கரடியின் பிடியில் பங்குச்சந்தை; சென்செக்ஸ் 17 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே ‌சரிந்தது

வெள்ளி, 22 ஜனவரி, 2010

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் இன்றும் கடும் வீழ்ச்சி காணப் பட்டது. சென்செக்ஸ் 17 புள்ளிகளுக்கு கீழும், நிப்டி 5 ஆயிரம் புள்ளிகளுக்கு கீ‌ழும் சென்றது.
இன்று காலை வர்த்தக நேரம் ‌தொடங்கிய போது, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 351.77 புள்ளிகள் சரிந்து 16,699.37 புள்ளிகளோடு தொடங்கியது. ‌

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 110.85 புள்ளிகள் குறைந்து 4,983.30 புள்ளிகளோடு தொடங்கியது.

கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதிக்கு பிறகு, தற்போது தான் சென்செக்ஸ் 17 ஆயிரம் புள்ளிகளுக்கும் கீழே சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே இந்திய பங்குச்சந்தையில் எதிரெலித்து இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 191.46 புள்ளிகள் சரிந்து 16859.68 புள்ளிகளோடு நிலைபெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 58.15 புள்ளிகள் சரிந்து 5036.00 புள்ளிகளோடு நிலைபெற்றது.

ஐ.டி.சி., 3ம் காலாண்டு நிகர லாபம் உயர்வு
மும்பை: ஐ.டி.சி., நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் அதிகரித்து இருப்பதாக ஐ.டி.சி., நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 2009ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதியுடன் முடிந்த மூன்றாம் காலாண்டு கணக்கெடுப்பின் படி, நிறுவனத்தின் நிகர லாபம் 26.7 சதவீதம் உயர்ந்து 1,144.17 கோடி ரூபாயாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு 903.21 கோடி ரூபாயாக இருந்தது.





மொத்த விற்பனையும் 18.22 சதவீதம் அதிகரித்து 4,531.85 கோடி ரூபாயாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு 3,833.31 கோடி ரூபாயாக இருந்தது.

ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு
புதுடில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் வருவாய் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப் பட்டுள்ள செய்தியில், நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், ரியல் எஸ்டேட் துறை நிறுவனங்களின் மொத்த வருவாய், சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 59 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடும்போதும் இந்த வளர்ச்சி 16 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த பல நிறுவனங்கள் குறைந்த அளவில் லாபம் தரக்கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அதிக அளவில் விற்பனை செய்துள்ளன. இதனையடுத்து, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இத்துறை நிறுவனங்களின் மொத்த லாப வளர்ச்சி 52 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது. இது, செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த முந்தைய காலாண்டில் 58 சதவீதமாக இருந்தது.

டாக்டர்களுக்கு கடன் அளிக்கிறது யூகோ வங்கி

சென்னை: டாக்டர்களுக்கு கடன் வழங்க ‌யூகோ வங்கி திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு யூகோ டாக்டர் என பெயரிடப் பட்டுள்ளது. இதற்காக, ஐந்து லட்சம் ரூபாயில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரை 11.50 விழுக்காடு வட்டி விகிதத்தில் தொழில் தேவைகளுக்கான கடன் அளிக்கும் புதிய திட்டத்தை யூகோ வங்கி அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கடன் திட்டம் மருத்துவர்களுக்கு மட்டுமின்றி மருத்துவம் சார்ந்த சேவைகள், தொழிலில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள், பங்குதாரர் நிறுவனங்கள், தனியார் கம்பெனிகள் ஆகியோருக்கும் வழங்கப்படும் என்று யூகோ வங்கி தெரிவித்துள்ளது.

சரிகிறது தங்கம் விலை: மக்கள் மகிழ்ச்சி
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 216 ரூபாய் குறைந்து, 12,408 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்றும் அதன் விலை 120 ரூபாய் குறைந்து, ரூ. 12,288ஆக உள்ளது.
ஆபரணத் தங்கத்தின் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சவரன், 13,500 ரூபாயை எட்டிப்பிடித்தது. அதன்பின் சற்று குறைவதும், பின் கூடுவதுமாகவே இருந்து வந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் 1,578, சவரன் 12,624 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று திடீரென தங்கம் விலை குறைந்தது. ஒரு கிராம் 1,551, சவரன் 12,408 ரூபாய்க்கு விற்பனையானது.

ஒரே நாளில் சவரனுக்கு 216 ரூபாய் குறைந்தது சாதாரண மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. இந்நிலையில், இன்று ஒரு கிராம் 22 காரட் தங்கத்தின் விலை ரூ. 1,536ஆக உள்ளது. 24 காரட் தங்கத்தின் விலை 16 ஆயிரத்து 520 ரூபாயாக குறைந்துள்ளது.

பார் வெள்ளியின் விலை 345 ரூபாய் குறைந்து 27ஆயிரத்து 840 ரூபாயாகவும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 29.80ஆக உள்ளது.

இது குறித்து தங்க நகை மொத்த வியாபாரிகள் கூறுகையில், 'சர்வதேச சந்தையில் மாற்றம் காரணமாக இரண்டு நாட்களுக்கு முன் 1,140 டாலராக இருந்த ஒரு அவுன்ஸ் தங்கம், நேற்று 1,104 டாலராக குறைந்து விட்டது. 'டாலரின் மதிப்பில் ஏற்பட்ட மாற்றமும், தங்கம் விலை குறைய காரணமாக அமைந்துள்ளது. விலை மேலும் குறையும் என எதிர்பார்க்க முடியாது' என்றனர்.

ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் 3ம் காலாண்டு நிகர லாபம் 13% உயர்வு
மும்பை: ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் குறித்து கணக்கெடுப்பு வெளியிடப் பட்டுள்ளது. இதில், அந்நிறுவனத்தின் நிகர லாபம் 13 சதவீதம் உயர்வினை கண்டுள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த மாதத்தில் நிறுவனத்தின் நிகர லாபம், 13 சதவீதம் உயர்ந்து 3,954.60 கோடி ரூபாயாக உள்ளது. இது அதற்கு முந்தைய 2008ம் ஆண்டில் 3,501 கோடி ரூபாயாக இருந்தது.

நிறுவனத்தின் மொத்த விற்பனையும் 54.6 சதவீதம் உயர்வினை கண்டு 31 ஆயிரத்து 563 கோடி ரூபாயில் இருந்து 48 ஆயிரத்து 785 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தி்ன் இ.பி.ஐ.டி.ஏ.,( ஏனிங் பிபோர் இன்டிரஸ்ட், டாக்ஸ், டெப்ரிஷியேஷன் அன்ட் அமேடிஷேசன்) 16 சதவீதம் உயர்ந்து 7,802 கோடி ரூபாயாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு 5,363 கோடி ரூபாயாக இருந்தது.

பார்தி ஏர்டெல் 3ம் காலாண்டு நிகர லாபம் ரூ. 2,209.8 கோடியாக அதிகரிப்பு

மும்பை : இந்தியாவின் முன்னணி செல்போன் சேவை நிறுவனமான பார்தி ‌ஏர்டெல், மூன்றாம் காலாண்டு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது. இதன்படி, நிறுவனத்தின் மூன்றாம் காலாண்டுக்கான நிகர லாபம் 2.3 சதவீதம் அதிகரித்து ரூபாய் 2,209.80 கோடியாக இருக்கிறது.
நிறுவனத்தின் மொத்த வருவாய் 1 சதவீதம் உயர்ந்து 9,772.20 கோடி ரூபாயாக உள்ளது. இது அதற்கு முந்தைய 2008ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த காலகட்டத்தில், 9.633.4 கோடி ரூபாயாக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில் இன்று கணக்கை பைல் செய்த பார்தி ஏர்டெல் நிறுவனம், அதில் இதை குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக, மும்பை பங்குச்சந்தையில் பார்தி ஏர்டெல் நிறுவன பங்குகள் 2.37 சதவீதம் உயர்வினை கண்டு ரூ. 329.80க்கு வர்த்தகமாயிற்று
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்: புதிய திட்டங்கள் அறிமுகம்
சென்னை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் புதிய திட்டங்கள‌ை அறிமுகப் படுத்தியுள்ளது. தனது வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக, இரண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ள ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், அதற்கு லைட்-நைட் மற்றும் பிரைட்-நைட் என பெயரிட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் இரவு நேரத்தில் இலவசமாக செல்போனில் பேசலாம். லைட்-நைட் திட்டத்தின்படி ரூ. 29 கட்டணம் செலுத்தினால் இரவு நேரத்தில் உள்ளூர் அழைப்புகளை இலவசமாகப் பெறலாம்.
ரிலையன்ஸ் மொபைலுடன் உள்நாட்டு அழைப்புகளையும் மேற்கொள்ளலாம். பிரைட்-நைட் திட்டத்தின் கீழ் உள்ளூர் மற்றும் உள்நாட்டு அழைப்புகளை இலவசமாக மேற்கொள்வதோடு பிற செல்போன் இணைப்புகளில் தொடர்பு கொள்வதற்கான கட்டணத்தில் 50 சதவீத தள்ளுபடியையும் பெறலாம்.

இரண்டு திட்டங்களும் இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரையிலான காலத்திற்காகும். ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் 30 நாள்கள் வரை இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

மகேந்திராவின் புதிய டிரக் அறிமுகம்

சென்னை: மகேந்திரா நிறுவனம், புதிய வகை காம்பேக்ட் டிரக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்தியாவின் சிறிய வர்த்தக வாகனங்கள் பிரிவில் முன்னணி நிறுவனமாக திகழும் மகேந்திரா அன்ட் மகேந்திரா லிமிடெட், நான்கு சக்கர பாயின்ட் ஐந்து டன் காம்பேக்ட் டிரக்கை அறிமுகப்படுத்தி உள்ளது. சரக்கு வாகனப் பிரிவில் ஒரு வகையின் உருவாக்கல் வாகனமாக திகழும் மகேந்திரா, இதற்கு, 'ஜியோ' என்று பெயர் வைத்துள்ளது.
நான்கு சக்கர வாகனமான இது, வசதி மற்றும் பாதுகாப்பு மற்றும் மூன்று சக்கர வாகனத்திற்கு ஆகும் குறைவான செயல் பாட்டு கட்டணம் மற்றும் பராமரிப்புக் கட்டணம் ஆகியவைகளையும் கொண்டுள்ளது.

இந்த வாகனத்தின் விலை, 1.7 லட்சம் ரூபாய். உயர் திறன் வாய்ந்த கோலர் டீசல் இன்ஜினை கொண்டுள்ள இந்த வாகனம், லிட்டருக்கு 27 கி.மீ., மைலேஜ் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தி இருப்பதால், அனைத்து செயல்பாடுகளிலும், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை அம்சங்களிலும், இந்த வாகனம் சிறந்து விளங்குவதாக, மகேந்திரா நிறுவனம் தெரிவிக்கிறது.

மேலும், நீண்ட தூரப் பயணத்தால் ஏற்படும் முதுகு வலியை தவிர்க்க, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய குஷன் இருக்கை பொருத்தப்பட்டுள்ளது.

'இந்தியாவில், மிகக் குறைந்த விலையில், சரக்குகளை கையாளும் நான்கு சக்கர வாகனங்களில் ஒரு மைல் கல்லாக மகேந்திரா ஜியோ விளங்கும்' என்று, மகேந் திரா அன்ட் மகேந்திரா லிமிடெட்டின் ஆட்டோமேடிவ் பிரிவின் தலைவர் பவன் கோபென்கா கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக