கலகலத்துப் போனதற்கு காரணம் யார்?

வியாழன், 28 ஜனவரி, 2010

சந்தை கலகலத்துப் போயிருக்கிறது. யாரால் சந்தை சமீபகாலமாக உயர்ந்து கொண்டு வந்ததோ அவர்களாலேயே சந்தை கலகலத்துப் போயிருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டுக் கம்பெனிகள், டிசம்பர் வரை இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்து வந்தன. ஆதலால், சந்தை மேலே சென்று கொண்டிருந்தது. அவர்கள், ஜனவரி மாதத்தில் வாங்குவதை குறைத்து, விற்பதை அதிகமாக்கி விட்டனர். அது சந்தையை தலைகீழாகப் புரட்டிப் போட்டுவிட்டது. திங்களன்று சந்தை மிகவும் ஏற்ற இறக்கமாகவே இருந்தது. மகேந்திரா அண்டு மகேந்திரா கம்பெனி நல்ல முடிவுகளை தந்தும், சந்தையில் அதன் பங்குகள் மிகவும் கீழே தள்ளப் பட்டன. ஆதலால், சந்தையும் 79 புள்ளிகள் கீழே சென்று முடிந்தது. நேற்று சந்தை தொடர்ந்து ஆறாவது நாளாக சறுக்கியது. இந்தியா மட்டுமல்ல, ஆசிய சந்தைகளும் கீழே விழுந்து கொண்டிருக்கின்றன.

வட்டி விகிதங்கள் ஏற்றத் தாழ்வினால் பாதிக்கப்படும் பங்குகளான வங்கி, கட்டுமானத்துறை ஆகியவை நேற்று அதிகம் பாதிக்கப்பட்டன. ரிசர்வ் வங்கி தனது மானிடரி பாலிசி அறிவிப்பை நாளை அறிவிக்கவுள்ளது. அதில் வட்டி விகிதங்கள் கூட்டப்படலாம் என்றும் அல்லது சி.ஆர்.ஆர்., சதவீதம் கூட்டப்படலாம் என்றும் கருதப்படுவதால், சந்தையில் அது சார்ந்த பங்குகள், கீழே விழுந்தன. ஆதலால் பாதிப்பு அதிகமாக இருந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 490 புள்ளிகளை இழந்து, 16,289 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 154 புள்ளிகளை இழந்து, 4,853 புள்ளிகளுடனும் முடிந்தது. 18,000 புள்ளிகளை தாண்டும் என்று எதிர்பார்த்த சந்தை, தற்போது 16,000த்தின் விளிம்பில் வந்து நிற்கிறது; இது தான் பங்குச் சந்தை. புதிய வெளியீடுகள்: சந்தை மேலே சென்று கொண்டிருந்ததை வைத்து, பல புதிய வெளியீடுகள் வருவதாக அறிவித்து, வந்தும் கொண்டிருக்கின்றன. ஆனால், சந்தை திடீரென சறுக்கி விட்டது. என்.டி.பி.சி., ரூரல் எலக்டிரிபிகேஷன் போன்ற அரசு கம்பெனிகளும், வேறு சில தனியார் கம்பெனிகளும் தங்களது வெளியீடுகளை அறிவித்துள்ளன. ஆனால் விழும் சந்தையில் அவை எப்படி பரிணமிக்கப் போகின்றன என்று காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


பணவீக்கம்: டிசம்பர் மாத பணவீக்கம், 7.31 சதவீதமாக இருந்தது. இது, 2008ம் ஆண்டு நவம்பரில், 4.78 சதவீதமாகவும், 2008 டிசம்பரில், 6.15 சதவீதமாகவும் இருந்தது. முக்கியமானப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று பிரணாப் முகர்ஜி அறிவித்துள்ளார். காய்கறி விலைகளும் பயமுறுத்துகின்றன. சமீபத்தில் ஒரு முருங்கைகாய் 26 ரூபாய் வரை சென்றது மிகவும் ஆச்சரியமான விஷயம். விலைகளை கட்டுப்படுத்தாத வரை, அது சந்தைகளை பாதிக்கும். காலாண்டு முடிவுகள்: இதுவரை வந்துள்ள, வந்து கொண்டிருக்கும் காலாண்டு முடிவுகள் மோசம் என்று சொல்லும் ரகமில்லை. ஆனால், பிரமாதம் என்று சொல்லும் அளவிற்கு குறிப்பிட்ட கம்பெனிகளே முடிவுகளை அறிவித்துள்ளன. ஒவ்வொரு காலாண்டும், கம்பெனிகளிடமிருந்து சிறப் பான முடிவுகள் வரும் என எதிர் பார்ப்பது தவறு. இது போன்ற எதிர்பார்ப்புகளால் சந்தை கீழே விழுந்து கொண்டிருக்கிறது. பல கம்பெனிகள் நல்ல காலாண்டு முடிவுகளை தந்தும் சந்தையில் நிற்கமுடியாமல் தவிக்கின்றன.


வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: ரிசர்வ் வங்கியின் மானிடரி பாலிசி, எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுக்க முடியாத காலாண்டு முடிவுகள், ஆசிய, உலக அளவு பங்குச் சந்தைகளில் சரிவு என்று பல, சந்தைகளை அசைத்துப் பார்த்துள்ளன. சந்தை நிறைய புள்ளிகளை இழந்துள்ளது. ஏறி வர இன்னும் சிறிது காலம் பிடிக்கும். சிறிது முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். சந்தையில் இது காத்திருக்க வேண்டிய காலம்.


- சேதுராமன் சாத்தப்பன் -


ஒயர்லெஸ் மூலம் இன்டர்நெட்: மத்திய அரசு தீவிர ஏற்பாடு
புதுடில்லி: ஒயர்லெஸ் மூலமாக, கிராமப்புறங்களுக்கும் இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தும் நடவடிக்கையில், மத்திய அரசு தீவிரமாக உள்ளது. முதற்கட்டமாக, 1,000 ரிசீவிங் மையங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. 'பிராட் பேண்ட்' இணையதள தொடர்பு ஏற்படுத்தித் தரும் நிறுவனங்களின் கருத்தரங்கு, நேற்று, டில்லியில் நடைபெற்றது. இதில், மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ராஜா கலந்து கொள்வதாக இருந்தது.

தவிர்க்க முடியாத காரணங்களால், அவர் பங்கேற்காமல் போனாலும், வாசிக்கப் பட்ட உரையில் கூறியிருப்பதாவது: கிராமப்புறங்களுக்கும் தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்த, அரசு தீவிரமாக உள்ளது. அந்த வகையில், ஒயர்லெஸ் மூலம் கிராமப் புறங்களுக்கும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தித் தர, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்காக முதற்கட்டமாக, 1,000 ரிசீவிங் மையங்களும், இரண்டாம் கட்டமாக 7,000 ரிசீவிங் மையங்களும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையங்களில் இருந்தும், ஐந்து முதல் பத்து கி.மீ., வரை, தொடர்பு பெற முடியும்.


இதன்மூலம், ஒயர்லெஸ் இன்டர்நெட் வெகுவாக பிரபலமாகும் சூழ்நிலை, எதிர்காலத்தில் உருவாகும். தற்போது, 'பிராட் பேண்ட்' மூலம், எட்டு லட்சம் பேர், இன்டர்நெட் வசதியையும், ஒரு கோடியே 20 லட்சம் பேர், 'இன்டர்நெட் கபே' மூலம் இணையதள வசதிகளை பெறுகின்றனர். 'பிராட் பேண்ட்' மூலம், இரண்டு கோடி பேர், இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர் என்பதை, இன்னும் இரண்டு ஆண்டுகளில், 25 கோடி பேராக உயர்த்த வேண்டும். அதற்கான பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. 'பிராட் பேண்ட்' வசதியை பயன்படுத்துவோரின் எண் ணிக்கை உயராததற்கு, விலை தான் காரணம். கட்டணங்கள் குறைக்கப்பட வேண்டும்; அதற்கு இன்டர்நெட் வசதி ஏற்படுத்தித் தரும் நீங்கள் தான், முயற்சி எடுக்க வேண்டும். இவ்வாறு ராஜா கூறியிருந்தார்.


தொலைத்தொடர்பு துறை செயலர் பி.ஜி.தாமஸ் பேசும் போது, 'இன்டர்நெட் போன்ற தொழில்நுட்பங்களை, கிராமப்புறங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காக பொதுமக்களுக்கு ஏற்ற வகையில், கட்டணங்கள் அமைக்க வேண்டும். அதை, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி தரும் நிறுவனங்கள்தான், செய்ய வேண்டும். 'மொபைல் போன்கள் பிரபலமான அளவுக்கு, இன்டர்நெட் பிரபலம் ஆகாததற்கு இதுதான் காரணம்' என கூறினார்.

தொலைபேசி எண்ணிக்கை அதிகரிப்பு

புதுடில்லி: இந்தியாவில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த டிசம்பரில், 56.22 கோடியாக அதிகரித்திருப்பதாக, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்தது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்(டிராய்) வெளியிட்டுள்ள தகவல்: டிசம்பரில், தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 3.5 சதவீதம் அதிகரித்து, 56.22 கோடியாக உயர்ந்தது. அதற்கு முந்தைய மாதம், தொலைபேசி வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, 54.32 கோடியாக இருந்தது. 'ஒயர்லஸ்' வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த நவம்பரை விட, டிசம்பரில், 3.78 சதவீதம் அதிகரித்துள்ளது. எனினும், கடந்தாண்டு நவம்பரில், 3.71 கோடியாக இருந்த, 'ஒயர்லைன்' வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, டிசம்பரில், 3.70 கோடியாக குறைந்தது. பிராட்பேண்ட் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, கடந்த நவம்பரில் இருந்ததை விட, டிசம்பரில், 3.16 சதவீதம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது

யூனியன் பாங்க் நிகரலாபம் சரிந்தது
மும்பை: யூனியன் பாங்க் ஆப் இந்தியா(யூ.பி.ஐ.,) டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது.
இதன்படி, வங்கியின் நிகர லாபம் 20.5 சதவீதம் சரிவினை கண்டுள்ளது. 2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டு கணக்கெடுப்பின் படி, வங்கியின் நிகரலாபம் 534.13 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இருப்பினும், மொத்த வருமானம் 3,653.79 கோடி ரூபாயில் இருந்து 3,758.32 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வங்கி வட்டி தொகையாக ரூ. 3,293.55 கோடி பெற்றுள்ளது. இது அதற்கு முந்தைய வருடம் ரூ. 3,258.40 கோடியாக இருந்தது.

2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த ஒன்பது மாத கணக்கெடுப்பின் படி, வங்கியின் நிகரலாபம் 1,261.49 கோடி ரூபாயில் இருந்து 1,481.42 கோடி ரூபாயாக சரிந்துள்ளது

ஐ.டி.எப்.சி., நிகர லாபம் 46% உயர்வு
மும்பை: இன்பராஸ்டக்சர் டெவலப்மென்ட் ‌பைனான்ஸ் கம்பெனியின்(ஐ.டி.எப்.சி.,) நிகர லாபம் 46 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஐ.டி.எப்.சி., நிறுவனம், 2009ம் ஆண்டு ‌டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டு கணக்கெடுப்பினை வெளியிட்டுள்ளது. இதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம், 46 சதவீதம் உயர்ந்து 269.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மொத்த வருமானம், 997.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு 865.20 கோடி ரூபாயாக இருந்தது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் நிறுவத்தின் நிகர லாபம் 39.53 சதவீதம் உயர்ந்து 240 கோடி ரூபாயாக உள்ளது.

இந்த அறிவிப்பு காரணமாக, மும்பை பங்குச்சந்தையில் நிறுவனத்தின் பங்குகள் 0.87 சதவீதம் உயர்வினை கண்டன.


சர்வதேச அளவில் வேலையில்லாதவர் எண்ணிக்கை உயர்வு
ஜெனீவா : உலகம் முழுவதிலும் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 200 மில்லியனாக அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு நடத்திய ஆய்வில் 2009ம் ஆண்டில் 212 மில்லியன் மக்கள் வேலையில்லாதவர்களாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது 2007ம் ஆண்டை விட 19 சதவீதம் அல்லது 34 மில்லியன் அதிகமானதாகும்.


உலகில் வேலை உள்ளவர்களின் ஆண்டு புள்ளி விபரப்படி வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 2008ம் ஆண்டு இறுதியில் 0.9 சதவீதம் அதிகரித்ததாகவும், 2009ம் ஆண்டின் முடிவில் 6.6 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிவிபர பட்டியலின் படி 1991ம் ஆண்டு வேலையில்லாதவர்கள் எண்ணிக்கை மிக அதிகபட்சமாக 13.4 சதவீதமாக இருந்தது. இளைஞர்களின் கடுமையான உழைப்பால் படிப்படியாக குறைந்து 2007ம் ஆண்டு 1.6 சதவீதமாக இருந்தது. தற்போது மீண்டும் அதிகரிக்கத் துவங்கி உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பின் இயக்குனர் குவான் சோமாவியா கூறியதாவது : முடிவற்ற நிலையில் சென்று கொண்டிருக்கும் வங்கிகள் திவாலாகும் நிலையை தடுத்து நிறுத்தி, வேலை வாய்ப்‌பை உருவாக்கித் தருவதே, வேலையில்லாதோர் எண்ணிக்கையை குறைப்பதற்கான சரியான தீர்வாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



சரிவடைந்து வரும் சர்வதேச பொருளாதார நிலை இவ்வாண்டு முன்னேற்றகரமாக இருக்கும். ஐ.எம்.எஃப் நிறுவனம் ‌நேற்று உலக பொருளாதாரம் பற்றிய அறிக்கையில், 2010ம் ஆண்டு உலக பொருளாதாரம் 3.9 சதவீதம் அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2010ம் ஆண்டு உலகில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 6.1 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 1.5 பில்லியன் மக்கள் வேலை இழக்கும் நிலையில் உள்ளதாகவும் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயில் நிறுவனத்தின் 3ம் காலாண்டு நிகர லாபம் உயர்வு

புதுடில்லி: செயில் நிறுவனத்தி்ன் மூன்றாம் காலாண்டு நிகர லாபம் உயர்ந்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,
2009ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த மாதத்தில், நிறுவனத்தின் நிகர லாபம் 1,675.55 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது அதற்கு முந்தைய ஆண்டு இதே காலகட்டத்தில் 843.34 கோடி ரூபாயாக இருந்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், நிகர விற்பனை 9,945.78 ‌கோடி ரூபாயில் இருந்து 10,447.63 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

டிசம்பர் 31ம் தேதியுடன் முடிந்த ஒன்பது மாத கணக்கெடுப்பின் படி, ஸ்டீல் உற்பத்தியாளர்கள் நிகரலாபம் ரூ. 4,669.47 கோடியாக உள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டு ரூ. 4,688.13 கோடியாக இருந்தது.

டாவோஸில் இன்று உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம்
டாவோஸ்: உலக பொருளாதார அமைப்பின் வருடாந்திர கூட்டம், சுவிட்சர்லாந்து டாவோஸில் இன்று தொடங்குகிறது. கடந்த ஆண்டு, வளர்ந்த நாடுகள் உட்பட பல நாடுகள் உலக பொருளாதார நெருக்கடியில் சிக்கி அவதிப்ப பட்டன. இந்நிலையில், உலக பொருளாதார நெருக்கடியை தீர்த்து, மீண்டும் இயல்பு நிலைக்கு எப்படி கொண்டுவருவது என்பது குறித்து ஆலேசிக்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், 30 நாடுகளின் தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும், 1,400 தொழில், வர்த்தக அதிபர்களும் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 100 பேர் பங்கேற்கின்றனர்.


அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கடந்த 18 மாதங்களுக்கு முன்பு, ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும், அதை தொடர்ந்து ஏற்பட்ட சிக்கலுக்கு பிறகு, இந்த கூட்டம் நடை பெறுகிறது.


அத்துடன் தற்போது தீர்ந்துள்ள நெருக்கடியை தவறாக கையாண்டால், அடுத்த வருடத்தில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில்-வர்த்தக சமுதாயத்தினர் பங்கேற்கும் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


வசூலில் டைட்டானிக்கை முந்தியது அவதார்
லண்டன்: உலக அளவில் டிக்கெட் விற்பனையில் அவதார் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், வசூலில் டைட்டானிக்கையும் முந்தியது அவதார் திரைப்படம்.
1997ம் ஆண்டு வெளியாகி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட காதல் படம் டைட்டானிக். இது 1998ம் ஆண்டு வரை உலகம் முழுவதில் இருந்து 8,470 கோடி ரூபாய் வசூலை அள்ளியது.

ஆனால், தற்போது சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் அவதார் திரைப்படமோ, கடந்த வாரம் வரை மட்டுமே ரூ. 8,400 கோடியை வசூலாக குவித்துள்ளது.

கடந்த 7 நாட்களில் ரூ.103 கோடி குவித்து டைட்டானிக் சாதனையை முறியடித்து இத்திரைப்படம் முதலிடம் பிடித்தது.

இதுவரை உலக அளவில் அதிக வசூலைக் குவித்த ஹாலிவுட் படமாக டைட்டானிக் பெயர் இடம் பெற்றிருந்தது. இதனை அவதார் முறியடித்துள்ளது.


உலகின் முன்னணி 50 வர்த்தக தலைவர்கள் பட்டியலில் 9 இந்தியர்கள்

மும்பை : உலகின் முன்னணி ஐம்பது வர்த்தக தலைவர்கள் பட்டியலில் 9 இந்தியர்களி்ன் பெயர்கள் இடம்பிடித்துள்ளன.
இங்கிலாந்தை சேர்ந்த பைனான்சியல் டைம்ஸ் என்ற பொருளாதார பத்திரிகை, உலகின் டாப் ஐம்பது தொழிலதிபர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, ரிலையன்ஸ் தலைவர் முகேஷ் அம்பானி, அவரது தம்பி அனில் அம்பானி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர, ஹீரோ குழுமத்தின் பிரிஞ்மோகன் முஞ்சால், ப்யூச்சர் குழும தலைவர் கிஷோர் பியானி , ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குனர் சந்தா கோச்சர், மகிந்திரா குழுமத்தின் கேசவ் மகிந்திரா, பார்தி ஏர்டெல் தலைவர் சுனில் மிட்டல், வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

இதில், சந்தா கோச்சர் உட்பட 3 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்

பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்


சர்வதேச செயல்பாடுகளை விரிவுபடுத்தும் உள்நாட்டு விமானச் சேவை நிறுவனங்கள்


நிர்பய் குமார்
புதுடெல்லி
விமானச் சேவைகளுக்கான தேவைப்பாடு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே உள்நாட்டு நிறுவனங்கள் அவற்றின் சர்வதேச செயல்பாடுகளை விரிவுபடுத்த ஆயத்தமாகி வருகின்றன.
உலக பொருளாதாரம்
உலக பொருளாதாரத்தின் மந்தநிலையாலும், கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட கடும் ஏற்றத் தாழ்வுகளாலும் சென்ற இரண்டு ஆண்டுகளாக இந்திய விமானச் சேவைத் துறை சோம்பிக் கிடந்தது. தற்போது உள்நாட்டிலும், உலக அளவிலும் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்கு திரும்பியுள்ளது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஓர் ஆய்வின்படி இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குமான பயணிகள் போக்குவரத்து, சென்ற சில மாதங்களில் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் வகையில் ஏர் இந்தியா, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் ஜெட் ஏர்வேஸ் ஆகிய நிறுவனங்கள் பல்வேறு சர்வதேச வழித்தடங்களில் சேவையை தொடங்க முடிவு செய்துள்ளன.
ஜெட் ஏர்வேஸ்
தனியார் துறையில் மிகப் பெரிய நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், ஜோகன்ஸ்பர்க் மற்றும் நைரோபி ஆகிய இடங்களுக்கு விமான சேவையை தொடங்க உத்தேசித்துள்ளது. Òஜோகன்ஸ்பர்க் நகரத்துக்கு எதிர் வரும் கோடை காலத்தில் சேவை தொடங்கப்பட உள்ளது. நைரோபிக்கு, இவ்வாண்டு அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்து நிறுவனத்தின் விமானங்கள் இயக்கப்படலாம்Ó என ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜோகன்ஸ்பர்க் மற்றும் நைரோபி ஆகிய இரண்டு நகரங்களுமே தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவையாகும். இந்த இரண்டு இடங்களுக்கும் விமானச் சேவையை தொடங்கும் வகையில் இந்நிறுவனம் ஏற்கனவே சம்பந்தப்பட்ட அமைப்புகளிடமிருந்து சென்ற ஆண்டிலேயே ஒப்புதல் பெற்றிருந்தது. எனினும் பயணிகள் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு மற்றும் பொருளாதார மந்தநிலை போன்ற பல்வேறு காரணங்களால் அதன் திட்டத்தை ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோகன்ஸ்பர்க் நகரத்துக்கு சேவை தொடங்கும் முடிவில் இருந்த ஏர் இந்தியா அதன் எண்ணத்தை தற்போது கைவிட்டுள்ளது. இதுவும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது.
கிங்பிஷர் ஏர்லைன்ஸ்
விஜய் மல்லையாவுக்கு சொந்தமான கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ், புதுடெல்லியிலிருந்து ஹாங்காங், துபாய் மற்றும் லண்டனுக்கு மீண்டும் அதன் விமானங்களை இயக்க அரசிடம் அனுமதி கோரியுள்ளது. இந்நிறுவனம் மொத்தம் 89 விமானங்களைக் கொண்டுள்ளது. இவற்றுள் 68 விமானங்கள்தான் தற்போது சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
Òபெங்களூர்&லண்டன் வழித்தடத்தில் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ளதால் நிறுவனத்தின் இரண்டு ஏ330 விமானங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்த விமானங்களை புதுடெல்லி&லண்டன் வழித்தடத்தில் இயக்க முடியும். குறைந்த தூரமுள்ள துபாய் மற்றும் பாங்காக் போன்ற சர்வதேச வழித்தடங்களில் நிறுவனத்தின் ஏ321 மற்றும் ஏ320 விமானங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்Ó என கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஏர் இந்தியா
பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா, அதிக எண்ணிக்கையில் விமானங்களைக் கொண்டுள்ளது. விமானங்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்நிறுவனமே நாட்டின் மிகப் பெரிய விமானச் சேவை நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் உள்நாட்டில் பல்வேறு முக்கிய வழித்தடங்களில் மேலும் பல விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
சர்வதேச அளவில், பல புதிய வழித்தடங்களில் சேவை தொடங்கவும் முடிவு செய்துள்ளது. தற்போது இந்நிறுவனம் டெல் அவிவ், கெய்ரோ, மிலன் மற்றும் சிட்னி ஆகிய உலகப் புகழ் பெற்ற நகரங்களுக்கு விமானச் சேவைகளை தொடங்குவது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
ஸ்பைஸ் ஜெட்
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனங்களுள் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிறுவனம் சர்வதேச அளவில் விமானச் சேவைகளை தொடங்குவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் 19 விமானங்களைக் கொண்டுள்ளது. இவையனைத்தும் போயிங் 737 ரக விமானங்களாகும். நடப்பு ஆண்டில், மேலும் நான்கு புதிய விமானங்களை இணைத்துக் கொள்ள உள்ள இந்நிறுவனம், பணியாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் இவ்வாண்டில் புதிதாக 150 பேரை பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ளது.
ஏர் ஏஷியா
மலேசியாவைச் சேர்ந்த நிறுவனமான ஏர் ஏஷியா இந்தியாவுக்கும், மலேசியாவுக்கும் இடையே ஆறு வழித்தடங்களில் சேவையை தொடங்க உள்ளது. நடப்பு ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளில், இந்நிறுவனம் மலேசியாவில் இருந்து புதுடெல்லி, மும்பை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் சென்னை ஆகிய நகரங்களுக்கு தினமும் அதன் விமானங்களை இயக்க உள்ளது. கோலாலம்பூர்&மும்பை வழித்தடத்தில் மட்டும் வாரத்தில் நான்கு முறை சேவை அளிக்கப்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் பேங்க் 100% இடைக்கால டிவிடெண்டு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் பேங்க் (பி.என்.பீ) சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.1,011.31 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,005.82 கோடியாக இருந்தது.
இதே காலாண்டுகளில் இவ்வங்கியின் வட்டி வருவாய் ரூ.5,294.70 கோடியிலிருந்து ரூ.5,505.54 கோடியாக அதிகரித்துள்து. வங்கியின் வட்டிச் செலவினம் ரூ.3,327.35 கோடியிலிருந்து ரூ.3,176.44 கோடியாக குறைந்துள்ளது.
டிவிடெண்டு
இவ்வங்கி நடப்பு நிதி ஆண்டிற்கு (2009&10) அதன் பங்குதாரர்களுக்கு ரூ.10 முக மதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு ரூ.10&ஐ இடைக்கால டிவிடெண்டாக (100%) வழங்க முடிவு செய்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கின் விலை தற்பொழுது ரூ.870 என்ற அளவில் விலைபோய் கொண்டுள்ளளது.

புதன்கிழமையன்று


3 தனியார் நிறுவனங்களின் பங்கு வெளியீடு தொடக்கம்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
மூன்று தனியார் நிறுவனங்களின் பங்கு வெளியீடு புதன்கிழமையன்று (நேற்று) தொடங்கியது. இந்த மூன்று வெளியீடுகளுமே இம்மாதம் 29&ந் தேதியன்று நிறைவடைகின்றன.
வாஸ்கான் இன்ஜினியர்ஸ், சின்காம் ஹெல்த்கேர் மற்றும் தங்க மயில் ஜுவல்லரி ஆகிய நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் களம் இறங்கியுள்ளன. அடிப்படைக் கட்டமைப்பு துறையைச் சேர்ந்த வாஸ்கான் இன்ஜினியர்ஸ் நிறுவனம் சுமார் ரூ.200 கோடி திரட்ட உத்தேசித்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த மருந்து நிறுவனமான சின்காம் ஹெல்த்கேர் சுமார் ரூ.57 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆபரண நிறுவனமான தங்க மயில் ஜுவல்லரி சுமார் ரூ.29 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.
அக்வா லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தின் பங்கு வெளியீடும் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் பங்கு வெளியீடு இன்றுடன் நிறைவடைகிறது.

யுஎஸ் ரியல் எஸ்டேட் வீழ்ச்சி... மீண்டும் பொருளாதார நெருக்கடி
நியூயார்க்: அமெரிக்காவில் மீண்டும் பொருளாதார மந்தம் தோன்றும் என நிபுணர்கள் கணித்தது சரியாகிவிடும் போலிருக்கிறது.

மீண்டும் ரியல் எஸ்டேட் துறையில் விற்பனை மந்தமாகிவிட்டது. குறிப்பாக இந்த டிசம்பர் மாதம் விற்பனையில் அதிர்ச்சி தரும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், மீட்சி வரும் என்று நம்பிக்கொண்டிருந்தவர்கள் நினைப்பில் மண் விழுந்துள்ளது.

நவம்பர் மாதத்தில் அமெரிக்காவில் விற்பனையான வீடுகள் எண்ணிக்கையைவிட டிசம்பர் மாதம் 16.7 சதவிகிதம் அளவு குறைந்துவிட்டதாம்.

இது மிகப்பெரிய சரிவாக அமெரிக்க நிபுணர்களால் பார்க்கப்படுகிறது. வரிச் சலுகை தரப்பட்டுள்ள இந்த சூழலில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது கவலை தருவதாக உள்ளது என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரம், இந்த சலுகைகள் நீக்கப்பட்டுவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

சிறிய குடும்பத்துக்கான வீடுகள் விற்பனை 16.8 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதே போல மத்திய மேற்கு பகுதியில் வீடுகள் விற்பனை 25.8 சதவிகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு அளவுக்கு நிலைமை மோசமில்லை என்கிறார்கள்.

அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் விற்பனை சற்று மேம்பட்டதாக இருந்தாலும், இந்த ஆண்டும் வீழ்ச்சி முற்றிலும் நீங்கவில்லை. வடமேற்குப் பகுதியில் 19.5 சதவிகித வீடு விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதே நேரம், 2009-ம் ஆண்டு 5,156,000 வீடுகள் விற்பனையாகியுள்ளன. இது 2008-ம் ஆண்டை விட 4.9 சதவிகிதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் அமெரிக்காவின் ஆட்டோமொபைல் துறை ஓரளவு நல்ல முன்னேற்றம் தெரிவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வீடுகள் விற்பனை சரிந்தாலும், ஆட்டோமொபைல் வளர்ச்சி சற்று ஆறுதல் தருவதாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பங்கு வெளியிட தயாராகும் பொதுத் துறை நிறுவனங்கள்

புதன், 27 ஜனவரி, 2010

அனுமதி வேண்டி ÔசெபிÕக்கு விண்ணப்பம்


பங்கு வெளியிட தயாராகும் பொதுத் துறை நிறுவனங்கள்


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
பொதுத் துறை நிறுவனங்களான என்.எம்.டீ.சி. மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் (ஆர்.இ.சி) ஆகிய நிறுவனங்கள் இரண்டாவது பங்கு வெளியீட்டில் களம் இறங்க தயாராகி உள்ளன. பங்கு வெளியீட்டுக்கு அனுமதி வேண்டி இந்நிறுவனங்கள் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕக்கு விண்ணப்பம் அனுப்பியுள்ளன.
பிப்ரவரி மாதத்தில்...
ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் நிறுவனம், கிராமப்புறங்களில் நிர்மாணிக்கப்படும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. இந்நிறுவனம் அதன் இரண்டாவது பங்கு வெளியீட்டை பிப்ரவரி 18&ந் தேதி முதல் 23&ந் தேதி வரையிலான காலத்தில் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு கனிமங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் என்.எம்.டீ.சி. நிறுவனம் மார்ச் மாதம் முதல் வாரத்தில் பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மத்திய அரசு, என்.எம்.டீ.சி. நிறுவனத்தின் 8.38 சதவீத பங்குகளை பொதுமக்களுக்கு வெளியிடுவதன் மூலம் ரூ.18,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதே போன்று ஆர்.இ.சி. நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை வெளியிடுவதன் வாயிலாக ரூ.3,300 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.
அரசின் பங்கு மூலதனம்
இரண்டாவது பங்கு வெளியீட்டில் ஆர்.இ.சி. நிறுவனம் 17 கோடிக்கும் அதிகமான அளவில் பங்குகளை வெளியிடுகிறது. இதில் 12.87 கோடி பங்குகள் நிறுவனத்தின் புதிய பங்குகளாகவும், 4.29 கோடி பங்குகள் மத்திய அரசுக்கு சொந்தமான பங்குகளாகவும் இருக்கும். பங்கு வெளியீட்டுக்குப் பிறகு இந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம் 66 சதவீதமாக குறைந்து விடும். தற்போது அரசின் பங்கு மூலதனம் 81.82 சதவீதமாக உள்ளது.
என்.எம்.டீ.சி.
என்.எம்.டீ.சி. நிறுவனம், அதன் இரண்டாவது பங்கு வெளியீட்டில் 33.22 கோடி பங்குகளை வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனம் 98.38 சதவீதமாக உள்ளது. பங்கு வெளியீட்டில் இந்நிறுவனம் அதன் பணியாளர்களுக்கும், சில்லரை முதலீட்டாளர்களுக்கும் பங்கின் வெளியீட்டு விலையில் 5 சதவீத தள்ளுபடி சலுகை அளிக்க உள்ளது. சில்லரை முதலீட்டாளர்களுக்கு 33 கோடி பங்குகள் அளிக்கப்பட உள்ளன. 17.43 லட்சம் பங்குகள் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட உள்ளன.


பாரத ஸ்டேட் வங்கி


100% இடைக்கால டிவிடெண்டு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பாரத ஸ்டேட் பேங்க், டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.2,479 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.2,478 கோடியாக இருந்தது.
வட்டி வருவாய்
இதே காலாண்டுகளில் இவ்வங்கியின் நிகர வட்டி வருவாய் 10 சதவீதம் அதிகரித்து, ரூ.5,758 கோடியிலிருந்து ரூ.6,317 கோடியாக உயர்ந்துள்ளது. இதர வருவாய் ரூ.3,226 கோடியிலிருந்து 4 சதவீதம் உயர்ந்து ரூ.3,366 கோடியாக அதிகரித்துள் ளது. இவ்வங்கியின் மூலதன இருப்பு விகிதம் 13.72 சதவீதத்திலிருந்து 13.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாத காலத்தில் இவ்வங்கி ஈட்டிய நிகர லாபம் ரூ.7,299 கோடியாக உள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.6,379 கோடியாக இருந்தது. ஆக, வங்கியின் நிகர லாபம் 14 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி, அக்டோபர்&டிசம்பர் மாத காலத்தில், திரட்டிய டெபாசிட்டுகள் 11.2 சதவீதம் உயர்ந்து ரூ.7,70,985 கோடியாக அதிகரித்துள்ளது. வங்கி வழங்கிய கடன்கள் 19 சதவீதம் அதிகரித்து ரூ.6,07,154 கோடியாக உயர்ந்துள்ளது. இவ்வங்கி அதன் பங்குதாரர்களுக்கு 100 சதவீத இடைக்கால டிவிடெண்டை அறிவித்துள்ளது.

இன்சுலின் மருந்து விலை 15 சதவீதம் அதிகரிக்கும்

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
நீரிழிவு நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் இன்சுலின் மருந்துகளில் குறிப்பிட்ட சில வகை பிராண்டுகளின் அதிகபட்ச சில்லரை விலையை உயர்த்துவதற்கு, தேசிய மருந்துவிலை நிர்ணய ஆணையம் ஐந்து மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து இன்னும் சில தினங்களில் சில குறிப்பிட்ட இன்சுலின் மருந்துகள் விலை 15 சதவீதம் உயரும் என தெரிகிறது.
முக்கிய பிராண்டுகள்
இதன்படி, நோவா நார்டிஸ்க் நிறுவனம் அதன் ஆக்ட்ராபிட் ஃபிளக்ஸ்பென், இன்சுலாடர்ட் ஃபிளக்ஸ் பென், மிக்ஸ்டார்ட் 30 ஃபிளக்ஸ் பென் பிராண்டுகளின் விலையை 15 சதவீதம் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாரன்ட் பார்மா நிறுவனமும், யுமன் மிக்ஸ்டார்டு என்ற இன்சுலின் ஊசி மருந்தின் விலையை 10 சதவீதம் உயர்த்தி உள்ளது.
இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 5 கோடியாக உள்ளது. இது நாட்டின் மக்கள் தொகையில் 4.3 சதவீதமாகும். வரும் 2030&ஆம் ஆண்டிற்குள் இது 9 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சர்வதேச நீரிழிவு நோய் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
காச நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் Ôமெட்ரோல்Õ என்ற மருந்தை ஃபைசர் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் விலையை உயர்த்தவும். தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அனுமதி அளித்துள்ளது. வைட்டமின் ஏ உள்ளிட்ட சில மருந்துகள் விலையை உயர்த்தவும் அனுமதி வழங்கி உள்ளது.
விலை நிர்ணய ஆணையம்
சில குறிப்பிட்ட வகை மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் முடிவு செய்கிறது. இந்த கட்டுப்பாட்டின் கீழ் வராத மருந்தின் விலையை மருந்து நிறுவனங்கள் 12 மாதங்களில் 10 சதவீதம் உயர்த்தலாம். இந்நிலையில் மருந்து தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களின் விலை உயரும்போது, நிறுவனங்களின் கோரிக்கை அடிப்படையில் விலையை உயர்த்த அவ்வப்போது இந்த ஆணையம் அனுமதி அளிக்கிறது.


திருமலை திருப்பதி தேவஸ்தானம்


500 கிலோ தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்கிறது
ராம் என். சேகல் & அபூர்வ் குப்தா
மும்பை
இந்தியாவிலுள்ள இந்து சமய அறநிலையங்களில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் தான் மிகப்பெரியது ஆகும். இந்த தேவஸ்தானம் பக்தர்களிடமிருந்து காணிக்கையாக பெறும் உபரி தங்கத்தில் 500 கிலோவை சென்ற ஆண்டைப்போன்று, இவ்வாண்டிலும், வங்கிகளின் தங்க வைப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்ய தீர்மானித்துள்ளது.
வட்டி விகிதம்
சென்ற ஆண்டிலும் இவ்வங்கி 500 கிலோ தங்கத்தை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மூன்று ஆண்டு காலத்திற்கு டெபாசிட் செய்தது. இதற்கான ஆண்டு வட்டிவிகிதம் 1.6 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டில் 500 கிலோ தங்கத்தை டெபாசிட் செய்வதற்காக சுமார் 4&5 தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளிலிருந்து விலைப்புள்ளிகளை தேவஸ்தானம் பெற்றுள்ளது.
இவ்வங்கிகள் தெரிவிக்கும் வட்டி விகிதத்தின் அடிப்படையில், தங்கத்தை டெபாசிட் செய்வதற்கான தேசியமயமாக்கப்பட்ட வங்கி விரைவில் தேர்வு செய்யப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி பெருமாளை தரிசிக்க தினந்தோறும் சராசரியாக 50,000&க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்கள் ரொக்கப்பணம், தங்க நாணயங்கள், நகைகள் போன்றவற்றையும் காணிக்கைகளாக செலுத்துகின்றனர். இவர்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கத்தின் அளவு 500 கிலோவைத்தாண்டும் போது, இந்த தேவஸ்தானம், அதனை வங்கிகளின் தங்க வைப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்கின்றது.
பக்தர்கள்
ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை தரும் பக்தர்கள் மொத்தம் 700&800 கிலோ தங்கத்தை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இந்த தங்கத்தில் ஒரு பகுதி அரசின் தங்கசாலைகளில் உருக்கப்பட்டு வெங்கடாஜலபதியின் உருவம் பொறிக்கப்பட்ட பதக்கங்களாக மாற்றப்பட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதுபோக எஞ்சியுள்ள தங்கம் கட்டிகளாக மாற்றப்பட்டு வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.
சென்ற 2009&ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் சுமார் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிலையிலும் பக்தர்கள், தங்க நகைகளை காணிக்கைளாக வழங்குவது உயர்ந்துள்ளது. இது, இவர்களின் பக்தியை வெளிப்படுத்துவதாக உள்ளது.
கூட்டு வட்டி
இவ்வாண்டில் தேவஸ்தானம் மூன்று முதல் ஐந்து ஆண்டு முதிர்வு காலத்தில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக ஓர் ஆண்டிற்கு 1&1.5 சதவீதம் கூட்டு வட்டியை வங்கி வழங்கும். இவ்வாறு பெறப்படும் வட்டித்தொகையை, தேவஸ்தானம், பல்வேறு சமூக நல திட்டங்கள் மற்றும் அறப்பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்கிறது.
முதிர்வுகாலம் முடிந்ததும் தேவஸ்தானம் விரும்பினால், தங்கத்தை, வங்கிக்கு அப்போது நிலவும் விலையின் அடிப்படையில் விற்பனை செய்யும்.

கார் லோன் வாங்க போறீங்களா? இதை கவனியுங்க முதல்ல...

இந்தியாவில், கார் வாங்குவது என்பது இன்று வரை ஒரு கவுரவ சின்னமாகவே கருதப்படுகிறது. பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சிறிய கார்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. எனவே, ஒவ்வொரு இந்தியனும், கார் வாங்குவதை ஒரு லட்சியமாகவே கொண்டுள்ளனர். இதற்கு ஏற்றாற் போல், வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கார் கடனுக்கு பல்வேறு சலுகைகளை அள்ளி வீசி வருகின்றன. கடந்த காலங்களை போல காருக்கு முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. ஷோரூம் போனால் உடனே டெலிவிரி, காருக்கான முழு தொகையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட ஒரு தொகையை செலுத்தினால் மட்டும் போதும், மீதி தொகையை மாத தவணையில் செலுத்தலாம் என்றெல்லாம் பல வசதிகள் உள்ளன. புதிய காருக்கு மட்டுமல்ல, செகன்ட் ஹண்ட் காருக்கு கூட கடன் வசதிகள் கிடைக்கின்றன.
நடுத்தர குடும்பங்களை இந்த வசதிகள் தான் ஆட்டிப்படைக்கின்றன. கார் வாங்குவது கடினமான காரியம் இல்லை என்று அவர்கள் நினைக்க தொடங்கி விட்டன. ஆனால், கார் கடன் வாங்கும் முன் எதையெல்லாம் கவனிக்க வேண்டும் என்பதில் அவர்கள் தங்கள் எண்ணத்தை செலுத்துவதில்லை. அவர்களுக்காக இங்கே சில டிப்ஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. அவை வருமாறு:

குறைந்த கடன் தொகை: கார் கடன் வாங்கும் முன், எந்த அளவுக்கு கடன் தொகையை வாங்க போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். நீங்கள் வாங்கும் ஒவ்வொரு பைசாவுக்கும் வட்டி செலுத்த வேண்டும். எனவே, வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ கடன் வாங்கும் போது, குறைந்த அளவில் கடன் வாங்கினால் மட்டும் போதுமானது. இதன் மூலம் வட்டித் தொகை குறையும். கார் கடனையும் விரைவில் கட்டி முடிக்க முடியும். ஆனால், அதிக முன் தொகையை செலுத்த வேண்டும் என்ற பிரச்னை இருப்பதால், இதில் பலரும் ஆர்வம் காட்ட மறுக்கின்றனர். எனினும், குறைந்த தொகையை கடனாக வாங்கினால் லாபமாகவே இருக்கும்.

பிரபல மாடல்கள்: பிரபலம் இல்லாத, சந்தையில் வரவேற்பு இல்லாத கார்களுக்கு கடன் வாங்குவது என்றால், அதற்கான வட்டியும் அதிகமாகவே இருக்கும். மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற கார், விற்பனைக்கு பிறகு நிறுவனம் அளிக்கும் சிறப்பான சர்வீஸ், குறைந்த அளவு பராமரிப்பு ஆகியவை தான் ஒரு கார் சிறந்த மாடல் என்பதை நிர்ணயிக்கிறது. இதுபோன்ற கார்களுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். கார் வாங்கும் போது இதில் கவனம் செலுத்த வேண்டும்.

ஆன் ரோடு விலை: கார் விலையை, எக்ஸ் ஷோரூம் விலை, ஆன் ரோடு விலை என இரண்டு விதமாக குறிப்பிடுவர். கார் பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் கட்டணம், ரோடு வரி மற்றும் பிற கட்டணங்கள் அடங்கியது தான் ஆன் ரோடு விலை. எக்ஸ்ஷோரூம் விலை என்பது இந்த கட்டணங்கள் சேர்க்கப்படாதது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆன் ரோடு விலைக்கு தான் கடனை தருகின்றன. புதிதாக கார் வாங்கும் போது ஆன் ரோடு விலையை குறிப்பிட்டு கடன் வாங்கினால், பிற கட்டணங்களுக்கு கை காசை செலவழிக்க வேண்டிய அவசியம் இருக்காது.

ஒப்பிட வேண்டும்: ஏராளமான வங்கிகள், நிதி நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு கார் கடன்களை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களை கவருவதற்காக பல்வேறு சலுகைகளை அள்ளி வீசுகின்றன. ஆனால், எந்த வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் குறைந்த அளவு வட்டி வசூலிக்கப்படுகிறது, மாத தவணையான இ.எம்.ஐ., எவ்வளவு போன்ற விஷயங்களை ஒப்பிட்டு பார்த்து கடன் வாங்கினால் லாபமாக இருக்கும்.

புராசசிங் கட்டணம்: நீங்கள் கிரெடிட் கார்டு வைத்திருப்பவரா? அதற்கான கட்டணத்தை முறையாக கட்டுபவரா? உங்களுக்கு கடன் கொடுத்தால் பிரச்னை வராது என்று வங்கி நினைக்கிறதா? இது போன்ற விஷயங்கள் உண்டு. நீங்கள் வங்கி கணக்குகளை முறையாக வைத்திருந்தால், கார் கடனுக்கான புராசசிங் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை வங்கிகள் குறைத்து கொள்ள வாய்ப்பு உண்டு.

கவர்ச்சிக்கு மயங்க கூடாது: வாடிக்கையாளர்களை கவருவதற்காக சில டீலர்களும், சிறிய நிதி நிறுவனங்கள் பல கவர்ச்சிகரமான சலுகைகளை அள்ளி வீசுவார்கள். இதை பார்த்து மயங்கி விட கூடாது. எந்தவித பின்னணியும் தேவையில்லை, உங்கள் வருவாய் எவ்வளவு என்று கூட கேட்ட மாட்டோம், கார் கடன் வாங்கிகொள்ளுங்கள் என்று வலை விரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


முதல் கார் பெரியதா, சிறியதா: பெண்களின் விருப்பம் எது?
இந்திய பெண்கள் தாங்கள் வாங்கும் முதல் கார், பெரியதாக இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.
இந்தியாவில், ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இன்றைய சூழ்நிலையில், உலகளவில் ஒன்பதாவது இடத்தில் இந்தியா உள்ளது. ஆண்டுக்கு 23 லட்சம் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவில் காணப்படும் வரவேற்பு, வெளிநாட்டு கார் நிறுவனங்களை வியக்க வைத்துள்ளது. எனவே, அனைத்து வெளிநாட்டு கார் நிறுவனங்களும், போட்டிபோட்டுக் கொண்டு, கார் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. பல சலுகைகளையும் அறிவித்து வருகின்றன.

அதே போல, கார் வாங்கும் முன் அதுகுறித்த தகவல்களை இன்டர்நெட் மூலம் தேடுவதில் இந்தியர்கள் ஆர்வமாக உள்ளனர். கார் வாங்குபவர்களில் 90 சதவீதம் பேர் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேர், இன்டர்நெட் மூலமே பதிவு செய்து கார் வாங்குகின்றனர். இவர்களில், பாதி பேர், இன்டர்நெட் மூலமே கார் உதிரி பாகங்களையும் வாங்குகின்றனர். இன்டர்நெட் மூலம் வாங்கும் போது கிடைக்கும் பணச்சலுகை மற்றும் டீலர்களிடம் ஏற்பட்டுள்ள அதிருப்தி ஆகியவையே இதற்கு காரணம்.

கார் குறித்த தகவல்களை தெரிவிப்பதில், காடி.காம் என்ற இணையதளம் முன்னணியில் உள்ளது. இந்த இணையதளம் இரண்டு மாதங்களாக, ஒரு ஆய்வை நடத்தியது. கார் வாங்குவதற்காக இணையதளத்தை பயன்படுத்துபவர்களின் மன நிலையை அறிவதற்கான ஆய்வு இது. இந்த ஆய்வில் நாடு முழுவதும் 28 ஆயிரத்து 934 பேர் பங்கேற்றனர். இவர்களில் 88 சதவீதம் பேர் ஆண்கள். 12 சதவீதம் பேர் பெண்கள். ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது, பதவி மற்றும் பாலினம் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டது.

ஆய்வில் கிடைத்த ருசிகர தகவல்கள் வருமாறு:

பெண்களில் 46 சதவீதம் பேர், தங்களது முதல் காராக செடன் போன்ற பெரிய காராக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

இந்தியர்களில் 46 சதவீதம் பேர் கார் நல்ல மைலேஜ் கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். இதற்கு அடுத்தபடியாக, கார் ஸ்டைலாக இருக்க வேண்டும், வசதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்.

பெரிய கார்களை வாங்கி, அவற்றை சாலையில் ஓட்டிச் செல்லும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுவது உண்டு. இப்பிரச்னை இருந்தாலும், இந்தியர்களில் 55 சதவீதம் பேர் நடுத்தரமான காருக்கு பதிலாக பெரிய கார் வாங்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.

30 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களின் ஆண்டு வருமானத்தை போல இரண்டு மடங்கு தொகையை புதிய கார் வாங்குவதற்காக செலவிட தயாராக உள்ளனர்.

ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் முதல் ரூ.9 லட்சம் வரை உள்ளவர்கள், தங்களின் மொத்த ஆண்டு வருமானத்தையும் புதிய கார் வாங்குவதற்காக செலவிட தயாராக உள்ளனர்.

இவ்வாறு ஆய்வில் தெரிய வந்துள்ளது.


பங்குச் சந்தையில் தங்கமயில்

மதுரை: தென் மாவட்டங்களில் பிரபலமான தங்கமயில் ஜுவல்லரி பங்குச் சந்தையில் நுழைகிறது.
இந்நிறுவன இணை நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறியதாவது: தென்மாவட்ட மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள தங்கமயில் ஜுவல்லரிக்கு, மதுரை உட்பட ஐந்து இடங்களில் கிளைகள் உள்ளன. அடுத்த ஆண்டிற்குள் மேலும் ஆறு கிளைகள் துவக்க உள்ளோம். ஒவ் வொரு நிதி ஆண்டிலும், குறைந்தபட்சம் நான்கு ஷோரூம்கள் திறக்க முடிவு செய்யப் பட்டுள் ளது. கடந்த ஆண்டில், 246 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்துள்ளோம். பங்கு வெளியீடு மூலம் 35 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும். இது நமது பங்கு என நினைத்து, மக்கள் ஆர்வமாக ஈடுபடுவர் என எதிர்ப்பார்க்கிறோம். இவ்வாறு ரமேஷ் கூறினார்.

நிறுவன ஆலோசகர் ஆடிட்டர் ராஜகோபாலன் கூறியதாவது: மார்க்கெட்டில் நல்ல திறமை காட்டியுள்ள நிறுவனம் இது. நிதி நிர்வாகம் நன்றாக உள்ளதால், பங்கு வாங்குபவர்கள் நிச்சயம் பலன் பெறுவர். பங்குகள் மூலம் திரட்டப்படும் நிதி, புதிய தொழிலில் முதலீடு செய் யப்படவில்லை. வணிக விரிவாக்கத்திற்கு தான் பயன்படுத்தப்படும். ரேட் டிங்கில் ஐந்துக்கு மூன்று புள்ளிகள் பெற்றுள்ளது. ஜன., 27ல் (நாளை) வெளியிடப்படும் 10 ரூபாய் முகமதிப்புள்ள புதிய பங்கு ஒன்றின் விலை 70 முதல் 75 ரூபாய் வரை இருக்கும்.

இவ்வாறு ராஜகோபாலன் கூறினார்.கீநோட் கார்ப்பரேட் நிறுவனத்தின் சூரஜ் சரயாகி அறிமுக உரை நிகழ்த்தினார்.

துபாயில் போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடி முயற்சி: 7 பேர் கைது
துபாய்: துபாயில் போலி ஆவணங்களை பயன்படுத்தி மோசடி செய்ய ‌முயன்ற 7 பேரை ஐக்கிய அரபு எமிரேட் அரசு கைது செய்துள்ளது. ‌சென்ட்ரல் வங்கியில் போலி ஆவணங்களை சமர்ப்பித்து, அதன் மூலம் 10.3 பில்லியன் டாலர்களை அவர்கள் மோசடி செய்ய திட்டமிட்டு இருந்தனர். இதனை உடனடியாக கண்டறிந்த வங்கி, இந்த விஷயத்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளது. விரைந்து செயல்பட்ட போலீசார் அவர்களை ‌கைது செய்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் அந்த ஆவணங்களைச் சோதித்தபோது, அவை போலியானவை என்று தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய வங்கி ஒன்றின் கேட்பு ஆணையின் பேரில் இந்தத் தொகையை சென்டிரல் வங்கியிலிருந்து மாற்றத்தக்க வகையில் அந்த ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
வரிஏய்ப்பில் மும்பை பிரபலங்கள் : நவி மும்பை மாநகராட்சி
மும்பை : நவி மும்பை மாநகராட்சி மும்பையை சேர்ந்த பிரபலங்கள் சிலர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளது. இதில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், தொழிலதிபர் அனில் அம்பானி , பாலிவுட் பாடகர் சங்கர் மகாதேவன் ஆகியோர் சிக்கியுள்ளனர். நவி மும்பையில் கார் போன்ற வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரி குறைவாக இருப்பதால் பெரும்பாலானோர் அங்கு தங்கள் வாகனங்களை பதிவு செய்ய விரும்பதாக நவி மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

பொதுத்துறை நிறுவன பங்கு விற்ப‌னை நிறுத்தப் படாது: அருண்யாதவ்

இந்தூர்: பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நிறுத்தப்படாது என்று கனரக தொழில் துறை இணை அமைச்சர் அருண் யாதவ் தெரிவித்தார்.

இந்தூரில் 65 வது அகில இந்திய ஜவுளி மாநாட்டை தொடங்கிவைத்த அவர், பொதுத்துறை நிறுவனங்களில் மத்திய அரசுக்கு சொந்தமான பங்கு விற்பனை செய்வது தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது. பொதுத்துறை நிறுவன பங்கு விற்ப‌னை நிறுத்தப்படாது. இந்த வருடத்திற்குள் 10 முதல் 15 விழுக்காடு பங்குகள் விற்பனை செய்யப்படும் என்று கூறினார்.


மேலும், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்திற்கு பிறகு, பங்கு விற்பனை செய்யப்படும். பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பனை செய்வதற்கான கருத்து கணிப்பு நடை பெற்று வருகிறது. இதில் 80 விழுக்காட்டினர் பங்கு விற்பனை செய்வதற்கு சாதமான பதிலை தெரிவித்துள்ளனர் என்று கூறினார்.



இந்தியன் வங்கிக்கு ரூ. 441 கோடி லாபம்
சென்னை: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்தியன் வங்கி டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டி கணக்கெடுப்பின வெளியிட்டுள்ளது. இதனை வங்கியின் தலைவர் சுந்தர ராஜன் வெளியிட்டார்.
இதில், வங்கி ரூ. 441 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 25 சதவீதம் அதிகமாகும்.

வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ. 1,42,200 கோடி என்றும், இது அதற்கு முந்தைய ஆண்டு இதேகாலத்தில் ரூ. 1,20,120 கோடியாக இருந்தது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சேமிப்புகளின் அளவு 21 சதவீதம் அதிகரித்து ரூ. 84,732 கோடியாக உயர்ந்தது. வங்கி வழங்கிய கடன் அளவு 13 சதவீதம் அதிகரித்து ரூ. 57,468 கோடியாக உயர்ந்துள்ளது.

மேலும், வங்கியின் வாராக் கடன் அளவு 0.92 சதவீதத்திலிருந்து 0.92 சதவீதமாகக் குறைந்தது. ஒட்டுமொத்த வாராக்கடன் 0.16 சதவீதமாக உள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 மாதத்தில் ரூ. 471.07 கோடி வாராக் கடன் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.


தனலட்சுமி வங்கி புதிய திட்டம்
மும்பை: தனலட்சுமி வங்கி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியை துவக்கியுள்ளது. தனலட்சுமி வங்கி பொது மேலாளர் ஜெயகுமார் கூறியதாவது: நிதியை அதிகரிக்கும் முயற்சியாகவும், பொருளாதாரத்துக்கு உதவும் வகையிலும், 50 ஆயிரம், 'நோ-பிரில்ஸ்' வங்கிக் கணக்குகளை துவங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.இதற்காக, கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் 50 புதிய வாடிக்கையாளர் சேவை மையங்களை திறக்கவுள்ளோம்.

இங்குள்ள வங்கி பிரதிநிதிகள், வங்கியின் செயல்பாடுகள் குறித்தும், வங்கிக் கணக்குகளின் விவரங்கள் குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு விளக்குவர். இந்த சேவை மையங்கள், வங்கியின் வர்த்தக தொடர்பு மையங்களாகவும் செயல்படும். காப்பீடு, கடன் திட்டம் முதலான பணிகளும் இங்கு மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஜெயகுமார் கூறினார். வங்கியின் மைக்ரோ பைனான்ஸ் துறை தலைவர் திலிசா குப்தா கவுல் கூறுகையில், 'மிகவும் அதிகளவு வாடிக்கையாளர்களை, அமைப்பு ரீதியான வங்கி நடவடிக்கைகளுக்கு கொண்டு வருவது தான், இத்திட்டத்தின் நோக்கம்' என்றார்

வைர விற்பனை: ஜப்பானை முந்தியது சீனா
பெய்ஜிங்: வைர விற்பனையில் ஜப்பானை சீனா முந்தியுள்ளது. வைர விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக ஜப்பான் இருந்தது. தற்போது, ஜப்பானை பின்னுக்கு தள்ளி சீனா இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஷாங்காய் வைர விற்பனை சந்தையில் வைர விற்பனை 16.4 சதவீதம் உயர்ந்து 150 கோடி டாலரரை எட்டியுள்ளது. இதுமட்டுமல்லாமல், தற்போது நிலவி வரும் நிதிநெருக்கடியிலும், சீனாவில் பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. சீனாவில் தற்போது சாதாரண மக்கள் கூட வைர நகைகளை பயன்படுத்த தொடங்கி விட்டதும், பண்டிக்கை காலங்களில் வைரத்தை வாங்குவதற்கு சீனா மக்கள் அதிக ஆர்வம் காட்டுவதுமே, சீனாவில் வைர விற்பனை அதிகரித்து இருப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.

அமெரிக்காவில் மேலும் 9 வங்கிகள் திவால்

திங்கள், 25 ஜனவரி, 2010

நியூயார்க்: இந்த ஆண்டும் தொடர்கிறது அமெரிக்க வங்கிகளின் திவால் சோகம்.

புத்தாண்டு பிறந்து 20 நாட்களுக்குள் 9 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இவற்றில் 5 வங்கிகள் ஒரே நாளில் மஞ்சள் கடுதாசி கொடுத்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மட்டுமே 140 வங்கிகள் திவாலாகின அமெரிக்காவில். இது கடந்த 18 ஆண்டுகளில் அதிகபட்ச வீழ்ச்சியாகும்.

இந்த நிலையில் 2010-ம் ஆண்டும் வீழ்ச்சிக்கு விதிவிலக்காக இல்லை. கொலம்பியா ரிவர் வங்கி, எவர்கிரீன் வங்கி, சார்ட்டர் வஹ்கி, பேங்க் ஆப் லீடன், பிரிமியர் அமெரிக்கன் வங்கி ஆகிய 5 வங்கிகள் ஒரே நாளில் மூடப்பட்டன (ஜனவரி 22). இவற்றால் ஏற்பட்ட நஷ்டம் மட்டும் 531.7 அமெரிக்க டாலர்கள்.

இவற்றைத் தவிர மேலும் 4 வங்கிகளும் மூடப்பட்டுள்ளன.

கடந்த செப்டம்பர் 2008-ல் லெஹ்மன் பிரதர்ஸ் வங்கி திவால் நோட்டீஸ் கொடுத்த பிறகு 164 வங்கிகள் தொடர்ந்து மூடப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாருதி சுஸுகி லாபம் மூன்று மடங்கு அதிகரிப்பு
மும்பை: மாருதி சுஸுகி நிறுவனத்தின் லாபம் இந்த காலாண்டில் மட்டும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

அக்டோபர் - டிசம்பர் 2009 காலாண்டில் மாருதி சுஸூகி நிறுவனத்தின் நிகர லாபம் மட்டும் ரூ 687.53 கோடி. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ 213.57 கோடியை நிகர லாபமாகக் காட்டியிருந்தது மாருதி.

2008-ம் ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையிலும் லாபம் காட்டிய மிகச் சில கார் உற்பத்தி நிறுவனங்களுள் மாருதியும் ஒன்று.

இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் மீட்சிக்கு திரும்புவதால், கார் விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக மாருதி நிறுவனம் சாதனை அளவாக 218,910 க்கும் அதிகமான கார்களை விற்று முதலிடத்தில் உள்ளது.

மூன்றாம் காலாண்டில் மாருதியின் மொத்த வருமானம் ரூ 7,591.1 கோடியாக உள்ளது. உள்நாட்டு விற்பனை 37.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

இந்தியாவில் குர்கான், மானேசர் ஆகிய இடங்களில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள மாருதி, இரண்டிலும் மொத்தம் 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் மிக்கதாக உள்ளது. இப்போது மானேசர் தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை 3,00,000 லிருந்து ஆண்டுக்கு 5,50,000 ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.

என்.எம்.டீ.சி. நிறுவனம்

2&வது பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.20,000 கோடி திரட்ட திட்டம்


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
பொதுத் துறையை சேர்ந்த என்.எம்.டீ.சி. நிறுவனம், இரண்டாவது முறையாக பங்கு வெளியீட்டில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு அனுமதி வேண்டி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ÔசெபிÕக்கு இன்று (திங்கள்கிழமை) விண்ணப்பிக்க உள்ளது.
என்.எம்.டீ.சி. நிறுவனத்தில், மத்திய அரசு தற்பொழுது 98.38 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. மீதமுள்ள 1.62 சதவீத பங்குகள் பொதுமக்கள் வசம் உள்ளன. என்.எம்.டீ.சி. நிறுவனம், இந்த இரண்டாவது பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.20,000 கோடியை திரட்டிக் கொள்ள முடிவு செய்துள்ளது. இப்பங்கு வெளியீட்டின் மூலம் மத்திய அரசு, இந்நிறுவனத்தில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில் 8.38 சதவீத பங்குகளை வெளியிட உள்ளது.
Ôநவரத்னாÕ அந்தஸ்து
Ôநவரத்னாÕ அந்தஸ்து பெற்றுள்ள இந்நிறுவனம், கனிமவள மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது, இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று ரூ.532.50 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது.
மேற்கண்ட மொத்த பங்கு வெளியீட்டில் 50 சதவீத பங்குகள் தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட உள்ளது. 35 சதவீத பங்குகள் சில்லரை முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீத பங்குகள் அதிக சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது.
இப்பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, மத்திய அரசு, சமூகநலன் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதி திட்டங்களுக்கு பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

பன்ஸ்வாரா சின்டெக்ஸ்


நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இந்நிறுவனம், பல்வேறு ஜவுளி பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதுடன், விரிவாக்க நடவடிக்கைகளிலும் இறங்கி உள்ளது. எனவே, பங்கின் விலை குறையும் நிலையில் முதலீடு செய்யலாம்.
தேவங்கி ஜோஷி
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
ராஜஸ்தானை சேர்ந்த பன்ஸ்வாரா சின்டெக்ஸ் (ஙிணீஸீsஷ்ணீக்ஷீணீ ஷிஹ்ஸீtமீஜ்) நிறுவனம், நூலிழைகள் மற்றும் ஆடைகள் தயாரிப்புக்கு தேவையான சிறப்பு வகை துணிகள் போன்றவற்றின் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 33 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்திற்கு, ஒருங்கிணைக்கப்பட்ட ஜவுளி ஆலைகள் உள்ளன. Ôசென்செக்ஸ்Õ 75 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு ஆறு மடங்குகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பருத்தி நூலிழைகள்
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனம், பாலியெஸ்டர், விஸ்கோஸ், உல்லன், அக்ரலிக் உள்ளிட்ட கலப்பின நூலிழைகளுடன் பருத்தி நூலிழைகள் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது. மேலும், இந்நிறுவனம் ஆர்டர்களின் அடிப்படையில் சிறப்பு வகை துணிகளையும் தயாரித்து வருகிறது.
இந்நிறுவனம், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கேரமன் என்ற நிறுவனத்தின் கூட்டுடன் (50 சதவீதம்) 60 விசைத்தறிகளுடன் கூடிய நெசவு ஆலையையும் கொண்டுள்ளது.
அண்மையில், இந்நிறுவனம் லிக்ரா பிராண்டு துணிகள் தயாரிப்பிலும் ஈடுபடத் தொடங்கி உள்ளது. இவ்வகை சிறப்பு துணிகள், பள்ளிச் சீருடைகள், பெண்கள் அணியும் நவீன மற்றும் அலுவலக பயன்பாட்டு ஆடைகள் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.
ஏற்றுமதி
இந்நிறுவனத்தின் மொத்த வருவாயில், துணிகளின் பங்களிப்பு 60 சதவீத அளவிற்கு உள்ளது. மீதமுள்ள 40 சதவீதம் நூலிழை வர்த்தகத்தின் மூலம் பெறப்படுகிறது. இதில், பாலியெஸ்டர் நூலிழைகளின் பங்களிப்பு மிகவும் அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்நிறுவனம் அதன் ஜவுளி வகைகளை சுமார் 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. சென்ற காலாண்டில், இந்நிறுவனம் ஈட்டிய மொத்த வருவாயில், ஏற்றுமதியின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மின் திட்டங்கள்
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனம், நிலக்கரி மற்றும் பர்னஸ் ஆயில் அடிப்படையில் செயல்படக்கூடிய இரண்டு அனல் மின் திட்டங்களை கொண்டுள்ளது. இவை, முறையே 18 மெகா வாட் மற்றும் 9 மெகாவாட் அளவிற்கு மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாகும். மேற்கண்ட இரண்டு மின் பிரிவுகள் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், நிறுவனத்தின் சுய பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மேலும், இந்நிறுவனம் கூடுதலாக மேற்கண்ட இரண்டு வகைகளில் 15/18 மெகாவாட் திறனில் இரண்டு மின் திட்டங்களை நிறுவத் திட்டமிட்டுள்ளது. இவ்விரு மின் திட்டங்களும், நடப்பு 2010&ஆம் ஆண்டு இறுதியில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதி நிலை
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனத்தின் நிதி நிலை செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக, கடந்த ஐந்து நிதி ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்றுமுதல் ஆண்டுக்கு 21 சதவீதம் என்ற அளவிலும், ஒட்டுமொத்த நிகர லாபம் ஆண்டுக்கு 40 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டு வருகிறது.
இந்நிறுவனம், வரும் நிதி ஆண்டில் ரூ.110 கோடி திட்டச் செலவில் பல்வேறு விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது. இதில், மூன்றில் ஒரு பகுதி நிதி, உள்வள நிதி ஆதாரங்கள் மூலம் திரட்டிக் கொள்ளப்பட உள்ளது. மீதமுள்ள நிதி குறித்த கால கடன்கள் வாயிலாக திரட்டிக் கொள்ளப்பட உள்ளது. இந்நிறுவனம், இரண்டு திட்டங்கள் அமைப்பதற்காகவும், அதன் ஜவுளி பிரிவுகளை நவீனமயமாக்குவதற்காகவும் மேற்கண்ட விரிவாக்கத் திட்டங்களை மேற்கொள்ள உள்ளது.
இந்நிறுவனத்தின் லிக்ரா பிராண்டு துணிகளுக்கும், இதர சிறப்பு வகை துணிகளுக்கும் வெளிநாடுகளில் தேவைப்பாடு அதிகரித்து வருகிறது. அண்மையில், ராணுவ துறையிடமிருந்து 57,000 மீட்டர் சிறப்பு வகை துணிகள் வழங்குவதற்காக ஆர்டர் கிடைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த வாடிக்கை நிறுவனத்திடமிருந்து, மூன்றாவது முறையாக, 20,000 மீட்டர் சிறப்பு வகை துணி வகைகள் வேண்டி ஆர்டர் கிடைத்துள்ளது.
மதிப்பீடு
பன்ஸ்வாரா சின்டெக்ஸ் நிறுவனம், டிசம்பர் மாதம் வரையிலான நிதி ஆண்டில் ரூ.598.40 கோடி நிகர விற்பனையில், ரூ.31.40 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இவை, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது முறையே 13.6 சதவீதம் மற்றும் 632.90 சதவீதம் அதிகமாகும்.
இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று தற்பொழுது ரூ.112.90 என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது. இது, இந்நிறுவனத்தின் ஒரு பங்கு சம்பாத்தியத்துடன் ஒப்பிடும்போது 4.5 மடங்குகள் என்ற அளவில்தான் உள்ளது. ஜவுளித் துறையில் ஈடுபட்டு வரும் மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது, இந்நிறுவனத்தின் பங்கின் விலை குறைவாகவே உள்ளது. மேற்கண்டவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில், இந்நிறுவனத்தின் பங்கின் விலை குறையும் நிலையில் இதன் பங்குகளில் முதலீடு செய்யலாம்
அடுத்த 10 ஆண்டுகளில்


கட்டமைப்பு வசதிக்காக ரூ.78 லட்சம் கோடி முதலீடு


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக திகழும் சாலை போக்குவரத்து, துறைமுகம் மற்றும் விமான நிலைய வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதனையடுத்து, இத்துறைகளின் முன்னேற்றத்திற்காக அடுத்த 10 ஆண்டுகளில் 1.7 லட்சம் கோடி டாலர் மதிப்பிற்கு (ரூ.78.20 லட்சம் கோடி) முதலீடுகள் தேவைப்படும் என கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி புரூக்ஸ் எண்ட்விசில் தெரிவித்தார்.
சராசரியாக ஓர் ஆண்டில் மேற்கொள்ளப்படும் முதலீடு ரூ.6.52 லட்சம் கோடியாகும். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு வசதித் துறையில் வளமான வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது. எனவே, இத்துறையில் முதலீடு செய்வதில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இருப்பினும், உள்நாட்டு நிறுவனங்கள்தான் அதிக அளவில் முதலீடுகளை மேற்கொள்ளும் என புரூக்ஸ் மேலும் தெரிவித்தார்.


பொதுத் துறை நிறுவனங்கள்


பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.44,000 கோடி அதிகரிப்பு


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
பொதுத் துறை நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு, இவ்வாண்டு மகிழ்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 48 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்) நடப்பு 2010&ஆம் ஆண்டின் இதுவரையிலான 15 வர்த்தக தினங்களில் ரூ.44,346 கோடி அதிகரித்து ரூ.18.20 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசு
பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள, லாபம் ஈட்டி வரும் பொதுத் துறை நிறுவனங்களில் மத்திய அரசு கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் 10 சதவீதத்தை பொதுமக்களுக்கு வெளியிடும் என்று சென்ற சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும், இதுவரை பங்குகளை வெளியிடாத, லாபம் ஈட்டி வரும் பொதுத் துறை நிறுவனங்கள் புதிதாக பங்கு வெளியீட்டில் இறங்கும் என்று அறிவித்தது.
என்.டி.பி.சி.
இதனால், சென்ற 2009&ஆம் ஆண்டு நவம்பர் மாதத் தொடக்கத்திலிருந்து பொதுத் துறை நிறுவனப் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து காணப்பட்டது. இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், சென்ற இரண்டு மாதங்களில் பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.2.69 லட்சம் கோடி அதிகரித்துள்ளது.
மத்திய அரசு, என்.டி.பி.சி. (ரூ.11,000 கோடி), என்.எம்.டீ.சி. (ரூ.20,000 கோடி), இன்ஜினியர்ஸ் இந்தியா (ரூ.1,000 கோடி) ரூரல் எலக்ட்ரிபிகேஷன் கார்ப்பரேஷன் (ரூ.3,000 கோடி) ஆகிய நிறுவனங்களில் கொண்டுள்ள பங்கு மூலதனத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை விற்பனை செய்வதன் வாயிலாக சுமார் ரூ.35,000 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. இந்நிறுவனங்கள், இரண்டாவது முறையாக பங்கு வெளியீடுகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. இந்நிறுவனங்கள், டிவிடெண்டுகள் மற்றும் இலவச பங்குகள் வழங்கும் என்ற நம்பிக்கையில் முதலீட்டாளர்கள் இந்நிறுவனப் பங்குகளை அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.
சென்செக்ஸ்
இதுபோன்ற காரணங்களால் சென்ற 15 வர்த்தக தினங்களில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் Ôசென்செக்ஸ்Õ 3.46 சதவீதம் சரிவடைந்துள்ள நிலையில், பொதுத் துறை நிறுவனப் பங்குகளின் மதிப்பு 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதே காலத்தில், பொதுத் துறையைச் சேர்ந்த இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் பங்கின் விலை இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.606.95&க்கு விலை போனது. எஸ்.டி.சி. நிறுவனப் பங்கின் விலை 41 சதவீதம் உயர்ந்து ரூ.526.05&க்கு கைமாறியது. பொதுத் துறையைச் சேர்ந்த புளுசிப் நிறுவனங்களில் என்.எம்.டீ.சி., எம்.எம்.டி.சி. ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை முறையே 26 சதவீதம், 2 சதவீதம் உயர்ந்துள்ளது. இன்ஜினியர்ஸ் இந்தியா, டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, ஆகிய நிறுவனப் பங்குகளின் விலை முறையே 41 சதவீதம், 33 சதவீதம் உயர்ந்து ரூ.2,182.80 மற்றும் ரூ.701.90&க்கு விலை போனது.