மும்பை பங்குச்சந்தையின் பொதுத்துறை நிறுவன இணையத்தளம் ‌அறிமுகம்

வெள்ளி, 22 ஜனவரி, 2010

மும்பை: மும்பை பங்குச்சந்தையில், பொதுத்துறை நிறுவனங்கள் பற்றிய விபரங்களை அறிந்து கொள்ளும் விதமாக புதிதாக பொதுத்துறை நிறுவன இணையத்தளம் ஒன்று தொடங்கப் பட்டள்ளது. இதனை டில்லியில் மத்திய கனரக தொழில்-பொதுத்துறை அமைச்சர் விலாசராவ் தேஷ்முக் தொடங்கி வைத்தார். இந்த இணையத்தளத்தின் மூலம் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த முதலீடு, பங்கு விலைகளில் மாற்றம் உள்ளிட்ட பல முக்கிய விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளம் குறித்து மும்பை பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியும், மேலாண்மை இயக்குநருமான மது கண்ணன் கூறும் போது, இலாபம் ஈட்டும் பல பொதுத்துறை நிறுவனங்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் இல்லாமல் உள்ளன. பொதுத்துறை நிறுவனங்களில் அரசு வசம் உள்ளவற்றில் 49 விழுக்காடு அரசு அதன் வசம் வைத்துக் கொள்ளும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.

மற்ற பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் கூடிய விரைவில் நேஷனல் மினரல் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் ,சட்லஜ் ஜல் வித்யாத் நிகாம் லிமிடெட்,தேசிய அனல் மின் நிலையம், ரூரல் எலக்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளது என்று தெரிவித்தார்.





என்.டி.பி.சி. நிறுவனம்


இரண்டாவது பங்கு வெளியீடு பிப்ரவரி 3&ந் தேதி தொடக்கம்


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
மின் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள, பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி. நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீடு பிப்ரவரி 3&ந் தேதி தொடங்கி 5&ந் தேதி நிறைவடைகிறது.
ரூ.10,000 கோடி
இந்நிறுவனத்தில், மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் 5 சதவீதத்தை பொதுமக்களுக்கு வெளியிடுவதன் வாயிலாக மத்திய அரசு சுமார் ரூ.10,000 கோடி திரட்டுகிறது.
மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டுள்ள பங்குகளில் 41.20 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 20.50 கோடி பங்குகள் நிதி நிறுவனங்களுக்கும், 42.70 லட்சம் பங்குகள் என்.டி.பி.சி. ஊழியர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. எஞ்சியுள்ள பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது.
நிறுவன முதலீட்டாளர்களுக்கு பங்கின் விலை ஏல அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். இந்த முறையில் பங்குகள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும். இவ்வாறு நிர்ணயிக்கப்படும் விலையில் எவ்வித தாக்கமும் ஏற்படக்கூடாது என்பதற்காக, இந்நிறுவனப் பங்குகளின் மீது பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மேற்கொள்வதை பிப்ரவரி 3&ந் தேதி முதல் 5&ந் தேதி வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது. இதற்கு நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சரவை குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். இதன் பிறகு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕயின் அனுமதி பெற வேண்டும்.
என்.டி.பி.சி. நிறுவனம், 30,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இது, நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் 25 சதவீதமாகும்.
மின் உற்பத்தி
இரண்டாவது பங்கு வெளியீட்டிற்குப் பிறகு இந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம் 89.5 சதவீதத்திலிருந்து 84.5 சதவீதமாக குறைந்துவிடும். இப்பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் முழு நிதியும் மத்திய அரசுக்கே சென்றுவிடும். நிறுவனம், எந்த நிதியையும் திரட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




வரும் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில்


சரக்கு போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த ரயில்வே அமைச்சகம் திட்டம்

சுரபி
புதுடெல்லி
நடப்பு 2010&11&ஆம் நிதி ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில், உருக்கு, இரும்புத்தாது, நிலக்கரி, சிமெண்டு உள்ளிட்ட முக்கிய சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான கட்டணத்தை உயர்த்துவது குறித்து ரயில்வே அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது.
இரும்புத் தாது
இரும்புத் தாது மற்றும் உருக்கிற்கான ரயில்வே சரக்கு கட்டணம் 10 சதவீதமும், நிலக்கரி, சிமெண்டிற்கான கட்டணம் 5 சதவீதமும் உயர்த்தப்படலாம் என ரயில்வே அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனையடுத்து, மேற்கண்ட சரக்குகளை எடுத்துச் செல்வதற்கான கட்டணம் டன் ஒன்றிற்கு ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, இத்துறையைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்துவதாக உள்ளது.
இது குறித்து இந்திய கனிம நிறுவனங்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.கே.சர்மா கூறும்போது, Òஇரும்புத்தாதுவை தோண்டி எடுப்பதற்கான ராயல்டி கட்டணம் ஏற்கனவே 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான ஏற்றுமதி தீர்வையும் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. இது, இத்துறை நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்நிலையில், இவற்றை எடுத்துச் செல்வதற்கான சரக்கு கட்டணமும் உயர்த்தப்பட்டால், இத்துறையில் ஈடுபட்டு வரும் இந்திய நிறுவனங்களால், வெளிநாட்டு நிறுவனங்களின் போட்டியை எதிர்கொள்ள முடியாதநிலை உருவாகும்Ó என்று தெரிவித்தார்.
உலக பொருளாதாரம்
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு சென்ற 2008&ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உச்சநிலையை அடைந்தது. சர்வதேச அளவில் உருக்கு பொருள்கள் விற்பனையில் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்திய உருக்கு நிறுவனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. கட்டுமானப் பணிகளில் மந்தநிலை உருவானது. கார்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனங்கள் விற்பனையில் தொய்வு நிலை ஏற்பட்டது.
இதனால், உருக்கு விற்பனை குறைந்தது. எனவே, கடந்த 2008&ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நாட்டின் உருக்கு உற்பத்தி 6.3 சதவீதம் சரிவடைந்தது. இதனையடுத்து, அவ்வாண்டில் ரயில்வே துறை, உருக்கு உள்ளிட்ட முக்கிய பொருள்களுக்கான சரக்கு கட்டணத்தை உயர்த்தவில்லை. சென்ற 2009&ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டிலும், மேற்கண்ட சரக்குகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்கப்பட்டது.
நாட்டின் பொருளாதாரம் தற்போது வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி உள்ளது. 13 மாதங்களாக சரிவடைந்து வந்த ஏற்றுமதியில் சென்ற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2008&ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சரிவைச் சந்தித்த நாட்டின் உருக்கு உற்பத்தி, சென்ற 2009&ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் 11.7 சதவீதம் அதிகரித்துள்ளது.
உற்பத்தி வளர்ச்சி
பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராகத் திகழும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. இதனையடுத்து, சென்ற நவம்பர் மாதத்தில் சிமெண்டு உற்பத்தியிலும் 9 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உருக்கு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், இரும்புத்தாது எடுக்கும் சுரங்கப் பணிகளிலும் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மந்தமாக இருந்த இத்துறையின் உற்பத்தி வளர்ச்சியிலும் 3.3 சதவீதம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற காரணங்களால் உருக்கு, சிமெண்டு இரும்புத்தாது உள்ளிட்ட முக்கிய ஆறு துறைகளின் உற்பத்தி சென்ற நவம்பர் மாதத்தில் 5.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனையடுத்து, அம்மாதத்தில் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் முக்கிய அளவுகோலான நாட்டின் தொழில் துறை உற்பத்தியிலும் 11.7 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 2008&ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த வளர்ச்சி ஐந்து மடங்கு அதிகமாகும்.
ஒன்பது மாதங்களில்...
ஆக, உற்பத்தி நடவடிக்கைகளில் வேகம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ரயில் சரக்கு போக்குவரத்திலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரயில்வேயின் மொத்த வருவாயில், சரக்கு போக்குவரத்து 65 சதவீதமாகும். நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதம் வரையிலான ஒன்பது மாதங்களில் ரயில்களில் எடுத்துச் செல்லப்பட்ட சரக்குகளின் அளவு 7.5 சதவீதம் அதிகரித்து 65.20 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் 60.65 கோடி டன்னாக இருந்தது. இதே காலத்தில், சரக்கு போக்குவரத்து வாயிலாக ஈட்டப்பட்ட வருவாயும் ரூ.42,146.84 கோடியாக அதிகரித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் சரக்கு போக்குவரத்து வாயிலாக ரூ.58,525 கோடி வருவாய் ஈட்டவும், 88.82 கோடி டன் சரக்குகளை எடுத்துச் செல்லவும் ரயில்வே துறை இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. தொழில் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், இந்த இலக்கை எளிதாக எட்ட முடியும் என ரயில்வே அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வரும் நிதி ஆண்டில் வருவாயை மேலும் அதிகரிக்க ரயில்வேத் துறை திட்டமிட்டுள்ளது.



விப்ரோ நிறுவன நிகர லாபம் உயர்வு மும்பை: விப்ரோ நிறுவனத்தின் நிகர லாபம் உயர்ந்துள்ளது. டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த மூன்றாம் காலாண்டு கணக்கெடுப்பினை விப்ரோ நிறுவனம் ‌வெளியிட்டுள்ளது. இதில், நிறுவனத்தின் நிகர லாபம் 21.26 சதவீதம் உயர்ந்து 1,217.4 கோடியாக உள்ளது.
நிறுவனத்தின் மொத்த வருமானமும் 7,055 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதை கடந்த 2008ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, நிறுவனத்தின் மொத்த வருமானம் 6,773 கோடி ரூபாயாக உள்ளது.

இந்த அறிவிப்பின் போ‌து, கடந்த மூன்று மாதத் தில் மட்டும் 31 புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாகவும் விப்ரோ நிறுவனம் தெரிவித்தது.




ஐ.டீ.பீ.ஐ. பேங்க்


பெடரல் பேங்கை கையகப்படுத்த முயற்சி?


பொதுத் துறையை சேர்ந்த ஐ.டீ.பீ.ஐ. பேங்க், கேரளாவைச் சேர்ந்த ஃபெடரல் பேங்கை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக சந்தை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இது குறித்து ஃபெடரல் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி எம்.வேணுகோபாலை தொடர்பு கொண்டபோது கருத்து கூற மறுத்து விட்டார்.
ஐ.டீ.பீ.ஐ. வங்கி, ஃபெடரல் பேங்கை வாங்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. அவ்வாறு கையகப்படுத்தும் நிலையில், ஐ.டீ.பீ.ஐ. வங்கிக்கு அதிக அளவில் கிளைகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கிடைப்பதுடன், வங்கியின் மொத்த வணிகமும் நல்ல அளவில் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
641 கிளைகள்
தற்போது, தனியார் துறையைச் சேர்ந்த ஃபெடரல் வங்கிக்கு 641 கிளைகள் உள்ளன. இதன் கிளைகள் பெரும்பாலும் தென் இந்திய பகுதிகளில்தான் அமைந்துள்ளன. இதன் மொத்த வணிகம் ரூ.59,000 கோடி என்ற அளவிலும், டெபாசிட் அளவு ரூ.33,439 கோடி என்ற அளவிலும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.டீ.பீ.ஐ. பேங்க், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் முன்பாக, யுனைடெட் வெஸ்டர்ன் பேங்கை கையகப்படுத்தியது.
இந்த நிலையில், ஐ.டீ.பீ.ஐ. பேங்க், அதன் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்ளும் வகையில், சவுத் இந்தியன் பேங்க், கர்நாடகா பேங்க், பேங்க் ஆஃப் ராஜஸ்தான் மற்றும் ஃபெடரல் பேங்க் உள்ளிட்ட வங்கிகளை இணைத்துக் கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வங்கி வட்டாரத்தினர் தெரிவித்தனர்.




இந்திய விமான நிலையங்கள் ஆணையம்


விரிவாக்கத்திற்காக ரூ.1,200 கோடி திரட்ட முடிவு



இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (ஏ.ஏ.ஐ), விமான நிலையங்களை விரிவாக்கம் செய்வதற்காக, நடப்பு நிதி ஆண்டில் மேலும் ரூ.1,200 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. இந்நிறுவனம், இந்த நிதி ஆண்டில், செப்டம்பர் மாதம் வரையிலான காலத்தில், குறுகிய கால கடன்கள் வாயிலாக ரூ.380 கோடி திரட்டி இருந்தது.
125 விமான நிலையங்கள்
ஏ.ஏ.ஐ., நாடு முழுவதிலுமாக 125 விமான நிலையங்களை நிர்வகித்து வருகிறது. இவற்றுள், 15 விமான நிலையங்கள் மட்டுமே லாபம் ஈட்டி வருகின்றன. சென்ற 2009&ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில், இந்தியாவிலுள்ள முன்னணி விமான போக்குவரத்துச் சேவை நிறுவனங்கள், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு ரூ.277.55 கோடி பாக்கி வைத்துள்ளன. இதுபோன்ற காரணங்களால், ஏ.ஏ.ஐ&க்கு சற்று நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
உலக பொருளாதாரத்தில் ஏற்பட்ட உருக்குலைவின் தாக்கம், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தையும் விட்டு வைக்கவில்லை. இதனையடுத்து, இந்த ஆணையம் செயல்பாட்டு செலவினத்தை கட்டுக்குள் வைத்தல் உள்ளிட்ட சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளது. ஒரு சில திட்டங்களுக்காக ஒதுக்கும் நிதி குறித்தும் மறு பரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளது. அதேசமயம், தரமான சேவை அளிப்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
லாபம்
கடந்த 2007&08&ஆம் நிதி ஆண்டில் இந்த ஆணையத்தின் மூலதனச் செலவினம் ரூ.1,980.23 கோடியாக இருந்தது. இது, சென்ற 2008&09&ஆம் நிதி ஆண்டில் ரூ.2,547.52 கோடியாக அதிகரித்துள்ளது இதனையடுத்து, இதே நிதி ஆண்டுகளில் இந்த ஆணையத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,082 கோடியிலிருந்து ரூ.687 கோடியாக குறைந்துள்ளது.
எனவே, ரொக்க வரத்தை அதிகரிக்கும் வகையில் ஆணையம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரி விலக்கு பெற்ற கடன்பத்திரங்கள் வெளியீடு வாயிலாக ரூ.5,000 கோடி திரட்ட முடிவு செய்து இருந்தது. இதற்கு மத்திய அரசின் அனுமதி கிடைக்கவில்லை. எனவே, கடன் உள்ளிட்ட இதர வழிமுறைகள் வாயிலாக ரூ.2,000 கோடி திரட்ட தீர்மானித்துள்ளது.



வேதாந்தா குழுமம்


ரூ.9,000 கோடி செலவில் விரிவாக்கத் திட்டங்கள்

சுபாஷ் நாராயண்
புதுடெல்லி
அனில் அகர்வால் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் வேதாந்தா குழுமம், உலோகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இக்குழுமம், அடுத்த 2&3 ஆண்டுகளில் ரூ.9,000 கோடி திட்டச் செலவில் பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
அலுமினியம்
வேதாந்தா குழுமம், அதன் அலுமினியம் உற்பத்தி திறனை தற்போதைய நிலையிலிருந்து 25 மடங்குகள் என்ற அளவிலும், துத்தநாக உற்பத்தி திறனை ஐந்து மடங்குகள் என்ற அளவிலும், வெள்ளி உற்பத்தி திறனை 12 மடங்குகள் என்ற அளவிலும் உயர்த்த முடிவு செய்துள்ளது.
இது குறித்து வேதாந்தா குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி எம்.எஸ்.மேத்தா கூறும்போது, Òகுழுமம், உலக அளவில் துத்தநாக உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக உருவெடுக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாக, ராஜஸ்தான் மாநிலத்தில், ரெய்பூரா தாரிபா என்ற இடத்தில் மூன்றாவது துத்தநாக தொழிற்சாலையை அமைக்க உள்ளது. மேலும், 25 லட்சம் டன் என்ற அளவில் அலுமினியம் உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, உலக அளவில், அலுமினியம் உற்பத்தியில், வேதாந்தா குழுமம் 5&வது இடத்திற்கு வரும்Ó என்று தெரிவித்தார்.
வேதாந்தா குழுமம், இதுவரையிலுமாக, அதன் உலோக வர்த்தக விரிவாக்கத்திற்காக ரூ.40,000 கோடியை முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில், முதல் கட்ட நடவடிக்கையாக பல்வேறு உலோகங்களின் உற்பத்தி திறனை விரிவுபடுத்தும் வகையில் ரூ.9,000&10,000 கோடியை முதலீடு செய்ய உள்ளது.
தாமிரம் உற்பத்தி
வேதாந்தா குழுமம், அதன் தாமிர உற்பத்தி திறனையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. விரிவாக்கத்திற்கு பிறகு, நிறுவனத்தின் தாமிர உற்பத்தி திறன் ஆண்டுக்கு 12 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, தாமிர உற்பத்தியில், சர்வதேச அளவில் 5&வது நிறுவனமாக உருவெடுக்கும்.
அதேபோன்று, நிறுவனம் வெள்ளி உற்பத்தி திறனையும், அடுத்த ஒரு சில ஆண்டுகளுக்குள் 550 டன்னாக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து, இந்த உலோக உற்பத்தியில் நிறுவனம் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் என மேத்தா குறிப்பிட்டார்.
வேதாந்தா குழுமத்திற்கு, சத்தீஸ்கர், ஒரிசா, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் உலோக உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. மேலும், ஜாம்பியாவில் தாமிர உற்பத்தி தொழிற்சாலை ஒன்றும் உள்ளது.
சேசகோவா
வேதாந்தா குழுமம், இரும்புத்தாது உற்பத்தியில் ஈடுபட்டு வரும் சேசகோவா நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதனையடுத்து, இக்குழுமம் தாது உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. இக்குழுமத்தின் தாது சுரங்கம் கோவாவில் உள்ளது. இந்த நிலையில், குழுமம் சேசகோவா நிறுவனத்தின் தாது உற்பத்தி திறனையும் அதிகரிக்கும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வரும் 2014&ஆம் ஆண்டிற்குள், சேசகோவா நிறுவனத்தின் தாது உற்பத்தி திறன், தற்போதைய 1.50 கோடி டன் என்ற அளவில் இருந்து 5 கோடி டன்னாக அதிகரிக்கும்.
விரிவாக்க நடவடிக்கை
வேதாந்தா குழுமம், அதன் பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான பகுதி நிதியை திரட்டிக் கொள்ளும் வகையில் 900 கோடி டாலரை அன்னிய முதலீடாக பெற்றுள்ளது. குழுமத்தின் உலோகம், சுரங்கம் மற்றும் மின் வர்த்தகம் தொடர்பான திட்டங்களுக்காக மொத்தம் 2,000 கோடி டாலர் முதலீடு செய்யப்பட உள்ளது என மேத்தா தெரிவித்தார்.
சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் 1&ந் தேதி வரையிலுமாக நிறுவனத்தின் கைவசம் 710 கோடி டாலர் மதிப்பிற்கு ரொக்க இருப்பு உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நிறுவனம் 400 கோடி டாலரை கடன்கள் வாயிலாக திரட்டிக் கொண்டுள்ளது என மேத்தா மேலும் கூறினார்.




டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா


இந்நிறுவனம் சரக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருகிறது. இத்துறைக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உள்ளது. இந்நிறுவனப் பங்குகள் முதலீடு செய்வதற்கு ஏற்றவை.


அம்ரிதேஷ்வர் மாத்தூர்
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், சரக்கு போக்குவரத்துச் சேவை தொடர்பான பல்வேறு வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது இவற்றுள் டிரக்குகள் மற்றும் சிறிய கப்பல்கள் வாயிலாக பொருள்களை எடுத்துச் செல்லுதல் மற்றும் அவற்றை இருப்பிடங்களுக்கு நேரடியாக கொண்டு சேர்த்தல், சேமிப்பு கிடங்குகளை நிர்வகித்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
நுகர்வோர் சாதனங்கள்
நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வருகிறது. குறிப்பாக, மோட்டார் வாகனங்கள், நுகர்வோர் சாதனங்கள் விற்பனை பன்மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, இவற்றை எடுத்துச் செல்வதற்கு டிரக்குகள் அதிக அளவில் தேவைப்படுகின்றன. இதனால், டிரக்குகளுக்கான வாடகை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் உயர்ந்துள்ளது. தொழில் மற்றும் தயாரிப்பு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் இந்நிறுவனத்திற்கு சாதகமான அம்சமாகும். ஆக, இந்நிறுவனம் ஈடுபட்டு வரும் துறைக்கு வளமான வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது.
டிரான்ஸ்போர்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனம், சொந்தமாகவும், வாடகை அடிப்படையிலும் சுமார் 7,000 டிரக்குகள் மற்றும் டிரெய்லர்களை நிர்வகித்து வருகிறது. இந்நிறுவனத்திடம் ஐந்து சரக்கு கப்பல்கள் உள்ளன.
இந்நிறுவனம், அதன் சேமிப்பு கிடங்கு வசதியையும் விரிவாக்கம் செய்து வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் இது 20 சதவீதம் அதிகரித்துள்ளது. 2009&ஆம் ஆண்டு மே மாதம் அன்றுள்ள நிலவரப்படி, இந்நிறுவனத்திடம் 78 லட்சம் சதுர அடி பரப்பளவிற்கு சேமிப்பு கிடங்கு வசதி உள்ளது. இவற்றுள் 20 சதவீத பரப்பளவு இந்நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். எஞ்சியுள்ள இடத்தை வாடகைக்கு எடுத்து நிர்வகித்து வருகிறது.
விரிவாக்கம்
இந்நிறுவனம், சென்ற இரண்டு ஆண்டுகளில் விரிவாக்க நடவடிக்கைகளுக்காக ரூ.202 கோடி முதலீடு செய்துள்ளது. இருப்பினும், இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த கடன் 6.5 சதவீதம் மட்மே உயர்ந்து ரூ.232.90 கோடியாக உள்ளது. இந்நிறுவனம், அதன் சொத்துக்களை முழு அளவில் திறம்பட பயன்படுத்தி வருவதால், கடன் சுமையை கட்டுக்குள் வைத்துள்ளது.
கப்பல் வாயிலான சரக்கு போக்குவரத்துச் சேவை மற்றும் இருப்பிடங்களுக்கு நேரடியாக சரக்குகளை கொண்டு சேர்த்தல் ஆகிய சேவைகள் இந்நிறுவனத்திற்கு அதிக லாபத்தை ஈட்டித் தருகின்றன. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், இந்நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாயில் (ரூ.670.85 கோடி) இச்சேவைகளின் பங்களிப்பு 46.3 சதவீதமாகும்.
நிதி நிலை
நடப்பு நிதி ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை 5.7 சதவீதம் அதிகரித்து ரூ.357.10 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் பன்மடங்கு அதிகரித்து ரூ.11.90 கோடியாக உயர்ந்துள்ளது. சம்பளம் மற்றும் எரிபொருள் செலவினத்தை கட்டுக்குள் வைத்துள்ளதையடுத்து, இந்நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பு 2.10 சதவீதம் உயர்ந்து 7.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
சென்ற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நாட்டின் தொழில் துறை உற்பத்தியில் இரட்டை இலக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அம்மாதங்களில், சரக்கு போக்குவரத்துச் சேவை நிறுவனங்களின் வருவாய் வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது என்று பங்கு வர்த்தக தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது இந்நிறுவனப் பங்கு ஒன்று ரூ.100 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டிற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஒரு பங்குச் சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது இது 20.4 மடங்குகள் என்ற அளவில் உள்ளது. இத்துறையில் ஈடுபட்டு வரும் இதர நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இந்நிறுவனப் பங்கின் விலை குறைவானதாகும். எனவே, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்வதற்கு இந்நிறுவனப் பங்குகள் ஏற்றவை.




இந்திரபிரஸ்தா மெடிக்கல்
இந்நிறுவனம், லாபம் ஈட்டத் தொடங்கி, வளர்ச்சி பாதையில் செல்கிறது. நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யலாம்.


கிரண் காப்தா சோம்வான்ஷி
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
இந்திரபிரஸ்தா மெடிக்கல் கார்ப்பரேஷன் (ஐ.எம்.சி.எல்), ஆண்டுக்கு ரூ.400 கோடி வருவாய் ஈட்டி வருகிறது. தனியார் மருத்துவச் சேவையில் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் குழும நிறுவனங்களுள் இதுவும் ஒன்றாகும். இந்நிறுவனத்தில், அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனம் 19 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. இது, அப்பல்லோ குழுமத்தின் ஓர் அங்கமாகத் திகழ்வதால், இந்நிறுவனம் பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
இந்திரபிரஸ்தா மெடிக்கல் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு, புதுடெல்லி மற்றும் நொய்டா ஆகிய இரண்டு இடங்களில் தலா இரண்டு மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் உள்ள மொத்த படுக்கைகளின் எண்ணிக்கை 700 ஆகும். இவற்றுள் 70 சதவீதம் தொடர் பயன்பாட்டில் உள்ளது. இந்நிறுவனத்தின் மருத்துவமனைகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு அதி நவீன சிகிச்சை அளிக்கப்படுவதால், இம்மருத்துவமனை வெளிநாட்டினரை மிகவும் ஈர்த்துள்ளது.
நிதி நிலை
கடந்த ஐந்து நிதி ஆண்டுகளாக இந்நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு சராசரியாக 19 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. சென்ற நிதி ஆண்டில், இந்நிறுவனம் ரூ.391.20 கோடி வருவாய் ஈட்டி உள்ளது.
இதே காலத்தில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் ஆண்டுக்கு சராசரியாக 9 சதவீதம் உயர்ந்து ரூ.24 கோடியாக உயர்ந்துள்ளது. லாப வளர்ச்சியைப் போன்று இந்நிறுவனத்தால் வழங்கப்படும் டிவிடெண்டும் ஆண்டுக்கு 8.4 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்நிறுவனம், அதன் ஒரு பங்குச் சம்பாத்தியத்தில் 82 சதவீதத்தை டிவிடெண்டாக வழங்குகிறது.
சென்ற ஆண்டு செப்டம்பர் வரையிலான 12 மாதங்களில், இந்நிறுவனத்தின் நிகர வருவாய் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனையடுத்து, சென்ற நிதி ஆண்டில், இந்நிறுவனத்தின் நிகர லாபம் 60 சதவீதம் உயர்ந்து ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளது. இந்நிறுவனம், செயல்பாட்டு செலவினத்தை கட்டுக்குள் வைத்துள்ளது.
மதிப்பீடு
தற்போது இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.50 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டிற்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ள ஒரு பங்குச் சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது இது 15 மடங்குகள் என்ற அளவில் உள்ளது
இந்நிறுவனத்தின் நிதி ஆதாரம் நன்றாக உள்ளது. நிறுவனம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பி உள்ளது. பங்கின் தற்போதைய விலையில் 3 சதவீத அளவிற்கு டிவிடெண்டு வழங்கி வருகிறது. எனவே, நீண்ட கால அடிப்படையில் இந்நிறுவனப் பங்குகளை வாங்கலாம்

3ம் காலாண்டில் நஷ்டத்தை சந்தித்தது எல் அன்ட் டி நிறுவனம்
மும்பை: 2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த காலத்துடன் கணக்‌கிடப் படும், மூன்றாம் காலாண்டு கணக்கெடுப்பின் படி, எல் அன்ட் டி(லார்சன் அன்ட் டியூப்ரோ நிறுவனம் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், மூன்றாம் காலாண்டு கணக்கெடுப்பின் படி நிறுவனத்திற்கு 50 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டு 758.8 கோடி ரூபாயாக இருப்பதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதே போல, இதே காலகட்டத்தில் மொத்த வருமானமும் 8,355.7 கோடி ரூபாயாக சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் இது கடந்த 2008ம் ஆண்டு இதே காலகட்டத்தில் 8,924.3 கோடி ரூபாயாக உள்ளது.

இன்றைய மும்பை பங்குச்சந்தையில் லார்சன் அன்ட் டியூப்ர‌ோ நிறுவன பங்குகள் 3.71 சதவீதம் சரிவினை கண்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக