சத்யம் மோசடி விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது -சல்மான் குர்ஷித்

திங்கள், 8 பிப்ரவரி, 2010

சென்னை: பல ஆயிரம் கோடி சத்யம் நிறுவன மோசடி வழக்கு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. அடுத்து நீதிமன்றங்களில் வழக்குகள் விரைவாக விசாரிக்கப்படும் என நம்புகிறோம் என்று மத்திய கம்பெனி விவகாரத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.

சென்னை வந்திருந்த சல்மான் குர்ஷித்திடம் சத்யம் மோசடி வழக்கின் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, சத்யம் மோசடி வழக்கின் விசாரணை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. அடுத்து கோர்ட்கள்தான் விசாரணையைத் தொடங்க வேண்டும். வழக்குக்குத் தேவையான மிகச் சிறந்த வக்கீல்களை அரசு கொடுத்துள்ளது.

கோர்ட்டுகளில் விசாரணை விரைவாக நடைபெறும் என நம்புகிறோம். பிற நாடுகளில் உள்ளதைப் போன்ற சிறந்த சட்ட நிர்வாகத்தை நாம் கொண்டுள்ளோம் என்றார் குர்ஷித்.


தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கைக் குறி வைக்கும் மாருதி ரிட்ஸ்
டெல்லி: மாருதி நிறுவனம் தனது ரிட்ஸ் கார்களை மத்திய கிழக்கு நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகளில் களம் இறக்கத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மாருதி சுசுகி இந்தியா நிறுவன மார்க்கெட்டிங் பொது மேலாளர் சஷாங்க் ஸ்ரீவத்சவா கூறுகையில்,

கடந்த மாதம் இந்தோனேசியாவுக்கான ரிட்ஸ் ஏற்றுமதி தொடங்கியது. அடுத்த கட்டமாக தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்றுமதியைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளோம்.

கடந்த ஆண்டு மே மாதம் ரிட்ஸ் அறிமுகமானது. இதுவரை 51,000 கார்கள் விற்பனையாகியுள்ளன.

கடந்த மாதம் இந்தோனேசியாவுக்கு 500 கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

ரிட்ஸ் கார்களுக்கு ஏற்ற மார்க்கெட் நிலவரம், தென் கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவுவதாக கருதுகிறோம். எனவே இங்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றார்.

சத்யம் மோசடி : பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் ஆடிட்டருக்கு ஜாமீன்
டெல்லி: சத்யம் மெகா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதன் ஆடிட்டர் பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ் நிறுவனத்தின் ஆடிட்டர் ஸ்ரீனிவாஸ் தல்லூரிக்கு உச்சநீதி மன்றனம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சத்யம் நிறுவனத்தில் பல்வேறு வகைகளில் அதன் நிறுவனர் ராமலிங்க ராஜூ ரூ 7,800 கோடி வரை மோசடி செய்தார். இதனை அவரே ஒப்புக் கொண்டதால் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் சஞ்சாலகுடா சிறையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவருடன் 10 முக்கிய நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடைசியாக மகிந்திரா சத்யம் துணைத் தலைவரும், ஆடிட் பிரிவு பொறுப்பாளருமான பிரபாகர் குப்தாவும் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து இவர்கள் ஜாமீனுக்கு முயன்று வருகிறார்கள். ஆனால் பல்வேறு நீதி மன்றங்களிலும் ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டது.

சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் அதன் தணிக்கை நிறுவனமான பிரைஸ்வாட்டர்கூப்பர்ஸ்ஹவுஸ் ஆடிட்டர்கள் ஸ்ரீனிவாஸ் தல்லூரி மற்றும் கோபாலகிருஷ்ணன்.

இவர்களில் ஸ்ரீனிவாஸ் தல்லூரி மட்டும் இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு அவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். தேவைப்படும்போது எந்த தடங்கலுமின்றி நீதிமன்றத்துக்கு வருவதாக அவர் சிபிஐக்கு உறுதி அளித்தார்.

இதை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

8,500 புதிய கார்கள் வாபஸ்: ஹோண்டா திட்டம்
டோக்கியோ: ஹோண்டா நிறுவனத்தின், சேடன் 'சிட்டி' மாடல் காரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 8,532 கார்களை திரும்ப பெற உள்ளதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஜப்பானைச் சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம், ஹோண்டா. இதன் துணை நிறுவனமான, ஹோண்டா சியல் கார்ஸ் இந்தியா நிறுவனம், இந்தியாவில் அமைந்துள்ளது.

இந்நிறுவனம் கடந்த சனிக்கிழமையன்று வெளியிட்ட அறிவிப்பு: கடந்த 2007ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட, இரண்டாம் தலைமுறை 'சிட்டி' மாடல் கார்களில், பவர் விண்டோ சுவிட்ச்களை மாற்றுவதற்காக, 8,532 கார்களை திரும்ப பெற உள்ளோம். இவ்வாறு மாற்றுக் கருவி பொருத்துவது இலவசமாக செய்து தரப்படும். இதற்காக, கருவி மாற்ற வேண்டிய கார்களின் உரிமையாளர்களுடன், கம்பெனி தொடர்பு கொண்டு பேசும்.


இந்தியாவில் சமீபத்தில் விற்பனை செய்யப்பட்ட, மூன்றாம் தலைமுறை 'சிட்டி' கார்களில், எவ்வித பாதிப்பும் இல்லை. 'சிட்டி' மற்றும் 'ஜாஸ்' மாடல் கார்களில், பவர் விண்டோ சுவிட்ச்களில் கோளாறு ஏற்பட்டதாக, தொடர்ந்து புகார்கள் வந்ததையடுத்து, இவ்விரு மாடல்களில், உலகளவில் மொத்தம் 6.46 லட்சம் கார்களை திரும்பப் பெற உள்ளதாக, ஹோண்டா நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது. ஹோண்டா நிறுவனம் கார்களை திரும்ப பெற உள்ளதாக அறிவித்தது, முதல் தலைமுறை 'ஜாஸ்' கார்களுக்கு மட்டுமே பொருந்தும். கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் விற்பனை செய்யப்பட்ட இரண்டாம் தலைமுறை கார்களுக்கு பொருந்தாது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. மழைக் காலத்தில், காரின் ஓட்டுனர் கதவு திறந்து வைத்திருந்தால், அதன் வழியாக தண்ணீர் படும்போது, பவர் சுவிட்சில் இருந்து புகை வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்தே, இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுற்றுச்சூழலுக்கு உகந்த கம்ப்யூட்டர்
பெங்களூரு: இந்தியாவின் முதன் மையான தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ இன்போடெக், சுற்றுச்சூழலுக்கு உகந்த கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்து, விப்ரோ நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி அனுராக் பெஹார் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு உகந்த, இன்டல் கோர் 2 டுயோ புராசசரை அடிப்படையாக கொண்ட, கம்ப் யூட்டர்களை எங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இவைகள், தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களான பாலிவினைல் குளோரைடு மற்றும் புரோமினேட்டட் பிளேம் ரிட்டார்டன்ட் (பி.எப்.ஆர்.,) போன்ற கார்சினோஜெனிக் பொருட்கள் இன்றி தயாரிக்கப்படுகின்றன.

எலக்ட்ரானிக் பொருட் களில் உள்ள நச்சுப் பொருட் களை நீக்கிவிட்டு, அவற் றை மறுசுழற்சி செய்வது மிகவும் பாதுகாப்பானது. எனவே, விப்ரோ நிறுவனம், பாலிவினைல் குளோரைடு மற்றும் பி.எப்.ஆர்., இன்றி தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் மறுசுழற்சி கொள்கைகள் ஆகியவற்றை பரிசீலித்து வருகிறது. நச்சுத்தன்மையற்ற, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலான கம்ப்யூட் டர் களை உருவாக்க, விப்ரோ நிறுவனம் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி உள்ளது. இவ்வாறு அனுராக் பெஹார் கூறினார்

வரும் பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி குறைப்பு இல்லை : மத்திய அரசு
புதுடில்லி : 2010-11ம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் கார்ப்பரேட் வரி குறைப்பு செய்யப்பட மாட்டாது என மத்திய நிதித்துறை அலுவல்கள் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கல்வி கட்டணம், கூடுதல் கட்டணம் உள்ளிட்ட கார்ப்பரேட் வரித் தொகையை தற்போதுள்ள 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கக்கோரி தொழில் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் 2011-2012ம் ஆண்டு பட்ஜெட் வரை கார்ப்பரேட் வரியில் மாற்றம் செய்யப்படாமல் 30 சதவீதமாகவே இருக்கும் என மூத்த நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது உள்நாட்டுத் தொழில்கள் 30 சதவீத கார்ப்பரேட் வரி மூலம் ஆண்டுக்கு ஒரு கோடி வருமான வரி பெறப்படுகிறது. அதே சமயம் கல்வி கட்டணம் மூலம் 3 சதவீதமும், கூடுதல் கட்டணம் மூலம் 10 சதவீதமும் சேர்த்து மொத்தம் 33.99 சதவீதம் வரி பெறப்படுகிறது. ஒரு கோடிக்கு மேல் வருமானம் பெறும் நிறுவனங்கள் 30.9 சதவீதம் வரி பெறப்படுவது குறிப்பிடத்தக்கது.

சரிந்த சந்தை மீண்டும் மேலெழுமா?
வாரக் கடைசி, சந்தையை துடைத்து எடுத்துக் கொண்டு சென்று விட்டது. வியாழன், வெள்ளி, சந்தையை காணாமல் போக செய்துவிட்டது. வியாழன் சந்தை குறையக் காரணம், உலகளவு சந்தைகளும், மெட்டல் விலைகள் குறைந்ததும், என்.டி.பி.சி., வெளியீட்டிற்கு இரண்டாவது நாள், அவ்வளவு செலுத்தப்படாததும் தான், இவையெல்லாம் சேர்ந்து சந்தையை கலக்கியது. அன்றைய தினம் மட்டும், மும்பை பங்குச் சந்தை 271 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது. வெள்ளியன்று சாப்ட்வேர் பங்குகள், சந்தையை சரித்தது என்றால் மிகையாகாது. சாப்ட்வேர் கம்பெனிகளின் கூட்டமைப்பான நாஸ்காம், 2010-11 வருடத்திற்கான சாப்ட்வேர் ஏற்றுமதி அளவு 55 பில்லியன் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று, செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது. இது, முன்னர் குறியிட்டிருந்ததை விட (அதாவது 60 பில்லியன் முன்பு எதிர்பார்க்கப்பட்டது) குறைவாக இருந்ததால் சந்தைகள் அதை வரவேற்கவில்லை. ஆதலால், சாப்ட்வேர் பங்குகள் 0.27 சதவீதத்திலிருந்து 9 சதவீதம் வரை குறைந்தன.
அமெரிக்காவின் ஜாப் டேட்டா, ஐரோப்பிய சந்தைகளின் போக்கு, சாப்ட்வேர் கம்பெனிகளின் சரிவு ஆகியவைகளை வைத்து, மும்பை பங்குச் சந்தை வெள்ளியன்று ஒரு மிகப் பெரிய சரிவை சந்தித்தது. 434 புள்ளிகள் குறைந்து முடிவடைந்தது. வியாழன், வெள்ளி ஏற்பட்டிருந்த இறக்கத்தைப் பார்த்து கிறங்கியவர்களுக்கு, சனிக்கிழமையும் சந்தை உண்டு என்பது இன்னும் பயத்தை ஏற்படுத்தியது. இந்த வாரம் சனிக்கிழமையும் சந்தை இருந்தது. தேசிய பங்குச் சந்தை புதிய சாப்ட்வேர் ஒன்றை நிறுவுவதால், அதற்கான ஒரு முன்னோட்டத்தை சனியன்று நடத்த உத்தேசித்தது. அதனால் தான் சனியன்றும் சந்தை நடந்தது. அன்றைய தினம், சந்தைகளை சிறிது காப்பாற்றியது என்றால் மிகையாகாது. சந்தை மிகவும் குறைந்திருந்ததால், இது தான் சமயம் என்று முதலீட்டாளர்கள் வாங்கினர்; சந்தை கூடியது. சனியன்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 124 புள்ளிகள் கூடி 15,915 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 38 புள்ளிகள் கூடி 4,757 புள்ளிகளுடனும் முடிவடைந்தது. சந்தையானது, கடந்த மூன்று மாதத்திற்கு முன்னர் இருந்த நிலைக்கு சென்று விட்டது.



ஐரோப்பாவின் சோகம் : கடந்த இரண்டு வருடத்திற்கு முன், அமெரிக்கா பல பிரச்னைகளால் தவித்தது. தற்போது, ஐரோப்பா தவிப்பது போலத் தெரிகிறது. அதாவது கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் ஆகிய நாடுகள் தங்களின் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கின்றன. அது உலகத்திற்கு ஒரு ஜுரத்தை தந்துள்ளது. அந்த ஜுரம் சிக்குன்-குனியா போல பரவுமா, இல்லை தணியுமா என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


தங்கம்: தங்கம் விலை திடீரென குறைய ஆரம்பித்துள்ளது. என்ன காரணம் என்று புரியாமல் பலர் முழிக்கலாம். அமெரிக்க டாலர், மற்ற கரன்சிகளுக்கு எதிராக வலு பெற்றதால் தங்கம் விலை குறைந்தது. நிறைய குறைந்து, சுத்த தங்கம் 16,000க்கும் குறைவான அளவுக்கும் வந்தது.



என்.டி.பி.சி., வெளியீடு : முதல் நாள் சந்தை துவங்கிய சிறிது நேரத்திலேயே 0.61 சதவீதம் பங்குகள் செலுத்தப்பட்டவுடன், சந்தையில் ஒரு பெரிய ஆரவாரம் இருந்தது; எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆதலால், சந்தையும் வேகமாக மேலே சென்றது. ஆனால், அடுத்த நாள் (வியாழன்) அதிகம் செலுத்தப்படவேயில்லை. வெள்ளியும் அப்படித்தான் இருந்தது. கடைசியாக 1.20 மடங்கு மட்டும் தான் செலுத்தப்பட்டிருந்தது. சிறிய முதலீட்டாளர்கள் பங்கு 0.16 மடங்கு தான் செலுத்தப்பட்டிருந்தது. ஊழியர்களின் பங்கு 0.46 சதவீதம் செலுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பங்கு வெளியீட்டை காப்பாற்றியது, அரசாங்க கம்பெனிகள் என்றால் மிகையாகாது. எல்..ஐ.சி., வங்கிகள் போன்றவை அதிக அளவில் செலுத்தியதால் தான் இந்த வெளியீடு காப்பாற்றப்பட்டது. இதை உணர்ந்து கொண்ட அரசாங்கம், வரும் அரசாங்க வெளியீடுகளில் விலை நிர்ணயிக்கும் போது, இன்னும் சகாயமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம் என்று கூறியிருக்கிறது. முதல் நாள் பவர்புல்லாக செலுத்தப்பட்டிருந்த இந்த பவர் பங்கு, அடுத்த நாள் பவர் ஆப் பங்காகியது. இருந்தாலும் கம்பெனியின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. பங்கின் விலை 200க்கும் கீழே போகும் பட்சத்தில் வாங்கி வையுங்கள். பின்னர் ஒவ்வொரும் சரிவிலும் வாங்குங்கள்.


அடுத்த வாரம் எப்படி இருக்கும் : சந்தை கிட்டத்தட்ட 1,500 புள்ளிகளுக்கும் மேல் இழந்திருக்கிறது. இது வாய்ப்பா, இல்லை சரிவின் தொடக்கமா என்று பலரும் ஆராய முற்பட்டிருக்கின்றனர். சரிவின் தொடக்கமாக இருந்தாலும், சந்தை சரிந்து சரிந்து தான் மேலே செல்லும். தொடர்ந்து மேலே செல்வது இயலாத காரியம்.

மார்ச் மாதத்திற்குள் 20 லட்சம் கிரெடிட் கார்டுகள் ரத்து
மும்பை : கடன் தவணை தவறுவதால் இழப்பு, வசூலிப்பதில் சிக்கல்கள் காரணமாக மார்ச் மாதத்துக்குள் 20 லட்சம் கிரெடிட் கார்டுகளை ரத்து செய்யும் பணியில் அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டு மார்ச் வரை நாடு முழுவதும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கை 2.47 கோடியாக இருந்தது. நிதி நெருக்கடியின் பாதிப்பு, வேலையிழப்பு, சம்பளம், சலுகைகள் குறைப்பு ஆகியவற்றால் கிரெடிட் கார்டில் கடன் பெற்ற பலர் தங்கள் தவணையை செலுத்துவதில்லை. நிலுவைத் தொகை வசூலிப்புக்கு வங்கிகள் பல நடவடிக்கைகளை எடுத்தன. தொடர்ந்து கிரெடிட் கார்டை பயன்படுத்தாதபடி தடை விதித்தன. எனினும், நிலுவையை வசூலிப்பதில் வெற்றி பெற முடியவில்லை. கடனை வசூலிக்க மிரட்டல் உட்பட சட்டவிரோத வழிகளைக் கையாள ரிசர்வ் வங்கியும், உச்ச நீதிமன்றமும் தடை விதித்ததைத் தொடர்ந்து, வங்கிகளின் வராக் கடன் அதிகரித்தது.
சட்டரீதியான நடவடிக்கைகள் மூலம் கடனை வசூலிப்பதில் கால தாமதமும், செலவும் அதிகம் என்பதால் வங்கிகள் சிக்கலில் சிக்கிக் கொண்டன. இதுபோன்ற பிரச்னைக்கு உள்ளான கிரெடிட் கார்டுகள், குறைந்த வருவாய் பிரிவினருக்கு அளித்த கார்டுகளை ரத்து செய்யும் பணியை கடந்த ஏப்ரலில் தொடங்கின. வருகிற மார்ச் மாதத்துக்குள் 20 லட்சம் கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய வங்கிகள் இலக்கு வைத்துள்ளன. இதனால், ஏப்ரலுக்குப் பிறகு கிரெடிட் கார்டுகள் எண்ணிக்கை 2.27 கோடியாக குறையும். ஐசிஐசிஐ வங்கி மட்டும் சுமார் 15 லட்சம் கிரெடிட் கார்டுகளை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், அதன் கிரெடிட் கார்டு எண்ணிக்கை 70 லட்சத்தில் இருந்து 55 லட்சமாகிறது. மாறாக டெபிட் கார்டு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜி.ஐ.சி., லாபம் 54 சதவீதம் அதிகரிப்பு
மும்பை: ஜி.ஐ.சி., வீட்டுக் கடனுதவி வழங்கும் நிறுவனத்தின், டிசம்பருடன் முடிந்த காலாண்டிற்கான வரிக்கு பிந்தை லாபம், 54 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: ஜி.ஐ.சி., வீட்டுக் கடனுதவி வழங்கும் நிறுவனத்தின், டிசம்பருடன் முடிந்த காலாண்டிற்கான வரிக்கு பிந்தைய லாபம், 15.50 கோடி ரூபாய். அதற்கு முந்தைய ஆண்டு, இதே காலகட்டத்தில், வரிக்கு பிந்தை லாபம், 10.04 கோடி ரூபாயாக இருந்தது. கடந்த டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த ஒன்பது மாதங்களுக்கான வரிக்கு பிந்தைய லாபம், 49.51 கோடி ரூபாய். அதற்கு முந்தைய ஆண்டான 2008ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி யுடன் முடிந்த ஆண்டிற்கான வரிக்கு பிந்தை லாபம் 40.05 கோடி ரூபாய். கடந்த 2008ம் ஆண்டு, டிசம்பர் 31ம் தேதி யுடன் முடிந்த காலத்திற்கான நிகர லாபம், 24 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த காலத்திற்கான, இந்நிறுவனத்தின் போதுமான முதலீட்டு வீதம், 19.23 சதவீதம். கடந்த டிசம்பருடன் முடிந்த காலாண்டில், இந்நிறுவனம், 183 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளது. இந்நிறுவனம், தன் புளோட்டிங் வட்டி வீதத்திட்டத்தின் கீழ், ஒரு ஆண்டிற்கு 7.95 சதவீதம் நிலையான வட்டியில் புதிய கடன்கள் வழங்க உள்ளன.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மினி லாரி 'மேக்சிமோ' விலை ரூ. 2.79 லட்சம்
மும்பை: இந்தியாவில், சிறிய வர்த்தக வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும், மகேந்திரா அண்ட் மகேந்திரா லிமிடெட் நிறுவனம், மினி லாரியான, 'மேக்சிமோ' 2.79 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும் என அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: டில்லியில் நடந்த, 10வது ஆட்டோ கண்காட்சியில், மகேந்திரா நிறுவனத்தின் மினி லாரியான, மேக்சிமோ காட்சிக்கு வைக்கப்பட்டது. 'மேக்சிமோ' மினி லாரி, இரண்டு சிலிண்டர் சி.ஆர்.டி.இ., இன்ஜின் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. 'மேக்சிமோ' மினிலாரி, நவி மும்பையில் அமைந்துள்ள ஷோரூமை தவிர, பிற பகுதிகளில், 2.79 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும். மேலும், இதற்கு ஒரு ஆண்டு, இலவச பராமரிப்பும் வழங்கப்படுகிறது. இந்த மினி லாரி, வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதோடு, சிறியளவிலான சரக்குப் போக்குவரத்துக்கு ஏற்றது. மேக்சிமோ, பல்வேறு விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதன் செயல்பாடு, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளது. 'மேக்சிமோ' மினிலாரி, இம்மாதம், சில குறிப்பிட்ட சந்தைகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன் பின், படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளில் அறிமுகப்படுத்தப்படும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக