பொளாதார நெருக்கடி காலம் முடிந்தது : ஒபாமா

சனி, 30 ஜனவரி, 2010

வாஷிங்டன் : 2010ம் ஆண்டு தொடங்கியுள்ளதை முன்னிட்டு அமெரிக்க அ‌திபர் ஒபாமா தேசிய உரை ஆற்றினார். அப்போது அவர் பொருளாதார நெருக்கடி காலம் முடிந்து விட்டது என பெருமிதம் தெரிவித்தார். பொருளாதார நெருக்கடி நீங்கி விட்டாலும், அது ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை சமாளிக்கும் பணி தொடரும் என்றார்.
மேலும், அவுட் சோர்சிங் தொழிலுக்கு அமெரிக்க அரசு இதுவரை அளித்து வந்த வரிவிலக்கு ரத்தாகிறது என்றார். இதனால், அவுட் சேர்சிங் எனப்படும் கால் சென்டர்களில் பணியாற்றும் லட்சக்கணக்கான இளைஞர்கள் கலக்கத்தில் உள்ளனர். அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்களுக்கு தான் இனி வரி சலுகை என ஒபாமா தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவது தான் அரசின் முழுமுதற் கொள்கை என ஒபாமா தெரிவிக்க கூட்டத்தில் கைதட்டல் பலமாக ஒலித்தது. எதிர்கட்சிகளால் சரமாரியாக விமர்சிக்கப்பட்டு வரும் மருத்துவ காப்பீட்டு திட்டம் நிச்சயம் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும் என்றார்.

வங்கி இல்லா கிராமங்களில் சேவை செய்ய வங்கி முகவர்கள்

புதுச்சேரி: வங்கி இல்லாத ஊர்களிலும் வங்கிச் சேவையை வழங்கும் நோக்குடன் இந்தியன் வங்கி சார்பில் ஸ்மார்ட் கார்டு என்ற மின்னணு அட்டை புதன்கிழமை அறிமுகம் செய்யப்பட்டது. நாட்டிலேயே முதன் முதலாக புதுச்சேரியில் உள்ள செட்டிப்பட்டு கிராமத்தில் முகவர்கள் மூலம் வங்கிச் சேவை வழங்கும் இத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்ப உதவி அளித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் செயல் இயக்குநர் வி.எஸ்.தாஸ் இந்த ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். விழாவில் அவர் பேசுகையில், 'வங்கி வசதியற்ற, வங்கி குறைவான பகுதிகளில் வங்கித் தொடர்பாளர் என்கிற முகவர்களுக்கு இந்தியன் வங்கி அனுமதி அளிக்கும். இவர்கள் வங்கியின் சிறிய அளவிலான பணப் பரிவர்த்தனைக்கான அதிகாரம் பெற்ற பிரதிநிதிகளாக செயல்படுவர். அந்தப் பகுதிகளில் உள்ள சுய உதவிக் குழுக்கள், மளிகைக் கடைகள், ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்கள், பொது தொலைபேசி நிலையங்கள், பெட்ரோல் பங்குகள் போன்றவை வங்கித் தொடர்பாளர்களாக பணியாற்றலாம். வங்கித் தொடர்பாளர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வங்கிச் சேவை வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டை பயன்படுத்துவதற்கான கருவியை வங்கித் தொடர்பாளர் வைத்திருப்பார். இக்கருவி மூலம் முகவரிடமே பணம் செலுத்தலாம், பெறலாம். பணம் பெறும்போதும், செலுத்தும் போதும் உடனடியாக ரசீது வழங்கப்படும். அப்போது எவ்வளவு பணம் எடுக்கப்பட்டது மற்றும் செலுத்தப்பட்டது என்று கருவியில் குரல் ஒலிக்கும். இதனால் வாடிக்கையாளரை வங்கித் தொடர்பாளர்கள் ஏமாற்ற வாய்ப்பில்லை. எல்லா பணப் பரிமாற்றமும் இணையம் சார்ந்து இருப்பதால், அவை உடனடியாக வாடிக்கையாளர் கணக்குகளில் பதிவு செய்யப்படுகிறது. வங்கி கிளைகளிலும் இந்த கார்டைப் பயன்படுத்தலாம். பாமர மக்கள், சிறிய அளவிலான தொகையை பாதுகாப்பாக செலுத்தி, எடுக்க விரல்பதிவு முறையில் இந்த சேவை இயக்கும். வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு அருகிலேயே இந்த சேவை கிடைக்கும். அவர்கள் நேரத்தையும், பணத்தையும் செலவிட்டு வங்கிக் கிளைகளுக்கு செல்லவேண்டியதில்லை' என்றார்.

பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி அதிரடி
மும்பை:பணவீக்கத்தை கட்டுப் படுத்தும் நடவடிக்கையாக, கட்டாய ரொக்க கையிருப்பு வீதத்தை, ரிசர்வ் வங்கி 75 புள்ளிகள் அதிகரித்துள்ளது. நிதிக் கொள்கைகள் குறித்து, இந்திய ரிசர்வ் வங்கி சார்பில் வெளியிடப்பட்ட செய்தி: குறுகிய கால கடன்கள் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியில் இருந்து, பிற வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி வீதத்தில் மாற்றமில்லை. இந்த நிதியாண்டில், 5 சதவீதமாக இருக்கும் என கணக்கிடப்பட்ட நாட்டின் பொருளாதார வளர்ச்சி, தற்போது, 7.5 சதவீதமாக இருக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. கட்டாய ரொக்க கையிருப்பு வீதத்தை, 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருப்பதன் மூலம், அதிகப்படியான பணப்புழக்கம் கட்டுப் படுத்தப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது. உணவுப் பொருட்கள் பணவீக்கம், பிற துறைகளுக்கு பரவுவதை கட்டுப் படுத்தவே, இத்தகைய நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இந்த நிதியாண்டின் இறுதியில் பணவீக்கம், 8.5 சதவீதத்தை எட்டும் என, கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6க்கு குட்பை சொல்கிறது கூகுள்!
இந்த ஆண்டுக்குள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6 (ஐஇ-6) பிரவுசருக்கு குட்பை சொல்கிறது கூகுள். இனி வரும் காலங்களில் ஐ.இ 7, பயர்பாக்ஸ் 3, கூகுள் குரோம் 4, சபாரி 3 மற்றும் அதன் மேம்பட்ட பிரவுசர்கள் மட்டுமே கூகுள் இணையதளங்களின் பிரவுசராக தொடருமாம்.

இதுகுறித்து கூகுள் அப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இணையதள பிரவுசர் தொழில்நுட்பத்தின் சிறந்த அம்சங்களையும், செயல்பாட்டையும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வகையில் பல்வேறு மாற்றங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

அதி நவீன பிரவுசர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வகையில் குறிப்பாக அதி விரைவு ஜாவா ஸ்கிரிப்ட் பிராசசர் மற்றும் எச்டிஎம்எல்5 ஆகியவை உள்ளடக்கிய அம்சங்களுக்கு ஊக்கமளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே இந்த ஆண்டுக்குள் ஐ.இ 6 பிரவுசர் கூகுள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்படும். அதேபோல இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பழைய வெர்சன்களும் கூட படிப்படியாக கைவிடப்படும். இதனால் இந்த பிரவுசர்களில் கூகுள் தளங்களை சரியாக பார்க்கவோ, 'இன்டர்ஆக்ட்' செய்வதோ முடியாது.

2010ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல் கூகுள் டாக்குமென்ட் மற்றும் கூகுள் இணையதளங்கள் இந்த பிரவுசர்கள் செயல்படாது. இந்தக் கால கட்டத்திற்குப் பின்னர் மேற்கண்ட பிரவுசர்களில் கூகுள் இணையதளங்கள் சரிவர செயல்படாது.

இந்த ஆண்டின் பிற் பகுதியில், கூகுள் மெயில் மற்றும் கூகுள் காலண்டர் ஆகியவற்றுக்கும் இந்த பிரவுசர்கள் செயல்படாது.

அதே சமயம், ஐ.இ 7, பயர்பாக்ஸ் 3, கூகுள் குரோம் 4, சபாரி 3 மற்றும் அதன் மேம்பட்ட பிரவுசர்கள் மட்டுமே கூகுள் இணையதளங்களின் பிரவுசராக தொடர்ந்து செயல்படும்.

அடுத்த வாரம் முதல் பழைய பிரவுசர்களை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் டாக்குமென்ட் மற்றும் கூகுள் இணையதளங்களில் ஒரு செய்தி வெளியாகும். அதில், மேம்பட்ட வெர்சன்களுக்கு மாறிக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படும். மேலும் மார்ச் 1ம் தேதிக்கு முன்பும் ஒரு ரிமைன்டர் கொடுக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலக தற்காலிகப் பணியிடங்கள் ரத்தாகிறது
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிகப் பணியிடங்கள் ரத்தாகும் எனக் கூறப்படுகிறது.

தலைமைச் செயலகத்தில் 34 அரசுத் துறைகள் செயல்பட்டு வருகின்றன. அரசின் முக்கிய உத்தரவுகள், அறிவிப்புகள் உள்ளிட்டவை இங்கிருந்து வெளியாகின்றன.

நிரந்தரப் பணியிடங்களுடன் குறிப்பிட்ட அளவு தாற்காலிகப் பணியிடங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அந்தப் பணியிடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கால நீட்டிப்பு வழங்கப்படும். அடுத்த ஆண்டு கால நீட்டிப்புக்கான உத்தரவு ஒவ்வொடு ஆண்டின் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும்.

கூடுதல் செயலாளர், இணைச் செயலாளர், துணைச் செயலாளர், சார்பு செயலாளர் என பல்வேறு நிலைகளில் இந்த தாற்காலிகப் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இந்தப் பணியிடங்களில் பணியாற்றுவார்கள். அவற்றில், 150-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இந்த ஆண்டு வழங்க வேண்டிய கால நீட்டிப்பு இதுவரை அளிக்கப்படவில்லை. இதனால், நடப்பாண்டில் இந்தப் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

கால நீட்டிப்பு வழங்கப்பட்டால் மட்டுமே தாற்காலிக பணியிடங்களுக்கு சம்பளம் அளிக்கப்படும். 150க்கும் மேற்பட்ட பணியிடங்களை நீட்டிக்காததால் அந்த இடங்களில் பணியாற்றுவோருக்கான ஜனவரி மாதச் சம்பளத்தை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தலைமைச் செயலக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே, ஜனவரி மாத சம்பளத்தை மட்டும் வழங்கக் கோரி சம்பளம் மற்றும் கணக்குகள் துறைக்கு பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை கடிதம் எழுதியுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனவரி மாதத்துக்கு மட்டும் சம்பளத்தை வழங்கக் கோரியுள்ளதால், பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படுமா என்பது சந்தேகம். அதற்குள் அந்தப் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டு விடலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்த நிலையில், சோனி எனப்படும் சார்பற்ற பிரிவு அலுவலர் பணியிடங்களை இந்த ஆண்டு நீட்டிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஊழியர்களிடையே எழுந்துள்ளது.

தாற்காலிகப் பணியிடங்கள் ரத்து செய்யப்படும் பட்சத்தில் சோனியை மீண்டும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

உதவிப் பிரிவு அலுவலர் நிலையில் இருந்து பிரிவு அலுவலர் பணியிடத்துக்கு பதவி உயர்வு அளிக்கப்படும்.

பதவி உயர்வு பட்டியலில் உள்ளதை விட, காலியிடங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்போது சார்பற்ற பிரிவு அலுவலர் என்ற நிலை பின்பற்றப்படும். இதன்படி, ஒவ்வொரு ஆண்டும் 100 பேர் பயன்பெற்று வந்தனர்.

கடந்த பல ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வந்தது. இந்த ஆண்டில் இதுவரை அதை நீட்டிப்பதற்கான உத்தரவை அரசு வெளியிடவில்லை. சார்பற்ற பிரிவு அலுவலர் பணியிடங்களை உடனடியாக வழங்கவும் தலைமைச் செயலக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மீண்டும் தள்ளிப் போகிறது 3 ஜி ஏலம்-அரசுக்கு ரூ.35,000 கோடி வருவாய் பாதிப்பு!
இந்த நிதியாண்டில் மத்திய அரசுரக்கு வரவேண்டிய ரூ.35,000 கோடி தள்ளிப் போயிருக்கிறது... காரணம் 3 ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் உரிய காலத்தில் நடக்காததுதான்!

இந்த மாதம், அடுத்த மாதம் என தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வந்தது 3 ஜி எனப்படும் அடுத்த தலைமுறைக்கான தொலைபேசி அலைக்கற்றை ஏலம்.

இந்த ஏலம் எப்படி விட வேண்டும், எவ்வளவு அடிப்படை ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட வேண்டும் போன்றவற்றை தொலைத் தொடர்பு அமைச்சகம் மட்டும் நிர்ணயிக்காமல், நிதியமைச்சர் உள்ளிட்ட 5 துறை அமைச்சர்கள் பிரதமர் ஆலோசனையுடன் நிர்ணயிப்பார்கள் என மாற்றியமைக்கப்பட்டது.

இதில் பெரும் இழுபறி நிலவியது. ஒருவழியாக குறைந்தபட்ச ஏலத் தொகையை நிர்ணயித்தாலும், பாதுகாப்பு அமைச்சகம், எல்லைப் புறங்களில் அலைக் கற்றைகள் பரவாமல் தடுக்கும் பணிகளை மேற்கொள்ள குறிப்பிட்ட கால அவகாசம் கேட்க, அதிலும் கால தாமதம் ஏற்பட்டது.

ஒருவழியாக எல்லாம் முடிந்து இந்த பிப்ரவரி அவல்லது மார்ச் மாதமே 3 ஜி ஏலத்தை முடித்து அரசுக்கு வரவேண்டிய ரூ 35000 கோடியை வசூலித்துவிடுவோம் என மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் ஆ ராசா கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

ஆனால் இப்போது 3 ஜி ஏலமே இந்த நிதியாண்டு நடைபெறாது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உண்மையான காரணம் என்ன?

"உண்மையில் பாதுகாப்புத் துறை இன்னமும் எல்லைப் புறங்களில் ஸ்பெக்ட்ரம் அலைக் கற்றைகளைத் தடுத்து நிறுத்தும் பணியை முற்றிலும் செய்து முடிக்கவில்லை. இது நமது தேசத்தின் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதால் அந்தப் பணியை முழுமையாக முடிக்கும் வரை 3 ஜி ஏலம் நடைபெறுவதை அனுமதிக்க முடியாது. காத்திருக்கத்தான் வேண்டும். எப்படியும் இந்த ஆண்டு மத்தியில் ஆகஸ்ட்-செப்டம்பருக்குள் இந்தப் பணி முடிந்து விடும் எனத் தெரிகிறது... அதன் பிறகுதான் 3 ஜி ஏலம்" என்கிறார்கள் தொலைத் தொடர்புத் துறை அதிகாரிகள்.

இதுகுறித்து இன்னமும் தொலைத் தொடர்புத் துறை மற்றும் நிதித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 3ஜி ஏலத்துக்கு தலைமை வகிப்பவர் நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி என்பது குறிப்பிடத்தக்கது.

Read: In English
ஏற்கெனவே மொத்த உற்பத்தியில் 6.8 சதவீதம் அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு நிதித் துறை தத்தளித்துக் கொண்டுள்ளது. இந்த சூழலில் குறித்த காலத்தில் 3 ஜி ஏலம் நடக்காததால் அரசுக்கு வரவேண்டிய ரூ.35.000 கோடி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டு பட்ஜெட்டில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சிஆர்ஆரை உயர்த்தியது ரிசர்வ் வங்கி!
டெல்லி: வணிக வங்கிகள் கட்டாயமாகக் கையிருப்பில் வைத்திருக்க வேண்டிய ரொக்கக் கையிருப்பு விகித அளவு 75 புள்ளிகள் அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.

இதன்படி தற்போது 5.75 சதவீதமாக இந்த மதிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம், அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வரவே என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் அளவுக்கதிகமான பணப்புழக்கம் உறிஞ்சப்படும். உபரி ரொக்கம் குறைவதால் விலைநிலை சற்று மட்டுப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிஆர்ஆர் மதிப்பு உயர்த்தப்பட்டிருந்தாலும், ரிசர்வ் வங்கியிடமிருந்து வங்கிகள் பெறும் கடன்களுக்கான வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

Read: In English
இதனால் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் வேலைக்கு ஆள் சேர்க்கும் சத்யம்!
மும்பை: மகிந்திரா சத்யம் நிறுவனம் 2000 புதிய பணியாளர்களை பணி நியமனம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. புதியவர்கள் மற்றும் அனுபவமிக்கவர்களின் கலவையாக இந்த நியமனம் அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை வேலைக்குறைப்புக்கு வழிபார்த்துக் கொண்டிருந்த மகிந்திரா சத்யம் இப்போது புதிய ஆட்களை நியமிப்பது குறித்துப் பேசத் துவங்கிவிட்டது. காரணம், மீட்சிப் பாதையில் செல்லத் துவங்கியுள்ளதாம் இந்த நிறுவனம்.

"நிலைமை முன்பு போல மோசமாக இல்லை. வர்த்தகம் நல்ல நிலைக்குத் திரும்பத் துவங்கிவிட்டது. எதிர்காலம் தெளிவாகத் தெரிகிறது. எனவே இப்போது வருகிற வேலைக்கான ஆர்டர்களைச் சமாளிக்க புதிய பணியாளர் நியமனம் அவசியம். இதை இனியும் தள்ளிப் போடாமல் இப்போதே பணி நியமனங்களைச் செய்யப் போகிறோம்" என்கிறார் மகிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர்.

அடுத்த நிதியாண்டிலிருந்து கேம்பஸ் இன்டர்வியூவையும் மீண்டும் தொடங்கப் போவதாக சத்யம் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே 2008ம் ஆண்டு கேம்பஸ் இன்டர்வியூ மூலம் பலரை தேர்வு செய்தது சத்யம் நிறுவனம். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக, தாங்கள் அளித்த வேலைவாய்ப்புக் கடிதங்களை அப்படியே விட்டுவிட்டது. இவர்களுக்கு மீண்டும் பணிநியமனம் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் அந்த உயர் அதிகாரி.

இந்நிலையில் சமீபத்தில் 6000 மாணவர்களுக்கு தேர்வு வைத்து, அவர்களில் 3000 பேரைத் தேர்வு செய்து வைத்துள்ளது சத்யம். இவர்களை 50 பேர் கொண்ட குழுக்களாக தேர்வு எழுத வைத்து, தேவையானவர்களை இறுதிப் பட்டியலில் இடம் பெறச் செய்யும் திட்டம் உள்ளதாம்.

கங்கைகொண்டான்: படுவேகத்தில் உருவாகும் 'ஐடி' பூங்கா
நெல்லை: கங்கைகொண்டானில் ரூ.24 கோடியில் அமைய உள்ள தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகள் வரும் செப்டம்பர் மாதத்தில் நிறைவு பெறும் என அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை கங்கைகொண்டானில் நடைபெற்றுவரும் தகவல் தொழில்நுட்ப பூங்கா பணிகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

'தமிழக முதல்வரின் ஆணைப்படி இரண்டாம் நிலை நகரங்களான கோவை, நெல்லை, திருச்சி, மதுரை உள்ளிட்ட நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகள் நடக்கின்றன.

இதன்படி கங்கைகொண்டானில் 54 ஆயிரம் சதுர அடியில் நிர்வாக கட்டிடங்கள் ரூ.14 கோடி மதிப்பிலும், உட்கட்டமைப்பு பணிகள் ரூ.10 கோடியிலும் நடந்து வருகின்றன. இப்பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவுபெறும்.

இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் வேலை வாய்ப்புக்களும் அதிகரிக்கும். சதர்ன் லேண்ட், குளோபல் நிறுவனங்களுக்கு தலா 5 ஏக்கரில் நிலம் ஓதுக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்ப பூங்கா மொத்தம் 389 ஏக்கர் நிலத்தில் அமைய உள்ளது. இதில் தற்போது 100 ஏக்கர் நிலத்தில் பணிகள் நடந்து வருகின்றன' என்றார்.

முட்டைக்கு மைனஸ் ரேட் வழங்கும் என்.இ.சி.சி., : அதிர்ச்சியில் புரோக்கர்கள், வியாபாரிகள்
நாமக்கல்: முட்டையின் தேவையைப் பொறுத்து, மைனஸ் ரேட் வழங்க என்.இ.சி.சி., முடிவு செய்வதால், முட்டை வியாபாரிகள், புரோக்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், 800க்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கிருந்து, தினமும், 2.50 கோடி முட்டைகள், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யும் முட்டைகளுக்கு, நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தேசிய முட்டை விலை நிர்ணயக்குழு (என்.இ.சி.சி.,) விலை நிர்ணயம் செய்கிறது. வாரத்தில் மூன்று நாள் வீதம், விலை நிர்ணயம் செய்யப்படும். எனினும், கோழிப் பண்ணைகளில் முட்டை எடுக்கும் புரோக்கர்கள், நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் இருந்து, சற்று விலையை குறைத்து முட்டை எடுப்பர். புரோக்கர்களின் ஆதிக்கம் காரணமாக, என்.இ.சி.சி., நிர்ணயம் செய்யும் விலை, கோழிப் பண்ணையாளர்களுக்கு கிடைக்காத சூழல் இருந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில், சில நாட்களாக நாள்தோறும் என்.இ.சி.சி., முட்டை விலை நிர்ணயம் செய்து வருகிறது. முட்டையின் தேவையைப் பொறுத்தும் மைனஸ் ரேட் வழங்குவதை, என்.இ.சி.சி., முடிவு செய்கிறது. இது முட்டை வியாபாரிகள், புரோக்கர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முட்டை வியாபாரி ஒருவர் கூறியதாவது: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் முட்டைக்கு மைனஸ் ரேட் வழங்குவதில்லை. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் காலம், காலமாக மைனஸ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. அதனால், என்.இ.சி.சி., ஒரு விலை நிர்ணயம் செய்தாலும் கூட, புரோக்கர்கள் ஒன்று கூடி, ஒரு விலையை நிர்ணயித்து பண்ணைகளில் முட்டை எடுப்பர். உதாரணத்துக்கு, முட்டை 260 காசுக்கு விற்பனையானால், 40 முதல் 50 பைசா வரை, முட்டையை விலை குறைத்து பண்ணைகளில் புரோக்கர்கள் கொள்முதல் செய்வர். பின், அந்த முட்டையை மூன்று ரூபாய் வரை விற்பனை செய்வர். இதனால், முட்டை விலை உயர்ந்தாலும் பண்ணையாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கவில்லை. முட்டை விலையுடன் வாடகை கொடுத்தால், வியாபாரிகள் பயனடைவர். அதே நேரத்தில் முட்டையை வாங்கும் வியாபாரிகள், அதை கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லும்போது, ஒரு நாள் ஆகிவிடும். தற்போது, நாள்தோறும் முட்டை விலை நிர்ணயம் செய்வதால், முட்டை விற்பனைக்கு கொண்டு செல்லும் சமயத்தில், அதன் விலை குறைந்தால், அது வியாபாரிகளின் கையை கடிக்கும் விதத்தில் அமையும். விலை உயர்ந்தால் வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

வெளிநாடுகளுக்கு பண பரிமாற்றம்: அஞ்சல் துறையின் புதிய வசதி
சென்னை: வெளிநாடுகளுக்கு மணியார்டர் மூலம் பண பரிமாற்றம் செய்யும் 'எம்.ஓ., விவேஷ்' திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
வெளிநாடுகளில் இருக்கும் நம் நாட்டை சேர்ந்தவர்கள், இங்குள்ள தங்கள் குடும்ப அங்கத்தினர்களுக்கு 'வெஸ்டர்ன் மணி டிரான்ஸ்பர்' திட்டத்தின் மூலம் பணம் அனுப்பி வந்தனர். வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்கள் இந்த சேவையை வழங்கி வந்த நிலையில், அஞ்சல் துறையும் தனது அலுவலகங்களில் இத்திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது இந்திய அஞ்சல் துறை உள்ளூர் பண பரிமாற்றத்திற்கான மணியார்டர் மூலம் வெளிநாடுகளிலும் பணப் பரிமாற்றம் செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக, 65 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ள இந்திய அஞ்சல் துறை இந்த புதிய திட்டத்திற்கு, 'எம். ஓ., விவேஷ்' என பெயரிட்டுள்ளது. இத்திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, சென்னை மத்திய கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் கூறியதாவது:

வெளிநாடுகளில் சென்று சம்பாதித்து பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு பணம் அனுப்புவோர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து படிக்கும் பிள்ளைகளுக்கு இங்கிருந்து பணம் அனுப்புவோர் வசதிக்காக இத்திட்டத்தை அஞ்சல்துறை வடிவமைத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் வீட்டிலிருந்தபடியே சம்பந்தப்பட்டவர்கள் பணத்தை பெற முடியும். 'வெஸ்டர்ன் மணி டிரான்ஸ்பர்' அடிப்படையில் அனுப்பப்படும் இந்த பணம், அனுப்பும் அன்று உள்ள மதிப்பின்படி வழங்கப்படும். தொகையின் அடிப்படையில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும். இத்திட்டத்தில், இந்தியாவில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரையில் ரொக்கமாகவும், அதற்கு மேற்பட்ட தொகை காசோலையாக அஞ்சல் அலுவலகங்களில் பெறப்படும். வெளிநாடுகளில் இருந்து 2,500 அமெரிக்க டாலர்கள் வரையில் அனுப்பலாம். இதற்காக மத்திய ஆப்ரிக்க நாடுகள், சிங்கப்பூர், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட 65 நாடுகளில் உள்ள அஞ்சல் துறைகளுடன் இந்திய அஞ்சல் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் பணம் இங்கு அடுத்த இரண்டு நாட்களுக்குள் பட்டுவாடா செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. சென்னை நகர மண்டலத்தை பொறுத்தவரையில் மயிலாப்பூர், தி.நகர், பார்க்டவுன், அண்ணாசாலை, சென்னை ஜி.பி.ஓ., தாம்பரம், பரங்கிமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் மற்றும் திருவண்ணாமலை தலைமை அஞ்சல் அலுவலகங்களில் விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு வெங்கட்ராமன் கூறினார்.

ஆபிள் நிறுவனத்தின் புதிய ஐபாட் அறிமுகம்
சான்பிரான்சிஸ்கோ: ஆபிள் நிறுவனத்தின் புதிய வகை ஐபாட் சான்பிரான்சிஸ்கோவில் அறிமுகப் படுத்தப் பட்டது. இந்த ஐபாடில் வெப் பிரவுசிங், ரீடிங் அன்ட் சென்டிங் மெயில், வாட்ஜ் வீடியோஸ், லிசன் மியூசிக், ப்ளோயிங் கேம், ரீடிங் இ-புக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இது, ஹை-செலுஷன் மல்டி- டச் டிஸ்ப்ளே கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்த ஐபாட் 0.5 இன்ச் அடர்த்தியும் 1.5 பவுண்ட் எடையும் கொண்டுள்ளது.


இந்த ஐபாட்டில் புதிதாக கண்டுபிடிக்கப் பட்ட 12 அப்ளிகேஷன்கள் இடம் பெற்றுள்ளன. மார்ச் மாதம் சந்தைக்கு வரும் இதன் விலை 499 அமெரிக்க டாலராகும்.

ஐபாட் இரண்டு வெர்சன்களில் வருகின்றன. அவற்றில் டபுல்யூ.ஐ-எப்.ஐ., மற்றொன்று டபுல்யூ.ஐ-எப்.ஐ.,யுடன் 3ஜி இணைந்தது. இத்துடன் 802.11 என் டபுல்யூ.ஐ, மற்றும் 3 ஜி வெர்சன்கள் இடம்பெற்றுள்ளன.

புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட இந்த ஐபாட்டின் ஸ்பீடு, ஹெச்.எஸ்.டி.பி.ஏ., ‌நெட்வெர்க்கில் 7.2 எம்.பி.பி.எஸ்., ஆகும்.

அக்.,-டிசம்பரில் 153 மில்லியன் டாலர் லாபம்: யாகூ
நியூயார்க்: இண்டர்நெட் என்றாலே முதலில் யாகூ என்பது தான் நினைவுக்கு வரும். அந்த அளவிற்கு முன்னேறியுள்ள யாகூ நிறுவனம், தற்போது காலாண்டு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 153 மில்லியன் டாலராக உள்ளது என தெரிவித்துள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பில் இது ரூ. 693 கோடியாகும். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இந்நிறுவனத்திற்கு நிகர நஷ்டமாக 303 மில்லியன் டாலர் ஏற்பட்டுள்ளது.

இதே போல, யாகூவின் வருவாய் 2009ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 1.73 பில்லியனாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 4 சதவீதம் உயர்வு.

இருப்பினும், கடந்த காலாண்டுடன் ஒப்பிடும் போது, இது 10 சதவீதம் அதிகமாகும்.

இந்தாண்டு நிகர லாபம் உயர்ந்திருப்பதற்கு, விளம்பர பிரிவில் ஏற்படுத்திய முன்னேற்றமே காரணம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

2009ம் முழு வருடத்தில், யாகூ நிறுவனத்தின் நிகர லாபம் 598 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு 419 மில்லியன் டாலராக இருந்தது.

நிறுவனத்தின் வருமானம் 7.2 பில்லியன் டாலரில் இருந்து 6.46 பில்லியன் டாலராக சரிந்துள்ளது.

மெர்சிடிஸ் பென்சின் புதிய வகை கார் அறிமுகம்
புதுடில்லி: மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா., நிறுவனத்தின் புதிய வகை கார் சீடன் எஸ்350 டில்லியில் அறிமுகப் படுத்தப் பட்டது.
இதன் விலை 80.5 லட்சம் ரூபாயில் இருந்து 82 லட்சம் வரை உள்ளது.

புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட இந்த வகை காரை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகைகளிலும் உள்ளது.

பெட்ரோல் பயன்படுத்தப் படும் கார் ரூ. 82 லட்சத்திற்கும் டீசல் பயன்படுத்தப் படும் கார் ரூ. 80.5 லட்சத்திற்கும் விற்பனை செய்யப் படுகிறது.

புதிதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ள இந்த சீடன் எஸ்350 புதிய எஸ்-கிளாஸ் கார் நிச்சயம் அனைவரும் விரும்பும் விதமாக இருக்கும் என்று மெர்சிடிஸ் இந்தியா நிறுவன இயக்குனர் மற்றும் சி.ஈ.ஓ., வில்பிரைட் அல்பர் தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானி மீது பால்தாக்கரே பாய்ச்சல்
மும்பை: மும்பை இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தமானது என்று முன்னணி தொழிலதிபர்களின் ஒருவரான முகேஷ் அம்பானி கூறி இருந்தார். இதனால், முகேஷ் அம்பானியை சிவசேனா தலைவர் பால்தாக்கரே கடுமையாக சாடியுள்ளார். ' ரிலையன்ஸ் நிறுவனங்கள் மீது முகேஷ் அம்பானிக்கு உள்ள உரிமையைப் போன்று மராத்தி மக்களுக்கு மும்பை மீது உரிமை உள்ளது. மும்பை மகாராஷ்ட்ராவின் தலைநகரம்.தொடர்ந்து அவ்வாறே இருக்கும்.எனவே மும்பை மற்றும் மராத்தி மைந்தர்களின் பாதையில் மூக்கை நுழைக்க வேண்டாம் என்று முகேஷ் அம்பானியை பால்தாக்கரே சாடியுள்ளார். மேலும், மும்பை, சென்னை மற்றும் டெல்லி ஆகிய நகரங்கள் இந்தியர்கள் அனைவருக்கும் சொந்தம் என்று கூறும் முகேஷ் அகமதாபாத்,ஜாம்நகர் மற்றும் ராஜ்கோட் போன்ற நகரங்களை விட்டுவிட்டது ஏன்? 'என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தனது கட்சிக்கு சொந்தமான சாம்னா என்ற பத்திரிக்கையில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு பால்தாக்கரே சாடியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஷாரூக்கானுக்கு ரூ. 1.38 கோடியில் மெழுகுசிலை
லண்டன்: லண்டனில் ரூ.1.38 கோடியில் நிறுவப்பட்ட பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் மெழுகுச்சிலை திறக்கப்பட்டது. லண்டனில் உள்ள மாடேம் டஸ்சாட்ஸ் அருங்காட்சியகத்தில் சர்வதேச அளவிலான பிரபலங்களின் மெழுகுச்சிலைகளை நிறுவுவது வழக்கம். சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஓபாமாவும், அவரது மனைவி மிச்செலியும் அருகருகே நிற்பது போன்ற மெழுகுச்சிலை திறக்கப்பட்டது. தற்போது பாலிவுட் பிரபல நடிகர் ஷாரூக் கான் கைகளை கட்டியடி நிற்கும் மெழுகுச்சிலையை நிறுவப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே சிலை தயாரிக்கும் பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில் அந்த சிலை சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. லண்டனின் தனக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதாக ஷாரூக் கான் ஏற்கனவே அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். அதனை நிரூபிப்பது போல ஏராளமான ரசிகர்கள் ஷாரூக் சிலை அருகே நின்று போட்டோ எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

சத்யம் ராஜு பரம ஏழை: நியூயார்க் நீதிமன்றம் ஏற்பு

நியூயார்க்: சத்யம் கம்ப்யூட்டர் நிறுவன முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜுவை, பரம ஏழையாக அறிவித்ததோடு, அவர் கோர்ட் கட்டணம் செலுத்துவதில் இருந்தும் விலக்கு அளித்து, அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் நிதி மோசடி குறித்து, அதன் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜு கடந் தாண்டு ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் மற்றும் இவரது சகோதரர் மீது அமெரிக்க கோர்ட்டில் நடந்து வரும் வழக்கு ஒன்றில், தாங்கள் பரம ஏழை என்று ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் நிதி அலுவலர் ஸ்ரீநிவாஸ் வட்லமணி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

இவர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுவில், 'நாங்கள் பரம ஏழை என்பதால், அமெரிக்காவில் எங்களுக்காக வாதாட வக்கீல் நியமிக்கவோ, கோர்ட் கட்டணம் செலுத்தவோ அல்லது கோர்ட் விதிக்கும் பிற நிதி உத்தரவுகளை பூர்த்தி செய்யவோ இயலவில்லை' என, தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நியூயார்க் கோர்ட் நீதிபதி பார்பரா ஜோன்ஸ், தன் உத்தரவில் கூறியதாவது:

ராமலிங்க ராஜு, அவரது சகோதரர் ராமராஜு மற்றும் சத்யம் நிறுவன முன்னாள் நிதி அலுவலர் ஸ்ரீநிவாஸ் வட்லமணி ஆகியோர், தாங்கள் பரம ஏழைகள் என்பதற்கு போதுமான அளவு விளக்கமளித்துள்ளனர்.

அவர்களால் அமெரிக்க சட்டப்படி செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியவில்லை.

எனவே, அவர்களுக்கு கோர்ட் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு பார்பரா ஜோன்ஸ் கூறினார்

விப்ரோ நிறுவனத்தின் சூழல் பாதுகாப்பு கம்ப்யூட்டர்
சென்னை: தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ லிமிடெட் தற்போது மறு சுழற்சி செய்யும் வகையில் நச்சுத் தன்மை அற்ற கம்ப்யூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தகைய கம்ப்யூட்டர்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இன்டல் டியூயல் கோர் தயாரிப்புகள் இதில் இடம்பெறும். இதன் மூலம் கார்சினோஜெனிக் எனப்படும் நச்சுத்தன்மை அற்ற கம்ப்யூட்டர்கள் சந்தைக்கு வந்துள்ளது. இவற்றை மறு சுழற்சி செய்யலாம். இதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப்படும். இந்த கம்ப்யூட்டர்கள் 2 ஆண்டு ஆராய்ச்சிக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் தலைவர் அனுராக் பெஹர் தெரிவித்தார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக