நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் சென்செக்ஸ் கணக்கிடும் நிறுவனங்களில் அன்னிய பங்கு மூலதனம் அதிகரிப்பு
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
அன்னிய நிதி நிறுவனங்கள், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிறுவனங்களின் செயல்திறன் மீது நம்பிக்கை வைத்துள்ளன. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் Ôசென்செக்ஸ்Õ கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள் 19 நிறுவனங்களில், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர் & டிசம்பர்), அன்னிய நிதி நிறுவனங்கள் கொண்டுள்ள பங்கு மூலதன அளவு அதிகரித்துள்ளது.
ஹீண்டால்கோ இதற்கு சான்றாக, தாமிரம் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும், ஆதித்ய பிர்லா குழுமத்தைச் சேர்ந்த ஹீண்டால்கோ நிறுவனத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு மேற்கொண்டுள்ளதை கூறலாம். நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள் கொண்டிருந்த பங்கு மூலதன அளவு 16.39 சதவீதமாக இருந்தது. இது, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் 8 சதவீதம் அதிகரித்து 24.39 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ண்டால்கோ நிறுவனம், தாமிரம் உற்பத்தியில், இந்தியாவில் முதல் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தொழில் துறை நடவடிக்கைகளில் ஏற்பட்டு வரும் விறுவிறுப்பால், உலோகத் துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் வாகனங்கள்
நாட்டில் கார்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் விற்பனையில் எழுச்சி ஏற்பட்டு வருகிறது. இதனை உறுதிபடுத்துகின்ற வகையில், சென்ற ஜனவரி மாதத்தில் மோட்டார் வாகனங்கள் விற்பனை 11 லட்சம் எண்ணிக்கையை தாண்டி, இந்திய மோட்டார் வாகனத் துறை வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் உருவாகி உள்ளது. நாட்டில், மோட்டார் வாகனங்கள் தயாரிப்பில் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தில் அன்னிய நிதி நிறுவனங்கள் சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 11.25 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டிருந்தன. இது, டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 15.67 சதவீதமாக உயர்ந்துள்ளது.
வங்கிகள்
இந்தியாவில், வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இதனால்தான் கடந்த 2008&ஆம் ஆண்டில், உலக அளவில், வங்கித் துறையில் கடும் பாதிப்பு ஏற்பட்ட போதும், இந்திய வங்கிகள் நல்ல அளவில் லாபம் ஈட்டி திறம்பட செயல்பட்டன. இந்தியாவில் பொதுத் துறையைச் சேர்ந்த பாரத ஸ்டேட் வங்கி மிகப் பெரிய வங்கியாக திகழ்கிறது. இவ்வங்கியில், அன்னிய நிதி நிறுவனங்கள் கொண்டிருந்த பங்கு மூலதனமும் இதே காலத்தில் 1.5 சதவீதம் உயர்ந்து 11.37 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில், தொழில் துறையில் ஏற்பட்டு வரும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியால், சென்ற 2009&ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், முக்கிய நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதன அளவை உயர்த்தி உள்ளன என்று சி.என்.ஐ. ரிசர்ச் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கிஷோர் பி.ஆஸ்த்வால் தெரிவித்தார்.
பங்கு வர்த்தகம்
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட உருக்குலைவால், கடந்த 2008&ஆம் ஆண்டில், நாட்டின் பங்கு வர்த்தகத்தில் கடும் சரிவு ஏற்பட்டது. அவ்வாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டிலிருந்து ரூ.52,900 கோடி நிகர மதிப்பிற்கு பங்குகளை விற்பனை செய்தன.
இதன் பிறகு, சென்ற 2009&ஆம் ஆண்டில், நாட்டின் பங்கு வர்த்தகம் மிகவும் நன்றாக இருந்தது. அவ்வாண்டில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு Ôசென்செக்ஸ்Õ ஒரே ஆண்டில் 80 சதவீதம் அதிகரித்து இருந்தது. இவ்வாண்டில், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில் ரூ.80,500 கோடி நிகர மதிப்பிற்கு முதலீடு மேற்கொண்டிருந்தன.
பராக் ஒபாமா
இந்நிலையில், நடப்பு 2010&ஆம் ஆண்டில், இதுவரையிலுமாக, நாட்டின் பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. Ôசென்செக்ஸ்Õ, இவ்வாண்டில், சென்ற 18 வர்த்தக தினங்களில் 7.51 சதவீதம் சரிவடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்க வங்கிகளின் முதலீட்டு நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் என்று இவ்வாண்டு தொடக்கத்தில் ஓர் அறிக்கையை வெளியிட்டார். இதனால், அமெரிக்காவிலுள்ள வங்கிகளால் ஈட்டப்படும் லாபம் குறையலாம் என்ற நிலை உருவானது. கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுக்கல் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில், கடந்த 19 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. சீனாவும், அந்நாட்டில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளது. இதுபோன்ற வெளிப்புற காரணிகளால், நாட்டின் பங்கு வர்த்தகம் தற்போது மந்தமாக உள்ளது.
முதலீடு
இந்நிலையிலும், கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 3,000 நிறுவனப் பங்குகளில், நடப்பு ஆண்டில், இதுவரையிலான காலத்தில் 1,370 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. அதாவது, 100 நிறுவனங்களில், 46 நிறுவனங்களின் பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. எனவே, வரும் மாதங்களில், இந்திய நிறுவனப் பங்குகளில், அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை, அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கு முதலீட்டில் விறுவிறுப்பு இருக்காது என்று பங்கு வர்த்தக நிபுணர் ஒருவர் தெரிவித்தார்.
ஏற்றுமதி சலுகைகள் மத்திய பட்ஜெட்டிற்கு பிறகு மறு ஆய்வு செய்யப்படும்
அமிதி சென்
புதுடெல்லி
கடந்த 2008&ஆம் ஆண்டின் பிற்பகுதியிலிருந்து உலகின் பல்வேறு நாடுகளில் பொருளாதாரம் மிகவும் பாதிப்புக்குள்ளானது. இதனால், நம் நாட்டின் ஏற்றுமதி மிகவும் சரிவடைந்து போனது.
வளர்ச்சி பாதை
இதனை கருத்தில் கொண்டு, மத்திய வர்த்தக அமைச்சகமும், நிதி அமைச்சகமும், ஏற்றுமதியாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கின. தற்போது, உலகின் பல நாடுகளின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி உள்ளதால், நாட்டின் ஏற்றுமதி கடந்த மூன்று மாதங்களாக அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. மத்திய அரசின் இந்த ஏற்றுமதி சலுகை திட்டங்கள் நடப்பு 2010&ஆம் ஆண்டு மார்ச் 31&ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், மத்திய அரசு, ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கி வரும் சலுகைகளை நீட்டிப்பது குறித்து ஆய்வு செய்து வருகிறது. இருப்பினும், தற்போதைய நிலையில், இச்சலுகைகள் விலக்கிக் கொள்ளப்பட மாட்டாது என்றும், வரும் மத்திய பட்ஜெட் அறிவிப்பிற்கு பிறகே இது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் மத்திய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏற்றுமதி
நாட்டின் ஏற்றுமதி சரிவடைந்ததை கருத்தில் கொண்டு, ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மத்திய அரசு குறைந்த வட்டியில் ஏற்றுமதி கடன்களையும், பல்வேறு வரிச் சலுகைகளையும் வழங்கியது. இதனால், ஏற்றுமதியாளர்களுக்கு ஓரளவிற்கு பலன் கிடைத்து வருகிறது. இருப்பினும், வரிச் சலுகைகளால், அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்பதையும் மத்திய அரசு கவனத்தில் கொண்டுள்ளது.
அரசின் ஏற்றுமதி சலுகைகளால், பழங்கள், காய்கறிகள், கடல் உணவு பொருள்கள், துணி வகைகள், புகையிலை போன்ற பொருள்களின் ஏற்றுமதி மிகவும் சிறப்பாக வளர்ச்சி கண்டுள்ளது. மேலும், நவரத்தினங்கள், ஆபரணங்கள், மருந்து பொருள்கள், பிளாஸ்டிக் மற்றும் பெட்ரோலிய பொருள்களின் ஏற்றுமதியிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால், பொறியியல், சணல், மிதியடிகள், கைவினை பொருள்கள், தோல் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதி மிகவும் பின்தங்கியே உள்ளது. இவற்றையெல்லாம் ஆய்வு செய்து, எந்தெந்த துறைகளுக்கு சலுகைகள் நீட்டிக்கப்பட வேண்டும், எந்தெந்த துறைகளுக்கான சலுகைகளை விலக்கிக் கொள்வது என்பது குறித்து பட்ஜெட்டிற்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரூ.2,000 கோடி
நடப்பு 2009&10&ஆம் ஆண்டில், ஏற்றுமதி சலுகைகள் வழங்கப்பட்ட வகையில், அரசுக்கு வருவாயில் ரூ.2,000 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கிய நிலையில், சென்ற மாதம், மத்திய வர்த்தக அமைச்சகம் கூடுதலாக 2,000 பொருள்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் ரூ.400 கோடி மதிப்பிற்கு சலுகைகளை வழங்கியது.
பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆப்பிரிக்காவில் கால் பதிக்க மீண்டும் முயற்சி
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி / மும்பை
சுனில் மிட்டல் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் பார்தி ஏர்டெல், செல்போன் சேவையில், வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில், இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. ஆப்பிரிக்காவில் செல்போன் சேவைத் துறை அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே, இந்நிறுவனம், ஆப்பிரிக்காவில் கால் பதிக்க மீண்டும் முயற்சி செய்து வருகிறது.
பேச்சுவார்த்தை
இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், குவைத் நாட்டைச் சேர்ந்த, தொலை தொடர்புச் சேவையில் ஈடுபட்டு வரும் Ôசயின்Õ நிறுவனத்தின் ஆப்பிரிக்க செல்போன் சேவை பிரிவின் பெரும் பகுதியை 1,070 கோடி டாலர் (ரூ.49,700 கோடி) மதிப்பிற்கு வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதற்கு Ôசயின்Õ நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பார்தி ஏர்டெல் நிறுவனம், தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த எம்.டி.என். நிறுவனத்தை கையகப்படுத்த இரண்டு முறை முயற்சி செய்தது. ஆனால், இம்முயற்சி தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், Ôசயின்Õ நிறுவனத்தின் ஆப்பிரிக்காவில் உள்ள செல்போன் சேவைப் பிரிவை வாங்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, பார்தி ஏர்டெல் நிறுவனம் ஐந்து நாடுகளில் செயல்பாடுகளை கொண்டுள்ளது. Ôசயின்Õ நிறுவனம் 15 நாடுகளில் செயல்பாடுகளை கொண்டுள்ளது. ஆக, Ôசயின்Õ நிறுவனத்தை கையகப்படுத்தும் நிலையில், ஏர்டெல் நிறுவனத்தால் 20&க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் காலூன்ற முடியும். சயின் நிறுவனத்திற்கு, ஆப்பிரிக்காவில் 4.01 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். எனவே, செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் 16.50 கோடியாக உயர்ந்துவிடும்.
பங்கின் விலை
அதேசமயம், ஆப்பிரிக்க செல்போன் சேவை பிரிவை கையகப்படுத்துவதால், பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் நிதி நிலையில் பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, திங்கள்கிழமை அன்று, இந்நிறுவனப் பங்கின் விலை 9.22 சதவீதம், அதாவது ரூ.29 குறைந்து ரூ.285.40&ஆக இருந்தது.
மும்பை & தேசிய பங்கு சந்தைகள் பட்டியலில் சின்காம் ஹெல்த்கேர், வாஸ்கான் இன்ஜினீயர்ஸ்
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
அண்மையில் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களம் இறங்கிய சின்காம் ஹெல்த்கேர் மற்றும் வாஸ்கான் இன்ஜினீயர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் பங்குகள் திங்கள்கிழமை அன்று மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டன.
மூலதனச் சந்தை
இவற்றுள், சின்காம் ஹெல்த்கேர் நிறுவனம், மருந்துகள் தயாரிப்பு மற்றும் சந்தைபடுத்துதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், பங்கு ஒன்றை ரூ.75 என்ற விலையில் வெளியிட்டது.
சின்காம் ஹெல்த்கேர் நிறுவனம், உத்ராஞ்சல் மாநிலம் டேராடூனில் உள்ள அதன் மருந்து தொழிற்சாலையை நவீனப்படுத்தி வருகிறது. மேலும், இந்தூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய மருந்து தயாரிப்பு தொழிற்சாலை ஒன்றையும் அமைத்து வருகிறது. இதற்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்வதற்காகவே இந்நிறுவனம் மூலதனச் சந்தையில் களம் இறங்கியது.
மும்பை பங்குச் சந்தையில் இதன் பங்குகள் தொடக்கத்தில், வெளியீட்டு விலையை விட அதிகமாக ரூ.88&க்கு விலை போனது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக ரூ.107.25 வரை சென்று விட்டு, வர்த்தகம் முடியும்போது ரூ.87.85&ல் நிலை பெற்றது.
தேசிய பங்குச் சந்தையில், இதன் பங்கு ஒன்று தொடக்கத்தில் ரூ.89.90&க்கு விலை போனது. பின்பு, வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக ரூ.107.20&க்கு சென்று விட்டு, வர்த்தகம் முடியும்போது ரூ.87.75&ல் நிலை கொண்டது.
பூனாவைச் சேர்ந்த வாஸ்கான் இன்ஜினீயர்ஸ் நிறுவனம், பொறியியல், கட்டுமான சேவைகள் மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், பங்கு ஒன்று ரூ.165 என்ற விலையில் பங்கு வெளியீட்டை மேற்கொண்டது.
மும்பை பங்குச் சந்தை
இதன் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில், திங்கள்கிழமை அன்று பட்டியலிடப்பட்டபோது ரூ.170&க்கு கைமாறியது. பின்பு, வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.173.45 வரை சென்று விட்டு, வர்த்தகம் முடியும்போது, வெளியீட்டு விலையை விட குறைவாக ரூ.147.20&க்கு விலை போனது.
தேசிய பங்குச் சந்தையில், தொடக்கத்தில் ரூ.156&க்கும், அதிகபட்சமாக ரூ.171.95&க்கும் கைமாறிய இதன் பங்குகள், வர்த்தகம் முடியும்போது ரூ.148.05&ல் நிலைபெற்றது
உணவு பொருள்கள் விலை உயர்வால் பணவீக்க விகிதம் 8.56%&ஆக உயர்வு
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
மொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும் அனைத்து பொருள்களுக்கான பணவீக்க விகிதம், சென்ற ஜனவரி மாதத்தில், கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு 8.56 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற டிசம்பர் மாதத்துடன் (7.31 சதவீதம்) ஒப்பிடும்போது இது 1.25 சதவீதம் அதிகமாகும்.
சர்க்கரை
சென்ற கரீஃப் பருவத்தில், தென் மேற்கு பருவமழை கடந்த 37 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமாக இருந்தது. இதனால், சர்க்கரை, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் ஆகியவற்றின் விலை மிகவும் உயர்ந்து இருந்தது.
பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட கடன் கொள்கை ஆய்வு அறிக்கையில், நடப்பு நிதி ஆண்டில், நாட்டின் அனைத்து பொருள்களுக்கான பணவீக்க விகிதம் 8.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பீடு செய்து இருந்தது. சென்ற ஜனவரி மாதத்தில் பணவீக்க விகிதம் இதையும் விஞ்சி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில், சர்க்கரை விலை, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 58.96 சதவீதம் உயர்ந்துள்ளது. உருளைக்கிழங்கு மற்றும் பருப்பு வகைகளின் விலை இதே காலத்தில் முறையே 53.3 சதவீதம், 45.64 சதவீதம் அதிகரித்துள்ளது. சென்ற ஒரு மாதத்தில், துவரம் பருப்பு, கோதுமை ஆகியவற்றின் விலை முறையே 6 சதவீதம், 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
ரூ.36,000 கோடி
உணவு பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதையடுத்து, பாரத ரிசர்வ் வங்கி அண்மையில் வெளியிட்ட கடன் கொள்கை ஆய்வு அறிக்கையில், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை 5 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக உயர்த்தியது. இதனால், வங்கிகள் கூடுதலாக ரூ.36,000 கோடியை பாரத ரிசர்வ் வங்கியில் இருப்பு வைக்க வேண்டிய நிலை உருவாகும். இதனால், இந்த அளவிற்கு நாட்டில் பணப்புழக்கம் குறைந்துவிடும்.
தற்போது பணவீக்க விகிதம் மிகவும் உயர்ந்துள்ளதால், வங்கிகள், பாரத ரிசர்வ் வங்கியிடமிருந்து குறுகிய கால அடிப்படையில் பெறும் கடனிற்கான வட்டி விகிதம் (ரெப்போ ரேட்), மற்றும் வங்கிகள் அவற்றின் உபரி நிதியை பாரத ரிசர்வ் வங்கியில் இருப்பு வைப்பதற்காக வங்கிகளுக்கு வழங்கப்படும் கடனிற்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ ரேட்) உயர்த்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெட்ரோல்
பணவீக்க விகிதம் அதிகரித்து வருவதால், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை மத்திய அரசு தற்போது உயர்த்தாது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
விலை கணிசமாக சரிவடைந்துள்ள நிலையில் முதலீட்டுக்கு ஏற்றவையாக திகழும் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகள்
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
தற்போது பங்குச் வர்த்தகத்தில் கடும் ஏற்றத் தாழ்வுகள் நிலவி வருகின்றன. இதனையடுத்து, ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் பங்குகளின் விலை குறிப்பிடத்தக்க அளவிற்கு சரிவடைந்துள்ளது. எனவே, இதனை வாய்ப்பாக பயன்படுத்தி, சில்லரை முதலீட்டாளர்கள் ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளின் மீது கவனம் செலுத்தலாம் என பங்குச் சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்செக்ஸ்
சென்ற 2009&ஆம் ஆண்டில், மார்ச் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்ற நிலை காணப்பட்டது. வீடுகளுக்கான தேவைப்பாடு அதிகரித்தால் இத்துறை நிறுவனங்களின் செயல்திறன் அதிகரித்தது. இக்காலத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் Ôசென்செக்ஸ்Õ 88.41 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இந்நிலையில், இந்த வளர்ச்சியையும் விஞ்சி ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகளின் விலை ஒட்டுமொத்தத்தில் 227 சதவீதம் உயர்ந்துள்ளது.
இதே காலத்தில் சொத்துக்களின் விலை 10 சதவீதத்திற்கும் மேலான அளவில் உயர்ந்துள்ளது. இதனால் குடியிருப்புகளின் விற்பனை குறைந்தது. குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்கு முன்பிருந்த நிலவரத்துடன் ஒப்பிடும்போது, நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் வீடுகள் விற்பனை 10&15 சதவீதம் குறைந்து போனது.
இந்நிலையில், பாரத ரிசர்வ் வங்கி கடன் கொள்கை ஆய்வு அறிக்கையில், வங்கிகளுக்கான ரொக்க இருப்பு விகிதத்தை 0.75 சதவீதம் உயர்த்தியது. இதுபோன்ற காரணங்களால், ரியல் எஸ்டேட் துறை நிறுவனப் பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டினர்.
சென்ற 2009&ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து, நடப்பு ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான காலத்தில் Ôசென்செக்ஸ்Õ 6 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதேசமயம், ரியல் எஸ்டேட் துறை நிறுவனப் பங்குகளின் விலை ஒட்டுமொத்தத்தில் 25 சதவீதம் குறைந்துள்ளது. ஆக, ரியல் எஸ்டேட் நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்துள்ளது. இந்நிறுவனப் பங்குகளில், அவற்றின் செயல்திறன் அடிப்படையில் முதலீடு செய்யலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பங்கு வர்த்தகம்
கடந்த 2007&ஆம் ஆண்டில் உள்நாட்டில் பங்கு வர்த்தகம் மிகவும் சிறப்பாக இருந்தது. பின்னர் உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட தேக்கநிலையால், 2008&ஆம் ஆண்டில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. மூலதனச் சந்தையில் இறங்கிய சில நிறுவனங்களின் புதிய பங்கு வெளியீடுகள் தோல்வியை தழுவின. ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்த ஈமார் எம்.ஜி.எஃப். நிறுவனத்தின் பங்கு வெளியீடு முதலீட்டாளர்களின் ஆதரவு இல்லாத நிலையில் ரத்து செய்யப்பட்டது.
2008&ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, சென்ற 2009&ஆம் ஆண்டில் பங்கு வர்த்தகம் நன்கு இருந்தது. அவ்வாண்டில் பங்கு வெளியீட்டில் இறங்கிய பல நிறுவனங்கள் அவற்றுக்கு தேவையான நிதியை வெற்றிகரமாக திரட்டிக் கொண்டன. நாட்டின் பொருளாதாரமும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளதால், பல நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டங்களில் இறங்கி வருகின்றன. அடிப்படைக் கட்டமைப்பு பணிகளில் மீண்டும் உத்வேகம் ஏற்பட்டுள்ளது. எனவே ரியல் எஸ்டேட் துறையிலும் பல நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் இறங்க ஆயத்தமாகி உள்ளன.
இந்த வகையில் ஈமார் எம்.ஜி.எஃப்., லோதா டெவலப்பர்ஸ், சகாரா பிரைம், ஓபராய் ரியால்டி உள்ளிட்ட 10 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வேண்டி பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕக்கு விண்ணப்பித்துள்ளன. பங்கு வெளியீடு மூலம் இந்த 10 நிறுவனங்களும் ஒட்டுமொத்த அளவில் ரூ.19,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ்
இதே துறையைச் சேர்ந்த கோத்ரேஜ் பிராப்பர்ட்டீஸ் மற்றும் டீ.பீ. ரியால்டி ஆகிய நிறுவனங்கள் அண்மையில் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டன. இவற்றின் பங்கு வெளியீடுகளுக்கு முதலீட்டாளர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருந்தது. எனினும் அதன் பிறகு பங்குச் சந்தை நிலவரங்கள் இந்த நிறுவனங்களுக்கு ஊக்கமளிப்பதாக இல்லை. பங்கு வர்த்தகத்தில் கடும் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது.
இந்நிலையில் பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டுத் திட்டத்தை ஒத்திவைக்கும் நிலைக்கே வந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. குறிப்பாக, ஏற்கனவே பங்குகளை வெளியிட்டு தோல்வி அடைந்த ஈமார் எம்.ஜி.எஃப். நிறுவனம், தற்போது காலவரையறையின்றி அதன் பங்கு வெளியீட்டுத் திட்டத்தை ஒத்தி வைத்துள்ளதாக தெரிகிறது. இந்நிறுவனம் மூலதனச் சந்தையில் ரூ.3,900 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
பங்கு விலை சரிவு
சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து, நடப்பு பிப்ரவரி மாதம் இதுவரையிலுமாக, நாட்டின் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான டீ.எல்.எஃப். நிறுவனப் பங்கின் விலை 30 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாபுல்ஸ் நிறுவனப் பங்கின் விலை 35 சதவீதமும், யூனிடெக் நிறுவனப் பங்கின் விலை 29 சதவீதமும் சரிவடைந்துள்ளது. ஃபீனிக்ஸ் மில்ஸ் (14%), பர்ஸ்வ்நாத் டெவலப்பர்ஸ் (19%), அக்ருதி சிட்டி (13%), சன்டெக் ரியால்டி (10%), எச்.டீ.ஐ.எல். (6.46%) ஆகிய நிறுவனப் பங்குகளின் விலையும் குறைந்துள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் தேவைப்பாடு அதிகரிக்கும் நிலையிலும், பங்கு வர்த்தகம் ஏற்றம் பெறும் நிலையிலும் இந்த நிறுவனங்களின் பங்குகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, சில்லரை முதலீட்டாளர்கள் நீண்ட கால அடிப்படையில் இந்த நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
லாபம் உயர்ந்துள்ள நிலையிலும் பங்குகளின் விலை குறைந்த நிறுவனங்கள்
விஜய் கவுரவ்
மும்பை
அப்பல்லோ டயர்ஸ், பூஷண் ஸ்டீல், டாட்டா ஸ்பான்ஜ் அயர்ன், பினானி சிமெண்ட் உள்ளிட்ட பல நிறுவனங்கள், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் அதிக நிகர லாபம் ஈட்டியுள்ளன. இந்நிலையிலும், இந்நிறுவனங்களின் செயல்திறனுடன் ஒப்பிடும்போது, அவற்றின் பங்குகளின் விலை குறைவாக உள்ளது.
அப்பல்லோ டயர்ஸ்
டயர்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் அப்பல்லோ டயர்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில், சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் சுமார் 9 மடங்கு அதிகரித்து ரூ.5.50 கோடியிலிருந்து ரூ.102 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாயும் ரூ.903 கோடியிலிருந்து ரூ.1,323 கோடியாக உயர்ந்துள்ளது.
தற்போது, இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.55.90 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டிற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஒரு பங்குச் சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது இது 8.2 மடங்குகள் என்ற அளவில்தான் உள்ளது.
பூஷண் ஸ்டீல்
மேலும், பூஷண் ஸ்டீல் நிறுவனம் ஈட்டிய நிகர லாபம் 10 மடங்கு அதிகரித்து ரூ.227 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் 42 சதவீதம் வளர்ச்சி அடைந்து ரூ.1,429 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போது, இந்நிறுவனப் பங்கு ஒன்று ரூ.1,591 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டிற்கு இந்நிறுவனத்தின் ஒரு பங்குச் சம்பாத்தியம் ரூ.168 என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது, பங்கின் விலை 9.5 மடங்குகள் என்ற அளவில் உள்ளது
பினானி சிமெண்ட்
சிமெண்டு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வரும் பினானி சிமெண்ட் நிறுவனத்தின் விற்பனை 11 சதவீதம் அதிகரித்து ரூ.403 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 5.7 மடங்குகள் உயர்ந்து ரூ.57 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.73 என்ற அளவில் உள்ளது. இதன் ஒரு பங்குச் சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது, பங்கின் விலை 5.2 மடங்குகள் என்ற அளவில் உள்ளது.
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் பிரிமிய வருவாய் 25% அதிகரிப்பு இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் (ஏப்ரல்&டிசம்பர்) இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்குகளில் ரூ.48,184 கோடி முதலீடு செய்துள்ளன. இது, அன்னிய நிதி நிறுவனங்கள், பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டில் (ரூ.91,000 கோடி) 53 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக, நாட்டின் பங்கு வர்த்தகத்தின் முன்னேற்றத்திற்கு அன்னிய நிதி நிறுவனங்களை முற்றிலும் சார்ந்திருக்கும் நிலை படிப்படியாக அகன்று விடும் என்று பங்கு வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரிமிய வருவாய்
இதே காலத்தில், காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமிய வருவாய் மற்றும் புதுப்பிக்கும் பிரிமிய வருவாய் ஆகிய இரண்டும் சேர்ந்த மொத்த பிரிமிய வருவாய் 25 சதவீதம் அதிகரித்து ரூ.1,31,382 கோடியிலிருந்து ரூ.1,64,355 கோடியாக உயர்ந்துள்ளது.
வாழ்க்கையில் எதிர்பாராமல் ஏற்படும் இடர்பாடுகளை எதிர்கொள்ள உதவும் காப்பீட்டு நிறுவனங்கள், பிரிமிய வருவாயில் குறிப்பிட்ட தொகையை நிறுவனப் பங்குகள் மற்றும் கடன்பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து ஆதாயம் ஈட்டுகின்றன.
நிறுவனப் பங்குகள்
காப்பீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனப் பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டின் மதிப்பு ரூ.4,15,094 கோடியாக உள்ளது. சென்ற 2008&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இது, ரூ.2,35,508 கோடியாக இருந்தது. ஆக, 12 மாத காலத்தில் இதன் மதிப்பு 76 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்குகளில் அதிக அளவில் முதலீடு மேற்கொண்டுள்ளதும் மற்றும் அவை மேற்கொண்ட முதலீட்டின் மதிப்பு அதிகரித்துள்ளதும் காரணங்களாகும்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் மொத்த பிரிமிய வருவாயில் (ரூ.1,64,353 கோடி), புதுப்பிக்கப்பட்ட பிரிமிய வருவாய் ரூ.96,917 கோடியாகும். சென்ற நிதி ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இதில் 22 சதவீத (ரூ.79,168 கோடி) வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வருவாயில், பங்கு சார்ந்த காப்பீட்டு பிரிமிய வருவாய் 41 சதவீதம் உயர்ந்து ரூ.26,638 கோடியிலிருந்து ரூ.37,543 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், புதுப்பிக்கப்பட்ட சாதாரண பிரிமிய வருவாய் ரூ.52,530 கோடியிலிருந்து 13.3 சதவீதம் அதிகரித்து ரூ.59,374 கோடியாக உயர்ந்துள்ளது.
பங்கு சார்ந்த திட்டங்கள்
இதே காலத்தில், புதிய பிரிமிய வருவாய் 29 சதவீதம் அதிகரித்து ரூ.52,215 கோடியிலிருந்து ரூ.67,438 கோடியாக உயர்ந்துள்ளது. புதிய பிரிமிய வருவாயில், பங்கு சார்ந்த காப்பீட்டு திட்ட பிரிமிய வருவாயின் பங்களிப்பு, கடந்த 2008&ஆம் ஆண்டு டிசம்பர் 31&ந் தேதி அன்று 61 சதவீதமாக இருந்தது. இது, சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31&ந் தேதி அன்று 53 சதவீதமாக குறைந்துள்ளது. இது, பங்கு வர்த்தகத்தில் நிலவி வரும் ஏற்ற இறக்கத்தால், பங்கு சார்ந்த காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய பொதுமக்கள் தயக்கம் காட்டியுள்ளதை எடுத்துக்காட்டுகிறது.
அதேசமயம், காப்பீட்டு நிறுவனங்கள், நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. குறிப்பாக, சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனங்கள் மேற்கொண்ட முதலீட்டில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.
செயல்பாட்டு செலவினம்
இத்துறை நிறுவனங்கள் அவற்றின் செயல்பாட்டு செலவினத்தை குறைத்து வருகின்றன. சென்ற நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 12.24 சதவீதமாக இருந்த செயல்பாட்டு செலவின விகிதம், நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 10.4 சதவீதமாக குறைந்துள்ளது. இதனையடுத்து, நடப்பு ஜனவரி & மார்ச் காலாண்டிலும், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பங்குச் சந்தைகளில் இந்திய நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.29,000 கோடி உயர்வு
அமெரிக்க பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள இந்திய நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்), சென்ற வாரத்தில் 626 கோடி டாலர் (ரூ.28,976 கோடி) அதிகரித்துள்ளது.
இந்நிறுவனங்களுள், சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு 177 கோடி டாலர் (ரூ.8,142 கோடி) உயர்ந்துள்ளது. மூன்றாவது இடத்தில் உள்ள விப்ரோ நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு 142 கோடி டாலர் (ரூ.6,532 கோடி) உயர்ந்துள்ளது.
மேலும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மற்றும் எச்.டீ.எஃப்.சி. வங்கி பங்குகளின் மதிப்பு முறையே 105 கோடி டாலர், 65.80 கோடி டாலர் உயர்ந்துள்ளது.
மேலும், ஸ்டெர்லைட் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டாட்டா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பில் முறையே 59.60 கோடி டாலர் மற்றும் 40 கோடி டாலர் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஷெல் இந்தியா நிறுவனம் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது
ராஜீவ் ஜெயஸ்வால் & சுபாஷ் நாராயண்
புதுடெல்லி
தனியார் துறையைச் சேர்ந்த ஷெல் இந்தியா நிறுவனம், நாட்டின் பல முக்கிய நகரங்களில் பெட்ரோல் நிலையங்களை கொண்டுள்ளது. இந்நிறுவனம், அடுத்த ஓராண்டு காலத்தில் அதன் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் உயர்த்தி 74&ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
ஷெல் இந்தியா நிறுவனம், கடந்த 2004&ஆம் ஆண்டு, இந்தியாவில் 2,000 பெட்ரோல் விற்பனை நிலையங்களை அமைக்க அனுமதி பெற்றுள்ளது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில், இந்நிறுவனம் 50 பெட்ரோல் நிலையங்களையே நிறுவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியன் ஆயில்
மக்கள் நலன் கருதி, மத்திய அரசின் அறிவுறுத்தலுக்கு இணங்க, பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய மூன்று நிறுவனங்கள் மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு போன்றவற்றை அடக்க விலைக்கும் குறைவாக விற்பனை செய்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த 2008&ஆம் ஆண்டு, சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 147 டாலருக்கும் மேல் அதிகரித்ததையடுத்து, தனியார் துறை நிறுவனங்களால், அரசு துறை நிறுவனங்கள் விற்பனை செய்யும் விலைக்கு, பெட்ரோலிய பொருள்களை விற்பனை செய்ய முடியாமல் போனது. இதனால், இத்துறையில் ஈடுபட்டு வரும் பல தனியார் துறை நிறுவனங்கள், அவற்றின் பெட்ரோல் நிலையங்களை மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன.
டீசல்
தற்போது, ஷெல் இந்தியா நிறுவனத்தின் பெட்ரோல் நிலையங்களில் (இடத்தை பொறுத்து), டீசல் மற்றும் பெட்ரோல் விலை, அரசு துறை நிறுவனங்களின் விலையை விட லிட்டருக்கு ரூ.2&5 அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தனியார் துறையைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எஸ்ஸார் ஆயில் ஆகிய நிறுவனங்களும் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் பெட்ரோல் விற்பனை நிலையங்களை கொண்டுள்ளன.
நடப்பு 2010&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் விமானத்தில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 23 சதவீதம் அதிகரிப்பு
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
நடப்பு 2010&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், இந்தியாவில், விமானத்தில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை, சென்ற ஆண்டின் இதே மாதத்தைக் காட்டிலும் 23 சதவீதம் (33.76 லட்சம்) அதிகரித்து 41.41 லட்சமாக உயர்ந்துள்ளது. விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது.
பொருளாதாரம்
சென்ற 2008&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், உலக அளவில், பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு உச்சநிலையை அடைந்தது. இதனால், விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கையில் கடும் சரிவு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், சென்ற நான்கு மாதங்களாக, விமான பயணிகள் எண்ணிக்கை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது.
சென்ற டிசம்பர் மாதத்தில், விமானத்தில் பயணம் மேற்கொண்டவர்கள் எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் 33 சதவீதம் அதிகரித்து 44.87 லட்சமாக உயர்ந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலா பயணிகள்
இது குறித்து முன்னணி விமான போக்குவரத்துச் சேவை நிறுவனம் ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, Òநாட்டின் பொருளாதாரம் மீண்டும் எழுச்சிப் பாதையில் நடைபோடுகிறது. இதனால், தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது. நிறுவனத்தின் உயர் அதிகாரிகளும், விமானங்களில் பயணம் செய்வதை அதிகரித்துள்ளனர். இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், விமான போக்குவரத்துச் சேவை நிறுவனங்களும் அதிக பயணிகளை ஈர்க்கும் வகையில் பயண கட்டணத்தை குறைத்துள்ளன. நிறுவனங்கள் விமானங்களை உரிய நேரத்தில் இயக்கி வருகின்றன. இதுபோன்ற காரணங்களால் விமான பயணிகள் போக்குவரத்தில் எழுச்சி ஏற்படத் தொடங்கி உள்ளதுÓ என்று தெரிவித்தார்.
சென்ற ஜனவரி மாதத்தில், அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதில், நரேஷ் கோயல் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இந்நிறுவனம், அம்மாதத்தில் 12.80 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. மொத்த விமான பயணிகளின் எண்ணிக்கையில் இது 25.2 சதவீதமாகும்.
கிங்பிஷர்
விஜய் மல்லையா தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் விமானங்களில் 9 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து, மொத்த விமான பயணிகளின் எண்ணிக்கையில், இந்நிறுவனம் 22.20 சதவீத பங்களிப்பை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. பொதுத் துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனம், 7.30 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனத்தின் பங்களிப்பு 18 சதவீதமாகும்.
இண்டிகோ
குறைந்த கட்டண விமானச் சேவையில் ஈடுபட்டு வரும் இண்டிகோ (6.20 லட்சம்), ஸ்பைஸ் ஜெட் (5 லட்சம்), கோ&ஏர் (2.20 லட்சம்), பாரமவுண்ட் (72,000) ஆகிய நிறுவனங்களும் அதிக பயணிகளை ஈர்த்துள்ளன. இவற்றின் பங்களிப்பு முறையே 15.3 சதவீதம், 12.2 சதவீதம், 5.4 சதவீதம், 1.8 சதவீதமாக உள்ளது.
சென்ற ஜனவரி மாதத்தில் 100&க்கு 71 விமானங்கள் உரிய நேரங்களில் பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளன. உரிய நேரத்தில் விமானங்களை இயக்கியதில் பாரமவுண்ட் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கிங்ஃபிஷர் இரண்டாவது இடத்திலும், இண்டிகோ, கோ&ஏர், ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் முறையே மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களில் உள்ளன. ஏர் இந்தியா நிறுவனம் ஏழாவது இடத்தில் உள்ளது.
சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், விமானத்தில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த காலாண்டு, இந்திய விமானச் சேவை நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். நடப்பு ஜனவரி & மார்ச் காலாண்டிலும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரிக்கும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
கச்சா எண்ணெய்
சென்ற 2008&09&ஆம் நிதி ஆண்டு, இந்திய விமானச் சேவை நிறுவனங்களுக்கு ஒரு சவாலாக இருந்தது. இந்த நிதி ஆண்டில், விமான பயணிகள் எண்ணிக்கையில் இரட்டை இலக்க அளவிற்கு சரிவு ஏற்பட்டது. அந்த நிதி ஆண்டில், ஜூலை மாதத்தில், ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 147 டாலராக உயர்ந்து இருந்தது. இதுபோன்ற காரணங்களால், சென்ற நிதி ஆண்டில் இந்திய விமான போக்குவரத்துச் சேவை நிறுவனங்களுக்கு சுமார் ரூ.8,000 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது ஆறு மாத காலத்திலிருந்து விமான போக்குவரத்துச் சேவையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. எனவே, வரும் நிதி ஆண்டில் இந்திய விமான போக்குவரத்துச் சேவை நிறுவனங்கள் லாப பாதைக்கு திரும்பும் என வர்த்தக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்ற ஜனவரி மாதத்தில் 60 சதவீதத்தினர், குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனங்களின் விமானங்கள் வாயிலாக பயணித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், ஜெட் ஏர்வேஸ், கிங்பிஃஷர் போன்ற நிறுவனங்கள் குறைந்த கட்டண விமானச் சேவைக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகள் விற்பனையில் பொது துறை நிறுவனங்கள் தீவிரம்
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு வகைகளை விற்பனை செய்வதில் பொதுத் துறை நிறுவனங்கள் தீவிரமாக உள்ளன.
விலை அதிகரிப்பு
உள்நாட்டில் பருப்பு வகைகளின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. இதனை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில், பொதுத் துறையைச் சேர்ந்த எஸ்.டி.சி., பி.இ.சி., நாஃபெட் மற்றும் எம்.எம்.டி.சி. ஆகிய நிறுவனங்கள், துவரம் பருப்பு, உளுந்து, கொண்டைகடலை, பட்டாணி உள்ளிட்ட பருப்பு வகைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகின்றன.
உள்நாட்டில், போதிய அளவிற்கு உற்பத்தி இல்லாததால், இவற்றின் விலை மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக, நம் நாட்டில் ஆண்டுக்கு 1.70&1.80 கோடி டன் அளவிற்கு பருப்புகளுக்கு தேவைப்பாடு உள்ளது. அதேசமயம், உள்நாட்டில், இவற்றின் உற்பத்தி 1.40&1.50 கோடி டன் என்ற அளவிலேயே உள்ளது. உற்பத்தியை விட தேவைப்பாடு அதிகரித்துள்ளதால், விலை மிகவும் அதிகரித்துள்ளது.
இந்த வகையில், பொதுத் துறையைச் சேர்ந்த எம்.எம்.டி.சி. நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து கொள்முதல் செய்து வைத்துள்ள 6,000 டன் பருப்பு வகைகளை நடப்பு பிப்ரவரி மாத இறுதிக்குள் விற்பனை செய்யும் வகையில் ஏலப்புள்ளிகளை கோரி உள்ளது.
ஆஸ்திரேலியா
எம்.எம்.டி.சி.யை போன்று, இதர பொதுத்துறை நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வைத்துள்ள பருப்பு வகைகளை இம்மாத இறுதிக்குள் விற்பனை செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
மேற்கண்ட பொதுத் துறை நிறுவனங்கள், ஆஸ்திரேலியா, மியான்மர், கனடா, தான்சானியா, மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளில் இருந்து அதிக அளவில் பருப்பு வகைகளை இறக்குமதி செய்து வைத்துள்ளன.
SENSEX : 35962.93 * 33.29 (0.09 %)
6 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக