ட்வீட்டரில் ஹைக்கூ ஸ்டைலில் ராஜினாமா... இது சன் சிஇஓவின் ஸ்டைல்!

வியாழன், 4 பிப்ரவரி, 2010

நியூயார்க்: எத்தனையோ ராஜினாமாக்களைக் கேள்விப்படிருப்பீர்கள்... ஆனால் சன் மைக்ரோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஜோனதன் ஷ்வார்ட்ஸ் ராஜினாமா செய்த விதம் உண்மையிலேயே வித்தியாசமானது.

தனது ராஜினாமாவை அவர் குறுஞ்செய்திகள் பரிமாறிக் கொள்ளப் பயன்படும் ட்வீட்டரில் அனுப்பி வைத்துள்ளார்.

அதுவும் ஒரு ஹைக்கூ ஸ்டைலில் இதனை அனுப்பியுள்ளார்:

இன்றுதான் சன்-னில் எனக்கு கடைசி நாள்.. இனி இதனை இழந்துவிடுவேன். ஒரு ஹைக்கூவுடன் முடித்துக் கொள்ளவே இது பொருத்தமானது.

''நிதி நெருக்கடி/நிறைய வாடிக்கையாளர்கள்/சிஇஓ இல்லை..." என்று முடித்துள்ளார் அவர்.

சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தை சமீபத்தில்தான் ஆரக்கிள் நிறுவனம் கையகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, சன் சிஇஓவின் விலகலை எதிர்பார்ப்பதாக ஆரக்கிள் தலைவர் லாரி எல்லிசன் கூறியிருந்தார். அதற்கு முன்பே தான் விலகப் போவதாக ஷ்வார்ஸும் தெரிவித்திருந்தார்.

ஃபார்ச்சூன் 200 பட்டியலில் இடம்பெற்ற சிஇஓக்களிலேயே இந்த ஸ்டைலில் விடைபெற்றவர் ஷ்வார்ட்ஸ் மட்டும்தான்.

டாப் பெண் சிஇஓ: இந்திரா நூயிக்கு 4 வது இடம்

வாஷிங்டன்: உலகின் டாப் 15 பெண் சிஇஓக்களில் இந்தியா வில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலான இந்திரா நூயிக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் டாப் பிராண்டான பெப்ஸிகோவின் தலைமைச் செயல் அலுவலர் இவர். அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான பார்ச்சூன் 500 இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.





உணவுப் பொருட்கள் பணவீக்கம் 17.56 சதவீதம் உயர்வு

புதுடில்லி : உணவுப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஜனவரி 23ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் உணவுப் பொருட்களின் பணவீக்க விகிதம் 17.56 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்கம் 17.40 சதவீதமாக இருந்தது. தற்போது கணக்கிடப்பட்டுள்ள வாரத்தில் உருளைகிழங்கு விலை 44.91 சதவீதமும், சிறு தானியங்களின் விலை 44.43 சதவீதமும் அதிகரித்துள்ளது.
அதே நேரத்தில் மிக அத்யாவசிய பொருட்களின் பணவீக்கம் சிறிது குறைந்துள்ளது. இது முந்தைய வாரத்தில் 14.66 சதவீதமாக இருந்தது. தற்போது கணக்கிடப்பட்டுள்ள வாரத்தில் 14.56 சதவீதமாக குறைந்துள்ளது. ஜனவரி 23ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் தேயிலை 5 சதவீதமும், துவரம் பருப்பு 3 சதவீதமும், உளுந்து, பழங்கள்,காய்கறி, ராகி, முட்டை ஆகியவற்றின் விலை தலா 1 சதவீதம் குறைந்திருந்தது.

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் வேலை வாய்ப்புக்கள்
டில்லி: இந்தியாவில் மீண்டும் புதிய பணியாளர் நியமனங்கள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன. சமீபத்திய கணக்கெடுப்பின்படி 71 சதவீத நிறுவனங்கள் பெரும் அளவில் வேலைக்கு ஆட்களை நியமிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன. அன்டால் என்ற வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அறிக்கையின்படி, வருகிற காலாண்டில் மட்டும் 30 நாடுகளைச் சேர்ந்த 6000 பெரிய நிறுவனங்களில் மீண்டும் வேலைவாய்ப்பு நடவடிக்கைகள் வேகம் பிடித்துள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை 71 சதவீத நிறுவனங்கள் மீண்டும் தங்கள் மனித வளத்தை உயர்த்துவதில் மும்முரம் காட்டுகின்றன.

மிகவும் பின் தங்கிய நாடு எனக் கருதப்பட்ட நைஜீரியாவில் இந்தியாவை விட அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இங்கு 79 சதவீத நிறுவனங்கள் புதிய பணியாளர்களை நியமிக்கும் வேலையில் இறங்கியுள்ளன. சீனாவிலும், பாகிஸ்தானிலும் 70 சதவீதத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்பு வளர்ச்சி காணப்படுகிறது.

குறிப்பாக ஆட்டோமொபைல், ஐடி, பார்மாசூடிகல்ஸ் துறையில்தான் பெருமளவில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளன என்கிறது அன்டால் இன்டர்நேஷனல் அமைப்பு.




லண்டன் நிதித்துறையில் 48 ஆயிரம் பேர் வேலையிழப்பு
லண்டன் : கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் லண்டனில் 17000 மூத்த நிதித்துறை அலுவலர்கள் உட்பட 48000 பேர் பதவி இழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள முன்னணி நிதி நிறுவனங்களில் இருந்த மூத்த அதிகாரிகளில் 10 சதவீதத்தினர் அதாவது 17000 பேர், இன்சால்வென்ஸி, விஆர்எஸ் போன்ற பல்வேறு காரணங்களால் வேலை இழந்திருக்கிறார்கள்.

இந்த எண்ணிக்கை தனிப்பட்ட நபர்களைச் சார்ந்து இயங்கும் நிறுவனங்களின் அடிப்படையில் தரப்பட்டுள்ளதாகவும், பெரும் நிறுவனங்களில் பதவி இழந்த பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. நிதித் துறையில் மட்டுமே இந்த இரு ஆண்டுகளில் 48000 அதிகாரிகள் வேலை இழந்துள்ளனர். அதே நேரம், பிரிட்டனில் இன்னும் பொருளாதார மீட்சிக்கான அறிகுறி தெரியவில்லை என ஐஎம்ஏஎஸ் கார்ப்பரேட் அட்வைஸர்ஸ் தெரிவித்துள்ளது

தனிநபர் குத்தகைக்கு வரும் பிஎம்டபிள்யூ கார்கள்
புதுடில்லி: சொகுசு கார் வாங்க முடியாதவர்கள் அதை குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு குத்தகை எடுக்கும் புதிய வசதியை பி.எம்.டபிள்யூ., நிறுவனம் அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டில் 3,619 பிஎம்டபிள்யூ சொகுசு கார்கள் விற்பனையாகின. அதன் போட்டி நிறுவனமான மெர்சிடஸ் பென்ஸ் 3,247 கார்களை விற்றது. விற்பனையில் பென்சை முந்திய பிஎம்டபிள்யூ கார்களுக்கு இந்தியர்களிடம் அதிக ஆதரவு இருந்தும், விலை காரணமாக வாங்க முடியாத நிலை இருப்பதாக அந்நிறுவனத்தின் இந்திய பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் கம்பெனிகளுக்கு தனது கார்களை குத்தகைக்கு விடுவதுபோல, தனி நபர்களுக்கும் குத்தகைக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது.
இதுபற்றி பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவன தலைவர் பீட்டர் கோன்ஸ்சபி கூறியதாவது : இந்தியாவில் 3 ஆண்டுகள் செயல்பட்டதில் எங்கள் காருக்கு அதிக ஆதரவு இருப்பது தெரிகிறது; இருப்பினும் ஷோரூம் விலை அதிகமாக இருப்பதாக வாங்க தயங்குகின்றனர்; எங்கள் காரை அனுபவிக்கும் வசதியை தனிநபர்களுக்கும் அளிக்க திட்டமிட்டுள்ளோம்; இதன்படி வர்த்தக பயனுக்கு குத்தகைக்கு விடுவது போல குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு தனிநபர்களும் காரைப் பெறும் வசதியை அளிக்க உள்ளோம். இவ்வாறு அவற் தெரிவித்தார். குத்தகை காலம் முடிந்ததும் கார் திரும்பப் பெறப்படும். அந்தக் கார்கள் பழைய கார்களின் சந்தையில் விற்கப்படும் என்றும் பீட்டர் தெரிவித்துள்ளார்

சுசூகி மோட்டார் சைக்கிள் 93 சதவீத வளர்ச்சி கண்டது
புதுடில்லி: இரண்டு சக்கர வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கடந்த மாதம், 93 சதவீதம் வளர்ச்சியுடன் விற்பனையை துவக்கி உள்ளது. சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், கடந்த மாதம் 20 ஆயிரத்து 441 வாகனங்கள் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 93 சதவீதம் வளர்ச்சியை, இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.

இந்நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்த, ஜி.எஸ்.150 ஆர் மற்றும் அக்சஸ் 125 ஆகிய இரண்டு வகை ஸ்கூட்டர்களுக்கு கிடைத்த அமோக வரவேற்பே, விற்பனை அதிகரிப்பிற்கு காரணமாக கருதப்படுகிறது. சுசூகி மோட்டார் சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் துறை துணைத் தலைவர் அதுல் குப்தா கூறுகையில், 'சுசூகி நிறுவனம், வருங்காலத்திற்கு என, பெரிய திட்டங்களை வைத்துள்ளது. இது ஒரு துவக்கமே. தரமான தயாரிப்புகளை வழங்குவது மற்றும் வாடிக்கையாளர் திருப்தி ஆகியவை, எங்கள் நிறுவனத்தின் நோக்கம்' என்றார்.




சிறிய நிறுவனங்களின் கடும் போட்டியால்
சலவைத் தூள் மற்றும் சோப்பு வகைகளின் விலை குறைகிறது


கிரண் காப்தா சோம்வான்ஷி இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
நுகர்பொருள் துறையில், மண்டல அளவில் செயல்பட்டு வரும் சிறிய நிறுவனங்களின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. தேசிய அளவில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இந்நிறுவனங்கள் நுகர்பொருள்களை குறைந்த விலையில் விற்பனை செய்கின்றன. இது, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு சவாலாக அமைந்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில், தேசிய அளவில் செயல்பட்டு வரும் இந்நிறுவனங்கள் நுகர்பொருள்களின், குறிப்பாக சலவைத் தூள் மற்றும் சோப்பு ஆகியவற்றின் விலையை குறைத்துள்ளன.
இந்துஸ்தான் யூனிலீவர்
உதாரணமாக, இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், 200 கிராம் சர்ஃப் எக்செல் புளு விலையை ரூ.25&லிருந்து ரூ.23&ஆக குறைத்துள்ளது. 500 கிராம் சர்ஃப் எக்செல் புளு பவுடரின் விலையை ரூ.7 குறைத்துள்ளது. இதனையடுத்து, இதன் விலை ரூ.55&ஆக குறைந்துள்ளது.
தற்போதுள்ள நிலையில், சலவைத் தூள் மற்றும் சோப்பு வர்த்தகத்தில் இந்துஸ்தான் யூனி லீவர் நிறுவனம் முன்னணியில் உள்ளது. சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் சலவைத் தூள் மற்றும் சலவை சோப்பு ஆகியவற்றின் பங்களிப்பு, முந்தைய காலாண்டைக் காட்டிலும் அளவின் அடிப்படையில் முறையே 1 சதவீதம் மற்றும் 0.60 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. அதேசமயம், மதிப்பின் அடிப்படையில் இந்நிறுவனத்தின் சலவை சோப்பு மற்றும் சலவை பவுடர் ஆகியவற்றின் மொத்த பங்களிப்பு 35 சதவீதத்திலிருந்து 34.60 சதவீதமாக குறைந்துள்ளது. இவ்வாறு பங்களிப்பு குறைந்து வருவதால், இந்நிறுவனம் விலை குறைப்பு நடவடிக்கைளில் இறங்கி உள்ளது.
வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் ரூ.10&க்கு விற்பனை செய்யப்படும் ரின் பவுடரின் எடையை இந்நிறுவனம் 150 கிராமிலிருந்து 200 கிராமாக உயர்த்தி உள்ளது. மேலும், ஒரு கிலோ ரின் பவுடர் விலை ரூ.70&லிருந்து ரூ.50&ஆக குறைக்கப்பட்டுள்ளது.
காரி நிறுவனம்
அதேசமயம், மண்டல அளவில் செயல்படும் ÔகாரிÕ நிறுவனத்தின் ஒரு கிலோ ÔகாரிÕ டிடர்ஜென்ட் பவுடர் விலை ரூ.30 என்ற அளவில் மிகவும் குறைவாக உள்ளது. கான்பூரைச் சேர்ந்த காரி குழும நிறுவனம், ஆண்டுக்கு ரூ.1,600 கோடி விற்றுமுதல் ஈட்டி வருகிறது. இந்நிறுவனத்தின் காரி டிடர்ஜென்ட் பவுடர் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. விற்பனையில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. மொத்த சலவைத் தூள் விற்பனையில் ÔகாரிÕ பிராண்டின் பங்களிப்பு 16 சதவீதமாக உள்ளது. சென்ற நிதி ஆண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் 26 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், லாபம் 170 சதவீதம் உயர்ந்துள்ளது.
பாரஸ் பார்மா
அகமதாபாத்தைச் சேர்ந்த, மண்டல அளவில் செயல்பட்டு வரும் பாரஸ் பார்மா நிறுவனத்தின், மூவ், கிராக், டீ&கோல்டு, டெர்மிகூல் போன்ற பிராண்டுகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன. இந்நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு 15 சதவீதம் அதிகரித்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டில் இது 25 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிறுவனத்தின் டெர்மிகூல் பிராண்டு, விற்பனையில் முதலிடத்தில் உள்ளது
ஆக, ஆண்டுக்கு ரூ.85,000 கோடி விற்றுமுதல் ஈட்டி வரும் நுகர்பொருள் வர்த்தகத் துறையில் சிறிய நிறுவனங்கள் அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. இது, இந்துஸ்தான் யூனி லீவர், புராக்டர்&கேம்பிள் மற்றும் நெஸ்லே ஆகிய நிறுவனங்களுக்கு ஒரு அறைகூவலாக அமைந்துள்ளது.
கோத்ரேஜ் கன்ஸ்யூமர்
இது குறித்து கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் குழும இயக்குனர் (நுகர்பொருள் வர்த்தகம்) ஏ.மகேந்திரன் கூறும்போது, Òசிறிய நிறுவனங்களுக்கு செயல்பாட்டு செலவினம் குறைவாக உள்ளது. இதனால், இந்நிறுவனங்களால் விநியோகஸ்தர்களுக்கு அதிக கமிஷன் வழங்க முடிகிறதுÓ என்று தெரிவித்தார்.
நுகர்பொருள் துறையில் சிறிய நிறுவனங்களின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், குறிப்பாக சலவை தூள் மற்றும் சலவை சோப்பு வணிகத்தில் ஈடுபட்டு வரும் பெரிய நிறுவனங்களுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், நுகர்வோர்களுக்கு தரமுள்ள பொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கும். இந்த சிறிய நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்கத் திட்டங்களுக்கு தேவைப்படும் நிதியைத் திரட்டுவதற்காக, பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிடவும் திட்டமிட்டுள்ளன என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


மோட்டார் வாகன துறையில் எழுச்சி உருக்குப் பொருள்கள் விற்பனை 30% உயர்வு


பிரமுக்தா மாம்கெயின்

புதுடெல்லி

உள்நாட்டில் மோட்டார் வாகனங்கள், நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் விறுவிறுப்பு ஏற்பட்டு வருகிறது. கட்டுமானப் பணிகளும் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ஜே.எஸ்.டபிள்யூ., எஸ்ஸார் மற்றும் இஸ்பத் உள்ளிட்ட முன்னணி உருக்கு நிறுவனங்களின் உருக்கு பொருள்கள் விற்பனை 30 சதவீதம் உயர்ந்துள்ளது.
இஸ்பத் இண்டஸ்ட்ரீஸ்
நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் இஸ்பத் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 2.50 லட்சம் டன் உருக்கு பொருள்களை விற்பனை செய்துள்ளது. இது, சென்ற ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 30 சதவீதம் அதிகமாகும்.
இது குறித்து இஸ்பத் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனர் (நிதி) அனில் சுரேகா கூறும்போது, Òகார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் மற்றும் தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட நுகர்வோர் சாதனங்கள் விற்பனையில் மீண்டும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இவற்றை தயாரிக்க, உருக்கு தகடுகள் முக்கிய மூலப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. உருக்கு பொருள்கள் விற்பனை அதிகரித்து வருவதற்கு இதுவே முக்கிய காரணமாகும்Ó என்று தெரிவித்தார்.
பயன்பாடு
சென்ற 2008&ஆம் ஆண்டில், உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவால், அவ்வாண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் முன்னணி உருக்கு நிறுவனங்கள், உருக்கு உற்பத்தியை குறைத்தன. தற்போது பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தால், உருக்கு பயன்பாடு அதிகரித்து வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இந்தியாவில் உருக்கு பயன்பாடு 8 சதவீதம் அதிகரித்துள்ளது.
உருக்கு பொருள்கள் விற்பனை உயர்ந்து வருவதையடுத்து, உள்நாட்டிலுள்ள உருக்கு நிறுவனங்கள் ஒரு டன் உருக்கு விலையை சென்ற ஜனவரி மாதத்தில் ரூ.2,000 உயர்த்தி, ரூ.26,000&35,000&ஆக அதிகரித்துள்ளன.
பொதுத் துறையைச் சேர்ந்த Ôசெயில்Õ நிறுவனம், ஒரு டன் உருக்கு தகடுகளின் விலையை ரூ.500 உயர்த்தி உள்ளது. இது, இம்மாதம் 1&ந் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், உருக்கு உற்பத்தி மற்றும் பயன்பாட்டில், உலக அளவில் முதலிடத்தில் உள்ள சீனாவில், சென்ற 2009&ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து நடப்பு ஆண்டு ஜனவரி மாதம் இறுதி வாரம் வரை உருக்கு பொருள்கள் விலை 20 சதவீதம் உயர்ந்து இருந்தது. ஆனால், கடந்த ஒரு சில தினங்களாக சீனாவில் உருக்கு பொருள்களின் விலை குறைந்து வருகிறது.

என்.டி.பி.சி. நிறுவனம் பங்கு வெளியீட்டிற்கு அமோக ஆதரவு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பொதுத் துறையை சேர்ந்த என்.டி.பி.சி. நிறுவனம், மின் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்தது. இதனையடுத்து, இந்நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீடு புதன்கிழமை அன்று தொடங்கியது. பங்கு வெளியீடு தொடங்கிய 2 மணி நேரத்தில், இதன் பங்குகள் வேண்டி 61 சதவீத அளவிற்கு விண்ணப்பங்கள் வந்தன.
உற்பத்தி திறன்
என்.டி.பி.சி. நிறுவனம், தற்பொழுது 31,134 மெகாவாட் உற்பத்தி திறனில் மின் உற்பத்தி செய்து வருகிறது. வரும் 2012&ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கூடுதலாக 22,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.
மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 5 சதவீத பங்குகளை வெளியிடுவதன் மூலம் முதலில் ரூ.11,000 கோடியை திரட்ட திட்டமிட்டிருந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு சில வாரங்களாக, நாட்டின் பங்கு வர்த்தகத்தில் சுணக்கம் ஏற்பட்டது. இதனால், சென்ற திங்கள்கிழமை அன்று நடைபெற்ற பங்கு வர்த்தகத்தில் நிலவிய, என்.டி.பி.சி. நிறுவனத்தின் பங்கின் விலையிலிருந்து 5 சதவீதம் குறைத்து, பங்கு வெளியீட்டு விலையை ரூ.201&ஆக நிர்ணயித்தது. பங்கு ஒன்று ரூ.201 என்ற விலையில் விற்கும் நிலையில், இப்பங்கு வெளியீட்டின் மூலம் (41.22 கோடி பங்குகள்) மத்திய அரசுக்கு ரூ.8,286 கோடி கிடைக்கும் என சந்தை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
முதல் பங்கு வெளியீடு
இந்நிறுவனம், இதற்கும் முன்பாக கடந்த 2004&ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதல் முறையாக பங்கு வெளியீட்டை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
என்.டி.பி.சி. நிறுவனத்தின் தற்போதைய இரண்டாவது பங்கு வெளியீடு 5&ந் தேதியுடன் நிறைவடைகிறது.

தோஷிபா&ஜே.எஸ்.டபிள்யூ. வட சென்னையில் ரூ.700 கோடியில் தொழிற்சாலை

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
சென்னை
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தோஷிபா மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ. குழுமத்தின் கூட்டு நிறுவனமான தோஷிபா & ஜே.எஸ்.டபிள்யூ. டர்பைன் அண்டு ஜெனரேட்டர், சென்னை அருகே உருவாக்க உள்ள புதிய தொழிற்சாலையில் 16 கோடி டாலர் (சுமார் ரூ.700 கோடி) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு கட்டங்களில் இந்த முதலீடு மேற்கொள்ளப்படும் என தெரிகிறது. இத்தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
தோஷிபா & ஜே.எஸ்.டபிள்யூ. டர்பைன் அண்டு ஜெனரேட்டர் நிறுவனத்தில் தோஷிபா நிறுவனம் 75 சதவீத பங்கு மூலதனத்தையும், ஜே.எஸ்.டபிள்யூ. குழுமம் 25 சதவீத பங்கு மூலதனத்தையும் கொண்டுள்ளது. மின் உற்பத்திக்கு தேவையான உயர்தொழில்நுட்ப டர்பைன்கள் மற்றும் ஜெனரேட்டர்களை தயாரிக்கும் வகையில் இந்த கூட்டு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி பிரிவு
சென்னைக்கு வடக்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்படவுள்ள இந்த உற்பத்தி பிரிவில், 500 மெகா வாட்டிலிருந்து 1,000 மெகா வாட் வரை மின் உற்பத்தி திறன் கொண்ட நடுத்தர மற்றும் பெரிய அளவிலான டர்பைன்கள் மற்றும் ஜெனரேட்டர்கள் தயாரிக்கப்பட உள்ளன. 2011&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஆலை செயல்பாட்டுக்கு வர உள்ளது.
2014&ஆம் ஆண்டுக்குள், மேலும் அதிக மின் உற்பத்தி திறன் கொண்ட நீராவி டர்பைன் ஜெனரேட்டர்களை தயாரிக்கும் திறனை இந்நிறுவனம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாண்டுக்குள், இவ்வகை சாதனங்கள் விற்பனை வாயிலாக 40 கோடி டாலர் வருவாய் ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் இதாரு இஷிபாஷி தெரிவித்தார்.

அன்னிய நிதி நிறுவனங்கள் ரூ.7,000 கோடிக்கு பங்குகள் விற்பனை

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
அன்னிய நிதி நிறுவனங்கள், சென்ற ஒரு வார காலத்தில், இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.7,000 கோடி நிகர மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளன. இது, கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் அதிகமாகும்.
நான்கு வர்த்தக தினங்கள்
சென்ற வாரத்தில், நான்கு வர்த்தக தினங்களில், இந்நிறுவனங்கள், இந்தியாவில் பங்கு வர்த்தகத்தில் மேற்கொண்ட முதலீட்டிலிருந்து ரூ.7,043.50 கோடியை விலக்கி கொண்டுள்ளன என பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕ வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 22&ந் தேதி வரையிலான வாரத்தில், இந்நிறுவனங்கள் ரூ.1,648.50 கோடி நிகர மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்திருந்தன. உலகின் பல நாடுகளில் பங்கு வர்த்தகம் சுணக்கமாக இருந்ததையடுத்து, இந்நிறுவனங்கள் லாப நோக்கம் கருதி பங்குகளை அதிக அளவில் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.
ரூ.58,130 கோடி
சென்ற ஜனவரி மாதத்தில் மட்டும், இந்நிறுவனங்கள் நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டிலிருந்து மொத்தம் ரூ.58,630.60 கோடியை விலக்கிக் கொண்டுள்ளன. அதேசமயம், இம்மாதத்தில் ரூ.58,130.30 கோடி மதிப்பிற்கு பங்குகளில் முதலீடு செய்திருந்தன. ஆக, சென்ற ஜனவரி மாதத்தில் மட்டும், இந்நிறுவனங்களின் நிகர பங்கு விற்பனை ரூ.500.30 கோடி என்ற அளவில் இருந்தது.
சென்ற ஜனவரி மாதத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் மொத்தம் 1,106.85 புள்ளிகளை இழந்துள்ளது.