்ள 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கக்கோரி தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் 2011-2012ம் ஆண்டு பட்ஜெட் வரை கார்ப்பரேட் வரியில் மாற்றம் செய்யப்படாமல் 30 சதவீதமாகவே இருக்கும் என மூத்த நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது உள்நாட்டுத் தொழில்கள் 30 சதவீத கார்ப்பரேட் வரி மூலம் ஆண்டுக்கு ஒரு கோடி வருமான வரி பெறப்படுகிறது. அதே சமயம் கல்வி கட்டணம் மூலம் 3 சதவீதமும், கூடுதல் கட்டணம் மூலம் 10 சதவீதமும் சேர்த்து மொத்தம் 33.99 சதவீதம் வரி பெறப்படுகிறது. ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறும் நிறுவனங்கள் 30.9 சதவீதம் வரி பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.

சரிந்த சந்தை மீண்டும் மேலெழுமா?
வாரக் கடைசி, சந்தையை துடைத்து எடுத்துக் கொண்டு சென்று விட்டது. வியாழன், வெள்ளி, சந்தையை காணாமல் போக செய்துவிட்டது. வியாழன் சந்தை குறையக் காரணம், உலகளவு சந்தைகளும், மெட்டல் விலைகள் குறைந்ததும், என்.டி.பி.சி., வெளியீட்டிற்கு இரண்டாவது நாள், அவ்வளவு செலுத்தப்படாததும் தான், இவையெல்லாம் சேர்ந்து சந்தையை கலக்கியது. அன்றைய தினம் மட்டும், மும்பை பங்குச் சந்தை 271 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது. வெள்ளியன்று சாப்ட்வேர் பங்குகள், சந்தையை சரித்தது என்றால் மிகையாகாது. சாப்ட்வேர் கம்பெனிகளின் கூட்டமைப்பான நாஸ்காம், 2010-11 வருடத்திற்கான சாப்ட்வேர் ஏற்றுமதி அளவு 55 பில்லியன் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று, செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது. இது, முன்னர் குறியிட்டிருந்ததை விட (அதாவது 60 பில்லியன் முன்பு எதிர்பார்க்கப்பட்டது) குறைவாக இருந்ததால் சந்தைகள் அதை வரவேற்கவில்லை. ஆதலால், சாப்ட்வேர் பங்குகள் 0.27 சதவீதத்திலிருந்து 9 சதவீதம் வரை குறைந்தன.
அமெரிக்காவின் ஜாப் டேட்டா, ஐரோப்பிய சந்தைகளின் போக்கு, சாப்ட்வேர் கம்பெனிகளின் சரிவு ஆகியவைகளை வைத்து, மும்பை பங்குச் சந்தை வெள்ளியன்று ஒரு மிகப் பெரிய சரிவை சந்தித்தது. 434 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது. வியாழன், வெள்ளி ஏற்பட்டிருந்த இறக்கத்தைப் பார்த்து கிறங்கியவர்களுக்கு, சனிக்கிழமையும் சந்தை உண்டு என்பது இன்னும் பயத்தை ஏற்படுத்தியது. இந்த வாரம் சனிக்கிழமையும் சந்தை இருந்தது. தேசிய பங்குச் சந்தை புதிய சாப்ட்வேர் ஒன்றை நிறுவுவதால், அதற்கான ஒரு முன்னோட்டத்தை சனியன்று நடத்த உத்தேசித்தது. அதனால் தான் சனியன்றும் சந்தை நடந்தது. அன்றைய தினம், சந்தைகளை சிறிது காப்பாற்றியது என்றால் மிகையாகாது. சந்தை மிகவும் குறைந்திருந்ததால், இது தான் சமயம் என்று முதலீட்டாளர்கள் வாங்கினர்; சந்தை கூடியது. சனியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 124 புள்ளிகள் கூடி 15,915 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 38 புள்ளிகள் கூடி 4,757 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சந்தையானது, கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு சென்று விட்டது.



ஐரோப்பாவின் சோகம் : கடந்த இரண்டு வருடத்திற்கு முன், அமெரிக்கா பல பிரச்னைகளால் தவித்தது. தற்போது, ஐரோப்பா தவிப்பது போலத் தெரிகிறது. அதாவது கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் தங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கின்றன. அது உலகத்திற்கு ஒரு ஜுரத்தை தந்துள்ளது. அந்த ஜுரம் சிக்குன்-குனியா போல பரவுமா, இல்லை தணியுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தங்கம்: தங்கம் விலை திடீரென குறைய ஆரம்பித்துள்ளது. என்ன காரணம் என்று புரியாமல் பலர் முழிக்கலாம். அமெரிக்க டாலர், மற்ற கரன்சிகளுக்கு எதிராக வலு பெற்றதால் தங்கம் விலை குறைந்தது. நிறைய குறைந்து, சுத்த தங்கம் 16,000க்கும் குறைவான அளவுக்கும் வந்தது.



என்.டி.பி.சி., வெளியீடு : முதல் நாள் சந்தை துவங்கிய சிறிது நேரத்திலேயே 0.61 சதவீதம் பங்குகள் செலுத்தப்பட்டவுடன், சந்தையில் ஒரு பெரிய ஆரவாரம் இருந்தது; எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆதலால், சந்தையும் வேகமாக மேலே சென்றது. ஆனால், அடுத்த நாள் (வியாழன்) அதிகம் செலுத்தப்படவேயில்லை. வெள்ளியும் அப்படித்தான் இருந்தது. கடைசியாக 1.20 மடங்கு மட்டும் தான் செலுத்தப்பட்டிருந்தது. சிறிய முதலீட்டாளர்கள் பங்கு 0.16 மடங்கு தான் செலுத்தப்பட்டிருந்தது. ஊழியர்களின் பங்கு 0.46 சதவீதம் செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பங்கு வெளியீட்டை காப்பாற்றியது, அரசாங்க கம்பெனிகள் என்றால் மிகையாகாது. எல்..ஐ.சி., வங்கிகள் போன்றவை அதிக அளவில் செலுத்தியதால் தான் இந்த வெளியீடு காப்பாற்றப்பட்டது. இதை உணர்ந்து கொண்ட அரசாங்கம், வரும் அரசாங்க வெளியீடுகளில் விலை நிர்ணயிக்கும் போது, இன்னும் சகாயமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம் என்று கூறியிருக்கிறது. முதல் நாள் பவர்புல்லாக செலுத்தப்பட்டிருந்த இந்த பவர் பங்கு, அடுத்த நாள் பவர் ஆப் பங்காகியது. இருந்தாலும் கம்பெனியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. பங்கின் விலை 200க்கும் கீழே போகும் பட்சத்தில் வாங்கி வையுங்கள். பின்னர் ஒவ்வொரும் சரிவிலும் வாங்குங்கள்.


அடுத்த வாரம் எப்படி இருக்கும் : சந்தை கிட்டத்தட்ட 1,500 புள்ளிகளுக்கும் மேல் இழந்திருக்கிறது. இது வாய்ப்பா, இல்லை சரிவின் தொடக்கமா என்று பலரும் ஆராய முற்பட்டிருக்கின்றனர். சரிவின் தொடக்கமாக இருந்தாலும், சந்தை சரிந்து சரிந்து தான் மேலே செல்லும். தொடர்ந்து மேலே செல்வது இயலாத காரியம்.

மார்ச் மாதத்திற்குள் 20 லட்சம் கிரெடிட் கார்டுகள் ரத்து
மும்பை : கடன் தவணை தவறுவதால் இழப்பு, வசூலிப்பதில் சிக்கல்கள் காரணமாக மார்ச் மாதத்துக்குள் 20 லட்சம் கிரெடிட் கார்டுகளை ரத்து செய்யும் பணியில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் வரை நாடு முழுவதும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 2.47 கோடியாக இருந்தது. நிதி நெருக்கடியின் பாதிப்பு, வேலையிழப்பு, சம்பளம், சலுகைகள் குறைப்பு ஆகியவற்றால் கிரெடிட் கார்டில் கடன் பெற்ற பலர் தங்கள் தவணையை செலுத்துவதில்லை. நிலுவைத் தொகை வசூலிப்புக்கு வங்கிகள் பல நடவடிக்கைகளை எடுத்தன. தொடர்ந்து கிரெடிட் கார்டை பயன்படுத்தாதபடி தடை விதித்தன. எனினும், நிலுவையை வசூலிப்பதில் வெற்றி பெற முடியவில்லை. கடனை வசூலிக்க மிரட்டல் உட்பட சட்டவிரோத வழிகளைக் கையாள ரிசர்வ் வங்கியும், உச்ச நீதிமன்றமும் தடை விதித்ததைத் தொடர்ந்து, வங்கிகளின் வராக் கடன் அதிகரித்தது.
சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் கடனை வசூலிப்பதில் கால தாமதமும், செலவும் அதிகம் என்பதால் வங்கிகள் சிக்கலில் சிக்கிக் கொண்டன. இதுபோன்ற பிரச்னைக்கு உள்ளான கிரெடிட் கார்டுகள், குறைந்த வருவாய் பிரிவினருக்கு அளித்த கார்டுகளை ரத்து செய்யும் பணியை கடந்த ஏப்ரலில் தொடங்கின. வருகிற மார்ச் மாதத்துக்குள் 20 லட்சம் கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய வங்கிகள் இலக்கு வைத்துள்ளன. இதனால், ஏப்ரலுக்குப் பிறகு கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை 2.27 கோடியாக குறையும். ஐசிஐசிஐ வங்கி மட்டும் சுமார் 15 லட்சம் கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், அதன் கிரெடிட் கார்டு எண்ணிக்கை 70 லட்சத்தில் இருந்து 55 லட்சமாகிறது. மாறாக டெபிட் கார்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜி.ஐ.சி., லாபம் 54 சதவீதம் அதிகரிப்பு
மும்பை: ஜி.ஐ.சி., வீட்டுக் கடனுதவி வழங்கும் நிறுவனத்தின், டிசம்பருடன் முடிந்த காலாண்டிற்கான வரிக்கு பிந்தை லாபம், 54 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: ஜி.ஐ.சி., வீட்டுக் கடனுதவி வழங்கும் நிறுவனத்தின், டிசம்பருடன் முடிந்த காலாண்டிற்கான வரிக்கு பிந்தைய லாபம், 15.50 கோடி ரூபாய். அதற்கு முந்தைய ஆண்டு, இதே காலகட்டத்தில், வரிக்கு பிந்தை லாபம், 10.04 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த ஒன்பது மாதங்களுக்கான வரிக்கு பிந்தைய லாபம், 49.51 கோடி ரூபாய். அதற்கு முந்தைய ஆண்டான 2008ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி யுடன் முடிந்த ஆண்டிற்கான வரிக்கு பிந்தை லாபம் 40.05 கோடி ரூபாய். கடந்த 2008ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி யுடன் முடிந்த காலத்திற்கான நிகர லாபம், 24 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த காலத்திற்கான, இந்நிறுவனத்தின் போதுமான முதலீட்டு வீதம், 19.23 சதவீதம். கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில், இந்நிறுவனம், 183 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது. இந்நிறுவனம், தன் புளோட்டிங் வட்டி வீதத்திட்டத்தின் கீழ், ஒரு ஆண்டிற்கு 7.95 சதவீதம் நிலையான வட்டியில் புதிய கடன்கள் வழங்க உள்ளன.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மினி லாரி 'மேக்சிமோ' விலை ரூ. 2.79 லட்சம்
மும்பை: இந்தியாவில், சிறிய வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும், மகேந்திரா அண்ட் மகேந்திரா லிமிடெட் நிறுவனம், மினி லாரியான, 'மேக்சிமோ' 2.79 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும் என அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: டில்லியில் நடந்த, 10வது ஆட்டோ கண்காட்சியில், மகேந்திரா நிறுவனத்தின் மினி லாரியான, மேக்சிமோ காட்சிக்கு வைக்கப்பட்டது. 'மேக்சிமோ' மினி லாரி, இரண்டு சிலிண்டர் சி.ஆர்.டி.இ., இன்ஜின் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. 'மேக்சிமோ' மினிலாரி, நவி மும்பையில் அமைந்துள்ள ஷோரூமை தவிர, பிற பகுதிகளில், 2.79 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும். மேலும், இதற்கு ஒரு ஆண்டு, இலவச பராமரிப்பும் வழங்கப்படுகிறது. இந்த மினி லாரி, வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதோடு, சிறியளவிலான சரக்குப் போக்குவரத்துக்கு ஏற்றது. மேக்சிமோ, பல்வேறு விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் செயல்பாடு, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளது. 'மேக்சிமோ' மினிலாரி, இம்மாதம், சில குறிப்பிட்ட சந்தைகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் பின், படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது