கிரெடிட் கார்டில் கண்டபடி செலவழிப்பவரா? : வங்கிகள் கிடுக்கிப்பிடி
ஐதராபாத்: உரிய காலத்துக்குள் பணம் கட்டாமல் இருந்தால், அல்லது குறைவான பணம் கட்டியிருந்தால் உங்கள் கிரெடிட் கார்டின் உச்சவரம்பு குறைக்கப்படலாம். வங்கிகளின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை கிரெடிட் கார்டு பயன்பாட்டில் கிடுக்கிப்பிடியாகக் கருதப்படுகிறது. ஒருவரின் கடன் திருப்பிச் செலுத்தும் தகுதியின் அடிப்படையில் அவருக்கு வங்கிகள் கடன் அட்டைகள் எனப்படும் கிரெடிட் கார்டுகளை வழங்குகின்றன. அப்படி வழங்கும் போது, அந்த அட்டையைப் பயன்படுத்தும் உச்சவரம்பும் குறிப்பிடப்படுகிறது. அதாவது, ஒருவர் தனது கடன் அட்டையை ஒரு லட்சம் ரூபாய் வரையில் பயன்படுத்தலாம். 45 நாட்களுக்குள், அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும். காலம் அதிகரிக்க அதற்கான வட்டி வீதமும் அதிகரித்துக் கொண்டே செல்லும். இப்படி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தியே வாழ்க்கையைக் கழிப்பவர்கள் பின் அதைத் திருப்பிக் கட்ட சிரமப்படுகின்றனர். இதனால், பெருமளவில் பாதிக்கப்பட்ட வங்கிகள், இந்த நடைமுறையில் சில மாற்றங் களை கொண்டு வந்துள்ளன. அதன்படி, கிரெடிட் கார்டை அதிக அளவில் பயன்படுத்துபவர் களது உச்சவரம்பு குறைக் கப் பட்டுள்ளது. எச்.எஸ்.பி.சி., ஐ.சி.ஐ.சி.ஐ போன்ற வங்கிகள் இதை நடைமுறைப்படுத்தியுள்ளன.
இது குறித்து, ஐ.சி.ஐ.சி.ஐ.,வங்கி ஊழியர் ஒருவர் கூறுகையில்,'எங்கள் வங்கி இப்போது 'ப்ரூடன்ட் கிரெடிட் கார்டு லைன் மேலாண்மை' குறித்த சில விஷயங்களைப் பின்பற்றி வருகிறது. அதனால், சில வாடிக்கையாளர்களின் கிரெடிட் மற்றும் ரொக்கப் பரிமாற்றங்களின் உச்சவரம்பு குறைக்கப்பட்டுள்ளது. இது, நல்ல விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது' என்று தெரிவித்தார். இந்த அதிரடி மாற்றத்துக்கு இரண்டு காரணங்கள் சொல்லப் படுகின்றன. ஒன்று, கடன் அட்டை வாங்கி அளவில்லாமல் செலவழித்து விட்டு திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதால் அதைக் குறைப்பதற்காக. இரண்டு, கடன் அட்டை வாங்கி வைத்து விட்டு, அதைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அல்லது செலுத்த வேண்டிய அளவை விட குறைந்த அளவிலேயே பணம் செலுத்துபவர்கள் இவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக. இந்த நடைமுறையை சில வங்கிகள் கடந்த ஓர் ஆண்டாகவே கடைப்பிடித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடைமுறையால், பாதுகாப்பற்ற கடன் வழங்கலைத் தவிர்க்க முடிவதாக வங்கி அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். இதனால், 2009ல் இரண்டு கோடி கிரெடிட் கார்டுகள் குறைந்து விட்டன, என்பது குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.என்.எல்., 'ப்ரீபெய்ட் பிராட் பேண்ட்'
சென்னை: பி.எஸ்.என்.எல்., ப்ரீபெய்டு பிராட் பேண்ட் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு பி.எஸ்.என்.எல்., வட்டத்தின் செய்திக் குறிப்பு: பி.எஸ்.என்.எல்., ஏற்கனவே கட்டணம் செலுத்தக் கூடிய பிராட் பேண்ட் (அகண்ட அலைவரிசை) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்சேவையைப் பெற, வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப படிவங்களை பி.எஸ்.என்.எல்., இணையதளத்தில் இருந்து 'டவுண் லோடு' செய்து கொள்ளலாம். இச்சேவையை பெற விரும்புவோர், பி.எஸ்.என்.எல்., தரை வழி இணைப்பு மோடம் வைத்திருக்க வேண்டும்.
'ப்ரீ பெய்டு பிராட் பேண்ட்' சேவைக்கு மாதாந்திர கட்டணம் எதுவும் கிடையாது. இணைப்பு கொடுக்க 250 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அறிமுகச் சலுகையாக 30 நாட்களுக்கு இணைப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு 50 'எம்பி' இலவச, 'டவுண்லோடு' அளிக்கப்படும். இது 15 நாட்கள் மதிப்பு கொண்டதாக இருக்கும். வாடிக்கையாளர்கள், தங்களது கணக்குகளை, 'ரீ சார்ஜ்' செய்து கொள்ளலாம். டில்லி மற்றும் மும்பையை தவிர நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும், இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐரோப்பாவில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை 10% அதிகரிப்பு
லண்டன் : எப்போதும் இல்லாத அளவிற்கு ஐரோப்பாவில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை, தற்போது 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் உறுப்பினர்களாக உள்ள 27 நாடுகளில் 9.5 சதவீதம் பேர் வேலை இல்லாமல் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் அதிகபட்சமாக ஸ்பெயினில் 19.4 சதவீதம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர். பிரான்சில் 10 சதவீதமும், இத்தாலியில் 8.3 சதவீதம் பேரும், ஜெர்மனியில் இருந்து 7.6 சதவீதம் பேரும் வேலை இல்லாமல் உள்ளதாக தற்போதைய ஆய்வு தெரிவிக்கிறது.
ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள இந்த புள்ளி விபத்தில் 2009ம் ஆண்டு அக்டோபரில் 9.9 சதவீதம் பேரும், நவம்பரில் 10 சதவிதம் பேரும் வேலை இல்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் யூரோ பகுதியில் வசிக்கும் 22.899 மில்லியன் பேரில், 15.712 மில்லியன் வேலையில்லாமல் இருப்பதாக தெரிகிறது. மிகக் குறைந்த அளவாக நெதர்லாந்தில் 3.9 சதவீதம் பேரும், ஆஸ்திரியாவில் 5.5 சதவீதம் பேரும் வேலையில்லாமல் உள்ளனர். மிக அதிக அளவாக லட்வியாவில் 22.3 சதவீதம் பேரும், ஸ்பெயினில் 19.4 சதவீதம் பேரும் வேலை இல்லாமல் உள்ளதாக ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
நேரடி வரி விதிப்பு முறையில் விரைவில் புதிய மாற்றம் : பிராணாப் முகர்ஜி
புதுடில்லி : புதிய நேரடி வரி விதிப்பு முறை அடுத்த நிதி ஆண்டில் இருந்து அமல்படுத்தபட உள்ளதாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். மத்திய அரசு வருமான வரி, நிறுவன வரி, சேவை வரி, பங்கு பரிவர்த்தனை வரி போன்ற நேரடி வரி விதிப்பு முறையில் மாற்றங்களை கொண்டு வர உள்ளது. இந்த புதிய வரி விதிப்பு முறை அடுத்த நிதி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
டில்லியில் நடைபெறும் அயல்நாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் மத்திய நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி புதிய நேரடி வரி விதிப்பு பற்றி பேசும் போது, புதிய நேரடி வரி விதிப்பு முறையின் நோக்கமே, சார்டட் அக்கவுண்ட்டென்ட் உதவி இல்லாமல் வரி படிவங்களை எளிய முறையில் நிரப்பும் தன்மையாக இருப்பதே. ஆனால் இதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெற வேண்டும் என்று கூறினார். மேலும் உற்பத்தி வரி, ஏற்றுமதி-இறக்குமதி வரி போன்ற மறைமுக வரி பற்றி குறிப்பிடுகையில், ஒரே விதமாக வரி விகிதங்கள் இருக்கும் படி பார்த்துக் கொள்ள முயற்சித்து வருகின்றோம். 1990ம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தம் இன்றும் தொடர்கிறது என்று தெரிவித்ததார்.
ராஜசேகர ரெட்டி மரணத்தில் தொடர்பு: ரிலையன்ஸ் மறுப்பு
புதுடில்லி: ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி மரணத்தில் தொடர்பிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இந்த விபத்து தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தெலுங்கு செய்தி சேனலான 'டிவி-5' நேற்று பரபரப்பு செய்தி ஒன்றை வெளியிட்டது. அதிகம் பிரபலமாகாத வெப்சைட் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இந்தச் செய்தியை வெளியிட்டது. அதில், ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதற்கு பிரபல தனியார் நிறுவனத்தின்(ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ்) சதியே காரணம் என, தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு சொந்தமான, 'சாக்ஷி டிவி' உட்பட வேறு சில 'டிவி' சேனல்களும் இதே செய்தியை வெளியிட்டன.
இந்நிலையில், “டிவி-5 தெலுங்கு தொலைக்காட்சி சேனலில், ராஜசேகர ரெட்டியின் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு தொடர்பிருப்பதாக கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும், இந்தக் குற்றச்சாற்றை வன்மையாக கண்டிப்பதுடன், இதில் உண்மையில்லை என்று தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் தெரிவித்துள்ளது. மேலும், தொழில் போட்டி காரணமாகவே, இந்த தகவல் பரப்பப் பட்டு வருவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
கர்நாடகாவில் 30 ஆயிரம் கோடி மதிப்பில் இரும்பு ஆலை: மித்தல் திட்டம்
புதுடில்லி: கர்நாடகாவில் 30 ஆயிரம் கோடி மதிப்பில் இரும்பு ஆலை அமைக்க தொழிலதிபர் லட்சுமி மித்தல் திட்டமிட்டுள்ளார். இதற்காக, அம்மாநில முதல்வர் எடியூரப்பாவை அவர் சந்தித்துப் பேசியுள்ளார். உலகிலேயே மிக அதிக அளவிலான இரும்பு தயாரிப்பு தொழிற்சாலையைக் கொண்டுள்ள ஆர்சிலார் மித்தல் நிறுவனம் புதிய தொழிற்சாலை அமைப்பதற்கு பல்வேறு மாநிலங்களை பரிசீலித்து வருகிறது. இரும்புத் தாது அதிகம் கிடைக்கும் பகுதியில் தொழிற்சாலையை தொடங்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், கர்நாடக மாநிலம் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது. இங்கு தொடங்க உத்தேசித்துள்ள ஆலை ஆண்டுக்கு 60 லட்சம் டன் உருக்கு உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். உருக்கு ஆலையுடன் 750 மெகாவாட் மின்னுற்பத்தி நிலையத்தையும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 4 ஆயிரம் ஏக்கர் தேவைப் படுகிறது. இதன் மூலம் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது
டாப் 5 நிறுவனங்களுக்கு ரூ. 25ஆயிரம் கோடி நஷ்டம்
மும்பை: இந்த வருட தொடக்கத்தின் முதல் வாரத்தில், டாப் 5 நிறுவனங்கள் சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை அடைந்துள்ளன. இத்துடன், ஓ.என்.ஜி.சி., நிறுவனமும் 8 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜனவரி 8ம் தேதியுடன் முடிந்த வாரத்தில், என்.டி.பி.சி., என்.எம்.டி.சி., இன்போசிஸ் டெக்னாலஜிஸ். டி.சி.எஸ் மற்றும் பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மொத்தமாக 24 ஆயிரத்து 546.71 கோடி ரூபாய் நஷ்டத்தை மார்க்கெட்டில் அடைந்துள்ளனர்.
இதில் டி.சி.எஸ்., நிறுவனம் தான், அதிகளவு நஷ்டத்தை அடைந்துள்ளது. டி.சி.எஸ்., நிறுவனத்திற்கு மட்டும் 9,639.21 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
2008-2009ல் கூடுதலாக 13 லட்சம் ஏஜென்டுகள்: ஐ.ஆர்.டி.ஏ.,
புதுடில்லி: லைப் இன்சூரன்ஸ் கம்பெனிகள், 2008-2009ம் ஆண்டில் கூடுதலாக 13 லட்சம் ஏஜென்டுகளை இணைத்துள்ளனர். ஐ.ஆர்.டி.ஏ., (இன்சூரன்ஸ் ரெகுலாரிட்டி அன்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி) 2008-09ம் ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் மார்ச் 2009 இறுதியில் இன்சூரன்ஸ் ஏஜென்டுகள் எண்ணிக்கை 29.37 லட்சமாக அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இது 2007-08ம் ஆண்டில் 10 லட்சமாக இருந்துள்ளது. இதில் லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷனில் அதிகமாக 3.45 லட்சம் ஏஜென்டுகள் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். இத 2007-08ல் 2.34 லட்சமாக இருந்தது. இது தவிர, தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளில் 9.43 லட்சம் ஏஜென்டுகள் பணியில் அமர்த்தப் பட்டுள்ளனர். அதிகமான ஏஜென்டுகளை அமர்த்துவதில், இரண்டாவது இடத்தில் இருப்பது ரிலையன்ஸ் லைப். 2008-09ம் ஆண்டில் 93,051 ஏஜென்டுகளை அந்நிறுவனம் பணியில் அமர்த்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்லைன் டிக்கெட் சர்வீஸ்: ஐ.ஆர்.சி.டி.சி., புதிய திட்டம்
புதுடில்லி: ஐ.ஆர்.சி.டி.சி., (இந்தியன் ரயில்வே கேட்டரிங் அன்ட் டூரிசம் கார்ப்ரேஷன் லிமிடெட்) ஏர்லைன் டிக்கெட் சர்வீசை அறிமுகப் படுத்தும் திட்டத்தில் உள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட ரயில்வே டிக்கெட்டுகள் ஐ.ஆர்.சி.டி.சி., இணையத்தளம் மூலம் பதிவு செய்யப் படுகிறது. தற்போது, ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம் தனது சர்வீசை மேலும் அதிகரிக்கும் விதமாக, தனது ஆன்லைனிலேயே ஏர்லைன் டிக்கெட்டுகளையும் விற்பனை செய்யும் திட்டத்தில் உள்ளது. இதற்காக, தனது வெப்சைட்டில் புதிய பக்கங்களை அறிமுகப் படுத்த உள்ளது. இந்த புதிய சர்வீஸ் மூலம், பயணிகள் தாங்கள் பயணம் செய்ய வேண்டிய இடங்களை எளிதாக அடையும் விதமாக எர்லைன் மற்றும் ரயில்வே டிக்கெட்டுகளை ஒரே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்து, ஐ.ஆர்.சி.டி.சி., மேலாண்மை இயக்குனர் ராஜேஸ் கூறும்போது, முக்கிய இடங்களுக்கு பயணிகள் செல்லும் போது, ரயில் மற்றும் ஏர்லைனில் பயணம் செய்ய வேண்டி இருக்கும். இந்த இரண்டு டிக்கெட்டுகளையும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையத் தளத்தில் மூலமாகவே பதிவு செய்து கொள்ளலாம் என்று கூறினார்
ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் : 17 காப்பீடு திட்டங்கள் அறிமுகம்
புதுடில்லி: ரிலையன்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வகையில் புதிதாக 17 காப்பீடு திட்டங்களை அறிமுகப் படுத்த உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய பங்குச்சந்தை முதலீடு வாயிலாக அதிக லாபத்தை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற முறையிலும், அவர்களது தேவையை பூர்த்தி செய்யும் விதத்திலும் புதிய காப்பீடு திட்டங்கள் அறிமுகப் படுத்தப் பட உள்ளன. பிரிமியம் செலுத்தும் வகையில் யூலிப் காப்பீடு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். யூனிட் லிங்கிடு இன்ஷ்யூரன்ஸ் பாலிசி என்ற காப்பீடு திட்டம் சுருக்காமாக யூலிப் என்று அழைக்கப்படுகிறது. இந்த காப்பீடு திட்டங்களில், காப்பீடு செய்து கொண்டவர்கள் செலுத்தும் பிரிமியம், பங்குச் சந்தை, கடன் பத்திரங்கள், நிதி சந்தையில் முதலீடு செய்யப்படுகிறது.
அடுத்த பில்கேட்ஸ் இந்தியராக இருப்பார்: கருத்து கணிப்பில் தகவல்
வாஷிங்டன்: அடுத்த பில்கேட்ஸ் இந்தியராக இருப்பார் என்று 40 சதவீத அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாஷிங்டனை சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஒன்று தான் இந்த கருத்துக் கணிப்பை எடுத்துள்ளது. ஜோக்பை இன்டர்நேஷனல் என்ற அந்த நிறுவனம், கடந்த நவம்பர் 20 முதல் 23ம் தேதி வரை அமெரிக்க முக்கிய நகரங்களின் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில், புதுமையான கண்டுபிடிப்பு மூலம் உலக பணக்காரர் ஆன பில் கேட்சைப் போல அவருக்கு அடுத்ததாக எந்த நாட்டைச் சேர்ந்தவர் வருவார் என்று கேட்கப்பட்டது. இதில் 40 சதவீதத்தினர் அடுத்த பில்கேட்ஸ் இந்தியராக அல்லது சீனராக இருப்பார் என்று கருத்து தெரிவித்துள்ளனார்.
அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு
மும்பை: நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 13,32,548.70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாக அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்து வந்தது. இந்நிலையில், ஜனவரி 01ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது. இந்த வாரத்தில், 2.20 கோடி டாலர் அதிகரித்து, 28,352.10 கோடி டாலராக அது உள்ளது. இதற்கு முந்திய வாரத்தில், இது 14.40 கோடி டாலராக குறைந்து 28,349.90 கோடி டாலராக இருந்தது. ஜனவரி 01ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அந்நிய செலாவணி அதிகரித்து இருப்பதற்கு, தங்கத்தின் மதிப்பு 11 கோடி டாலராக உயர்ந்து இருந்ததும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
டிசம்பரில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
டிசம்பரில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பன்றி காய்ச்சல், மும்பை தாஜ் ஓட்டல் துப்பாக்கி சூடு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சரிவை சந்தித்து வந்தது. இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு டிசம்பரில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து 6.46 லட்சம் பயணிகள் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளனர். இது கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை காட்டிலும் 21 சதவீதம் அதிகம். சுற்றுலா பயணிகள் அதிகரித்து இருப்பதை தொடர்ந்து, டிசம்பரில் 151 கோடி டாலர் அளவிற்கு இந்தியாவிற்க அந்நிய செலாவணி கிடைத்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டை விட 44 சதவீதம் அதிகமாகும். சென்ற 2009ம் ஆண்டில், சுற்றுலா துறைக்கு, அந்நியச் செலாவணி வருவாய் வாயிலாக ரூ.54,960 கோடி கிடைத்துள்ளது. இது, இதற்கும் முந்தைய 2008-ஆம் ஆண்டில் பெறப்பட்ட ரூ.50,730 கோடியை விட 8.3 சதவீதம் அதிகமாகும். 2009 டிசம்பரில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து இருந்தாலும், சென்ற 2009-ஆம் ஆண்டில், இந்தியாவிற்கு வந்த, ஒட்டுமொத்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 51.10 லட்சமாகவே இருந்தது. இது, இதற்கும் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 3.3 சதவீதம் குறைவாகும்.
10-12 நாட்களில் இரும்பு விலை குறையும் வாய்ப்பு
புதுடில்லி: அடுத்த இரண்டு வாரங்களில் இரும்பு விலை குறையும் என அரசு எதிர்பார்த்து வருகிறது. இதுகுறித்து இரும்பு செயலர், அடுல் சத்ருவேதி கூறும் போது, அடுத்த 10 முதல் 12 நாட்களில் இரும்பு விலை சரிய தொடங்கும். தற்போது, இந்திய மார்க்கெட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையே இதற்கு காரணம். செயில் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள் தற்போது இரும்பு விலையை உயர்த்தி உள்ளன. இது தற்காலிகமானது தான். மேலும், சில நாட்களுக்கு மட்டுமே இது இருக்கும். விரைவில் இந்த விலை உயர்வு சரிய தொடங்கும் என்று தெரிவித்தார். செயில் மற்றும் டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்கள், ஒரு டன் இரும்பின் விலையை சமீபத்தில் தான் ரூ. 3500 மேல் உயர்த்தியது என்பது குறிப்பிடத் தக்கது.
எல் அன்ட் டி நிறுவனத்தில் 20 ஆயிரம் பணியிடங்கள்
மும்பை: கட்டுமான துறையில் முன்னணியில் உள்ள எல் அன்ட் டி(லார்சன் அன்ட் டியூப்ரோ) நிறுவனம், அடுத்த 12 மாதங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20 ஆயிரம் பணியிடங்களை உருவாக்க உள்ளது. எல் அன்ட் டி குழுமத்தில் மொத்தம் 45 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இந்த வருடம் மட்டும் சுமார் 20 ஆயிரம் பணியாளர்கள் புதிதாக பணியில் அமர்த்தப் பட உள்ளனர். இதில், 5 ஆயிரம் பேர் தொழில்நுட்ப பணியாளராகவும், ஆயிரத்து 500 பேர் தொழில்நுட்பம் சாராத பணியாளராகவும், விரிவாக்க நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் முதலீடுகளால் மறைமுகமாக 13 ஆயிரம் பணியாளர்களும் பணியமர்த்தப் பட உள்ளனர்.
ரூ.1,200 கோடியில் விரிவாக்கம்: ஜே.கே. டயர்ஸ்
புதுடில்லி: ஜே.கே. டயர் இண்டஸ்டிரீஸ், அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1,200 கோடி செலவில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதில், ரூ.800 கோடி திட்டச் செலவில், கர்நாடக மாநிலத்தில் புதிதாக அமைக்க உள்ள டயர் தயாரிப்பு தொழிற்சாலையும் அடங்கும். இது குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் அருண் பஜோரியா கூறும்போது, 'நிறுவனத்தின் ரேடியல் டயர்கள் தயாரிப்பு திறன் ஆண்டுக்கு 4 லட்சம் என்ற அளவிலிருந்து 8 லட்சமாக அதிகரித்துள்ளது. அண்மையில் ரூ.315 கோடி முதலீட்டில் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் போன்றவற்றிற்கான ரேடியல் வகை டயர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனாலேயே ரேடியல் டயர்கள் தயாரிப்பு திறன் அதிகரித்துள்ளது'' என்று தெரிவித்தார்.
ஐ.எப்.சி.ஐ., நிகர லாபம் 30% அதிகரிப்பு
மும்பை: ஐ.எஃப்.சி.ஐ. நிறுவனத்தின் நிகர லாபம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில், ரூ.136.35 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே மூன்றாவது காலாண்டை விட 30.50 சதவீதம் அதிகமாகும்.
இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.353.22 கோடியிலிருந்து ரூ.385.07 கோடியாக அதிகரித்துள்ளது.
டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலத்தில், இந்நிறுவனத்தின் நிகர லாபம், சென்ற ஆண்டின் இதே காலத்தை விட 19.60 சதவீதம் குறைந்து ரூ.514.51 கோடியிலிருந்து ரூ.427.61 கோடியாக குறைந்துள்ளது.
பி.எஸ்.என்.எல்., திணறல்: மன்மோகன் நடவடிக்கை
புதுடில்லி: அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் நிதி நிலைமை மோசமடைந்து வருவதாலும், தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க திணறுவதாலும், இது தொடர்பான பிரச்னைகளை ஆராயவும், அவற்றை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வழங்கவும், சாம்பிட்ரோடா தலைமையில் உயர்மட்டக் கமிட்டி ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது. பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களின் செயல்பாடுகளை பரிசீலிக்க, கடந்த வாரம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டது. கமிட்டியில் சாம்பிட்ரோடா தவிர, தீபக் பரேக் என்பவரும் உறுப்பினராக இடம் பெற்றுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளதாவது: பி.எஸ்.என்.எல்., நிறுவனம் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. அதன் நிதி நிலைமையும் மோசமாக இருப்பதால், நிறுவனத்தின் குறுகிய கால மற்றும் நீண்ட கால பிரச்னைகளைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். பிட்ரோடா தலைமையிலான கமிட்டி, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், 35 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஜி.எஸ்.எம்., விரிவாக்கத் திட்டம் பற்றியும் பரிசீலிக்கும். இவ்வாறு பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
SENSEX : 35962.93 * 33.29 (0.09 %)
6 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக