பெங்களூர்: இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போஸிஸ் லாபம் இந்த மூன்றாவது காலாண்டில் 3.6 சதவீதம் குறைந்துள்ளது.
இன்போஸிஸ் நிறுவனத்தின் அக்டோபர்- டிசம்பர் காலாண்டுக்கான இருப் புநிலைக் குறிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி இந்த காலாண்டில் ரூ.1,582 கோடி லாபம் ஈட்டியுள்ளது இன்போசிஸ். இது கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் ஈட்டிய லாபத்தை விட இது 3.6 சதவீதம் குறைவாகும்.
இந்த நிறுவனத்தின் மொத்த வருமானமும் 0.8 சதவீதம் குறைந்து ரூ.5,741 கோடியாக உள்ளது.
அதே நேரம் சர்வதேச நிதிக் கட்டுப்பாட்டு அமைப்பு, இன்போஸிஸ் நிகர லாபம் 0.6 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் ரயில் பாதை அமைக்கும் இந்தியா!
கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ரயில்வே லைன் அமைக்கிறது இந்தியா. இதற்கான ஒப்பந்தம் கொழும்பில் கையெழுத்தானது.
ஈழப் போர் நடந்த பிரதேசங்களான, ஓமந்தையிலிருந்து பலாலி வரை இந்த ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இந்திய அரசுக்கு சொந்தமான IRCON இந்த கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும்.
இலங்கையில் உள்ள இந்தியத் தூதர் அசோக் கே காந்தா மற்றும் இலங்கை போக்குவரத்துத் துறை அமைச்சர் டல்லஸ் அலப்பெருமா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை வடக்குப் பகுதியைச் சீரமைக்க இலங்கைக்கு இந்தியா வழங்கும் 425 மில்லியன் டாலர் உதவியின் ஒரு பகுதி இந்த ரயில் பாதை அமைப்புப் பணி என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே, சுனாமியால் பாதிக்கப்பட்ட இலங்கையின் தெற்குப் பகுதியிலும் இரு ரயில் பாதைகளை அமைத்து வருகிறது இந்தியா, இதில் கொழும்பு - கலுத்தாரா மார்க்க பாதை முடிவடையும் நிலையில் உள்ளது. மற்றொரு பாதை கொழும்பு - மாத்தரா இடையே வேகமாக நடந்து வருகிறது.
'இலங்கையின் பொருளாதாரம் மற்றும் கட்டமைப்பு முழுமையாக சீராகும் வகையில் இந்தியாவின் உதவி தொடரும். வடக்குப் பகுதியை முழுமையாக சீரமைக்க இந்தியா பாடுபடும், உதவிகள் செய்யும்' என்றார் இந்தியத் தூதர் அசோக் கே காந்தா.
விளம்பரம்...: டாடா ஸ்கை - ஏர்டெல் லடாய்!
டெல்லி- டிடிஎச் இணைப்பில் முன்னணி வகிக்கும் டாடா ஸ்கை நிறுவனம் தனது போட்டியாளரான ஏர்டெல் மீது இந்திய விளம்பரங்கள் கண்காணிப்பு கவுன்சிலிடம் (ASCI)புகார் செய்துள்ளது.
ஏர்டெல்லின் டிஜிட்டல் விளம்பரங்கள் டாடா ஸ்கை பற்றி தவறாக சித்தரிப்பதாகவும், வாடிக்கையாளர்களை திசை திருப்புவதாகவும் உள்ளதாக இந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
தில் டிட்லி எனும் பெயரில் ஒளிபரப்பாகும் இந்த விளம்பரத்தில் கரீனா கபூரும், சாயிப் அலிகானும் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 2009-லிருந்து ஒளிபரப்பாகி வருகிறது. எம்பெக் 4 மற்றும் DVBS2 தொழில்நுட்பத்துடன் ஏர்டெல் டிடிஎச் வழங்கப்படுவதாக அந்த விளம்பரம் கூறுகிறது.
"இதனால் எம்பெக் 4 என்பது உயர்ந்த தொழில்நுட்பம் என்ற தவறான தகவலை ஏர்டெல் பரப்புகிறது. உண்மையில் எம்பெக் மூலம், அலைக் கற்றைகள் மேலும் இறுக்கப்படுகின்றன. அவ்வளவுதான். அது எப்படி உயர்ந்த தொழில்நுட்பமாகும்... படம் தெளிவாகத் தெரியவும் வாய்ப்பில்லை. நாங்கள் எங்களது வாடிக்கையாளர்களுக்கு இதையெல்லாம் ஒவ்வொரு முறையும் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
எனவே இந்த விளம்பரம் தடுக்கப்பட வேண்டும்" என்று டாடா ஸ்கை கூறியுள்ளது.
இந்தப் புகாரை ஏற்றுக் கொண்ட விளம்பரக் கட்டுப்பாட்டு கவுன்சில் ஏர்டெல்லுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த புகாரில் உண்மையிருப்பதாகவும், அந்த விளம்பரம் ஏன் தடுக்கப்படக் கூடாது என்றும் ஏர்டெல்லிடம் விளக்கம் கேட்டுள்ளது விளம்பர கட்டுப்பாட்டு கவுன்சில்.
இதுபற்றி கேட்டதற்கு, இப்படியொரு நோட்டீஸ் வந்தது உண்மைதான் என்றும், அதற்கு தக்க பதில் தந்துள்ளோம் என்று ஏர்டெல் விளக்கம் அளித்துள்ளது.
இந்திய உற்பத்தித் துறையை அழிக்கும் சீனா - எல் அண்ட் டி
சூரத்: இந்திய உற்பத்தித் துறையை திட்டமிட்டு அழிக்கப் பார்க்கிறது சீனா என கூறியுள்ளது புகழ்பெற்ற எல் அண்ட் டி நிறுவனம்.
ஹாஸிராவில் எல் அண்ட் டியும், இந்திய அரசின் அணுசக்தி கழகமும் இணைந்து ரூ 1750 கோடியில் புதிய தொழிற்சாலையை உருவாக்குகின்றன.
இந் நிறுவன புதிய அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அதன் தலைவர் நாயக் கூறுகையில், "சீனப் பொருள்களை இருப்பு வைத்தால் அதற்கு 25 சதவிகிதம் அளவு வரி விதிக்கிறது சீனா. இதனால் அவற்றை கட்டாயம் பயன்படுத்தியே தீர வேண்டும் என்பதால் இந்தியப் பொருள்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக இந்திய உற்பத்தித் துறையை அழிக்கும் செயல்," என்று தெரிவித்தார்.
"இன்னொரு முக்கியமான விஷயம், நம்மைப்போல மாறும் மதிப்பு கொண்ட கரன்ஸி கிடையாது சீனாவுக்கு. மார்க்கெட் பொருளாதாரமும் கிடையாது. உள்நாட்டில் உற்பத்தி ஆகும் பொருளுக்கு இங்கே வரி விதிக்கிறார்கள். ஆனால், சீனத்து இறக்குமதிகளுக்கு அந்த வரிகள் இல்லை. இதனால்தான் சீனப் பொருள்களுக்கு anti-dumping duty என்ற பெயரில் 25 சதவிகித வரி வசூலிக்கப்படுகிறது. இது நியாயமற்ற ஒரு வணிக நிலை.
குறிப்பாக மின் உற்பத்தித் துறையில் பயன்படும் பெரும்பாலான கருவிகள் இப்போது சீனாவிலிருந்தே வருகின்றன. அப்புறம் எப்படி இந்திய நிறுவனங்களின் உற்பத்தி அதிகரிக்கும்...? சொல்லப் போனால் இந்தியாவுக்காகவே இயங்குகின்றன, சீனாவின் 80 சதவிகித மின்கருவி உற்பத்தி தொழிற்சாலைகள்!
இது நல்லதல்ல... நாட்டின் மின் உற்பத்தி சாதனங்களை கிட்டத்தட்ட முழுமையாக சீனாவில் வாங்கினால், இந்திய நிறுவனங்களுக்கு என்ன வேலையிருக்கிறது..!", என்றார் நாயக்.
பணியாளர் வேட்டையில் ஐஓசி-எல்அண்ட்டி
மும்பை: இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன் (ஐஓசி) நிறுவனம் தனது பொறியியல் பிரிவில் காலியாக உள்ள 250 பணியிடங்களை இந்த ஆண்டில் நிரப்ப திட்டமிட்டுள்ளது.
இந்தியன் ஆயில் இயக்குனர் (ஹெச்.ஆர்) மும்பையில் இதுபற்றி கூறுகையில், 'நாட்டில் உள்ள 10 சுத்திகரிப்பு நிலையங்களிலும் புதிய பணியாளர்களை பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் 250 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களில் 200 பேர் பொறியாளர்களாக இருப்பார்கள். நடப்பு நிதியாண்டில் ஏற்கனவே பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து 350 பேரை தேர்வு செய்து பயிற்சி அளித்துவருகிறோம்.
சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட், மேலாண்மை, விஞ்ஞான ஆய்வாளர்கள் போன்ற பல மட்டங்களில் மாணவர்களை தேர்வு செய்தோம். அவர்கள் அனைவரும் பயிற்சி முடிந்து ஜூன் மாதம் பணியில் சேருவார்கள்' என்றார்.
பொதுத்துறையின் 'நவரத்தின் நிறுவன'ங்களில் 'மஹாரத்னா' அந்தஸ்த்தில் உள்ள ஐஓசி தற்போது 34 ஆயிரத்து 158 பணியாளர்களுடன் இயங்கிவருகிறது.
ஐஓசி பணியாளர்களுக்கு இந்தாண்டு 15 சதவீத ஊதிய உயர்வு மற்றும் போனஸ் அதிகரிப்பை அறிவிக்க உள்ளதாகவும் அகர்வால் தெரிவித்தார்.
20,000 பணியிடங்களை உருவாக்கும் 'எல்ஆண்ட்டி':
இதேபோல் கட்டுமானத் துறையில் முன்னணி நிறுவனமான எல்அண்ட்டியும் அடுத்த 12 மாதங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 20,000 பணியிடங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது.
தற்போது எல்அண்ட்டி குழுமத்தில் மொத்தம் 45,000 பனியாளர்கள் உள்ளனர். இந்தாண்டில் புதிதாக தொழில்நுட்ப பணியாளர்கள் 5,000 பேர், தொழில்நுட்பம் சாராத பணியாளர்கள் 1,500 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர்.
மேலும் இந்நிறுவனத்தின் விரிவாக்க நடவடிக்கைகள் மற்றும் கூடுதல் முதலீடுகளால் மறைமுகமாக 13 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலான பணியிடங்கள் வதோதரா மற்றும் குஜராத்தின் ஹாஸிரா பகுதியில் அமையும் என எல்அண்ட்டி தலைவர் நாயக் தெரிவித்தார்.
பன்னாட்டு நிறுவனங்களால் 4 கோடி சிறுவணிகர்கள் பாதிப்பு
கடலூர்: சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளித்ததால், இந்தியாவில் 4 கோடி சிறு வணிகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக சி.ஐ.டி.யூ அகில இந்தியத் தலைவர் எம்.கே.பாந்தே தெரிவித்தார்.
இந்தியாவில் சில்லறை வணிகத் துறையில் நேரடியாக ஈடுபட்டுவரும் 4 கோடி மக்கள் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள 20 கோடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டை தடுக்க தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன.
குறிப்பாக பலசரக்குகள், பழங்கள், காய்கறிகள் வணிகத்தில் உள்நாட்டு பெரிய கார்ப்போரேட் நிறுவனங்களோ, வெளிநாட்டு சில்லறை வணிக நிறுவனங்களோ முதலீடு செய்ய தடை விதிக்கவேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது.
இப்பிரச்னை குறித்து ஆய்வுசெய்ய நாடாளுமன்ற உறுப்பினர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 30 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது.
இக்குழு, சில்லறை வணிகத் துறையைப் பாதுகாக்க, சிறு மற்றும் நடுத்தர சில்லறை வணிகர்கள் சட்டம் விரைவில் இயற்றப்படவேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில் சி.ஐ.டி.யூ மாநில மாநாட்டு பொதுக்கூட்டம் கடலூரில் நடந்தது. கூட்டத்தில் எம்.கே.பாந்தே கலந்துகொண்டு பேசுகையில், 'வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களை சில்லறை வணிகத்தில் அனுமதித்ததால், 4 கோடி சில்லறை வணிகர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மத்திய அரசின் கையிருப்பில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் லாபப் பணம் ரூ 4.5 லட்சம் கோடியைக் கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களை மேம்படுத்தலாம்.
சுதந்திரமான பொருளாதாரத்தை வளர்ப்பதை விட்டுவிட்டு மத்திய அரசு, அன்னிய நிறுவனங்களை உள்ளே அனுமதிப்பது தவறு' என்றார்.
'வேலை நேரம் 6 மணிநேரமாக வேண்டும்':
சி.ஐ.டி.யூ அகில இந்தியத் துணைத் தலைவர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில், 'விலைவாசி உயர்வால் மக்கள் தத்தளித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
காரணம் கேட்டால் உலகம் முழுவதும் விலைவாசி உயர்ந்து இருப்பதாக பிரதமர் கூறுகிறார். நிதி அமைச்சரோ விலைவாசி உயர்வுக்கு மாநில அரசுகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்.
அடுத்த ஆண்டு ஒரு கிலோ சர்க்கரை ரூ. 75க்கு விற்பனை ஆகும் நிலை ஏற்படும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் முயற்சி செய்யவில்லை.
தொழிலாளர்களின் வேலை நேரத்தை 6 மணி நேரமாகக் குறைப்பதுதான் தி.மு.க.வின் லட்சியம் என்று தி.மு.க.வினர் சொன்னார்கள். ஆனால் இப்போது 8 மணி நேர வேலை என்பது இப்போது 12 மணி நேரம் ஆகிவிட்டது.
தமிழகத்தில் அ.தி.மு.க, தி.மு.க. இல்லாத இடதுசாரி ஆட்சியை உருவாக்க தொழிற்சங்கங்கள் பாடுபட வேண்டும். மீனவர்களைப் பாதுகாக்க பிப்ரவரி 2ம் தேதி ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்த இருக்கிறோம்' என்றார்.
பார்வையற்றோர் பணம் எடுக்க 'குரல் ஆணை' ஏடிஎம்கள்!
மும்பை: பார்க்க கண்களிருக்கின்றன, எடுக்க கைகளும் உள்ளன... ஏடிஎம் போய் பின் நம்பர்களைத் தட்டியதும் கொட்டும் பணத்தை எடுத்து வருகிறோம்... இதுவே பார்வையற்ற, உடல் குறைபாடு கொண்டவர்கள் என்ன செய்வார்கள்?
யாரையாவது துணைக்கு அழைத்துப் போய்தான் தங்களுக்குத் தேவையான பணத்தை எடுக்க வேண்டும். எப்போதும் நம்பகமான மனிதர்கள், உறவினர்கள் இருக்க வேண்டியது அவசியம்.
ஆவர்கள் யார் துணையும் இல்லாமல், தாங்களே ஏடிஎம் மையத்துக்குப் போய், தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துக் கொள்ள முடியாதா...?
முடியும் என்கிறது பாரத ஸ்டேட் வங்கி. அதற்கேற்ப புதிய ஏடிஎம் கருவியை நிறுவும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.
வருகிற பிப்ரவரி மாதம் முதல் அநேகமாக இந்தப் பணி முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு 7000 எஸ்பீஐ ஏடிஎம்களில் பார்வையற்றோர் தங்கள் குரல் ஆணை மூலமே பணத்தைப் பெறலாம்.
மும்பையில் நடந்த சிஐஐ செமினாரில் இதனைத் தெரிவித்தார் இந்த வங்கியின் பொது மேலாளர் (மாற்று வழி) அமிதாப் குமார்.
என்சிஆர் மற்றும் டைபோல்ட் நிறுவனங்கள் இதனை வடிவமைக்கும் பணியில் இறங்கியுள்ளனவாம்.
எஸ்பீஐ பெறும் வெற்றியைப் பொறுத்த மற்ற வணிக வங்கிகளும் தங்கள் ஏடிஎம்களில் இந்த வசதியை செய்யக் கூடும்.
இன்று கிழிந்த நோட்டை மாற்றலாம்!-இந்தியன் வங்கி ஏற்பாடு
சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இன்று ஒரு நாள் முழுக்க கிழிந்த நோட்டு மாற்றும் சிறப்பு முகாம் நடக்கிறது.
ரிசர்வ் வங்கின் பவள விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது இந்தியன் வங்கி.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து இந்தியன் வங்கி கிளைகளிலும் செவ்வாய்க்கிழமை மாலை வரை இந்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
சென்னை துறைமுகம், சேத்துபட்டு, தியாகராயநகர், கோவை மெயின், ஈரோடு, கடலூர், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், கும்பகோணம், தஞ்சாவூர், மதுரை மெயின், திருப்பத்தூர் (சிவகங்கை), விழுப்புரம், சேலம் கோட்டை, திருச்சி மெயின், திருப்பத்தூர் (வேலூர்), ராணிப்பேட்டை, திருநெல்வேலி ஜங்ஷன் ஆகிய கிளைகளில் கிழிந்த நோட்டுக்கு பதில் சில்லரை நாணயங்களையும் மாற்றிக் கொள்ளலாம் என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.
வாகன கண்காட்சியில் கலக்கிய பைக்குகள்
புதுடில்லி: டில்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில், கார் நிறுவனங்களுக்கு இணையாக, பைக் நிறுவனங்களும் தங்களின் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி அசத்தின.
அதன் விவரம் வருமாறு:
ஹார்ட்லி டேவிட்சன்: அமெரிக்காவின் ஹார்ட்லி டேவிட்சன் பைக்குகள் என்றால், உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு உண்டு. விலை அதிகமான சொகுசு பைக்குகளை விற்பனை செய்து வரும் ஹார்ட்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவிலும் காலடி எடுத்து வைத்துள்ளது. இந்நிறுவனம், ரூ.6.95 லட்சம் முதல் ரூ.34.95 லட்சம் வரை விலை கொண்ட 12 மோட்டார் சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இதன் முன்பதிவு ஏப்ரல் மாதம் துவங்குகிறது. ஜூன் மாதம் முதல் டெலிவரி துவங்குகிறது. டில்லி கண்காட்சியில் இந்நிறுவனம், 'ஃபேட் பாய், நைட் ரோடு' என்ற பெயர்களை கொண்ட இரண்டு பைக்குகளை அறிமுகப்படுத்தி அசத்தியது.
ஹீரோ எலக்ட்ரிக்: ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனம் டில்லி கண்காட்சியில் மூன்று, எலக்ட்ரிக் மாடல்களை அறிமுகப்படுத்தியது. இ- ஸ்பிரின்ட், ஆப்டிமா பிளஸ் மற்றும் ஜிப்பி என்ற பெயர்களில் அறிமுகமாகியுள்ள இந்த வாகனங்களின் விலை ரூ.17 ஆயிரத்து 900 முதல் ரூ.32 ஆயிரத்து 796 வரை உள்ளது. மேலும், ஒரு மணி நேரத்தில் இந்த வாகனங்களை சார்ஜ் செய்யும் அளவுக்கு சார்ஜிங் பாயின்ட்களை நிறுவவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ஹோண்டா: ஹோண்டா மோட்டார் சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், டில்லி கண்காட்சியில், 6 புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 102 சிசி திறன் கொண்ட தியோ ஸ்கூட்டர், 110 சிசி திறன் கொண்ட சிபி டிவிஸ்டர், 125 சிசி திறன் கொண்ட சி.பி.எஃப்., ஸ்டன்னர் ஆகிய இரு பைக்குகள் உட்பட ஆறு புதிய மாடல் வாகனங்களையும் அதிகளவில் உற்பத்தி செய்ய இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
பஜாஜ் ஆட்டோ பைனான்ஸ் நிகரலாபம் 2 மடங்கு உயர்வு
மும்பை: பஜாஜ் ஆட்டோ பைனான்ஸ் நிறுவனத்தின், டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டு நிகரலாபம், இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மூன்றாம் காலாண்டு நிகரலாபம் 27.32 கோடி ரூபாயாக இரண்டு மடங்கு அதிகரித்து உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த வருமானம் 2008ம் ஆண்டு டிசம்பர் 31ல் 157.45 கோடி ரூபாயாக இருந்தது. இது 2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் மொத்த வருமானம் 249.31 கோடி ரூபாயாக இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டாடாவின் புதிய ரக கார் 'கிராண்டே எம்கே 2'
புதுடில்லி: புதிய ரக கார்களை அறிமுகம் செய்வதில் உள்நாட்டு நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் போட்டி போட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் ப்ரீமியம் சுமோ வாகனத்தின் மேம்பட்ட மாடலான 'கிராண்டே எம்கே 2'வை அறிமுகப்படுத்தி உள்ளது.
இவ்வகை காரின் உள்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர வாகனம் ஓட்டுவதிலும், பயணம் செய்வதிலும், கையாள்வதிலும், இருக்கை வசதியிலும் பல மாறுதல், முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வெளிப்புறத்துக்கு புதிய குரோம் லைன்டு கிரில், குரோம் இன்செர்ட்டுடன் கூடிய சைட் ரப் ரெயில்ஸ், ஓஆர்விஎம்கள் மீதான இண்டிகேட்டர்கள் உள்ளிட்ட புதிய அம்சங்கள் தனி அழகை காருக்கு தருகின்றன. உள்புறம் முற்றிலும் புதிய தோற்றத்தை கொடுக்கும் வகையில் நவீன தோற்றத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பாக்ஸ் வுட் சென்டர் கன்சோல், புதிய பேப்ரிக் அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியன உள்புறத்துக்கு அழகு சேர்த்துள்ளன.
மாற்றியமைக்கப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு, வசதியான பயணத்தை உறுதி செய்கிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் வரிசையில் அமர்ந்துள்ள பயணிகளுக்கு நல்ல சொகுசான பயணத்தை அளிக்கிறது. கார்னரிங் சமயத்தில் பாடி ரோலை குறைக்கும் வகையில் ஆண்டி ரோல் பார்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஸ்டீயரிங் வீல், ப்ளோட்டிங் ஹார்ன், பிடிமானத்துக்கான சி பில்லர் மீது கைப்பிடி வசதி மற்றும் இன்னர்டோர் ஹேண்டில்ஸ் சிறிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளன.
பழைய கிராண்டே மாடலில் உள்ள டுயர் ஹெச்விஏசி, ரூப் இண்டகரேடட் லுவர்ஸ், மோட்டாரைஸ்டு ஓஆர்விஎம், டிரைவர் சீட்டின் உயரத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் வசதி, அதி நவீன சிடி, எம்பி3, மியூசிக் சிஸ்டம் போன்ற தனிச்சிறப்புகள் இவ்வகை மாடலில் தொடர்கிறது. காரில் அதிகபட்சமாக எட்டு பேர் வரை பயணிக்கலாம்.
பீஜ், பிளாக், ரெட், கிரே, சில்வர், கோல்டு, ஒயிட் போன்ற நிறங்களில் கிராண்டே கார்கள் உள்ளன. இதன் விலை 6.48 லட்சம் முதல் 7.56 லட்சம் ரூபாய் வரை உள்ளது. இரண்டு ஆண்டு உத்தரவாதம் அல்லது 75 ஆயிரம் கிலோ மீட்டர் வரை உத்தரவாதம் உண்டு. வாரண்டி நீடிப்பு திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்வதன் மூலம் மேலும் இரண்டு ஆண்டுக்கு வாரண்டி காலத்தை நீட்டித்துக் கொள்ள முடியும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து டாடா நிறுவன டீலர்களிடமும் 'கிராண்டே எம்கே 2' கார்கள் தற்போது விற்பனையில் உள்ளன.
நவம்பர் மாதத்துக்கான தொழிற்துறை வளர்ச்சி 11.7%ஆக அதிகரிப்பு
புதுடில்லி : 2009 நவம்பர் மாதத்துக்கான தொழிற்துறை வளர்ச்சி 11.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்துக்கான வளர்ச்சி விகிதத்தை விட 1.4 சதவீதமாக அதிகம் என தெரிவிக்கிறது. ஆனால், கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் இது வெறும் 2.5 சதவீதமாகவே இருந்தது.
SENSEX : 35962.93 * 33.29 (0.09 %)
6 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக